
ஓவியங்கள்: மினிமலிக்ஸ்
எத்தனையோ கதைகள், கவிதைகள், நாவல்களை வாசித்திருக்கிறேன். இந்தப் படைப்புகள் எதுவும் எனக்குத் தராத ஒரு துக்கத்தை கவிஞர் சுகுமாரனின் கவிதை வரி ஒன்று தந்திருக்கிறது. ‘தற்கொலையில் தோற்றவனின் மௌனமாக' என்கிற அந்த வரி என் வாழ்வைப் பல நேரங்களில் அசைத்துப் பார்த்திருக்கிறது. தூக்கம் வராத பின்னிரவுகளில், திடீரென்று ஒரு கனவு வந்து எழுகையில் இந்த வரிகள் ஞாபகத்துக்கு வரும். அப்போதெல்லாம் நான் என் சமன் இழந்திருக்கிறேன். `தற்கொலையில் தோற்றவனின் மௌனம்' என்பது எத்தகையது? யாராலும் யூகிக்க முடியாத ஒன்று. தற்கொலையில் ஈடுபட்டு வெற்றியடைந்துவிட்டால் அது ஒரு வகையான துயரம். அது ஒரு வகையான மௌனம். அது ஒரு வகையான துக்கம். ஆனால், அவ்வாறு ஈடுபட்டுத் தோற்றுப்போகிறவனுடைய மௌனத்தை யார் அறிவார்? ஒருவகையில் அந்தத் தோல்வியானது வாழ்வின் வெற்றிதான்.

என் அப்பா அவரின் 23 வயதில் ஒருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். `கோட்டாங்கல்' என்கிற ஒரு பாறை இடுக்கிற்கு அருகில் முளைத்திருக்கிற ஒரு வெப்பால மரத்தில், கயிற்றோடு அவர் இருட்டுவதற்காகக் காத்திருந்த அந்தக் கணத்தில்தான் சரியாக ஆறு மணிக்கு திருவண்ணாமலைக் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மனிதர்களின் கண்களில் பட்டுவிடாமல் இந்தத் தற்கொலையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று அப்பா யோசித்திருக்கிறார். ஆனால், திடீரென மேற்கு திசையில் வாணவேடிக்கைகளும் அதைத் தொடர்ந்து பல மைல்களுக்கு அப்பால் ஒரு தீப ஒளியும் தெரிந்தது. உடனே, அப்பா அந்தத் தற்கொலை முயற்சியைக் கைவிட்டு வீட்டிற்கு விறுவிறுவென வந்து சேர்ந்தார். அதன்பிறகு சில நாள்கள் கழித்து ஆடு மேய்க்கிற பையன்கள், அப்பா மாட்டி வைத்திருந்த அந்தக் கயிற்றை எடுத்து வந்து வீட்டில் கொடுத்ததாகச் சொல்வார்கள். அப்பா எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பதைவிட, எது அவரைத் தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்தது என்ற யோசனை எழுந்திருக்கிறது. எங்கோ ஏற்றப்பட்ட ஒளி, அவர் மனதின் சிடுக்குகளைக் கலைத்துப்போட்டிருக்கிறது. அவர் தற்கொலையில் தோற்றுப்போனாரா? கயிற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்தவரின் மௌனம் எத்தகையது?
அப்பா எந்தக் கோயிலுக்கும் சென்றவரில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர். எங்கள் குடும்பத்திற்கே தெரியாமல் ஒரு ரகசியத்தைக் காப்பாற்றிவந்தார். அவருடைய இறப்பின்போதுதான், அந்த ரகசியம் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தீபத்தன்றும் மேலே மலையில் தீபம் ஏற்றுவதற்காக நெய்க்கூடம் கட்டுவார்கள். அப்பாவின் பெயரில் ஒரு கிலோவோ, அரைக் கிலோவோ நெய்க்கான காசு கட்டி ரசீதை வாங்கிக்கொண்டு வருவார். ஒரு கடுமையான நாத்திகவாதியிடம், இத்தகைய ரகசியம் வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்கிறது.
வாழ்க்கை மட்டுமல்ல, மனிதர்களும் விசித்திரமானவர்கள் என்பதை நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. தற்கொலை என்பது உலகின் மிகப்பெரிய கோழைத்தனம். எனக்குத் தெரிந்த பெரும்பாலான தற்கொலைகள் திட்டமிடப்படுவதல்ல, கணநேர முடிவுதான். பெரிய சதவிகிதத்தில் பார்த்தால் சக மனிதனிடமிருந்து வருகின்ற சொற்களின் கணநேரம்தான். பிரியப்பட்டவர்களின் கடுஞ்சொற்கள், அவமானம், தோல்வி எனப் பலவும் இதன் காரணமாக இருக்கின்றன என்பது நிஜம். அதைவிடப் பெரிய நிஜம், இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டும், துடைத்துப் போட்டும், அதைக் கடந்து வென்றுகொண்டும்தான் பல லட்சம் மனிதர்கள் வாழ்கிறார்கள்.
தற்கொலை செய்து மரித்தவரைவிட, அவரின் உடனிருக்கிற மனிதர்களின் மௌனம்தான் கொடுமையானது. ‘இன்னும் கொஞ்சம் அவர்களைக் கவனித்திருக்கலாமோ’ என சதா சிந்தித்து வாழ்க்கை ரணமாகிவிடும். மனைவி தூக்கில் தொங்கி இறந்த சில தினங்களுக்குப் பிறகு, டீக்கடைக்குப் போகிற கணவனோ... கணவனின் தற்கொலைக்குப் பிறகு, தன்னுடைய குழந்தைகளுக்காகத் தான் வாழ்ந்தாக வேண்டும் என்று ஒரு டிபன் பாக்ஸில் சாப்பாட்டை அடைத்துத் தன் கைப்பையில் வைத்துக்கொண்டு அலுவலகத்திற்கோ, கூலி வேலைக்கோ போகின்ற மனைவியோ... அவர்களின் மனம் எத்தனை கேள்விகளால் துளைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்!
இவர்கள் தங்கள் இணையரிடம் உபயோகித்த சொற்களைப் போன்று ஆயிரம் மடங்கு விஷமேறிய, அமிலம் தடவிய சொற்களைத் தங்களுடைய நாக்கிலேயே வைத்துக்கொண்டு இந்தச் சமூகம் விஷப்பாம்புகளைப் போன்று சாலையெங்கும் காத்துக்கொண்டிருக்கும். தற்கொலை செய்துகொள்பவர்கள், தாங்கள் மட்டும் இந்த உலகத்தில் மரணித்துப்போவதில்லை, உயிரோடு இருப்பவர்களையும் சேர்த்து மரணிக்க வைக்கிறார்கள். எதை நிரூபிக்க அவை நடக்கின்றன? யாருக்கு விடுக்கிற கேள்வி அல்லது சவால் அது?
ஒரு வகையில் இந்த இடத்தில் குழந்தைகள்தான் பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள். குழந்தைகள்தான் எப்பொழுதும் கடவுளுக்கு சவால் விடுகிறார்கள். அவர்கள்தான் இந்தத் தற்கொலை எனும் எண்ணமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பருவம் செல்லச் செல்ல ‘உயிர் என்ற ஒன்றே ஆதாரமானது. தோல்வியுற்றால் அதை நாம் பறித்துக்கொள்ள வேண்டும்’ என்பதை அவர்கள் எப்படி அறிகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியது. குழந்தைகளிடம் நாம் எதைக் கொண்டு சேர்க்கவேண்டும், எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஓர் உதாரணம். தோல்வி நிலையையும் அவமான உணர்வையும் துச்சமெனக் கடந்து செல்ல வேண்டும் என்பது அவர்கள் மனதில் பதிய வேண்டுமே அன்றி, வெற்றியின் ஆர்ப்பரிப்பு அல்ல.
மனோஜ் எழுதிய ‘சுகுணாவின் காலைப் பொழுது' என்கிற ஒரு கதை. சுகுணா ஒரு நடுத்தர வர்க்கத்தில் எல்லாக் குடும்பத்தையும் போல, ஒரு அப்பார்ட்மென்ட்டில் இரண்டு குழந்தைகள், கணவனோடு வசிக்கின்ற ஒரு சராசரியான பெண். ஏழு நாற்பதிற்கு ஸ்கூல் ஆட்டோ வந்து நிற்கும் என்பதிலிருந்து கதை தொடங்கும். சுகுணா தன் ஒரு மகளை அதற்குள்ளாகக் குளிக்க வைத்து, அவளுக்கு காலையில் டிபன் ஊட்டி விட்டு, ரைம்ஸ் சொல்லிக் கொடுத்து, `ஸ்கூலுக்குப் போன உடனே மறக்காம எக்ஸாமுக்கு முன்னாடி இந்த ரைம்சை ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கோ!' என்று சொல்வாள். தன்னுடைய பையனை அவள் அதே மாதிரி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்து தயார்படுத்துவாள். அவன் ஐ.டி கார்டை மறந்து வைத்துவிடுவான், அதை பீரோவிலிருந்து எடுத்து வந்து கொடுப்பாள். அதற்குள் ஆட்டோக்காரர் சலித்துக்கொள்வார் என இயல்பாகக் கதை நகரும்.
‘‘ஐ.டி கார்டு எங்கடா..?’' என்று பையனைக் கேட்கின்றபோது, ‘‘உங்க அப்பனை மாதிரியே உனக்கு மறதி இருக்கிறது’' என்று சொல்வார். இந்த ‘அப்பனை மாதிரியே' என்கிற வார்த்தைகளை ரொம்ப சன்னமான குரலில்தான் சொல்வார். ஏனென்றால், அந்த அப்பா பக்கத்து அறையில் ஆபீஸிற்கு ரெடியாகிக்கொண்டிருப்பார். அந்த வார்த்தைகள் அவரது காதில் கேட்டுவிடும்.
குழந்தைகள் சென்ற பிறகு சுகுணா சோபாவில் உட்கார்கிறாள். அவளுக்கு என்னென்னவோ ஞாபகங்கள் வருகின்றன. டி.வி ரிமோட்டை எடுத்து சேனல்களை மாற்றுகிறாள். அதில் ஒரு கணவன், அவன் மனைவியைத் திட்டுகிறான். இவள் கணவன் ஞாபகம் வருகிறது, உடனே டி.வி-யை நிறுத்துகிறாள். அடுத்து செய்ய வேண்டிய வேலைகளுக்குப் போகிறாள். மாப் போட்டு வீட்டைத் துடைக்கிறாள்.
தெருவில் காய்கறி வாங்குகிறாள். மதிய சாப்பாட்டிற்கான பாகற்காயை வட்ட வட்டமாக ரசனையோடு அரிந்து பார்க்கிறாள். முள்ளங்கியை சாம்பாருக்காக அரிகிறாள். இவளுக்கு நிறைய ஞாபகங்கள் வருகின்றன. ‘பூண்டு... பூண்டு...’ என விற்றுக்கொண்டு ஒரு வியாபாரி தெருவில் வருகிறான். தெருவிற்கு வந்து பூண்டு வியாபாரியை அழைக்கிறாள். தன்னுடைய பையனுக்குப் பூண்டு ரசம் ரொம்பப் பிடிக்கும். சாயங்காலம் பள்ளியில் இருந்து திரும்பி வருவதற்குள் ரசம் வைக்க வேண்டும் என்பதற்காக ‘பூண்டு ஒரு கிலோ எவ்ளோ?’ என்று கேட்கிறாள். அவளுக்கு ஒரு இறுகிய முகமோ அல்லது ஒரு நிதானம் இல்லாத மனநிலையோ வாய்க்கவே வாய்க்காது. ரசித்து ரசித்து ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயத்தையும் செய்துகொண்டே இருப்பாள். ‘சாயங்காலம் தம்பி, பாப்பா வரும்பொழுது அவர்களுக்குப் பசிக்கும். அவர்களுக்காக என்ன செய்து வைக்கலாம்’ என்று யோசிப்பாள்.
ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டே வரும்போது, அவளுக்கு ஒரு ஞாபகம் வரும். தன் அப்பா வீட்டிற்குச் சென்று திரும்புகையில், பூச்சிமருந்து டப்பாவை எடுத்து வந்தது ஞாபகம் வரும். அது வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த ஒரு மருந்து. அதை வீட்டில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பாள். ரொம்ப கேஷுவலாக எதையோ தேடுகின்ற அல்லது தண்ணீர் எடுத்துக் குடிக்கின்ற இயல்போடு போய் அதை எடுத்து வருவாள். அதை எடுத்து வந்து சுடுநீரைக் காய்ச்சி, அதற்குள்ளே மருந்தைக் கொட்டிக் காய்ச்சினால் ஒரு குமட்டுகின்ற நாற்றம் வரும்.

ரொம்ப இயல்பாக ஒரு காபி டிகாக்ஷன் போட்டு எடுத்து வருவது போல் அதை எடுத்து வருவாள். அவள் எந்தத் தயக்கமும் இல்லாமல் காலை ஆறு மணி அல்லது ஐந்து மணிக்கு எழுந்து, தன்னுடைய குழந்தைகளைக் குளிப்பாட்டி ஒவ்வொன்றாகச் செய்த இந்த எந்தச் செயலிலுமே இவளுடைய தற்கொலையின் வாசனையோ, சாயலோ, எதுவுமே இருக்காது. மிக இயல்பாக ஒரு காபி அருந்துவதுபோல் அந்த விஷத்தை அருந்தி முடிப்பாள், முடிந்தது. கொஞ்ச நேரத்தில் அவளுக்கு, தன்னுடைய மூக்கிலும் வாயிலும் ஏதோ திரவம் வழிவதை உணர்வாள். கொஞ்ச நேரத்தில் அவளுடைய கை கால்கள் வெட்டி வெட்டி இழுக்கப்படும். அவளுடைய காலைப்பொழுது எவ்வளவு வசீகரமானது என்று வெளியில் இருந்து பார்ப்பவர்களால் சொல்ல முடியும். எவ்வளவு இனிமையானது என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் உணரலாம். எவ்வளவு வலி நிறைந்தது என்பதை சுகுணா மட்டுமே உணர்ந்திருக்கக்கூடும்.
வயது, பாலினம், பொருளாதார நிலை என எந்த பேதமும் இல்லாமல் எத்தனை எத்தனை தற்கொலைகள் நிகழ்கின்றன! சில்க் ஸ்மிதா என்கிற எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு பேரழகியின் மரணம் சமூகத்தை உலுக்கியது. இந்தச் சமூகத்தின் எல்லா அந்தஸ்தையும் அடைந்த மனிதன், எல்லாச் செல்வங்களையும் பெற்ற மனிதன், ஒரு நாள் அனாதரவாக ஒரு மரத்தில் தூக்கில் தொங்குவதை, ஒரு உத்திரத்தில் தூக்கில் தொங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். ‘தற்கொலை செய்துகொண்டார்’ என்ற சொற்கள் நமக்குக் கேட்கிறபோதே, `அவரா இப்படிப் பண்ணிக்கிட்டார். நம்பவே முடியலையே!' என்கிற சொற்களும் நமக்குக் கேட்கும்.
தற்கொலை எண்ணம் வராமலிருக்க பாதுகாப்பு அழைப்பு எண்கள் எத்தனை பகிரப்படுகின்றன. எத்தனை தரவுகளைச் செய்திகளில் பார்க்கிறோம். ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வருகிறபோதும் அது எந்த மாணவரின் உயிரையும் பலி கேட்கக்கூடாது என மனம் பதைபதைக்கிறது. அனிதா, பிரதீபா இன்னும் நம்முடைய எத்தனை குழந்தைகளை நாம் இழந்திருக்கிறோம். கொள்கைக்காகவென உயிர்நீத்த பலரும் நமக்குத் தியாகிகள். அதையும் தாண்டி நம் உறவுகள் அல்லவா? அவர்களுக்கு ஏன் இந்த வாழ்க்கையை நீட்டிக்க மனமற்றுப்போனது. `இன்னும் கொஞ்ச தூரம்தான்!' என அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கத் தவறியது யார்? மரண தண்டனையே கூடாதெனப் போராட்டங்கள் நடக்கும் தேசத்தில் ஏன் இத்தனை தற்கொலைகள்!
இந்தக் கேள்விகள் நம்மை உறங்க விடுமா? மரணச் செய்திகள் போல அத்தனை எளிதாக நினைவை விட்டு அகல்வதில்லை தற்கொலைச் செய்திகள். கைவிடப்பட்டவர்கள், பிரியங்கள் அற்றுப்போனவர்கள், தோற்றுப் போனவர்கள் வாழக் கூடாதென யார் சொல்லிச் சென்றது? அது இந்தச் சமூகத்துக்கானது. சக மனிதர்கள் அத்தனை பேருக்குமானது. அந்தப் பிணைப்பை விடுவித்துப் போதல் எப்படிச் சரியாகும். முடியாதென்ற சொல், தோல்வி என்ற சொல் அத்தனை வலிமையானதல்ல.
தற்கொலைச் செய்திகள் போலவே இன்னும் சில செய்திகள் உள்ளன. நடக்கவே முடியாத ஸ்டீபன் ஹாக்கிங் வானில் பறந்த செய்தி, கால் இழந்து நடக்க முடியாதெனச் சொன்னவர்கள் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிப் புன்னகைக்கும் செய்தி, அசையவே முடியாத பலர் சிந்தித்த செய்தி, விழித்திறனற்ற பல நூறு ஆசிரியர்கள் பல லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய செய்தி, தற்கொலை கணத்தைக் கடந்து இன்று தொழிலதிபர்களாக உயர்ந்த செய்தி என எத்தனை எத்தனை மனிதர்கள் நம் முன் இருக்கிறார்கள். அவர்கள் நமக்களித்த நம்பிக்கை ஒளியும் என் அப்பாவின் தற்கொலை எண்ணத்தைத் தகர்த்த தீப ஒளியும் வெவ்வேறல்ல. இந்த உலகம் தோல்விகளால் நிறைந்ததல்ல, சுடர்களால் நிறைந்தது. ஒளியால் நிறைந்தது. வெற்றி, தோல்வி, மானம், அவமானம் இவற்றால் அழிக்க முடியாத தன்னியல்பானது அந்த ஒளி. அது எல்லோருக்குமானது.
- கரம்பிடித்துப் பயணிப்போம்