
ஓவியங்கள்: மினிமலிக்ஸ்
காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருக்கிறது. ஒரு மனிதன் தன் இறந்த காலங்களில் எவ்வளவு இழக்கிறானோ, அதனைப் பன்மடங்கு அதிகமாக்கி அவனுடைய நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் காலம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கை நிறைந்த சொற்கள்தாம் நம் வாழ்வை நகர்த்திக்கொண்டு செல்கின்றன. பல நேரங்களில், பலரும் பிறருக்கு ஆறுதலாகவும் இதைச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். `இழப்பு' என்கிற சொல் எல்லோருடைய வாழ்விலும் நம் அனுமதியின்றியே பங்கெடுத்துக்கொள்கிறது. பலருக்கும் அந்த இழப்பு அவர்கள் வாழ்வில் ஒரு வடுவாகவே தங்கிவிடுகிறது. சிலருக்கு தம் இழப்பைக் கடந்து செல்கிற மனம் வாய்த்திருக்கிறது. உண்மையில் அவர்கள் பாக்கியவான்கள்.
இழப்பென்பது நம் பால்யத்தின் நதியில்தான் நமக்குத் தென்படத் தொடங்குகிறது. சிறுவயதில் இழந்தது எதுவுமே நமக்கு இழப்பெனத் தெரிவதில்லை. குழந்தைமையை இழக்கிற தினமொன்றில்தான், வாழ்வு நாம் இழந்தவற்றை நமக்கு அறிமுகப்படுத்தத் தொடங்குகிறது. சிறியது, பெரியது என மகிழ்ச்சி, துக்கம், கஷ்டம் என எதிலும் தராசு வைத்து அளவிட முடியாது. ஆனால், நாம் தொடர்ச்சியாக இவற்றையெல்லாம் சிறிது பெரிதென அளவிட்டுப் பார்க்கிற மனதைத் தொலைக்க முடியாமல் அல்லாடுகிறோம். உறவா, பொருளா, மனமா, இப்படி எதை இழப்பது இழப்பாகிறது என்பதைப் பல நேரங்களில் யோசித்துத் தவித்திருக்கிறேன். தொலைத்ததைத் தேடிப் பெறுகிறோம். இழப்பதை எப்படி மீட்டெடுக்கிறோம், ஈடுசெய்யவே முடியாத இழப்புகளிலிருந்து எப்படித் தப்பிப்பது என்ற கேள்விகள் சதா இம்சிக்கின்றன. இழந்துவிட்டோம் என்ற நினைப்பே வாழ்வின் வெகு நாள்களைத் தின்று செரிப்பதை எப்படித் தவிர்ப்பது? விடை தெரியாத புதிர் இது.

‘‘எனக்கு 2 தங்கச்சி மாப்ள... அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சி, 40 வயசுலதான் கல்யாணம் பண்ணினேன். ரிட்டயர் ஆகுறதுக்குள்ள பசங்களுக்கு எதையாவது சேத்து வச்சிடணும். பாதி வயசு குடும்பத்துக்கு உழைச்சே போயிருச்சுடா'’ என ஆற்றாமையில் உழல்கிற நண்பர்களுக்கு சம்பிரதாய ஆறுதலைத் தவிர எதைச் சொல்வது. ‘`நான் ஸ்கூல் ஃபர்ஸ்டண்ணா. சிவில் சர்வீஸ் எக்ஸாம்க்கும் படிச்சேன். வேலைக்கெல்லாம் போக வேணாம்னு அவர் சொல்லிட்டாரு. அதான் அப்படியே விட்டாச்சு. இப்ப என்னைவிட கம்மியா படிச்ச பொண்ணுங்க எல்லாம் அமெரிக்கால இருந்து இன்ஸ்டால போட்டோ போடுறாங்க' என்கிற சகோதரிகளின் இழப்பு அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா?
‘`மன்னார்குடில இருந்து ஒரு சம்பந்தம் வந்திருக்கு, கேஸ் ஜெயிச்சா மகளுக்குப் பேசி முடிச்சிடலாம்’' என விபத்தில் கணவனை இழந்துவிட்டு, வழக்கு நடத்தி இழப்பீட்டுத் தொகை வாங்க அல்லல்படும் பல தாய்மார்களின் கண்ணீரைக் கண்டிருக்கிறேன். மலக்குழிகள், மரணக்குழிகளாகிப்போன தேசத்தில் உறவுகளை இழந்துவிட்டு, ‘`வரேன்னு சொல்லிட்டுத்தானே போனான்’' என்று ஆற்றாமையுடன் மடேர் மடேரென நெஞ்சில் அடித்துக்கொள்ளும் கேவல் சத்தம் என்றுதான் அடங்கும்? ‘`15 வருஷமா மனு குடுத்து அழைஞ்சிட்டு இருக்கேன் தோழர். எப்படியும் மணல் அள்ளுறதைத் தடுத்து நிறுத்திடலாம். அறம் வெல்லும் தோழர்!’' என லட்சியத்துடன் புன்னகைக்கிறார் மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்று, கை உடைபட்ட தோழர் ஒருவர். தொடர்பே இல்லாத வழக்கொன்றில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்து வாழ்வையே இழக்கிற எத்தனை பேரின் கதைகளைக் கேட்டிருக்கிறோம். இழப்பு வெவ்வேறு ஆயுதங்களுடன் வந்து நமக்கு வேண்டியதை எல்லாம் அறுத்து வீசிச் செல்கிறது.
சமீபத்தில் உதயசங்கரின் `கடவுளின் காதுகள்' என்ற கதையைப் படித்தேன். சுப்புத்தாய் என்கிற சிவகாசியிலிருந்து கோவில்பட்டிக்குத் திருமணத்தின் காரணத்தால் இடம்பெயர்ந்து போன ஒரு பெண்ணைப் பற்றிய கதை. அந்தப் பெண்ணின் பால்யத்திலிருந்து கதை தொடங்குகிறது. அந்த அம்மாவின் முதுமைப் பருவத்தில் மகன் சொல்வதைப் போல கதை நகரும். சிறு வயதில் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் எளிய பெண்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை சுப்புத்தாய்க்கும் விதிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான, அவள் வயது சேர்ந்த பெண்களுக்கு மத்தியில் தீப்பெட்டி ஒட்டுகிற வேலைக்குச் செல்கிறாள். பால்யம் முழுவதும் அவள் பேசிக்கொண்டே இருக்கிறாள்.அவள் இருக்கிற இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அவளுடைய பேச்சைக் கேட்பதற்காகவே சக தோழிகள் சுப்புத்தாய்க்கு அருகில் அமர்ந்து தீப்பெட்டி ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
சுப்புத்தாய்க்கு அந்தப் பேச்சு ஊற்றுபோல எங்கிருந்துதான் கிளம்பி வருமோ தெரியாது, பேசிக்கொண்டே இருப்பாள். தீப்பெட்டி அலுவலகத்திலிருந்து பேருந்து வழியாக வீடு சென்றடையும் வரை பேசிக்கொண்டே இருப்பாள். வீட்டை அடைந்த பின்பும் அவள் பேச்சை நிறுத்தியதாகச் சரித்திரமே இல்லை. வீட்டிலிருந்தவர்களோடு பேசிக்கொண்டே இருப்பாள். சுப்புத்தாய் பேசப் பிறந்தவள்.காதுகளைவிட அவளது வாய் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும்.
அவளுக்குத் திருமணம் முடித்து வைத்து சிவகாசியிலிருந்து கோவில்பட்டிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவள் பேசும் இடம் சிவகாசியிலிருந்து கோவில்பட்டிக்கு மாற்றம்தான் பெற்றுள்ளது. அங்கும் அவள் பேசிக்கொண்டே இருக்கிறாள். முதல் இரண்டு, மூன்று நாள்கள் புதுக்கல்யாண மயக்கத்தில் அதைத் தாங்கிக் கொண்ட அவள் கணவன், அதன்பின் அவள் மீது எரிந்து விழுகிறான். `ஏன் நீ எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறாய்' என்று கேட்கிறான். அது சுப்புத்தாய்க்குக் கன்னத்தில் அறைந்தது போல் இருக்கிறது. சுப்புத்தாயை மாற்றிய பிறகு அவனுக்கு ஆண் என்கிற அதிகாரம் எழுகிறது. பேசிக்கொண்டே இருக்கிற ஒரு பெண்ணுக்கு, `பேசாதே!' என்று கூறுகிற கணவன் கிடைத்திருக்கிறான்.
சுப்புத்தாய் பேசாமல் இருப்பதற்கு முயற்சி செய்கிறாள். கணவன் அவளைக் கடிந்து பேசிய பிறகும் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.அவள் பேச்சைத் தன் கணவனுக்காக நிறுத்திவிட முடியாது அல்லவா? அதனால் அவள் அதிகம் யோசித்து ஒரு கிளியை வாங்கி வருகிறாள். அந்தக் கிளி சுப்புத்தாய்க்குப் பேச்சுத்துணையாக இருக்கிறது. தன் கணவன் வெளியில் சென்ற பிறகு, தான் பேச நினைத்த அனைத்தையும் அந்தக் கிளியோடு பேசுகிறாள். கிளியும் அவளது பேச்சு மொழியை மெல்லப் புரிந்துகொண்டு மறுமொழியைத் தனது கீச் குரலால் பேசத் தொடங்கியது. தனக்கான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை சுப்புத்தாயே தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். கணவன் அயர்ந்து வீடு திரும்பி உறங்கிய பிறகு அந்தக் கிளி வேப்ப மரத்திலிருந்து பறந்து வந்து பேசத் தொடங்கும். அது ஒரு அற்புதமான தோழமை. கணவனைவிட ஒரு நெருங்கிய தோழமை சுப்புத்தாய்க்குக் கிடைத்தது.
ஒரு நாள் அந்தக் கிளி பறந்து அவளது கணவனின் காதருகில் சென்று கீச்சிட்டது.மனிதர்கள் பேசினாலே கடிந்து விழும் அவன் எரிச்சலடைந்து, அந்தக் கிளியைத் தனது பலம் கொண்ட கைகளால் சுவரில் தூக்கி எறிகிறான். அந்த இடத்திலேயே அந்தக் கிளி மாண்டது. கிளி கொலை செய்யப்பட்டதைக் கண்ட சுப்புத்தாய் மனச்சோர்வு அடைந்து, ‘இனி இவனுடன் வாழமுடியாது’ என உணர்ந்து தன் அம்மா வீட்டிற்குத் திரும்பிவிட்டாள். வழக்கமான அறிவுரைகளைக் கூறி மீண்டும் அவள் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். ‘பெண்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இவ்வளவுதான்’ என மீண்டும் கணவன் வீட்டிற்குத் திரும்பி வாழ்க்கையைத் தொடங்கினாள். இந்தச் சமயத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் பிறந்தன. மகளைத் திருமணம் முடித்து அனுப்பிவிடுகிறார்கள். மகனின் நடவடிக்கைகள் எதுவும் தந்தைக்குப் பிடிக்காமல் இருந்தது. அவன் ஏஞ்சல் என்கிற ஒரு கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் முடித்து வந்தான். அது அவனது தந்தையை நிரந்தமாக வெறுக்க வைக்கிறது. சுப்புத்தாயின் கணவன் ஒருநாள் இறந்துவிடுகிறான்.
அவன் இறந்த பின்பு சுப்புத்தாயின் வாழ்க்கையில் வேறு ஒரு பிரச்னை தொடங்கியது. சுப்புத்தாய் அவள் மகள் வீட்டில் தங்கினாள். மகள் வீட்டிலும் சுப்புத்தாயால் பேசாமல் இருக்க முடியாமல், பேசிக்கொண்டே இருந்தாள்.இதனால் மகளுக்கு அம்மாமீது வெறுப்பு ஏற்படுகிறது. பேரன், பேத்திகள் சுப்புத்தாய் பாட்டியிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சுப்புத்தாயின் பால்ய காலத் தோழிகள் போல பேரன், பேத்திகள் கிடைத்தார்கள். ஒருநாள் பேரக் குழந்தைகள் பாட்டியிடம் பேசுவதையும், பேசுவதைக் கேட்பதையும் நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால், அவர்கள் பள்ளிக்குச் சென்றுவிடுகிறார்கள். பள்ளியில் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுப்பது ‘பேசாதே, அமைதியாக இரு' என்பதுதான். பள்ளியில் கற்றுக்கொண்டதைக் குழந்தைகள் பாட்டியிடம் நடைமுறைப்படுத்தினார்கள்.

சுப்புத்தாயின் மகன் அம்மாவைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். சுப்புத்தாயின் நடவடிக்கைகளை மெல்ல மெல்ல ரசித்தாள் சுப்புத்தாயின் மருமகள் ஏஞ்சல். தன் மாமியாருக்கு ஒரு பூஜை அறையை ஏற்படுத்திக் கொடுக்கிறாள். ஏஞ்சல் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை வெளியே மாட்டி வைத்தாள். ஒரு நாள் சுப்புத்தாய் அந்தப் புகைப்படத்தை எடுத்து உள்ளே வைத்தாள். சில நாள்களுக்குப் பிறகுதான் ‘அம்மா இரவெல்லாம் உறங்குவதே இல்லை’ என்பது மகனுக்குத் தெரிய வருகிறது. இது ஒரு நோய் போன்றும், மருத்துவரைப் பார்க்காவிட்டால் இது இன்னும் தீவிரமாகிவிடும் என்றும் மகன் எண்ணுகிறான். ஒரு நாள் இரவில் அம்மா யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறைக்கு வெளியே இருந்து அறிந்து கொள்கிறான்.
மறுநாள் அம்மாவிடம், ‘‘அம்மா, நீ யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய்’’ என மகன் கேட்கிறான். அதற்கு சுப்புத்தாய் எந்தச் சலனமுமின்றி, ‘‘கடவுளிடம்’’ என்று கூறுகிறாள். அம்மாவுக்குப் புரிய வைப்பதற்காக, ‘‘இரவில் நம்மைப் போன்றுதான் கடவுளும் உறங்குவார்கள். அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’’ எனக் கூறுகிறான். அதற்கு சுப்புத்தாய், ‘‘நான் தொந்தரவு செய்யவில்லை, கடவுள்தான் தூக்கம் வரவில்லை என என்னை எழுப்பிப் பேசச் சொல்கிறார்கள், கடவுளுக்குக் காது இருக்கிறது. அவர்களாவது எனது பேச்சைக் கேட்கட்டும்’’ எனக் கூறுவதோடு கதை முடியும்.
இழப்பென்பது நம் உறவுகளால், நம்மை அற்ற வேறொருவரால் நிகழ்கிறபோது ஏற்படுகிற ரணம் சொல்லி மாளாதது. அதே நேரத்தில், நாம் எவ்வளவு இழந்தாலும், இழப்போடு நம் வாழ்க்கை நின்றுவிடுவதில்லை. வாழ்க்கை நம்மை அதன் போக்கில் கரம் பற்றி அழைத்துச் சென்றுகொண்டே இருக்கிறது. உறவுகளை, நம்பிக்கைகளை, பற்றை என இழந்தபோதும் புதிதாக ஒன்றை இட்டு நிரப்பிக்கொண்டே இருக்கிறது இவ்வாழ்வு. இழந்த ஞாபகங்களை எல்லாம் மறக்கடிக்கச் செய்கின்ற கனவுகள் வரும் என்பதுதான் இயற்கையின் நியதியாக இருக்கிறது.
2008-ம் ஆண்டு ஹிதேந்திரன் என்ற இளைஞனுக்கு விபத்து ஏற்படுகிறது. இரண்டு நாள்கள் கழித்து அவன் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூற, நொறுங்கிப் போகிறார்கள் பெற்றோர். மகனைப் பறிகொடுத்த வலி அவர்களை மீளாத்துயரில் ஆழ்த்துகிறது. அந்தக் கொடுந்துயரிலும் அவர்கள் ஒரு மகத்துவம் செய்கிறார்கள். இழந்து புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால், அனைத்து மனிதர்களுக்கும் புதிதாகக் கற்றுக்கொண்டபோதிலும், மேன்மையான வாழ்க்கைக்குச் சென்றபோதிலும், உயரங்களைத் தொட்டபோதிலும், இழந்த ஞாபகங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. ஏதோ ஒரு நேரத்தில் படித்த கல்யாண்ஜியின் கவிதைதான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு பள்ளியில் நிகழும் ஒரு கால்பந்தாட்டப் போட்டியை, அந்தப் பள்ளிக்கு வெளியே இருந்து எட்டிப் பார்க்கிற ஒரு கரி படிந்த சட்டையை அணிந்திருக்கும் மெக்கானிக் கடைப் பையன் குறித்து ஒரு கவிதை எழுதியிருப்பார். அந்தக் கால்பந்தாட்ட லட்சியம், அந்தக் கால்பந்தாட்டத்தின் வெறி, அந்த மைதானத்துடனான பந்தம்... எல்லாவற்றையும் அந்தப் பள்ளிக்குள்ளே இழந்துவிட்டு அந்த மெக்கானிக் கடையில் வேறு ஒரு மனிதனாக இருக்கிறான்.
இழப்பு என்பது இந்த வாழ்க்கையின் சொல்லப்படாத, மெளனமாக்கப்பட்ட விஷயமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. இழப்பை மீறி மனிதர்கள் ஏதோவொரு வகையில் சமநிலை அடைந்து மெளனமாக வாழக் கற்றுக்கொள்கிறார்கள்.ஆனால் மெளனித்து, பயணித்து மனிதனின் மனங்களுக்குள் கவிஞனோ, எழுத்தாளனோ சென்று பார்க்கும்போது, இந்த இழப்பின் வலி எவ்வளவு என்றும், ரணம் எவ்வளவு என்றும் அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
உதயசங்கரும் கல்யாண்ஜியும் தங்கள் கதையிலும் கவிதையிலும் கண்டுபிடித்த இந்த வலியும் ரணமும் எல்லாக் குடும்பங்களிலும், எல்லாப் பெண்களிடமும் ஆண்களிடமும் ஒரு வகையில் அப்படியேதான் தங்கியிருக்கின்றன.

அவன் உயிர்தானே பிரிந்தது, அவன் உடல் உறுப்புகளை வேறு மனிதர்களுக்குத் தானம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உயிர்கொடுக்க முடியும் என்கிற செய்தி கேட்டு ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவரின் பெற்றோர். `எம் மகன் இறந்துட்டான். மத்த புள்ளைங்க வாழட்டும்' என்றனர். அதன் காரணமாக சிலர் உயிர்பெறுகிறார்கள். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்குகிறார்கள். அதன்பிறகு கிட்டத்தட்ட 1,500 பேர் ஹிதேந்திரன் பெற்றோர் போல உடலுறுப்பு தானம் செய்கிறார்கள். பெரும் மாற்றத்துக்கான புள்ளி அங்கு தொடங்குகிறது. தமிழக அரசு அவரின் நினைவு தினத்தை உடல் உறுப்பு தான நினைவு நாளாக அறிவித்தது. மகனின் நினைவு நாளில் `என் புள்ளையோட கல்லீரல் தானம் பெற்ற கேரளப் பெண்ணுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கு!' என அந்தத் தாய் பூரிக்கிறாள்.
இழப்பு என்ற சொல்லை இந்தத் தாய்மார்கள்தான் இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
- கரம்பிடித்துப் பயணிப்போம்