சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

படம்: அருண் டைட்டன்

முத்தத்தின் கணங்கள்

காற்று புழங்கும் அறையின் மேல்

ஒரு பூனை சரிந்து விழுந்து

தன் விரல்களில்

யாழின் நரம்புகளை

தீண்டுவதுபோல்

என்னுடலைத் தீண்டி

சுவைத்துப் பசியாறுகிறது

ஒரு விடியலின் கனவுபோல்

பூனையைக் கட்டியணைத்து

முத்தம் பதிக்க எத்தனித்த மறுகணம் பூனை உண்ட களைப்பில்

சுருண்டு விழுகிறது

அதிர்ந்து அதன் தலையணையை

பார்த்தேன்

சாளரத்தின் அருகில் பூனை அமர்ந்திருக்க

என் முத்தத்தின் கணங்களை

கொத்திக் கொத்தி

தின்றுகொண்டிருந்து சூரியன்.

- குரு பழனிச்சாமி

*****

கணிதவியல்

அளவுகோல் வட்டமாக

காம்பஸ் மையத்தில் பொருத்தப்பட்டு

குரல்கள் சுழல

ஒரு சூரியன் நகர்கிறது

வட்டமாக சப்பாத்தி

முக்கோணமாக சமோசா

சதுரமாக பப்ஸ்

செவ்வகமாக பஜ்ஜி

இவ்வுடலை வியர்வைத் தேர்வுக்கு தயார்படுத்தும் காரணிகள்

உளுந்த வடையின் நடுவில் பூஜ்யம்

பிதாகரஸ் தேற்றமாக நினைவின்றி

உணர்ச்சிக்குவியல்

பெருக்கிக் கூட்டிக் கழித்து வகுத்து

மீதியில்லாமல் தொடரும்

வாழ்க்கைக்கணக்கு.

- பூர்ணா

சொல்வனம்

பேதலித்தல்

நல்லது நல்லது என்று

வார்த்தைக்கு வார்த்தை

சொல்லப் பழகியிருந்த மாமா

சமயத்தில் எதையும் சொல்லுமுன்னரே

நல்லது என்று சொல்லலானார்

நல்லது கெட்டது பிரித்தறியாத நீங்கள்

அவர் பின்னால் சிரிப்பீர்கள்

கடும் வசவுகளுக்கும்

சிரிப்பையே பதிலாகத் தரும் சித்தியை

புத்தி பேதலித்தவள்போலப் புறக்கணிப்பது

உங்கள் வழக்கம்

பேதலித்துவிடாதிருக்க வைத்தது

அவள் வழக்கம்

நேற்று தெருவில் பார்த்த ஒருவர்

அலங்கோலமாக விழுந்திருந்த

குப்பைப் பையை

ஓரம் தள்ளிவிட்டுப் போக

வீசியிருந்த எனக்குத் தோன்றியது

உங்களில் ஒருத்தி ஆகிவிட்டது.

- உமா மோகன்

*****

மழை முடக்கம்

மழை சுத்தமாக்கிச் சென்றதும்

தார்ப்பாயில் மூடப்பட்டு

நனைந்தும் நனையாமலும் இருந்த பொருள்களால்

மீண்டும் வீடுகளாகிறது பிளாட்பாரம்

தப்பித்த விறகுகளால்

அடுப்புகள் மூள்கின்றன

துணிமணிகள் உலர்த்தப்பட்டு

இயல்புநிலை திரும்புகிறது

சில மணி நேர முடக்கத்தைத் தவிர

இவர்களை எதுவும் செய்துவிட முடிவதில்லை

இந்த மழையால்!

- திருப்பூர் சாரதி