
கவிதை
புலிமயக்கம்
ஆட்கொல்லி மிருகத்தை
மயங்கவைத்துத் தூக்கிச்செல்கிறார்கள்
சொகுசு விடுதிகளாய் ஆன புல்வெளியை
வேட்டையாடப்பட்ட இணையை
பிடித்துச் செல்லப்பட்ட தன் குட்டிகளை
கண்ணாடிச் சில்லுகள் ஏறி
வீங்கிய கால்களை
சிகரெட்டுத் துண்டு பற்ற வைத்த
காட்டுத் தீயை
காடென்று ஏதுமில்லாமல்போன
அகதி வாழ்வை
நினைத்தபடியே மயக்கத்துக்குள்
நழுவிப்போகிறது விலங்கு.
- கி.சரஸ்வதி
******
என்ன செய்ய?
சொன்னபடி
அச்சுப் பிசகாமல்
வந்துவிடுகிறது
காலம்
செய்வதறியாது
வாய் குழறி
பேந்தப் பேந்த முழிக்கிறது
சொன்ன சொல்.
- வெள்ளூர் ராஜா
*****
இயந்திரப்பூச்சி
சாயங்காலத்தில்
விழிபிதுங்கி நிற்கிறது
மெட்ரோ
சுரங்கத்தினுள் தடுமாறுகின்றன
முதியவர்களின் பாதங்கள்
வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில்
எக்ஸிட் நோக்கியே விரைகின்றன
அத்தனை கால்களும்
நகரேணி முன்
பழகிய கிரகம் ஒன்று
வாசலில் வாய்பிளந்து நிற்கிறது
சொல்லற்ற திருப்தியொன்றினைக்
கையில் திணித்து
சுரங்கத்தினுள் ஓடிக்கொண்டிருக்கின்றன
சுருங்கிப்படுக்காத ரயில் பூச்சிகள்!
-ரகுநாத் வ

தட மாற்றம்
நெடுஞ்சாலையை விட்டு
இறங்கும்
வழித்தடங்களெல்லாம்
சக்கரத் தடங்களாயின.
- க.சி.அம்பிகாவர்ஷினி
******
நழுவும் கணங்கள்
மூன்றாவது வரிசையில் நான்காவதாக
ஆடுபவள் நான்தான் என்கிறார் பூக்காரம்மா
நீதிமன்றக் கூட்டத்தில்
பச்சைச் சட்டை நானேதான் என்கிறார்
தெரிந்த ஆட்டோக்காரர்
ஹீரோவிடம்
தபால் கொடுக்கும் நபராக வருவதை
அலைபேசியில் பிடித்து வைத்திருக்கிறார்
தள்ளுவண்டிக்காரர்
காமெடி நடிகரிடம்
அடிவாங்கி அலறும் வாய்ப்பு அதிகபட்சமாய்க் கிடைத்திருப்பதாக
கதை சொல்கிறார் நடைபாதைவாசி
கடைசிப்பெட்டியில் அமர்ந்து
சித்திரங்களைப்
பார்த்து முடிப்பதற்குள்
தூரத்தில் புள்ளியாய்க்
கடந்துவிடுகிறது
யாரோ ஒருவரின் வாழ்வு.
-ந.சிவநேசன்