சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஒரு குட்மார்னிங் கடமைக்கேனும் நலம் விசாரிப்பு ஸ்டேட்டஸுக்கு ஒரு எமோஜி

பிரியங்களை அள்ளுதல்!

குழந்தைகளைச்
சாப்பிடவைத்து
வெயிலுக்கு ஆடவிடாமல்
கதைசொல்லி
தூங்கச்செய்யும்
அம்மாக்களை விடவும்
ஒரேயொரு மணிச் சத்தத்திற்கு
குழந்தைகளையெல்லாம்
தெருவுக்கு அழைத்துவிடும்
ஐஸ்வண்டிக்காரரே
அள்ளுகின்றார்
பிள்ளைகளின் பிரியங்களை.

- காசாவயல் கண்ணன்

***

நிச்சலனம்

யாரோ அடிக்கோடிட்ட வரிகளை
நூலகத்தின் புத்தகங்களில்
கடப்பதற்கும்
ஊரறியா சாலையில்
பேருந்திலிருந்து
முன்னாள் காதலியை
சலனமில்லாமல்
கணவனோடு பார்ப்பதற்கும்
உறங்காத இரவுகளில்
அறையின் இருளைப்
பருகுவதற்கும் பெயர்
கையாலாகாத்தனம் அல்லது
ஜென் நிலை..!

- தீஷிதன்

*****

சொல்வனம்

திறக்காத கதவுகள்

ஒரு குட்மார்னிங்
கடமைக்கேனும் நலம் விசாரிப்பு
ஸ்டேட்டஸுக்கு ஒரு எமோஜி
அனுப்பி அழித்த குறுஞ்செய்திகூட போதும் எனக்கு

இணையத்தில் உன்
பச்சை விளக்கு
அணையும் வரை
வாட்ஸப்பில் லாஸ்ட் சீன்
காணும் வரை
ஏதாவதொரு சமிக்ஞைக்குக்
காத்திருக்கிறேன்

ஆயினும்
இனி திறக்கவே போகாத
கண்ணாடிக் கதவுகளுக்குப்பின்
நின்றுகொண்டு
காத்திருப்பதெல்லாம்
அன்பின் வரமென்று தோன்ற வைக்கும்
அழகிய சாபம்தான் இல்லையா...

- அலர்மேல்மங்கை

*****
மரமெனும் அகதி!

வனத்திலிருந்து
வெட்டிக்கொண்டு போகும்
மரத்தின் பயணம் இலக்கற்றது
பருமனுக்கேற்ப
அது துண்டாடப்படும்போது
திசையெங்கும் தன்
பிரிவுக் கிளைகளைப்
பரப்பிச்செல்கிறது
கதவு கட்டில்
அலங்காரப் பொருள்களென
பரிணாம வளர்ச்சி அடையும்போது
அகதியைப் போல்
ஆங்காங்கே இருக்கிறது
இயந்திரங்களில் சிக்கிக்
கூழாகிக் காகிதமாகும்போது
பல குறிப்புகளைச் சுமக்கிறது
எப்போதாவது தன்
பயணக் குறிப்புகளையெழுத விழைகிறபோதுதான்
ஒரு கவிஞனின்
விரல் பிடித்துக்கொள்கிறது.

- க. அய்யப்பன்