
ஏக்கங்களோடு கால் கடுக்கக் காத்திருப்பதில்லை அன்பிற்காய்.
மாற்றம்
இப்பொழுதெல்லாம்
ஒரு மனமுறிவிற்குப்பின்
அழைப்பெண்ணை அழிப்பதில்லை
சண்டைக்குப்பின்
பிளாக் செய்வதில்லை
துரோகத்திற்குப்பின்
பேசாமல் வெறுப்பதில்லை
ஏமாற்றத்திற்குப் பிறகும்
அன்பினைக் கைவிடுவதில்லை
அன்பின் கரங்களைப் பிடித்துக்கொண்டு
எனக்கு நானே
சமாதானமும் ஆறுதலுமாய்
கண்ணீர் சொட்டும் கவிதைகளை
எழுதப் பழகிக்கொண்டேன்
ஏக்கங்களோடு
கால் கடுக்கக் காத்திருப்பதில்லை
அன்பிற்காய்.
- அலர்மேல்மங்கை
****
முத்தப் புராணம்
காமத்தையோ பாசத்தையோ
எதிர்பார்ப்பையோ
இயேசுவையோ யூதாசையோ
எப்போதும் ஏதேனும் ஒன்றைக்
காட்டிக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது முத்தம்
விடைபெறும் வேளையில்
நீ வைத்த முத்தம்
விடைதராமலே போனது
ஆயிரம் முறை தன்னைத்தானே
முத்தமிட்டுக்கொள்கிறது இதயம்
உன்னிடமிருந்து
ஒரு முத்தம் வாங்குவதற்குள்
முத்தம் சில நேரம்
காமத்தைத் தொடங்கி வைக்கிறது
சில நேரம் முடித்து வைக்கிறது
சில நேரம் தடுத்து வைக்கிறது.
- இளந்தென்றல் திரவியம்
****

நினைவின் மியாவ்
காதலனின் நினைவுகள்
ஒரு பூனைக்குட்டியைப் போல
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
சோவென மழை பெய்யும்போது
சூடாகத் தேநீர் அருந்தும்போது
பாதம் நனைக்காமல் அலை திரும்பிச் செல்லும்போது
கமல்ஹாசன் நாயகிகளை முத்தமிடும்போது
காரணமில்லாமல் கணவன் திட்டும்போது
மூழ்கிப்போன அம்மாவின் நகை ரசீதுகளைப் பார்க்கும்போது
கதவு திறந்திருந்தும்
வாசலில் நின்று கத்திச் செல்லும்
பூனை நினைவூட்டுகிறது
துணிவற்றுக் கைவிட்டவனின் காதலை.
- காயத்ரி கணேஷ்
****
சொல்பேச்சு கேளாமை
நம் பிரிவு
இம்மாலை நேரத்திலா நிகழவேண்டும்
எதிர் திசையில்
விடைபெற்றுச் செல்லும்
உன் பேச்சைக் கேட்காத
உனது நிழல்
மிகச்சரியாக நீண்டு
என் முகத்தில் கவிகிறது
இனி இரவு முழுக்க உனது நிழலை
அணிந்தபடி உறங்க வேண்டும்.
- கே.ஸ்டாலின்