சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

வனச்சித்திரம்

மாமரம் பூத்திருந்தது

அதன் வாசனை

வீட்டைத்தாண்டி வெளியேயும் பரவியிருந்தது

மாடியில் ஒரு பூவை மட்டும் எடுத்து

முகர்ந்து பார்த்தேன்

வீட்டுச் சுவருக்கு வெளியே

பதின்பருவத்து சிறுவன்

சில பூக்களை எடுத்து

அவனது தோழிக்குச் சூடிக்கொண்டிருந்தான்

மாம்பூக்களை

தலையில் சூடும் பெண்ணைக்

காண்பது இதுதான் முதல் முறை

அதைத் தாண்டி அச்சிறுவனின்

முகத்தில் தெளிந்த பரவசம்

காட்டுப்பூக்களைத் தலையில் சூடும்

பழங்குடிப் பெண்கள்

அதன் வாசனைக்காகத் தலையில் சூடுவதில்லை

தம் வாழ்வில்

அதையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள்

அதுபோல

இவளும் இவள் காதலைப்

பார்த்திருப்பாள் போல

மாலைக் கதிரவன்

தன் சிவந்த கதிர்களை

விசிறத்தொடங்கியிருந்தது

அவள் மேல் கசியக்கசிய

முழுச்சூரியன் போல்

சிவந்துகொண்டிருந்தாள்

அதற்கு மேல் அங்கு நின்றிருக்கத் தோன்றவில்லை

படிகளில் இறங்கி வரும்போது

கனங்க மரக்காட்டில் திரிந்துகொண்டிருந்தேன்.

- விஜி பழனிச்சாமி

*****

சொல்வனம்

இசையென்னும் பயணம்

மின்சார ரயிலில்

வியர்வையில் நொந்தபடி

பயணத்தின் ஒரு நிறுத்தத்தில் ஏறினார் அவர்

கறுப்புக் கண்ணாடியை

சரி செய்தவாறு

புல்லாங்குழலை வாசிக்க ஆரம்பித்தார்

கூட்டத்தின் ஊடே

நகர்ந்த அவருடன் கைகோத்து வந்தது இசை

கம்பீரமான வாசிப்பில்

எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது

அவர் இசை

சில்லறைகளால் நிரம்பிய குவளையுடன்

அடுத்த நிறுத்தத்தில் இறங்கி

வேறொரு பெட்டிக்கு நகர்ந்தார் அவர்

அவர் விட்டுச்சென்ற இசைமெட்டு

மட்டும் என்னுடனே பயணித்தது

கூட்டத்தில் கரைந்து

வெகு நேரமான பின்னும்.

- பா.வெங்கடேஷ்

****

மதுரம்

துளி மதுரம் எனைத் தேடி

வந்தது

உள்ளிருந்த நிதானத்திற்கு இருப்புகொள்ளவில்லை.

மேலும் கீழும் குதிக்கிறது

சொற்களைப் பிடித்து ஆட்டுவிக்கிறது

நடுங்கும் குரலில் பேசத் தொடங்குகிறேன்

அத்தனை அலைகளும் எழுகிறது

மிதந்து அசைந்து மூச்சடைக்கிறது

தத்துபித்து உளறலில் நிலைக்கிறது எல்லாமும்

புரிந்துகொள்வதாய் நீயும்

பகிர்ந்துவிட்டதாய் நானும்

நிறைவடைந்துகொள்கிறோம்

இறுதிவரை ஆராயவில்லை

அத்துளி மதுரம் எப்புள்ளியில்

நம்மிடையே

நமக்குள் கடந்து சென்றது?

- ச.மோகனப்ரியா