சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

எல்லோர் வீட்டைப் போலத்தான் எங்கள் வீட்டிலும் ஈசான மூலையில் இருந்தது அடுப்பு

புதிய காற்று

பக்கவாட்டில் தலையாட்டி

மறுக்கும் மலரைச்

சட்டை செய்யாமல்

தொடரும் காற்று

மொட்டவிழ்க்க உதவியும்

இதழ் உதிர அலைக்கழித்தும்

காய்ந்த காம்புகளைத் தடவியும்

இலைகளுடன் சலசலத்தும்

வெட்டவெளியில் அலறியும்

தோப்பிற்குள் சல்லாபித்தும்

தடைகளில் தலை தூக்கி

தன்னையே உயிர்ப்பித்தும்

அசைவுகளற்றுச் செத்துக் கிடக்கலாம்

கேட்பாரற்று

திறந்த கதவில்

வெளியேற மனமின்றி

அறைக்குள்ளே அலையும்

செயற்கைக் காற்றுக்கு

சேதி சொல்ல வருகிறது

பொட்டலில் அலையும்

புழுதிக் காற்றொன்று.

- காரைக்குடி சாதிக்

*****

நெருப்பு

எல்லோர் வீட்டைப் போலத்தான்

எங்கள் வீட்டிலும்

ஈசான மூலையில் இருந்தது அடுப்பு

தினக்கூலியின் வீட்டில்

மாசக் கடைசி ஏது

இருப்பதை

அள்ளித் தெள்ளி

உலையிலிட்டு வடிக்கும்

அன்னைக்கு

திடுதிப்பென நிகழும்

விருந்தினர் வருகைதான்

பேச்சுக்கேட்டாலும் பரவாயில்லையென

கடன் கேட்டு

கடை வாயிலில் நிற்க வைக்கும்

புகை மண்டிக் கிடக்கும்

அடுப்பில்

அம்மா ஊதாங்குழல் கொண்டு

ஊத ஊத

நெருப்பாக எழுந்து வந்தவர்கள்தான்

நாங்கள்.

- வெள்ளூர் ராஜா

சொல்வனம்

****

கண் திறப்பு

அதிகாலை வந்திறங்கிய

கோயிலின் முன்

விழாக்கோலம் பூண

வேண்டியதைப் படைத்து

வேண்டியதை நினைவூட்டி

மனமுருக பிரார்த்தித்தும்

இறங்காத சாமிக்கு

குறை கேட்டு

உடுக்கையடித்தார் பூசாரி

ஏதோ குத்தம் என

அரை மனதோடு

தீர்த்தம் வாங்கி

ஐந்நூறு சாப்பாட்டுக்குச்

சமையல் முடித்து

உண்ணத் தொடங்குவதற்குள் ஆயிற்று பிற்பகல்

கடைசிப் பந்தி முடிகையில்

வண்டியிலேயே

உறங்கிவிட்டவனை

`டிரைவரையும் சாப்பிடக் கூப்பிடுங்கப்பா' என

யாரோ கத்த

திறந்து மூடின

குலசாமியின் கண்கள்.

- ந.சிவநேசன்