சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஒழுங்காகத் தலை வாரவில்லை ஒய்யாரமாய் நடந்து வரவில்லை ஆனாலும், மரங்களைப் பேரழகிகளாய்த் தேர்ந்தெடுத்து

அலைபேசி இல்லாத பகல்

அலைபேசியைத் தொலைத்தலைந்த பொழுதொன்றில்

இருக்கைக்கு முன்னால் அமர்ந்து விரல் சூப்பிய குழந்தை ஒன்று

என்னைப் பார்த்துச் சிரித்தது

மார்போடு

புத்தகம் அணைத்து

கல்லூரி மாணவி ஒருத்தி

ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால்

நிற்கிறாள்

வெட்கம் சுமந்தபடி

நிரம்பிச் செல்லும்

நதி ஒன்று குறுக்கிடுகிறது

என்னை நனைத்தபடி

நெல் வயலில்

களையெடுக்கும் பெண்கள் ஏதோ ஒரு

பாட்டிசைக்கிறார்கள்

சாலையோரத் தேநீர்க்கடை

காத்திருக்கிறது

இந்தப் பேருந்தின் வருகைக்காக

ஆச்சர்யம் என்னவென்றால்

அலைபேசி தொலையாத பொழுதிலும்

இவை நடந்திருக்கின்றன!

- ரேணுகா சூரியகுமார்

*******

அழகி

ஒழுங்காகத் தலை வாரவில்லை

ஒய்யாரமாய் நடந்து வரவில்லை

ஆனாலும், மரங்களைப்

பேரழகிகளாய்த் தேர்ந்தெடுத்து

கூடுகளால் கிரீடங்கள் சூட்டுகின்றன பறவைகள்!

- பழ.மோகன்

*****

சொல்வனம்
சொல்வனம்

மாரியின் நிகழ்காலம்

இரண்டு வருட கொரோனா இடைவெளிக்குப்பின்

புத்தாடையுடுத்தி பூவலங்காரத்தில்

வாயிலில் வாழையோடு

ஈச்சங்குலையும் பனங்குலையும்

தோரணமாட

திருவிழாவிற்குத் தயாரானாள்

மாரியம்மா

எதிர்காலத்தைப்பற்றி

குறி கேட்பதிலேயே

குறியாயிருந்தனர் பக்தர்கள்

அவளோ

ஆடல் பாடலில்

ஆர்வமாக ரசித்தபடியிருந்தாள்

நிகழ்காலத்தை!

- பாண்டிச்செல்வி விஸ்வநாதன்

அவதாரம் களைதல்

டூட்டி முடிந்து

சீருடையுடன் வீடு திரும்புபவள்

பாலத்திற்கு அடியில்

பூ விற்பவளிடம் பேரம்பேசி

இரண்டு முழம் பூ வாங்கிக்கொள்கிறாள்

வழியில் தென்படும்

ஓட பிள்ளையாருக்கு

இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே

பிரார்த்தனையொன்றை வார்க்கிறாள்

வீட்டிற்குள் நுழைந்ததும்

மொட்டை மாடியில்

காயவைத்த துணிகளை

ஓடிச் சென்று எடுத்து வருகிறாள்

பால் ஒரு பக்கமும்

டிகாக்ஷன் ஒரு பக்கமும்

கேஸ் அடுப்பில் கொதிக்க வைத்துவிட்டு

உடை மாற்றச் செல்கிறாள்

சீருடையோடு அவிழ்ந்து விழுகின்றன

காலை முதல் மாலை வரை

அவளுக்குக் கிடைத்த

சல்யூட்களும் பயம் கலந்த பார்வைகளும்.

- பிரபுசங்கர் க