சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கதவுகள் தட்டப்படும் போது திறக்கப்பட வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை

காதல் விதை

இறுக மூடிய கைக்குள்

மௌனித்திருக்கும் ரேகைகளென

அமைதி காக்கிறது உன் காதல்

கூம்பிய எருக்கங்காயினுள்

பொதிந்து கிடக்கும் விதைகளாய்

நெருக்கியடித்தபடி கிடக்கின்றன

உன் நினைவுகள்

ஊடலில் காய்ந்து கிடக்கும்

என் மன எருக்கு பெருவெடிப்பைச்

சந்திக்கும் நாள் மிக அருகில்

நம் காதல்

அலைந்து திரிந்த பெருவெளியேகி

உன் தோட்டம் அடைந்து

முளைக்கக்கூடும் ஏதேனும் ஒரு விதை

இலைத் துளிரில்

எனைக் காண

உனக்குக் கொடுத்துவைத்தால்

அன்று பூக்கும் மலர்களில்

நீ முகரலாம் என் பிரியத்தின் வாசம்.

- கி.சரஸ்வதி

****

திறப்பு

கதவுகள் தட்டப்படும் போது

திறக்கப்பட வேண்டுமென்று

எந்த அவசியமும் இல்லை

திறக்காத கதவுகளை

தட்டவேண்டுமென்ற

அவசியமும் இல்லை

ஆனால் ஏதொன்றும்

செய்யாமல்

கொஞ்ச நேரம்

அமைதியாய்ப் பார்த்துவிட்டுக்

கடப்பது

எவ்வளவு சௌகரியமாய்

இருக்கிறது

கதவிற்கும் நமக்கும்.

- மணிவண்ணன் மா

****

பாரம்..!

பூக்கள் விற்கும்

பொன்னம்மா பாட்டியின் கூடையில்

இன்னமும் இருக்கின்றன

விற்காத பூக்கள்

இருப்பதில் இருநூறு ரூபாய்க்கு

விற்றால்கூட இப்போதைக்கு

அசல்தான் தேறும்

விலை குறைத்தாவது விற்கலாமென்று

ஏழெட்டுத் தெரு சுற்றியும்

எதுவும் விற்பதாய்க் காணோம்

ஏற்கெனவே இருந்த 700 கடனுடன்

இன்றைக்கு 200ம் சேரும் என்ற நினைவே

தலைமேல் இருந்த கூடை அவளைத்

தரையோடு அழுத்தத் தொடங்கியிருக்க...

பொன்னம்மா பாட்டியிடம் இப்போது

யார் சொன்னாலும்

நம்பியிருக்க மாட்டாள்

பூக்கள் பாரமில்லாதவை என்று!

- சாய்மீரா

சொல்வனம்

காத்திருப்பு

அம்மா

கூழாடும் முட்டைகளை

முட்டை சுமந்த தவிட்டை

தவிடு நிறைந்த கூடையை

அப்புறப்படுத்திய பிறகும்

கோழி ரோமம் சிலிர்க்க அவ்விடத்திலேயே படுத்திருக்கிறது

இன்னும் கொஞ்ச காலம்

அவயம் நிகழும்

இன்னும் கொஞ்ச காலம்

அடை காத்திருப்போம்

குஞ்சு பொரிக்காத சோகத்தை நாங்களும்

குஞ்சுகள் பொரிக்கும் கனவை கோழியும்.

- ந.சிவநேசன்