
ஓவியம்: ஏழுமலை
தேன்மொழிகளின் காலம்
உணர்வுகளை
எமோஜிகளில் சொல்லாத
காலம் ஒன்று இருந்தது
ஆயிரம் சண்டைகள் விவாதங்களுக்கிடையே
சின்னச்சின்ன அன்புகள்
காலார நடந்துகொண்டிருந்தன
பாதித் தூக்கத்தில்
கொடுங்கனவுகள் வராத
இரவுகள் இருந்தன
முன்பள்ளிக் காலத்தில்
கையுடைந்த மரப்பாச்சியும்
பூப்போட்ட நீலப்பாவாடையும்
போதுமானதாயிருந்தன
பூக்களும் இலைகளும்
உதிர்ந்த காலமும் வசந்தமும்
ஒன்றாகவே இருந்தன
பின்னிரவுகளில்
விழித்துக்கிடக்கும்
தடாகங்களும் தாமரைகளும் இருந்தன
வீட்டுக்குள் மழை கொண்டுவரும் கூரை இருந்தது
நிலாச் சோறுண்ண பூனைக்குட்டிக்கும்
வட்டக்கிண்ணம் வைக்கும் காருண்யம் இருந்தது
பனைமட்டையெடுத்து
முதுகில் சாத்தி
விரட்டி விளையாடத்
தேன்மொழிகள் இருந்தனர்
மயிலிறகைப் பொத்தி வைத்த காலமது.
- சுசீலா மூர்த்தி

அன்பில் நனைதல்
அலைபேசியில்
அம்மா அழைத்தாலும்
அம்மாவை அழைத்தாலும்
நலம் விசாரிப்புக்குப் பின்
தவறாமல் நான் கேட்கும்
கேள்வி
ஊரில் மழையா
சில சமயம் சாரல்
சில சமயம் கனமழை
சில சமயம் வெயில் என்பாள்
எது சொல்லி வைத்தாலும்
உரையாடலுக்குப் பிறகு
என்னை நனைத்திருக்கும்
அம்மாவின் அன்பு.
- க.அய்யப்பன்
****
எதிர்க்குரல்
சாலையில் போகும்
நாயைக் கண்டும்
சங்கிலியால்
தான்
கட்டப்பட்டிருப்பதற்கும்
சேர்த்தே குரைக்கிறது
வீட்டு நாய்.
- கமலக்கண்ணன்.இரா
***
பிஞ்சு
பரபரப்பான சாலையின் நடுவே
கேட்பாரற்றுக் கிடக்கிறது
குழந்தைகள் அணியும் ஒற்றைச் செருப்பு
அம்மாவின் மடியில்
தூங்கிக்கொண்டே போகும்போது விழுந்திருக்கலாம்
அதன்மேல் ஏற்றிவிடாமல்
கவனமாக விலகிச் செல்கின்றன வாகனங்கள்
செருப்பாகவே இருந்தாலும்
அது ஒரு குழந்தையுடையது!
- திருப்பூர் சாரதி