சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஒரு மழைநாளின் நடைவழியில் விண்மீன்கள் பூத்தவாறு என் தலையருகே கவிந்தது

சிகிச்சை

உப்புத்தண்ணீரை நேரடியாக

அடித்தொண்டைக்குச் செலுத்தி அலசியாகிவிட்டது

இரு உருளை வடிவ மாத்திரைகளை

தொண்டைக்குழியில்

விடாப்பிடியாக உள்ளங்கையினால்

உந்தித் தள்ளி

வயிற்றின் மேற்பகுதியை

செல்லப்பிராணியின் முதுகினைப்போல் தடவியாகிவிட்டது

நெற்றி பழக்கப்படாத

நாமக்கட்டியினை

குழைத்துக் குழைத்து

தொண்டையில்

அப்பியதில் ஈரம் காய்ந்து

வெளிர ஆரம்பித்துவிட்டது

வெதுவெதுப்பான நீர்

மஞ்சள் மிளகு கலக்கிய பாலென

அனைத்தையும் பிடிவாதமாய்

அருந்தியாகிவிட்டது

வலி குறைந்தபாடில்லை...

கடைசியில்

நடைப்பயிற்சியின்போது

கட்டை விரலின் நகம் மேலெழும்பும் அளவிற்குப் பதம்பார்த்த

சிறு கல்லே அதற்கு நிவாரணமானது.

- சரண்யா சத்தியநாராயணன்

****

பச்சை வானம்

ஒரு மழைநாளின் நடைவழியில்

விண்மீன்கள் பூத்தவாறு

என் தலையருகே கவிந்தது

குட்டியாய் ஒரு பச்சை வானம்

கொஞ்சம் கூர்ந்து நோக்கியதில்

அஃதொரு பூக்கள் நிறைந்த

மருதாணிக் குறுமரமென்று புலப்பட்டது

ஆயினும் மழைநின்று

வெகுநேரத்திற்குப் பின்னரும்

தூறிக்கொண்டேயிருந்ததில்

அது வானமாகவே தோன்றியது.

- பழ.மோகன்

சொல்வனம்

அவரவர் வாழ்வு

எந்தவிதப் பிடிமானமுமின்றி

தனக்கென இருக்கும்

சிறிய சிறகுகளை விரித்தபடி

பறந்துகொண்டிருக்கிறது பட்டாம்பூச்சி

அதைவிட வேகமாய்

அதைவிட உயரத்தில்

பறந்துகொண்டிருக்கும்

பிற புள்ளினங்கள்மீது

துளிப் பொறாமையுமின்றிப்

பறக்குமதற்குத் தெரிந்திருக்கிறது

தனக்கான வானத்தின்

அளவு எதுவென்று

அவரவர் வானம்

அவரவர் சிறகுகள்

அவரவர் வாழ்வு.

- பிரபுசங்கர் க

****

துளி

சூப்பர் மார்க்கெட்டுகள்

இருக்கும் வீதியில்

கூறு கட்டிக் காய்கறி

விற்கிறார் ஒரு பாட்டி

நெரிசல் நிலத்தில் பூத்த

அடுக்குமாடிக் குடியிருப்புகள்

வந்துவிட்டபோதும்

தெருத் தெருவாய்

கோலப்பொடி விற்கிறார் ஒருவர்

அரைஞாண் கயிறு விற்கிறவர்

இஞ்சி மிட்டாய் விற்கிறவர்

பூம் பூம் மாட்டோடு

பிழைப்பு நடத்துகிறவர் என

இன்னும் வாழ்கிறார்கள் சிலர்

யாரையும் ஏமாற்றாமல்

எக்காலத்திலும் எல்லோரையும்

வாழ வைத்துக்கொண்டிருக்கிறது

உழைப்பும் முயற்சியும்

நம்பிக்கையும்.

- வீரசோழன் க.சோ.திருமாவளவன்.