சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

நாடிலி இரவு ஒரு நெடுங்கடலில் நாடிலியெனப் பெயரெடுத்த முதல்நாள் இரவில்

அதோ கடல்!

நின்று நிதானித்து

என்னவென்று கண்டறிய

நேரமில்லாதவர்கள்

நடமாடும் அந்தத்தெருவின்

ஒரு சுவரில்

கடப்பவர்களின் கற்பனைக்காக

வரையப்பட்டிருந்த சித்திரத்திற்கு

அடர்நீலம் கருநீலம்

வெளிர்நீலம் வெள்ளையென

வண்ணம் தீட்டப்பட்டிருந்தது

ஓவியனின் திறமை பற்றி

சிறிதும் சிலாகிக்காமல்

நடந்து கடந்து செல்பவர்கள் மத்தியில்

ஒரு சிறுமி மட்டும்

தன் ஒற்றை விரலைச் சுட்டிக்காட்டி

அதோ கடல் என்கிறாள்

ஒரு கடலாக

மாறத் தொடங்கியிருந்தது

அந்தச் சுவர்.

- கீர்த்தி கிருஷ்

சொல்வனம்

முகமூடிகள் சூழ் உலகம்!

முகமூடிகள்

யதார்த்தமாகிவிட்டதால்

எப்போதேனும்

முகமூடிகளுக்கு

மேல்

முகத்தை அணிகிறேன்

அதை

முகமூடி என்கிறார்கள்

என் வழியே

கடந்துசெல்கிறவர்கள்!

- வீ.விஷ்ணுகுமார்

*****

நாடிலி இரவு

ஒரு நெடுங்கடலில்

நாடிலியெனப் பெயரெடுத்த

முதல்நாள் இரவில்

மிதக்கிறது நம்

இருளிய வத்தை

உன் முகம் பார்க்கவேண்டும்

போல் இருக்கிறது

பற்றப்பற்ற

செங்காந்தளின் ஓரிதழாய்

சுடர்ந்தெரிகிறது மெழுகுத்திரி

விழிகளின் பிம்பத்தில்

ஈரிணை வால்நட்சத்திரங்கள்

மறைந்து தோன்றிய

சில கணங்களுக்குள்

மேடிட்ட வயிற்றைத்

தடவிக்கொடுக்கும் தாதியென

பின்னந்தலைகளை

நம் உள்ளங்கைகள் தாங்கத்தாங்க

பிறந்தது முத்தம்

முத்தம்

ஒரே பிரசவத்தில் தோன்றிய

இரட்டைப்பிள்ளைகள்

நம் உதடுகள்

அவற்றின் தனித்தனி

அடைக்கல தேசங்கள்.

- ரம்யா அருண் ராயன்

****

லயிப்பு

தியானம்

செய்ய விடாமல்

கத்திக்கொண்டே இருந்தது

குயில் ஒன்று

எரிச்சலின் முடிவில்

அதனை

கவனிக்க ஆரம்பித்தேன்

இப்போது

கூவிக்கொண்டிருக்கிறது

குயில்!

- கி.ரவிக்குமார்