
சத்தமிடும் இரைப்பைக்கு உமையவளின்றித் தடைபோடுகிறது கண்டம்
சாந்தமற்ற சித்திரங்கள்
சாலை முதுகில் ஓயாமல் சவாரி
தூரங்கள் வருவதும் அருகில் செல்வதும்
நிம்மதியற்ற பயணங்கள்
நீண்ட நெடு வளைவுகளினிமித்தம்
சாந்தமற்ற சித்திரங்கள்
ஒரு தொடர் யுத்தம் போல
வண்ணங்களின் வழியே
தூசு பறத்தல் தூள் பறக்கும்
வெளிறிய கண்களில்
வெயில் வீசி விளையாடும்
வெறும் காட்சி
கானலில் அமர்ந்தும்
கடுந்தவம் அப்பிய
மரத்தடியே சுருண்டும்
பெருங்குழாய்களில் பதுங்கியும்
சிறு திண்டு கிடைத்தாலும்
துண்டான மனிதன் போல
நெடுஞ்சாலை பைத்தியகாரனுக்கு
வேறன்ன வேண்டும்
உலகம் விடுத்த நித்திரைதான்
இன்றைக்கும்.
- கவிஜி
***
சட்டென நில்லாத் தூறல்
சட்டென்று நின்றது போலிருக்கிறது
அனைத்தும்
பொத்தானை அழுத்தியதும்
சற்று நேரம் காற்றாடித்தானே
நிற்கிறது மின்விசிறி
தூறலாய் மாறிப் பின்னும்
துளிகளாய் இலைவழிச்
சொட்டாமலா இருக்கிறது மழை
விருப்பமில்லாவிட்டாலும்
பரவாயில்லை
பேசு இரண்டொரு வார்த்தைகள்
சட்டென்று பேச்சற்றுப்போன மழலையைக் கண்டு
பதைக்கும் தந்தையாய்
பதற்றம் கொள்கிறது மனம்.
- வெள்ளூர் ராஜா

காலத்தின் ஒலி
ஒரு கடலின் ஓசை
ஒரு நதியின் சலசலப்பு
ஒரு அருவியின் இரைச்சல்
இம்மூன்றில் ஒன்றாய்
இருந்திடக்கூடும்
ஒரு குவளையின் நீரை
கேட்டு வாங்கி
அண்ணாந்து பருகும்
கிழவியொருத்தியின்
தொண்டைக்குழி சப்தம்.
- அரியலூர் ச. வடிவேல்
***
விரிசல்களில் ஓடும் நாள்கள்
சத்தமிடும் இரைப்பைக்கு
உமையவளின்றித் தடைபோடுகிறது கண்டம்
பழுதடைந்து இருக்கும் கரியமிலத் தொழிற்சாலையில்
உட்புகத் தயங்குகிறது ஆக்சிஜன்
உள்ளிழுத்தலுக்கும் வெளியேற்றத்திற்குமான சீரற்ற இடைவெளியில்
அழிந்துகொண்டிருக்கிறது அலையுவமை
அனிச்சையாய் வெளியேறும் அசாதாரணங்களுக்கிடையே
முகர்தலின்றி வாடுகிறது அனிச்சமலர்
நாள்பட்டுப்போன பேச்சுவார்த்தைகளில்
பிறழ மறுக்கின்றன நாவுகள்
மாதம் வரும் உதவித்தொகையில்
முற்பட்டு நிற்கிறது ஈமச் செலவின் ஒதுக்கீடுகள்
பித்துக்கும் கல்லுக்குமான விரிசல்களில்
ஓடிக்கொண்டிருக்கின்றன இறுதிநாள்கள்.
- செந்தில்குமார் ந