Published:Updated:

சொல்வனம் - இரவின் கரங்கள்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும்தான் சுடலை மாடசாமி வேட்டைக்குப் போகிறார்

பூனையின் கீறல்

கை தொட்ட கறுப்புப் பூனை

மொத்தமும் கறுப்பென்று

சொல்லமுடியாது

கன்னத்திலும் முதுகிலும் காலிலும்

கொஞ்சம் கொஞ்சம் வெள்ளை

இருந்தது

வலுக்கட்டாயமாய்

தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டேன்

இப்போது முன்னங்கால்

நகங்களை சற்று

வெளிக்காட்டத் தொடங்கியது

நாய்களைப்போல் அல்ல

பூனைகளின் வாலாட்டுதல்

அது சீற்றத்தின் வெளிப்பாடு

மெல்ல வால் அசைத்தது

வேறு வழியில்லை

இறக்கிவிட்டே ஆகவேண்டும்

இப்போது இரண்டு நகங்கள்

என் சட்டையில் மாட்டியுள்ளன

அதுவே இறங்க முயல்கிறது

இதோ இறங்கிவிட்டது

இனி

மார்பில் ஏறி

மனதைக் கீறாமல்

பார்த்துக்கொள்ள வேண்டும்.

- அரவிந்தன்

சொல்வனம் - இரவின் கரங்கள்

இரவின் கரங்கள்

கண்ணுக்கெட்டிய

தூரம் வரைக்கும்தான்

சுடலை மாடசாமி

வேட்டைக்குப் போகிறார்

அதன்பின்பு

தீப்பந்தம்

இரவின் கரங்களுக்கு

மாறிக்கொள்கிறது.

- மகேஷ் சிபி

****

காற்றின் விளையாட்டு

வீட்டின் பின்பக்கப் புல்வெளியில்

பொம்மை லாரியின் முதுகில்

புற்களை அள்ளிப்போட்டு

அங்குமிங்கும் ஓட்டி

விளையாடிய குழந்தைகள்

பின் மாலையில்

உறங்கச்சென்றுவிட்ட பிறகும்

உறங்கச்செல்லாத குழந்தையாய்

இரவெல்லாம்

லாரியை நகர்த்தி

விளையாடிக்கொண்டிருக்கிறது காற்று!

- ராம்பிரசாத்

****

விளிம்பில் சுடரும் உறவுகள்

வீட்டிற்கு உள்ளே ஏற்றும்

விளக்குகளைவிட

வெளியே வைக்கும் விளக்குகள் மீதுதான்

கவனம் அதிகமாக இருக்கிறது

அறைகளுக்குள்

நிதானமாக எரியும் விளக்குகள் பற்றி

கவலையே இல்லை

வாசலில்

காற்றுக்கும் தூறலுக்கும்

சலனமடையும் தீபத்தை

கரம் குவித்துப் பாதுகாப்பதிலேயே

மனம் அழுந்தித் தவிக்கிறது

மனதிற்குள் ஒட்டாமல்

விளிம்பில் சுடர்கின்ற உறவுகளையும்

இப்படித்தான்

போராடித் தக்கவைத்துக்கொள்ள

வேண்டியதாய் இருக்கிறது

வாழ்வில்.

- தி.கலையரசி

****

சமுத்திரத்தின் கிளைகள்

மழை பெய்து ஓய்ந்தபிறகு

மரத்தின் இலைகளில்

தொங்கிக்கொண்டு இருந்தன

சமுத்திரத்தின் கிளைகள்.

- பெ.பாலசுப்ரமணி