Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சட்டெனப் பறந்துவிடும் பறவைக்கு மட்டுமன்றி நிதானித்து நாள்முழுக்க ஊர்ந்துசெல்லும் புழுவுக்கும்

வாழ்ந்துகிடக்கும் காதல்

யுகம்தோறும்

காதலையே பின்தொடரும்

காலத்தின் பயணத்திட்டம்தான் என்ன?

காதலில் இருந்து

துயரத்தை எப்படி வேறுபடுத்துவது

கடலும் அலையும் வேறுவேறா என்ன?

கட்டுக்கடங்காத காட்டுத்தீயின்

வேகம் காதல்

அதை ஆற்றுப்படுத்த முடியுமா என்ன?

அடர் மௌனம் கொண்டு

அகமெங்கும் வனம் செய்கிறார்கள் காதலர்கள்

ஒளிதர வேண்டாம்

கொஞ்சம் இருள் பாய்ச்சினால் போதும்

வாழ்ந்துகிடக்கும் காதல்.

- பாண்டிச்செல்வி விஸ்வநாதன்

****

தூரங்களைக் கடத்தல்

சட்டெனப் பறந்துவிடும்

பறவைக்கு மட்டுமன்றி

நிதானித்து

நாள்முழுக்க ஊர்ந்துசெல்லும் புழுவுக்கும்

கனிந்தே இருக்கிறது

உச்சிமரக் கிளையில் ஒரு பழம்

தன் தூரங்களைத்

தானே கடக்கத்

தயங்காத கால்களுக்கு

உலகம் மிகப்பெரிதா என்ன?

- கீர்த்தி

சொல்வனம்

அந்திப்பொழுதில்...

விழித்துக்கொண்ட விளக்கை

அழகுபடுத்த ஆரம்பிக்கிறது

மெல்லக் கவியும் இருட்டு

விடைபெறும் பகலின்

சில ரகசியங்கள் மூடப்படுகின்றன

சில ரகசியங்கள் திறக்கப்படுகின்றன

கூடு திரும்புகின்றன

விடுமுறையற்ற பறவைகள்

அடுத்த நாளின்

கனவுகளைச் சுமந்தபடி

ஆரம்பமாகும்

பகலின் துயிலைக் காண

மலர்ந்திருக்கின்றன மல்லிகைப் பூக்கள்

திசைகளை வாசத்தால் அழகூட்டியபடி

அணிலோடிய தடங்களோடும்

பறவைகளமர்ந்த ஞாபகங்களோடும்

நட்சத்திரங்களோடு பேசத்தொடங்குகிறது

வீட்டு வாசலிலிருக்கும் வேப்பமரம்

என்னையும் சேர்த்துக்கொண்டு.

-சௌவி

காலத்தைத் தேடி...

விதைக்குள் புகுந்து

வெளியேறத் தெரியாமல்

தவிக்கும் காலத்தை

எச்சமாக உதிர்த்துவிட்டு

இன்னொரு காலத்தைத் தேடிப்

பயணிக்கிறது பறவை.

- அஜித்