சினிமா
Published:Updated:

சொல்வனம் - கவிதை

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஒரு யானையென்பது பெரும் மிருகம் அல்ல; அடர்வனத்தை அசைவுகளில் சுமந்து நடக்கும் கர்வம்

தொடக்கப்புள்ளி

இன்னும் சற்று நேரத்தில்
ஆரம்பமாகும் காத்திருங்கள்
மௌன அறிவிப்புகளை வெளியிட்டன
வேப்ப மரங்கள்
என்ன நடக்கப்போகிறது
அறிந்துகொள்ளும் ஆவலில்
தொங்கிக்கொண்டிருந்த வவ்வால்கள்
அங்குமிங்கும் அலைந்தன
செய்திகளைச் சேகரிக்க
புயல் அறிவிப்பு உண்டா
மேகத்திலிருந்து எட்டிப்பார்த்த நிலா
தொலைக்காட்சி அலைவரிசைகளின்
மனதைப் படிக்க முயன்று தோற்றுப்போக
கும்பாபிஷேகம் நடந்த சிவன் கோயிலின்
புதிய மணியோசை ஒலித்து
ஆரம்பமான தேவாரப் பாடலுக்கு
அதிரடி ட்ரெய்லர் வெளியிட்ட சந்தோஷத்தில்
அந்த வேப்ப மரங்கள்.

- திருமாளம் எஸ். பழனிவேல்

****

அடர்வனம் சுமக்கும் கர்வம்

ஒரு யானையென்பது பெரும் மிருகம் அல்ல;
அடர்வனத்தை அசைவுகளில் சுமந்து நடக்கும் கர்வம்
அப்பெருங்காட்டில் விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும் வியர்க்கிறதாம்
தன் காது மடல்களால் விசிறிக்கொண்டே
வலம் வருவதால்தான் நாம் அதற்கு எப்போதும் விசிறிகள்
களிறுகளின் பிளிறல் வனத்தின் தேசியகீதம்
பறவைகளின் பாடல்களுக்கு
சோம்பல் முறித்து எழும் காட்டிற்கு
தன் தும்பிக்கை நீட்டி
கதிரவனை உள்ளிழுத்துவரும் யானைகள்தான்
நிலாவின் ஒளிக்காக இருளாகிவிடுகின்றன
கானகத்தின் பகலும் இரவும் யானைமுகத்தில்
அதன் தும்பிக்கையில் ஆடிக்கொண்டிருக்கின்றன
அதைத்தான் சூரியனும் சந்திரனும் மாறி மாறி
வேடிக்கை பார்க்கின்றன.

- வலங்கைமான் நூர்தீன்

சொல்வனம் - கவிதை

****

நகர்தல்

அசைவற்ற வயோதிக ஆமையாய்
உறங்கிக் கிடக்கிறது
யாருமற்ற பழைய வீடு

சின்னஞ்சிறு நத்தையாய்
அங்கேயும் இங்கேயும்
நகர்கின்றன குடிசைகள்
ஓடுடைந்து போகின்ற ஆமையின்
அதே கவலை
நத்தைக்கும் உண்டு

ஆமை தலையை நீட்டும்போதெல்லாம்

புலப்படுகிறது
என்றேனும்
உடைந்துவிடும் துக்கம்

நத்தையின் நகர்வில் கமழ்கிறது
இதுவரை
உடையாததன் அமைதி

இப்படித்தான்
நீண்ட காலமாய் இருக்கிறது ஆமை
குறை ஆயுளோடு வாழ்கிறது நத்தை

இருத்தலிலிருந்து வாழ்தலுக்கு
நகர்கிறது
வாழ்ந்து கெட்ட குடும்பமொன்று.

- ந.சிவநேசன்