தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

மஞ்சளில் முக்கியெடுத்த அப்பாவின் வேட்டித் துணியில்தான் முடிந்து வைத்த ஒரு ரூபாய் நாணயம் அது

மாத்திரைகளின் தடம்

வாழ்ந்து முடித்தவர்

என்றாலும்

வலிதான் நேசித்தவர்களுக்கு

அவர் இருக்கை

இனி வெறுமை சுமக்கும்

அவருக்கென்று மெனக்கெட்டு

மருந்து வாங்கவேண்டியதில்லை

எல்லோரும் அழுதுதீர்த்து

வழியனுப்பிய பிறகும்

வீடெங்கும் வியாபித்துப் படர்ந்திருக்கிறது

அவரின் நினைவுகளின் தடம்

மனதில் பதிந்து

மறக்கவேயிலாத அவர் மாத்திரைகளின்

பெயர்களைப்போல.

- மீ.யூசுப் ஜாகிர்

***

கஸல்

இதென்ன நியாயம்?

காதல் விதைகளை

துயரத்தின் வயலில் தூவுகிறேன்.

உன் மேகங்கள் குளிரும்போது

பசியை அறுவடைக்குத் தருகிறாய்.

காலத்தின் வேலிகளைத் தாண்டி

நிற்கும் காதல் சத்தியமானது

அதனை அடைய

உன் புதிர்களோடுதான்

நான் பயணித்தாக வேண்டும்.

நான் காதலில் அறையப்பட வேண்டும் என்பதே

என் உதிரத்தின் கொந்தளிப்பு

சமுத்திரத்தின் அடிநிலத்தில் நிகழும்

தியானம் எனது காதல்

அலைக்கழிக்கும்

சூறைக்காற்று உன்னால்

என்ன செய்துவிட முடியும் அதை?

- தி.கலையரசி

சொல்வனம்

பிறந்த வீட்டு வாசனை

மஞ்சளில் முக்கியெடுத்த

அப்பாவின் வேட்டித் துணியில்தான்

முடிந்து வைத்த

ஒரு ரூபாய் நாணயம் அது

பிள்ளைக்குத் தூளிகட்ட

அம்மாவின் பழைய

பருத்திப் புடவைக்குத்தான்

முன்னுரிமை

சகோதரி

கையில் திணித்த

சருகுத்தாளில்

இஷ்ட தெய்வத்தின் படம்

சிறுவயது ஸ்வெட்டர்

கூடவே தலைக் குல்லா என

கட்டைப்பைக்குள் தம்பியின் பங்களிப்பு

சூரியன் நட்சத்திரம் பிறை என

நெற்றிப்பொட்டு அச்சுக்களை

பவுடர் டப்பாவுக்குள்

போட்டுத் தருகிறாள்

அம்மாச்சி

இப்படித்தான்

பேறுகாலத்துக்கு வந்த நான்

பிய்த்துப் பிய்த்து

எடுத்துச் செல்ல

வேண்டியதிருக்கிறது

பிறந்தவீட்டு வாசனையை.

- கனகா பாலன்

இறக்கை முளைத்து...

தேகத்தின் மீது

வேகமாய் காற்று மோதும்போதெல்லாம்

கைகளை

இறக்கைகளென நம்பத் தொடங்கிவிடுகிறது

மனம்.

- மகேஷ் சிபி