
படம்: மது இந்தியா சண்முகம்
மனப்பேருந்து
நிறுத்தம் வரும் முன் எழுந்து
அமர இடம் தரும் தருணம்
அமர்ந்திருக்கும் பொழுதுகளில்
நின்றுகொண்டு தோளில்
சுமக்கும் சுமைகளை வாங்கி
மடியில் அமர்த்திக்கொள்ளும்
நேரமெனத் தோன்றும்
பரஸ்பரப் புன்னகை ஒன்றில்
இடைவெளி இன்றித் தழுவிக்
கொள்கின்றன உடல்கள்
கைகுலுக்கிக்கொள்கின்றன கரங்கள்
சிமிட்டி மரியாதை
செய்துகொள்கின்றன கண்கள்
மற்றபடி
அவர் அமர்ந்தபடியே இருக்கின்றார்
நான் நின்றபடியே இருக்கின்றேன்.
~ மணிவண்ணன் மா
மர விருது
மரத்தில் கட்டப்பட்ட தூளி
ஆட்டம் நிற்கையில்
அழுங்குழந்தைக்கு சற்றே
கிலுகிலுப்பையாகிறது
அசையும் மரம்.
- அய்யாறு.ச.புகழேந்தி

தேர்வாகும் இருக்கை
எல்லா இருக்கைகளும் காலியாக
இருக்கும்போதுதான்
திறந்து மூடும் ஜன்னல்
கிழியாத இருக்கை
கறையற்ற கைப்பிடி
கால் வைப்பதற்கான மேடை
எனப் பலதரப்பட்ட காரணிகளில்
தேர்வாகிறது ஓர் இருக்கை
ஒன்று மட்டுமேயென்ற பட்சத்தில்
அமர இடம் கிடைத்த திருப்தியில்
சமாதானம் கொள்கிறது மனம்.
- நல முத்துக்கருப்பசாமி
அகதிகள்
ராஜகுருவாகத்தான்
இருந்தது அந்த நரி
இப்போது
வெளியேறத் தோன்றாமல்
நடந்தபடி இருக்கிறது கூண்டுக்குள்
சிற்றரசர்களாக இருந்த புலிகள்
சோம்பல் முறிக்கின்றன
கப்பம் கட்ட அவசியமில்லை
கம்பிகளுக்கு வெளியே இலையுரசும் தேனடையை
வெறிக்கின்ற கரடி
முன்பொரு காலத்தில்
உணவுத்துறை அமைச்சர்
நாட்டியக் காலம் அற்றுப்போனதில்
நடை மறக்காமலிருக்க
கால்களை நகர்த்துகின்றன
மான்கள்
சிங்க ராஜாவுக்கு நோயாம்
ஆச்சர்யத்தோடு காத்திருக்கிறார் சிகிச்சைக்காக
வேலியின் பிரமாண்டத்தை வியக்கிறாள் சிறுமி
இவ்வளவுதானா வனம்
சுருண்டு படுக்கிறது
யானைக்குட்டி.
- ந.சிவநேசன்