சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ரயிலடி நாய்கள்

ரயில் நிலையத்தின் அரவம் குறைந்த பிளாட்பாரம் ஒன்றில்

சந்தித்த தனித்த நாயொன்றின்

கண்கள் சோர்ந்தலைகின்றன.

கொஞ்சம் பதற்றமாயிருந்த முகம்

கடந்து போகிற

பயண அவசரங்களில்

துழாவித் திரிகிறது

தனக்கான பேரன்பை

சற்றே பின்னகர்ந்து

மூன்றடி கீழிருக்கும்

தண்டவாளத்தினின்றும்

பிளாட்பாரத்தின் மேலே

தாவியேறிய மறுகணம்

அதே தண்டவாளத்தில் கடந்துபோகிறது

ரயில்.

ஒற்றை நாளிலேயே

நாலைந்து தடவை

மரணத்தை வென்றுவிடுகின்றன

ரயிலடி நாய்கள்.

தலைதடவ ஆளற்ற

ரயிலடி நாய்கள்

கூட்டத்திலும்

தனித்திருக்கின்றன.

அநாதையாய் உணர்தலென்பது

மனிதர்களுக்கு மட்டுமானதல்ல.

அன்பற்ற பாலையில்

பொழிகிற மழையாய்

நின்றிருக்கும் போகியிலிருந்து பிஞ்சு விரல்களால்

விசிறப்படுகிற பிஸ்கட்டுகள்தான்

ரயிலடி நாய்களின்

இருப்பில் அவ்வப்போது

ஒளியேற்றிப் போகின்றன.

- ஜெயாபுதீன்

சொல்வனம்

தார்ச் சாலையில்

அமர்ந்து

இளைப்பாறுதலென்பது

கொஞ்சமும் பொருத்தம் இல்லை

பட்டாம்பூச்சிகளுக்கு

எவரும் இதைத்

தெரிவிக்கப்போவதில்லை

ஆதலால் இனி நான் பட்டாம்பூச்சிகளின் பாஷையைக்

கற்றுக்கொள்ள வேண்டும்.

- மகேஷ் சிபி

மினர்வா ஒரு சிற்றூஞ்சல்...

இருளில் ஒளி கலக்கும் நகரம் ரோம்

ரோமின் கண்களில் மினர்வா ஒரு சிற்றூஞ்சல்

அவளுடைய கைகளில்

வெட்டி முறிக்கப்பெற்ற தேக்குமரக் குச்சி

மினர்வா இருளை நோக்கி நடக்கிறாள்

ஒளி அவளை உள்ளும் புறமுமாக

ஆட்டிவைக்கிறது!

- க.சி.அம்பிகாவர்ஷினி

சிறு வயிற்றில் கல்லெறிதல்

சோளக்காட்டில் காக்கையொன்றைக் கொன்று

தொங்கவிட்டிருக்கிறார்கள்

எத்தனை மூட்டை தானியத்தைக்

காக்கைகள் களவாடியிருக்கும்

செத்துத்தொங்கும் காகத்தின் குஞ்சுகள்

தாயின் வரவை எதிர்பார்த்து

இப்போதும் காத்திருக்கின்றன

கத்திக் கத்திப் பறந்து திரிந்த காகங்கள்

பொழுது சாயவும் தத்தம் கூடு திரும்பின

தானியங்களை அறுவடை செய்து

தராசில் நிறுத்தி விற்கையில்

வயிற்றில் அடிக்கும் முதலாளியை விட்டுவிடுகிறார்கள்

பறவையின் சிறு வயிற்றில்தான் கல்லெறிகிறார்கள்

தரையில் கிடந்ததைக் கொத்தி விழுங்கி

சுற்றும் பூமியில் இடது புறம் தலை சாய்த்து

அலகைத் தேய்த்து இன்னும் கூர்மையாக்கியது காக்கை.

- பூர்ணா

ஒழுகிவிழும் நீர்த்துளியில்

நிலவொளியைப் பூசிக்கொள்கிறது

கிணற்றுத் தவளை.

- பாணால்.சாயிராம்