
பதியனிடப்படும் தேவ கணம்
பூ இருக்க முள் கவர்ந்தற்று
வெடித்துக் காற்றில் பறக்க எத்தனிக்கும்
இந்தப் பருத்திப் பஞ்சிலிருந்து
சவத்துணியொன்று நெய்யப்படலாம்
புரையோடிப்போன புண்ணிலிருந்து
அவிழ்க்கப்படும் கட்டுத்துணியாக
இத்தூய்மையான பஞ்சு ஆகலாம்
பறவையின் கூட்டில் குஞ்சுகளுக்கு கதகதப்பான
மெத்தையாக தாயின் சூடாய் பிரசவிக்கலாம்
அல்லது
சூரியனுக்கு தன் கறுத்த முதுகைக் காட்டி
வேலை செய்பவரின் கோமணத்துணியாகவும்...

- பூர்ணா
ஆதி ரகசியம்
சிறுவயதில்
பூச்சி மருந்துக்குத்
தப்பித்தவள்தான்
இம்முறை தூக்கிட்டுக்
கொண்டாள்...
இடையில் ஒருமுறை
தண்டவாளத்தில்
தலை கொடுக்கையிலேயே
இறந்தவள்தான்
என்ற யாருமறியா ரகசியத்தை
அவள் தூக்கிட்டுத் தொங்கிய அன்று
கண்டுபிடித்துவிட்டார்கள்...
அதுவும் பொய்யென்று
நகைத்துக் கூறியது,
பூச்சி மருந்துக்கே அவள்
மரணித்துவிட்டாள் என்ற
ரகசியத்தின் ரகசியத்தை...
அப்படியே இன்னொன்றும்
கூறக்கூடும்...
பிறக்கையிலேயே கள்ளிப்பாலுக்கு
அவள் பலியான ஆதி ரகசியம்
பற்றியும்...

- கவிஜி
நீர்க்காகம்
பச்சைப்பாசிகள் படர்ந்து கிடக்கும்
ஊருணியின் நீர்ப்பரப்பைப்
படகுபோலக் கிழித்துச் செல்லும்
எனக்குப் பிரியமான நீர்க்காகம்.
குழந்தைகளிடம் ஒளிந்து ஒளிந்து
விளையாட்டு காட்டும் அன்பர்களைப்போல
ஓரிடத்தில் மூழ்கி வேறிடத்தில்
தலைகாட்டும்.
தத்தித் தத்திச் செல்லும்
தவளைக் கல்லைப்போல
நீர்ப்பரப்பைச் செதுக்கிக்கொண்டே
வான் புகும்
ஊர்க்கதைகள் கேட்டுவர.
நீருக்குள் அதிக நேரம் இருந்துவிட்டால்
கரையோர மரங்களில் நின்று
சிறகை விரித்தபடி வெயில் குளிக்கும்.
தூண்டிலிடும் சிறுவர்களின்
நடமாட்டம் குறித்து
மீன் கூட்டங்களுக்குத்
துப்பு கொடுக்கும்.
நீர்க்காகங்கள்
செழிப்பின் குறியீடு.
காலப்பெருவெள்ளத்தில்
நீர்க்காகங்களைத் தவறவிட்ட
எனது ஊருணி
பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிறது.
பித்துப் பிடித்தவனைப்போல
தண்ணீர் லாரிகளை வழிமறித்து
நீர்க்காகங்களைத் தேடித் திரிகிறேன்.

- முத்துக்குமார் இருளப்பன்
பதியனிடப்படும் தேவ கணம்
வாரச்சந்தைதோறும்
யாரேனும் ஒரு பெண்மணி
தோளில் சுமந்த
ரோஜாச் செடியோடு
ஜனத்திரளிடையே
ஊர்ந்து வருகிறாள்.
காற்றிலாடும் ஒற்றை ரோஜா
மென்சுகந்த வண்ணத்தால்
வீதியின் புறங்களை
வருடிவருகிறது.
நாளின் அந்திமம் அதில்
சரியாக ஒரு பள்ளி வாகனம்
இவ்வீதியைக் கடக்கும்போது
ஆசீர்வதிக்கப்பட்ட அந்த
அற்புத கணத்தில்
ஜன்னல் வழி ரோஜாக்கள்
பரஸ்பரம் நலம்
விசாரித்துக்கொள்கின்றன.
அடுத்த ஆறு நாள்களுக்கு
வெறிச்சோடியிருக்கும்
அவ்வீதியில்
யாராலும் பறித்துவிடவியலா
பூக்களுடன் மெல்ல வளர்கிறது
அந்தரத்தில் பதியனிடப்பட்ட
அத் தேவ கணம்.

- கே.ஸ்டாலின்