சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

அப்புறம் கடவுளும் கற்றுக்கொள்கிறார் புதிய உலகத்தை எப்படிப் படைப்பதென.

சேமித்தவை

லேசாகத் தூறிய

அந்தி மழையை

தன் சுருக்குப் பையில்

சேமித்துக்கொண்ட

பாட்டி

இளம்பிராயத்தில் பெய்த பெருமழையால்

கொடிக்கால் நிரம்பி

இடுப்பளவு ஓடிய தண்ணீரை வெற்றிலையோடு சேர்த்து

அசைபோட்டாள்.

கணவனோடு

கஷ்டப்பட்ட நேரத்தில்

ஆவணி மாத அடைமழை காப்பாற்றிப்போன மொத்தத் தோப்பும்

ஒற்றைப் பாக்கின்

வாய்ச் சிவப்பில்

வந்து கனிந்தது.

ஓடைக் கரைகளைத் தாண்டி

வயலில் புகுந்த பெருவெள்ளத்தில்

கொழுத்த நண்டுகள்

கடித்த காயத்திற்கு மருந்திட்ட சுண்ணாம்புக் குப்பியொன்றும் அதிலிருந்தது.

கோடை மழையொன்றின் குளிரில் மகிழ்வோடு கண்மூடிய

கணவனின் அஸ்தியைத்

திருநீறு எனச் சொல்லி

ஏமாற்றிவந்த

அவளது சுருக்குப்பையின் ஆழத்தில்

இவற்றோடு சேர்ந்து

செல்லாக்காசாகக் கிடந்தது

காணக் கிடைக்காத மழைக்காலமொன்று.

- ந.சிவநேசன்

பகலெனும் சொர்க்கம்

பள்ளிக்கூட வளாகத்துக் காகங்கள்

இப்போது எங்கு பசியாறுமென

ஞாயிற்றுக்கிழமையின் முற்பகலில்

இடைவிடாமல் வினவியபடி

முதல் வகுப்பு அதிஸ்யா

தன் இட்லித்துண்டுகளை வீசி

கா...கா... எனப் பாடுகிறாள்

வந்து இரையெடுத்த காகங்களெல்லாம்

தன் பள்ளிக் காகங்களென

நம்பத்துவங்குகிறாள்

அப்பகல் அமுதசுரபியாகிறது

கூடுதலாக

இன்னும் சில புழுக்களுக்கும்.

- க.அம்சப்ரியா

சொல்வனம்

ஆசை ஓவியம்

பட்டுமீனா படம் வரைய

ஆரம்பிக்கும்போதெல்லாம்

மைக்குப்பியிலிருந்து வெளிவருகிற நீலத்தில்

ஒரு ஆகாயம் அப்பிக்கொள்ளும்

தாது மண்ணுக்கு சுரணைக் குறைபாடு

இருந்தும் ஒத்துழைக்கிறது தூரிகையின்

பால்ய பச்சயத்திற்கு

ஒரு பக்கம் கரேரென்று மக்கிய வானம்

மழைத்துக்கொண்டிருக்கும்போதே

மஞ்சளித்து விடுகிற வெயிலில்

நரிக் கல்யாண வாசனை

வானத்தையும் கானகத்தையும் கழுவுகிற

ஓடையின் விளிம்புகளில்

ஆவாரம் பூக்களை கொதித்து வடிகட்டிய

பொன்னிற பானத்தை ஓட விடுகிறாள்

வெண்மையை வெள்ளையாய்

இருக்க விடுவதில்லை அவள் தூரிகை

நீர்த்துப்போன கஞ்சி வாழ்க்கையில்

உப்புக்கல்லைப்போல

பகல் வானத்தில்

ஒரு வெள்ளை நட்சத்திரத்தையும்

கொழுப்பேறிய நீள்வட்ட நிலவையும்

ஒட்டி வைத்து அபத்தம் செய்கிறாள்

கடைசியாய் வழக்கம்போல கை தவறி

கவிழ்த்த மை புட்டியிலிருந்து

சிதறிய துளிகள்

வானத்தில் சர்க்கரைத் திட்டையும்

மூங்கில் இலைகளில்

திருஷ்டிப் பொட்டையும்

வைத்துவிடுகிறது

அப்புறம்

கடவுளும் கற்றுக்கொள்கிறார்

புதிய உலகத்தை எப்படிப் படைப்பதென.

- ஜெயநதி

படம்: `தேனி’ ஈஸ்வர்