
எனது கையெழுத்தை மட்டும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
திகைத்தல்
இந்த வாழ்வில் எதுவும் உன்னை
ஞாபகப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக
இந்த உலகத்திலிருக்கும் அத்தனை
தடயங்களையும் அழித்துவிட்டேன்
அத்தனை வடிவமான
சற்றே வாளிப்பான
எனது கையெழுத்தை மட்டும்
என்ன செய்வதென்று
தெரியவில்லை.
- மழைக்குருவி
****
வாழும் மரமொன்றின் கதை
அந்த மரத்திலிருந்து வெட்டப்பட்ட
கட்டைகளால் செய்யப்பட்ட ஏணியில் ஏறித்தான்
அதன் கனிகளைப் பறித்தார்கள்
தான் உதிர்த்த ஒன்றிரண்டு இலைகளின்
சுவை பிடித்துப்போன ஆடுகளுக்காகத்தான்
மொட்டையடிக்கப்பட்டது அந்த மரம்
பேரம் பேசாமல் சொன்ன விலைக்கு
மரத்தை வாங்கிச் சென்றவரின்
அன்றைய மனநிலைக்கு
அம்மரத்தின் அடர்நிழலும்
அதிமுக்கிய காரணம்
எத்தனையோ ஆடுகளின் பசி தீர்த்த
இலைகளடர்ந்த மரத்தின்
அகன்ற வேர்க்கட்டைதான்
இப்போது
எத்தனையோ ஆடுகளை வெட்டிக்கொண்டிருக்கிறது
கசாப்புக் கடையொன்றில்.
- சாமி கிரிஷ்
***
நல்ல காலம்
நல்லகாலம் பொறக்குது என்று
சத்தமாய்ச் சொல்லுங்களேன்
ஏ குடுகுடுப்பைக்காரரே
‘அய்யாவுக்கு நல்லகாலம்
பொறக்குதா’ என்று கேட்டு
மாட்டைத் தலையாட்ட வைய்யுங்களேன்
பூம்பூம் மாட்டுக்காரரே
‘இதுநாள் வரை ஆட்டிப்படைத்த
பீடை ஒழியப்போகுது’ என்று சொல்லுங்களேன்
சோழி உருட்டும் குறிக்காரரே
ஆண்டவரின் படத்தை எடுத்துப்போட்டு
‘இனி எல்லாம் சுபம்’ என்று சொல்லுங்களேன்
கிளி ஜோசியக்காரரே
யாரிடம் கேட்பதென்று தெரியாமல்
தவிக்கிறோமே
யாராவது சொல்லுங்களேன்...
‘நல்லகாலம் பொறக்குது’ என்று.
- செந்தில் கே நடேசன்
***
துகில் உலர்தல்
தீயின் நிறமந்த சேலை
மாடியில் கொண்டுபோய்
உலர்த்தச் சொன்னாள் அம்மா
உறக்கம் கலையாத
அப்பாவின் முகத்தில்
நேற்றைய நாடகத்தில் துரியோதனனாக
வரைந்துகொண்ட
மீசைக் கறுப்பு மிச்சமிருந்தது
நீர் சொட்டும் முந்தியை ரசித்தபடியே
படிகளில் ஏறிச் சென்றார் அப்பா
எத்தனையோ
கோடைக்காலம் வந்துபோயிற்று
இன்னும் அவர் திரும்பவில்லை
முடிவேயில்லாமல்
நீளும் அத்தீவண்ணச் சேலையும்
அவ்வளவு எளிதில் உலர்வதாயில்லை.
- பானு சுரேஷ்
***

மூப்பு
பிணி மூப்பு சாக்காடு எனும் மும்மெய்மையில்
பிணியும் சாக்காடும்
எப்போது எனினும் நெருங்கலாம்
மூப்போ பதற்றமின்றி
ஒரே சீர்மையில் வந்தடையும்
திடீர் சந்திப்பின்
ஒரு கைகுலுக்கல் போலின்றி முழுமையாக
ஆரத்தழுவிக்கொள்வது மூப்பு
அன்பின் அமரத்துவம் ஏந்தி
நிதானமாக நடப்பது மூப்பு
இயற்கையின் சுவாசத்தில்
இன்முகமாகப் பயணிப்பது மூப்பு
வேரின் மணத்தை இழக்காதது மூப்பு
திடுக்கிடும் தற்செயல்களில் நேரிடாது மூப்பு
பொறுமையின் திரள்கனி மூப்பு
கனியில் கருணையின் விதைகள் தாங்கியது
மூப்பு
எனினும் வாழ்நாளில் இன்று
தீநுண்மி ஒன்றுக்கு மட்டுமே அஞ்சுமே
என் தாய் தந்தை மூப்பு.
- பாதசாரி