சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

எவ்வளவு துடைத்தும் போகாத இறப்பின் வாசம் சிறு குழந்தைகளின் சிரிப்பில்

டிஜிட்டல் உலகு

மருத்துவமனையின் காத்திருப்பு
அறையில் குனிந்தே கிடக்கின்றன
டிஜிட்டல் முகங்கள்

தொடுதிரையின் ஒளியில்
மங்கலாகிப்போகின்றன பொழுதுகள்

வலியோ வேறெதுவோ
தொடர்பற்றவை சக மனிதனுக்கு

டோக்கன் நம்பர் 25 எனும் அழைப்பில்
எழுந்துபோகிறது ஓர் எண் இடப்பட்ட உயிரி

இந்த இடம் மனிதர்களுக்கானதே
என உணர்த்த வீறிடுகிறது ஒரு குழந்தை

ஒரு கணமும் தாமதமின்றி
அதன் முகத்தருகே நீட்டப்படுகிறது
யாதுமாகி நிற்கும் கைப்பேசி.

- கி.சரஸ்வதி

******

மறத்தலின் மருந்து

எவ்வளவு துடைத்தும் போகாத
இறப்பின் வாசம்
சிறு குழந்தைகளின் சிரிப்பில்
மீளத்தொடங்குகிறது இயல்புநிலை
நேற்று
துக்கம் விசாரித்தவர்கள்
இன்று விருந்தினராக அமர்ந்திருக்கிறார்கள்
காரிய வீடு
கழுவிவிட்ட வீடான பிறகு
வற்புறுத்தி அமரவைத்துப்
பரிமாறப்படுகிறது அசைவம்
நா உறிஞ்சும் அதீதச் சுவையோடு
கசப்பாய் தொண்டைக்குள் இறங்குகிறது
அறைகளில் சொட்டுசொட்டாய்க் கரையும்
பிரியமொன்றின் மிச்ச இருப்பு.

-ந.சிவநேசன்

சொல்வனம்

பரிணாமம்

இப்போது மேலிடத்தில்
புகாராய் இருப்பது
ஏற்கெனவே கீழே
வேண்டுகோளாய்
இருந்ததுதான்.

- வல்லம் தாஜுபால்

*****

மறு உயிர்ப்பு

நதியிலிருந்து
வெளியேற எத்தனித்துக் குதிக்கும்
சிறுமீன்மீது விழும் மழைத்துளி
வாய் கண் வால் முளைத்து
நதிக்குள் மீனாக விழுகிறது!

- குமரகுரு

*****

வீதி

முகம் இறுகாமல்
மூக்கைப் பொத்தாமல்
நெற்றி சுருக்காமல்
அருவருப்பு காட்டாமல்
புன்னகை பூத்த
எதார்த்தப் பேச்சோடு
நின்று நிதானமாக
கூட்டிப்பெருக்கிய குப்பைக்கூடையை
எடுத்துப் போக வரும்
தூய்மைப் பணியாளரிடம்
ஒப்படைக்கும் நெருக்கத்தில்தான்
உண்மையிலேயே
தூய்மையடைகிறது வீதி.

- தி.கலையரசி