
வாட்ஸ் அப் வீடு
வாட்ஸ் அப் என் வீடாகியிருந்தது
கைப்பேசி எண்கள்தான்
முகவரி என்பதால்
எல்லோருக்கும்
தெரிந்திருந்தது என் வீடு.
எந்நேரமும்
யாரோ ஒருவர்
வீட்டுக்கு வந்தபடி இருந்தனர்
அல்லது
குழுவாக வந்துபோனார்கள்
சாப்பிட வரச்சொல்லி
வாட்ஸ் அப்புக்கு வந்துதான் சொன்னார்கள்
அலுவலக உரையாடல்களும்
வாட்ஸ் அப்பில்தான் அரங்கேறின.
இரவு மறந்துபோய்
விளக்கெரிந்துகொண்டேயிருந்த
வீட்டில் ஆள் நடமாட்டம்
குறையவில்லை
ஓயாமல் உழைத்த
கேளிக்கை வீட்டுக்குப்
புதிதாய் நுழைந்த நண்பர்
ஸ்டேட்டஸ் தவறாமல்
பூங்கொத்தும் ஸ்மைலியும் அனுப்பி
ஆச்சர்யப்படுத்தினார்
அன்பை பதிலனுப்பி
எதிர்வினை ஆற்றினேன்
மெல்லத் துண்டு போட்டவர்
ஆயிரம் ரூபாய் அனுப்பச் சொல்லி
அசை போட்டார்
வாட்ஸ் அப் வீட்டின் மணியை
அடிக்கடி அழுத்தினார்
இளகிய மனது
இல்லையென்று சொல்லவில்லை
ஒரு நாளைக்கு ஒரு ஜிபி என
வண்டி ஓட்டிக்கொண்டிருப்பவன்
என்ன செய்வான்?
டொய்ங் டொய்ங் சத்தம் தாளாமல்
வாட்ஸ் அப் வீட்டிலிருந்து வெளியேறி
பதிலுரைக்க முதலின்றி
யாருக்கும் தெரியாத
சொந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்தேன்
வாட்ஸ் அப் வீட்டுக்கு வெளியே
இப்போது பூட்டு தொங்கிக்கொண்டிருக்கிறது.
- மு.மகுடீசுவரன்

அன்றாடங்களின் கடவுள்
காலையில் எழுந்தவுடன்
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து
சலிப்புடன் பார்த்தாள்
நேற்றிரவே இன்றைய சமையலைத்
திட்டமிடாததன் கவலையை
கணத்தில் கடந்து
உள்ளே இருந்து
குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும்
ஒன்றை எடுத்துப்
பலகை மேல் வைத்து
அன்புடன் அதை
வெட்டத் தொடங்கினாள்
அவள் வெட்டிச் சமைக்கத் தொடங்கியது
இக்கவிதையின் தலைப்புமானவளான
அவளையேதான்.
- நந்தா குமாரன்
தேரைகள்
நீண்ட நாள்களாய்
மரணப்படுக்கையில் இருந்து
இறந்துவிட்ட
உறவுக்காரத் தாத்தாவின்
இறுதிச்சடங்குக்கு
தீராப்பகையைக் காரணம் காட்டி
போகக் கூடாது என்றார் அப்பா
அழைத்தால் போகலாம் என்றாள் அம்மா
யாரேனும் அழைக்க வருகிறார்களா என வாசலையே பார்த்திருந்தாள் அண்ணி
செய்த சீரை மட்டும் கொடுத்து அனுப்பிவிடலாம் என்றான் அண்ணன்
கடைசிவரை யாருமே சொல்லவில்லை
போய்ப் பார்த்திருந்தால் இறந்திருக்கவே மாட்டாரென.
- ந.சிவநேசன்