சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியம்: சிவபாலன்

சுற்றமும் நட்பும்

தன் மனைவி வராத காரணத்தைப்

பரிசாக அளித்துச் செல்கிறார்

விழாவுக்கு வந்தவர்

கொண்டாட்டத்தைத்

தன் இடுப்பில் வைத்துக்கொண்டது

பாவாடை சட்டை அணிந்த குழந்தை

அவ்வப்போது

ஒப்பனை செய்துகொள்கிறது

அம்மாவின் புன்னகை

எடுக்கத் தவறிய புகைப்படத்தில்

அப்பா மண்டியிடுகிறார்

மகளிடம்

ஆங்கோர் மூலையில்

நிகழ்வுகளை

எட்டி எட்டிப் பார்க்கிறது

ஒரு கண்ணீர்

வலது கைக்கு ஒன்று

இடது கைக்கு ஒன்று என

இரண்டு தாம்பூலப் பைகள்

பெற்றுக்கொண்ட ஒருவர்

மற்றொரு கையைத் தேடுகிறார்

தன் உடலில்.

- சி.ஜி.ஆர்.தாஸ்

****

தேனருவி

தேன் திருடும் ஆரவாரத்தில்

படபடக்கின்றன

வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்

இறகுகளின் வண்ணத்தை

ஆரவாரமில்லாமல்

திருடிப் புன்னகைக்கின்றன

மலரின் இதழ்கள்.

- செந்தில்குமார் ந

*****

சொல்வனம்

அனல்

சாலையோரங்களில்

இளநீர் வெட்டித் தருபவர்களும்

குண்டுகுண்டு ஐஸ்கட்டிகளாய்

நுங்கு சீவித் தருபவர்களும்

கோளவடிவக் குடுவைகளிலிருந்து

தண்ணீர்க் கீற்றுகளை வெட்டி

தர்ப்பூசணி விற்பவர்களும்

வெற்றுடம்பில் சூரியனைப்

போர்த்திக்கொண்டு வியர்த்து வடிகிறார்கள்

ஏசி கார்களிலிருந்து இறங்கிடும்

கூலிங்கிளாஸ்கள்தான்

காருக்கும் கடைக்குமான

தூரத்தைக் கடப்பதற்குள்

பாலைவனத்தில் நடப்பதுபோல்

பதறிப்போகின்றன

பரவாயில்லை

குளிர்ச்சியை உறிஞ்சி உள்ளிழுக்க

விற்றுத்தீர்ந்த நிம்மதிப்

பெருமூச்சு பிறக்கிறது

அந்த அனலிலும்.

- காசாவயல் கண்ணன்

****

ஐந்திணை

நானிருக்கும் திணை

இதுவென்று சொல்ல இயலாது

இந்த நகரத்தில்

குறிஞ்சியின் மலைமுகட்டைப் போன்ற

அப்பார்ட்மென்ட்

முல்லையின் காடுகளைப் போலப் பெருத்திருக்கும்

காங்கிரீட் வனங்கள்

மருத நில வயல்களைப் போல

வளர்ந்தோடிக்கொண்டிருக்கும்

வாகனங்கள் அசைவுகள்

நெய்தல் நிலப் பரப்பின்

வெக்கை

செயின் பறிப்பு, பீரோ புல்லிங் எனப்

பாலைநிலப் பரப்பைக் கடக்கும் பதற்றம்

நகரத்தில்

நானிருக்கும் திணை

இதுவென்று சொல்ல இயலாது

அச்சத்தோடு கடக்கும் இந்த வாழ்க்கையில்.

- விகடபாரதி