சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

வீடு மாற்ற வேண்டும் என நினைத்தேன் வீட்டிற்குள் எட்டிப்பார்த்த தண்ணீரையும் கண்ணீரையும் துரத்திக்கொண்டிருந்தாள் மனைவி.

ஒன்றுமில்லாமல்...

பேசிக்கொள்ள

எதுவுமில்லாமல் போகலாம்

பார்த்துக்கொள்ள

பழகிக்கொள்ள

எதுவுமின்றிப் போகலாம்

நினைத்துக்கொள்ள

ஒன்றுமில்லாமல்

போய்விடுமா என்ன?

- வெள்ளூர் ராஜா

புரளும் வரலாறு

தளிர் விரல்கள்

மேசையில் இருக்கும்

புத்தகத்தின்

தாள்களைத் திருப்புகின்றன

ரத்தம் சிந்திய

வரலாற்றின் பக்கங்களிலிருந்து

குட்டிபோட்ட தோகைமயிலொன்று

தவழ்ந்து வெளியில் வருகிறது

அம்முலு அகவியபடி

அதன் பின்னால் ஓடுகிறாள்

நரிக்கு

வடையுடன் வானம் பரிசளித்த

காகத்தின்

கால் விரல்களில்

அணைந்துகொள்கிறது தோகைமயில்

காகம் சிறகு விரிக்கிறது

அம்முலு பறக்கிறாள்

வரலாறு புரண்டுகொள்கிறது

நீங்கள்

வசை பாடியபடி

மேசையை

சுத்தம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

- அகராதி

சொல்வனம்

மன வெப்பம்

தகிக்கும் சமையலறையில்

கலந்திருக்கிறது மனவெப்பம்

ஆத்திரங்களின் வடிகாலாகப்

பாவப்பட்ட பாத்திரங்கள்

குளிரூட்டப்பட்ட அறையில்

நிம்மதியான

நித்திரையிலிருக்கிறது

மின்விசிறி கோரிக்கை

மனக்குமுறல்களை

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும்

அடுக்களையின் சுவர்களுக்கு

புத்தரின் முகம்!

- பா.சிவகுமார்

இயலாமை

அறை நிரப்பிய பாத்திரங்களில்

விடாது சொட்டிய

நீரின் சத்தம்

இசையெனத் தோன்றியது

வீடு முழுக்கக் கட்டிய கயிற்றில்

காய்கிற துணிகள்

முகம் மறைத்து விளையாடின

தண்ணீர்

நுழைந்துவிடுமென்று

வீட்டிற்குள் நிறுத்திய

இருசக்கர வாகனம்

சிறிய வீட்டை

குட்டியாக மாற்றியிருந்தது

எப்போதும் போல்

அடுத்த மழைக்குள்ளாக

வீடு மாற்ற வேண்டும் என

நினைத்தேன்

வீட்டிற்குள் எட்டிப்பார்த்த தண்ணீரையும் கண்ணீரையும்

துரத்திக்கொண்டிருந்தாள் மனைவி.

- ச.ஆனந்தகுமார்