கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஒரு காலத்தில் ஓடி செழித்திருந்த ஓடை குடியிருப்புகளின் வருகையால் ஒடுங்கிப் படுத்திருக்கிறது.

அறிதல்

வேர்களைச் சுருட்டி வைத்துக்கொண்டபடி

எப்போதும் புறப்படத் தயாராக

இருக்கின்றன

புலம்பெயரும் அபாயத்திலிருப்பதை

நன்கறிந்த

தொட்டிச் செடிகள்.

- கி.சரஸ்வதி

சாட்சியங்கள்

ஒரு காலத்தில் ஓடி

செழித்திருந்த ஓடை

குடியிருப்புகளின் வருகையால்

ஒடுங்கிப் படுத்திருக்கிறது.

தன் வழியே ஓடும் மழைநீரினை

கடத்துவதில் அதற்கு அப்படி ஒரு மகிழ்ச்சி

இப்போதெல்லாம்

கருவேல மரங்கள்

நெருக்கியடித்து வளர்ந்து நிற்க

கொஞ்சமாய்த் தேங்கி இருக்கிறது மழைநீர்.

இத்தனைக்கும் ஊடே

தன் இலை பரப்பி

சிறிதாய் இரண்டு மலர்களைப் பூக்க வைத்து

நானும் இங்குதான் வாழ்ந்திருந்தேன் என்று

சாட்சியம் பகர்கிறது ஓர்

அல்லிக் கொடி.

- ஜெயசிங் த.ஞா

சொல்வனம்

நீச்சல் நினைவு

மீன்களற்ற குளம்

தனக்குத்தானே

நீந்திக்கொள்கிறது

ஒவ்வொரு முறை

பழுப்பிலை உதிரும்போதும்.

- ந.சிவநேசன்

எழுதித் தீராத கனவொன்று

தப்பிச் செல்ல முடியாமல்

தாழிட்ட சாவிக்கொத்தில்

பின்னியிருக்கும் பூங்கொத்து

தென்றல் நகர்த்தும்

மேகம் சிதறும் மழைத்துளியில்

உடையும் ஞாபகங்கள்

பூமிக்கு நட்சத்திரங்களை

கடத்திக்கொண்டிருந்தது

விடிய மறுக்கும் நாளை

திரும்பச் சொல்லும் பொய்கள்

நேசக்குளத்தில் கல்லெறிய

கலங்கி மீளும் வானம்

பறக்கும் இறகுகளை

நெய்யும் இரவுகளில் மிஞ்சும்

எழுதித் தீராத கனவொன்று.

- சங்கர் சுப்ரமணியன்

இறுதி உரையாடல்

துடித்துக்கொண்டிருக்கும்

அந்நொடியில்

சிறிது இரக்கம் மேலிட

கதைத்திருந்தால்

தூண்டிலில் சிக்காமல்

காத்துக்கொள்ளுமாறு

மீனிடம் சொல்லியிருக்கும்

மண்புழு.

- அஜித்