
பிரிட்டானியா டின்களும் ஹார்லிக்ஸ் பாட்டில்களும் சமையலறையில் இடம் பிடித்தபோது ஆண்டுதோறும் பொங்கும் பானைகளை என்ன செய்ய எனச் சலித்தபடி
மாறும் பாதை
ஒரு பிடி சாம்பலாய்
எஞ்சுகிற உடலின் கனத்தை
சொர்க்க ரத சாரதியும்
ஒரு கை பிடிக்கிறான்
சுலபமாய் வண்டியேறுகிறது
வழிநெடுக தூவிய
மலர்களின் பாதை
மறுநாளில் அழிகிறது மழையில்
தடயங்கள்
மறைந்த வழியில்
இப்போது
நடைவண்டி ஓட்டுகிறது குழந்தை.
- ந.சிவநேசன்
*****
கிரீடம்
சமீபகாலமாக
மயிர்கள்
நிறைய உதிர்கின்றன
கவலைப்பட்டுக்கொண்டிருந்த
என்னிடம்
இப்போதுதான்
என்னால்
தலையில் வாகாகப்
பொருந்திக்கொள்ள முடிகிறது
என்றது
என் கிரீடம்!
- யுகன்
****

நினைவில் இனிக்கும் கரும்பு
பிரிட்டானியா டின்களும் ஹார்லிக்ஸ் பாட்டில்களும்
சமையலறையில் இடம் பிடித்தபோது
ஆண்டுதோறும் பொங்கும் பானைகளை
என்ன செய்ய எனச் சலித்தபடி
நிரந்தர பித்தளைப் பானைகளை
வாங்கிக்கொண்டாள் அம்மா
அத்தைக்கு வாங்கித்தந்த
எவர்சில்வர் பானைகளை
அக்கா மறுதலித்தாள்
இன்னொரு சின்ன குக்கர் சீரோடு
பொங்கல் வரிசை எடுத்துப்போனார் அப்பா
சாத்திரத்துக்கு வாங்கிய கரும்பைச்
சாறாக்கித் தருவாரோ எனக்காத்திருக்கிறது வீடு
அரை விரற்கடை அண்ணன் பங்கு கரும்பு
அதிகமாய்த் தெரிகிறதென்று அழுததும்
வேர்க்கரும்பு தனக்கு வந்ததெனக் குதித்ததுமான
கரும்பாண்டுகள் நினைவில் இனிக்கின்றன
அளந்து அளந்து தராசைப்
பார்த்தபடி வாங்கித் தொடங்கும் என் பொங்கல்
பொங்கிவிடாதபடி
பார்த்துப் பார்த்துப் பொங்கும் கேஸ் ஸ்டவ்களில்!
- உமா மோகன்
****
வழியனுப்புதல்
வழியனுப்பத்தான் சென்றேன்
உள்நுழைகையில் கடந்துபோயிருந்தது
நண்பனிருந்த பெட்டி.
காண இயலாமல்போய்விட்டாலும்
வழியனுப்பவாவது செய்வோமெனக்
கை அசைத்தபோது
கடந்து சென்ற பெட்டியிலிருந்து
கையசைத்த சிறுவனின் புன்னகையில்
கரைந்து காணாமல்போனது
நண்பனைக் காணாத கவலை.
- சுப்ரா வே.சுப்ரமணியன்