
40 ஆண்டுகளுக்கு முன்பு உதகமண்டலத்தில் இருந்த மத்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு மைசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது
இந்திய வரலாற்றின் பெரும்பகுதி கல்வெட்டுகள் மூலமாகவே ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தாங்கள் சந்தித்த போர்கள், அளித்த நிதி, மெய்க்கீர்த்தி போன்றவற்றைத் தாங்கள் கட்டிய பெருங்கோயில்களில் கற்களில் செதுக்கி வைத்தார்கள். இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள், கல்வெட்டில் செதுக்கப்பட்ட இந்த வரலாற்றைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்கள். அவற்றைப் பெரிய காகிதங்களில் மைப் படியெடுத்து ஆவணப்படுத்தினார்கள்.
1861 முதல் தென்னிந்தியாவில் சுமார் எழுபத்து ஐயாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன/ படியெடுக்கப்பட்டுள்ளன; இன்னும் கண்டுபிடிக்கப்படாத கல்வெட்டுகள் பல ஆயிரம் உண்டு. கண்டுபிடிக்கப்பட்டு மைப் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளைத் தொகுத்து ஒவ்வோராண்டும் சிறு குறிப்புகளாக மத்தியத் தொல்லியல் துறை ஆண்டறிக்கை வெளியிடும். பிறகு அந்தக் கல்வெட்டுகளை விரிவாக வாசித்து நூல்களாகவும் பதிப்பிக்கப்படும். இப்படித் தென்னிந்தியாவில் சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப் படிகளை மத்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு அலுவலகம் பாதுகாத்து நூலாக்கம் செய்கிறது.

தொடக்கத்தில் இந்த அலுவலகம் சென்னையில் செயல்பட்டது. காகிதத்தில் கறுப்பு மை கொண்டு படியெடுக்கப்படும் இந்த ஆவணங்கள், முறையான தட்பவெப்பத்தில் பராமரிக்காவிட்டால் வீணாகிவிடும் ஆபத்து இருப்பதால் இந்த அலுவலகத்தைச் சென்னையிலிருந்து உதகமண்டலத்துக்கு மாற்றியது பிரிட்டிஷ் அரசு.
மைப் படியெடுக்கப்படும் லட்சக்கணக்கான கல்வெட்டுகள் ‘தென்னிந்தியக் கல்வெட்டு சாசனம்’ என்ற பெயரில் 27 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 75,000 தமிழ்க் கல்வெட்டுகளின் மைப் படிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் வெறும் 20 சதவிகிதக் கல்வெட்டுகளே நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
40 ஆண்டுகளுக்கு முன்பு உதகமண்டலத்தில் இருந்த மத்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு மைசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு தமிழகத்தில் அப்போது எந்த எதிர்ப்புக் குரலும் எழவில்லை. கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணிக்கு ஒதுக்கப்படும் தொகை, கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. மைசூர் கல்வெட்டுப் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஒரு லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 65,000 கல்வெட்டுகள் தமிழ் சார்ந்தவை. அதனாலேயே மத்திய அரசு கல்வெட்டுகளை மைப் படியெடுக்கும் பணியை முடக்குகிறது என்று வரலாற்றாய்வாளர்கள் குற்றம்சாட்டினார்கள். 2010-ம் ஆண்டு தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் மைசூரில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது மைசூர் கல்வெட்டுப் பிரிவு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் மதுரையைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மைசூர் கல்வெட்டியல் துறை அலுவலகம் தமிழ்க் கல்வெட்டுகளைப் பதிப்பித்து வெளியிட ஆர்வம் காட்டவில்லை. எனவே தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகளைத் தமிழகத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்; அவற்றை நவீனத் தொழில்நுட்ப முறையில் பாதுகாக்கவும், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் மணிமாறன். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னையில் இயங்கிவரும் மத்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளையைத் தமிழ்க் கல்வெட்டியல் கிளை எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், மத்தியத் தொல்லியல் துறையிடம் உள்ள தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தையும் சென்னை தமிழ்க் கல்வெட்டியல் கிளைக்கு ஆறு மாதத்துக்குள் மாற்றவேண்டும், மத்தியத் தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் போதுமான நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும், சென்னை கல்வெட்டியல் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும் என உத்தரவிட்டது.
தமிழகத்திலிருந்து மத்திய அரசின் கல்வெட்டியல் பிரிவு அலுவலகம் மைசூருக்கு மாற்றப்பட்ட போதே தடுக்காமல், நாம் தும்பை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். படிப்படியாக ஆண்டறிக்கை வெளியிடுவதைக்கூட அவர்கள் நிறுத்தி விட்டார்கள்.
இன்னொருபுறம் திருப்பணிகள் என்ற பெயரில் பல அரிய கல்வெட்டுகள் அழிக்கப்படுகின்றன. திருவிடைமருதூரில் உள்ள கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட சோழர் காலக் கல்வெட்டுகள் இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணிகள் நடந்தபோது, திருப்பணி என்ற பெயரில் இந்தக் கோயிலின் கல்வெட்டுகள் பெயர்க்கப்பட்டன. அவற்றைத் தடுத்து நிறுத்திய ஆங்கிலேய அதிகாரிகள், 100 நிபுணர்களைக் கொண்டு மொத்தக் கல்வெட்டுகளையும் படியெடுத்தார்கள். இந்தக் கோயிலின் திருப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரிட்டிஷ் நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதம் லண்டன் சென்று நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக மொத்தக் கல்வெட்டுகளையும் அகற்றிவிட்டுப் புதிய கற்களைக் கொண்டு திருப்பணி செய்து முடித்துவிட்டார்கள். திருவிடைமருதூர்க் கோயில் கல்வெட்டுப் படிகள் இப்போது மைசூரில் இருக்கின்றன; ஆனால் கோயிலில் கல்வெட்டுகள் இல்லை. இப்படித் தமிழகத்தின் பல அரிய கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு விட்டன.

கீழடி அகழ்வாய்வுக்குப் பிறகு தமிழக மக்களுக்கு வரலாற்றின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. தகுந்த நேரத்தில் மைசூரில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டுப் படிகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஒரு தேசத்தின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் அனைத்துக்கும் கல்வெட்டு ஆதாரம். கல்வெட்டுகளின் வழியாகவே நாம் நம்மைப் பற்றி அறிந்துகொள்கிறோம். அவற்றை முறையாகப் பாதுகாக்க வேண்டும்; டிஜிட்டல் செய்து அடுத்த தலைமுறையின் கையில் சேர்க்க வேண்டும். மைசூரில் இருக்கும் கல்வெட்டுகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்து மீண்டும் கிடப்பில் போடுவதால் எந்தப் பயனும் இல்லை. மத்தியத் தொல்லியல் துறையும் தமிழகத் தொல்லியல் துறையும் கணிசமாக நிதி ஒதுக்கி, கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியையும் பதிப்பிக்கும் பணியையும் விரைவுபடுத்த வேண்டும். கல்வெட்டு வாசிப்பவர்களுக்கு மொழிப்புலமை மிகவும் அவசியம். தமிழ் மட்டுமன்றி கிரந்தம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் வட்டெழுத்து, தமிழ் பிராமி எழுத்து முறைகளிலும் மிகுந்த நிபுணத்துவம் தேவை. தமிழக அரசு தகுந்த பயிற்சி அளித்து நிபுணர்களை உருவாக்க வேண்டும்.
எந்தச் சமூகம் தங்கள் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தி, அந்தப் பெருமிதத்தோடு தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கிறதோ அந்தச் சமூகமே உலகத்தை வழி நடத்தும். தமிழ்நாடு இதை எப்போது உணரப்போகிறது?