
கடந்த 15 ஆண்டுகளில் கல்வி தொடர்பாக பெருமாள் முருகன் எழுதிய கட்டுரைகள் ‘மயிர்தான் பிரச்சினையா' என்ற பெயரில் நூலாகின்றன.
ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது, சென்னைப் புத்தகக் காட்சி. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் இக்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. இதே வளாகத்தில் தமிழக அரசின் பங்களிப்போடு 16-ம் தேதி முதல் 18-ம் தேதிவரை சர்வதேச புத்தகக் காட்சியும் நடக்கவுள்ளது. தமிழின் மிக முக்கியமான புத்தகத் திருவிழாவையொட்டி வெளியாகவுள்ள மூத்த படைப்பாளிகளின் நூல்கள் பற்றிய தொகுப்பு...
இந்திரா பார்த்தசாரதி
விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் கனவுகள் படிப்படியாகச் சிதைந்துபோன கதையை முன்வைத்து இ.பா எழுதிய ‘கனவுகளைத் தொடர்ந்து' நாவல் இவ்வாண்டு புத்தகக் காட்சியில் வெளியாகிறது. இந்த நூலையும் ‘ராமானுஜர்' நாடகப் பிரதியின் கிளாசிக் பதிப்பையும் காலச்சுவடு வெளியிடுகிறது.
வண்ணநிலவன்
வண்ணநிலவன் 1970 முதல் 2011 வரை எழுதியவற்றில் தேர்வு செய்யப்பட்ட 91 சிறுகதைகள், ‘வண்ணநிலவன் சிறுகதைகள்' என்ற தொகுப்பு நூலாக வருகிறது. யவனிகா ராம் முதல் ந.பிச்சமூர்த்தி வரை 18 கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய ‘கவிதை இன்று முதல் அன்று வரை' என்ற ஆய்வு நூலையும் வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். இரண்டும் காலச்சுவடு வெளியீடு.

வண்ணதாசன்
2022-ல் எழுதப்பட்ட 11 நீண்ட சிறுகதைகள் அடங்கிய ‘அகிலம்' என்ற சிறுகதைத் தொகுப்பும், 52 கவிதைகள் அடங்கிய ‘வெயிலில் பறக்கும் வெயில்' என்ற கவிதைத் தொகுப்பும் வருகிறது. இரண்டு நூல்களும் சந்தியா பதிப்பக வெளியீடு.
அ.கா.பெருமாள்
கண்ணகி வழிபாடு பகவதி வழிபாடாக மருவிய வரலாற்றை உள்ளடக்கி எழுதப்பட்ட ‘கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்' என்ற நூல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வருகிறது. அ.கி.நாயுடு, கா.நமச்சிவாய முதலியார் உள்ளிட்ட வெளிச்சம் பெறாத 40 அறிஞர்களை ஆவணப்படுத்தும் ‘தமிழ்ச்சான்றோர்' நூலை காலச்சுவடு வெளியிடுகிறது.
கலாப்ரியா
கலாப்ரியாவிடமிருந்து இவ்வாண்டு ‘அமைதி என்பது பழகிய ஓசை' என்ற கவிதைத்தொகுப்பு வெளிவருகிறது. 2021-22 காலகட்டத்தில் எழுதப்பட்ட 70 கவிதைகள் அடங்கிய நூல். சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது.
பாவண்ணன்
பாவண்ணனின் நூறாவது நூலான ‘நயனக்கொள்ளை' இந்தப் புத்தகக் காட்சிக்கு வருகிறது. 10 சிறுகதைகள் அடங்கிய நூல். 58 பாடல்கள் அடங்கிய ‘வணக்கம் சொல்லும் குரங்கு' என்ற சிறுவர் பாடல் தொகுதியும் ‘பாவண்ணன் பாடல்கள்' என்ற முழுமையான தொகுப்பும் பாரதி புத்தகாலயத்திலிருந்து வெளிவருகின்றன. தன்னறம் வெளியீடாக ‘பொம்மைகள்' என்ற சிறுவர் சிறுகதை நூலொன்றும் வருகிறது.
ஜெயமோகன்
2022-ல் மட்டும், 23 நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார் ஜெயமோகன். 8 சிறுகதைத் தொகுப்புகள், 8 கட்டுரைத் தொகுப்புகள், வெண்முரசு வரிசையில் நான்கு நூல்கள் தவிர, ‘அந்த முகில் இந்த முகில்', ‘கதாநாயகி', ‘குமரித்துறைவி' ஆகிய மூன்று நாவல்களும் வெளிவருகின்றன. அனைத்து நூல்களும் விஷ்ணுபுரம் வெளியீடு.

பெருமாள் முருகன்
கடந்த 15 ஆண்டுகளில் கல்வி தொடர்பாக பெருமாள் முருகன் எழுதிய கட்டுரைகள் ‘மயிர்தான் பிரச்சினையா' என்ற பெயரில் நூலாகின்றன. மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு எதிராகப் போராடிவரும் பெஜவாடா வில்சனுடனான உரையாடல் ‘மாறாது என்று எதுவும் இல்லை' என்ற பெயரில் நூலாகிறது. ‘Bynge ஆப்’பில் தொடராக எழுதிய ‘நெடுநேரம்’ நாவலும் வருகிறது. அனைத்தும் காலச்சுவடு வெளியீடு.
இமையம்
இமையத்தின் 10 சிறுகதைகள் அடங்கிய நூல் ‘தாலிமேல சத்தியம்' என்ற பெயரில் க்ரியா வெளியீடாக வெளிவருகிறது. ஆனந்த விகடனில் வந்த தாலிமேல சத்தியம், நீலம் இதழில் வந்த காணாமல் போனவர்கள், உயிர்மை இதழில் வந்த கட்சிக்கார பிணம் என இதழ்களில் வந்து கவனம் ஈர்த்த கதைகளின் தொகுப்பு.
நக்கீரன்
நக்கீரனின் ‘தமிழ் ஒரு சூழலியல் மொழி' நூலை காடோடி பதிப்பகம் வெளியிடுகிறது. 25 அத்தியாயங்கள் கொண்ட இந்த ஆய்வு நூல், 2015-ம் ஆண்டில் ‘விகடன் தடம்' இதழில் ‘தமிழ் - நம் நிலத்தின் கண்ணாடி' என்ற தலைப்பில் நக்கீரன் எழுதிய கட்டுரையின் விரிவான வடிவம்.
ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யாவின் நேர்காணல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் ‘அலைமிகு கணங்கள்' என்ற பெயரில் நூலாகின்றன. ஆனந்த் டெல்டும்டேவுக்கு எழுதிய கடிதம், ஜிக்னேஷ் மேவானி நடத்திய நடைப்பயணத்தில் பங்கேற்றது குறித்த நேர்காணல் என மிகவும் காத்திரமான உள்ளடக்கங்களோடு வரும் இந்த நூலை நீலம் பதிப்பகம் வெளியிடுகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன்
‘பகலின் சிறகுகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு, ‘வான் கேட்கிறது' என்ற உலக இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய நூல், ‘நிறங்களை இசைத்தல்' என்ற ஓவியம் சார்ந்த கட்டுரை நூல், ‘மரியாவின் இயந்திரப் பறவை' என்ற சிறார் நூலென எஸ்.ராவின் நான்கு நூல்கள் இந்தப் புத்தகக் காட்சிக்கு வருகின்றன. அனைத்தும் தேசாந்திரி பதிப்பக வெளியீடு.

மனுஷ்யபுத்திரன்
2,400 கவிதைகள் அடங்கிய 12 தொகுப்புகளை பிரமாண்டமாகக் கொண்டு வந்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன். ‘மழைக்காலக் காதலும் குளிர்காலக் காமமும்', ‘உன்னை எனது கண்ணீரால் தாங்கிக்கொள்வேன்', ‘அன்புக்காகவும் கடவுளுக்காகவும்' என நூல்களின் தலைப்பே சமூக ஊடகங்களில் டிரெண்டாகியிருக்கின்றன. ‘தாராவின் காதலர்கள்' என்ற மனுஷின் முதல் நாவலும் வெளியாகிறது. அனைத்தும் உயிர்மை வெளியீடு.
கண்மணி குணசேகரன்
பதின்பருவத் தோழிகள் இருவரின் திருமணம்... அது தொடர்பான சிக்கல்களைப் பற்றிய ‘பேரழகி' நாவல், நடுநாட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் ‘செம்பையனாரின் மண்ணும் மக்களும்' என்ற கட்டுரை நூல், ‘மணக்கொல்லை' என்ற கவிதை நூல், ‘நடுநாட்டுப் பழமொழிகள்' ஆகிய நூல்கள் வருகின்றன. அனைத்தும் தமிழினி பதிப்பகம் வெளியீடு.
சல்மா
சல்மாவின் மூன்றாவது நாவல் ‘அடைக்கும் தாழ்' இந்தப் புத்தகக் காட்சிக்கு வருகிறது. மூன்று தலைமுறைக் காதலையும் அதன் நீட்சியான சாதி மதப் பதற்றங்களையும் முன்வைத்து எழுதப்பட்ட இந்த நாவலை காலச்சுவடு வெளியிடுகிறது.