
`உறங்குவது போலும் சாக்காடு’ என அறிவித்த வள்ளுவரின் வார்த்தைகளுக்குச் சற்றும் குறைவில்லாதவையே பூஸனின் சொற்கள்.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
மூன்று வரியோ, முப்பது வரியோ ஒரு நல்ல கவிதை எனில் அது வரிகளின் கணக்கை வைத்து வரையறுக்கப்படுவதில்லை. வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ள வரிசையோ, மடக்கியும் நீட்டியும் எழுதப்பட்டுள்ள வாக்கியங்களோகூட அதற்கு முக்கியமில்லை. ஒரு நல்ல கவிதை, தன்னளவில் சுயத்துடன் வெளிப்படுவது. சுண்டியிழுக்கும் சொற்செட்டுகளைத் தாண்டியும் சுதந்திர மனநிலையைப் பிரதிபலிப்பது. அதுமட்டுமல்ல, கண்ணுக்குப் புலப்படாத விஷயத்தையும் கடினமில்லாமல் காணத்தருவது. அப்படி ஒரு கவிதையை பூஸன் எழுதியிருக்கிறார். ஜென் முன்னோடிகளில் அவரும் ஒருவர்.
அவருடைய ‘ஆழ்ந்து உறங்குகிறது/ ஆலயமணியின் மேல்/வண்ணத்துப்பூச்சி’ என்கிற கவிதை, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில் வெளிவந்த தி.லீலாவதியின் ‘ஜப்பானிய ஹைகூ’ நூலின் மூலமே எனக்கு அறிமுகம். தொடக்கத்தில் ஹைகூக்களை ஏற்பதில் தமிழ்ச் சமூகத்துக்கு இருந்த தயக்கத்தைப் போக்கியதில் அந்நூலுக்கு அதிக பங்குண்டு. சம்பந்தமில்லாத இரண்டு படிமங்களை உருவாக்கி, அந்த இரண்டுக்குமான அந்தரங்க உறவைப் புலப்படுத்துவதே ஹைகூக்களின் முயற்சி. சம்பந்தமில்லாத மூன்று வரிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்ச்சியிருப்பதை உணரும் தருணத்தில் உண்டாகும் பிரமிப்பும் பரவசமும் சொல்லில் அடங்காதவை. பூஸனின் கவிதையை முதலில் வாசிக்கையில் எனக்கேற்பட்ட எல்லையற்ற சந்தோஷத்தை தற்போது நினைத்துக்கொள்கிறேன். ஹைகூவை, ஜென் தத்துவக் கோட்பாட்டின் இலக்கிய வடிவம் எனலாம். ஹைகூவின் வடிவம்தான் தமிழுக்குப் புதிதே தவிர, அது உள்ளடக்கிய தத்துவமோ, சொல்முறையோ புதிதில்லை. பருவநிலை மாற்றங்களையும், அந்த மாற்றங்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் சங்கப் பாடல்களும் தராமலில்லை. சிறிது, பெரிது என்கிற வித்தியாசத்தை விட்டொழித்து, பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும், உயிர்களுக்கும் ஒரே மதிப்பை வழங்கவே ஹைகூ எண்ணுகிறது. எல்லாம் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை என்பதால், எல்லாப் படைப்புகளையும் சகோதர உறவுடன் அது தரிசிக்கிறது. உயிருள்ள வண்ணத்துப்பூச்சி, உயிரற்ற கோயில் மணி மேல் உறங்கினாலும், அவை இரண்டுக்கும் ஓர் உறவிருக்கிறது. அந்த உறவுதான் கனவுக்கும் விழிப்புக்குமான இடைவெளியை நிரப்புகிறது.

`உறங்குவது போலும் சாக்காடு’ என அறிவித்த வள்ளுவரின் வார்த்தைகளுக்குச் சற்றும் குறைவில்லாதவையே பூஸனின் சொற்கள். உறங்குவதுபோல மரணம், எழுவதுபோல பிறப்பு. இரண்டுக்கும் நடுவே நிகழ்வன அனைத்தும் கனவுகளைப் போன்றவை அல்லது கலைந்துவிடக் கூடியவை. இந்த இரண்டே வரியில் வாழ்வின் சகலத்தையும் வள்ளுவர் சொல்லி முடிக்கிறார். அதேபோல, பூஸனுக்கும் வாழ்வையோ, நிலையாமையையோ சொல்ல இரண்டு படிமங்களுக்குமேல் தேவைப்படவில்லை. ஒரு கோயில் மணியின் அசைவில் வாழ்வின் அசைவற்ற தன்மையை பூஸன் வேண்டுகிறார். ஓவியராகவும் அறியப்பட்ட பூஸன், வார்த்தைகளில் தீட்டும் வண்ணங்களே கவிதைகளாகப் பிறந்துள்ளன.
மோரிடாகே என்கிற இன்னொரு ஜென் கவிஞர் ‘வீழ்ந்த மலர் / கிளைக்குத் திரும்புகிறதா / வண்ணத்துப்பூச்சி’ என்றிருக்கிறார். உதிர்ந்துவிட்ட பூவின் காம்புகளில் ஒரு வண்ணத்துப்பூச்சி அமர்ந்துள்ளதாக அமைந்த கற்பனையில் நம்பிக்கை துளிர்விடுகிறது. `ஹைகூ கவிதைகளின் தந்தை’ என மதிக்கப்படும் பாஷோ தன் பங்குக்கு ‘மணியோசைக்குப் பின் அமைதி / மலர்களின் ஓசை / சுகந்த ஓசை’ என்று சிந்தித்திருக்கிறார்.
கோயில் மணிமேல் உறங்கும் வண்ணத்துப்பூச்சி எனும் சித்திரம், பார்க்க இயல்பானதுபோல் தோன்றினாலும், அது தரும் பதற்றம் இதயத்தைக் குடைகிறது. எப்போது வேண்டுமானாலும் அக்கோயில் மணி அடிக்கப்படலாமென்னும் எதிர்பார்ப்பே அக்கவிதையின் மையம். அந்த மையத்தை சுற்றிச் சுழலும் எண்ணங்கள், வாழ்வின் சந்தேகங்களைத் தீர்க்கின்றன.
ஒரு கவிதை ஆழமாக நம்மை பாதிக்க எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது, அது நம் நிலப்பரப்புக்கும், நித்திய உணர்வுகளுக்கும் நெருக்கமாக அமைவது. பூஸனின் கவிதையிலும் பாஷோவின் கவிதையிலும் இடம்பெற்றுள்ள கோயில் மணியும், வண்ணத்துப்பூச்சியும் நம்முடைய தமிழிலக்கிய நெடும்பரப்பிலும் பல இடங்களில் தென்படுகின்றன. ‘சிகண்டி பூரணம்’ என்று சித்தர்களால் அழைக்கப்பட்ட சிதம்பரம் கோயில் மணி தெய்விக ஒலியெழுப்பி, தியானத்தின் ஆழ்நிலையைத் தொட உதவுகிறது என்கிறார்கள்.

சிதம்பர சிகண்டி பூரணமணியே வள்ளலாரின் ஆன்மிக வாழ்வுக்கான அருளை நல்கியதாகவும் எங்கேயோ படித்திருக்கிறேன். அவருடைய `வாடுத னீக்கிய மணிமன்றிடையே / ஆடுதல் வல்ல அருட்பெருஞ்சோதி’ என்ற அகவல் குறித்து பின்னர் பார்க்கலாம். வெறுமனே ஒரு கவிதையோ, ஒரு சொற்றொடரோ நம்மை ஆட்கொள்வதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட சித்திரங்களும் சிந்தனைகளும் உள்ளேயிருந்து ஊக்குவதால் மட்டுமே பிடிக்கிறது. சூசுகி, பாஷோ, ராய்ஸான், பூஸன், ஸாய்காகு, இஸ்ஸா போன்றோரின் ஜென் மனநிலையை உள்வாங்குவது அத்தனை எளிதல்ல.
பாழடைந்த கோயில் மணியையும், படுத்துறங்கும் வண்ணத்துப்பூச்சியையும் நாமும் கண்டிருக்கிறோம். என்றாலும், அவை இரண்டையும் இணைத்துப் பார்க்க நாம் எண்ணியதில்லை. ஓர் இணைப்பில் ஓராயிரம் சிந்தனைகளை, சிறகுகளைத் தோற்றுவிக்க முயன்றதில்லை. அங்கேதான் பூஸனின், பாஷோவின் தனித்துவங்கள் மிளிர்கின்றன. ஜென் என்பது தியானத்தின் மாற்றுச் சொல். முன்பின் யோசனைகளைத் தவிர்த்து, அந்தந்த விநாடிக்குரிய அனுபவங்களை அப்படியே பகிர்வதுதான் அதன் அடிப்படை. மேலதிக விளக்கங்களைத் தரலாமென்றாலும், விளக்கங்களிலிருந்து வெளியேற்றுவதே ஜென்னின் நோக்கமென்பதால் விட்டுவிடுகிறேன். ஒரு காட்சியைச் சொல்லி, அக்காட்சியின் வழியே நம்மை ஒருமுகப்படுத்தவே ஜென் முயல்கிறது. கத்தோரியும், கோனும் ஜென்னின் சாராம்சமாக இருப்பவை.
‘கத்தோரி’ என்றால் புதிய கோணத்திலிருந்து பார்ப்பது. ‘கோன்’ என்பது மனதின் எல்லா ரகசியங்களும் புலனாகிய நிலை. தான் அறிந்த ஒரு காட்சியைப் பூஸன் காண்பிக்க, அக்காட்சி நம்முள் வெவ்வேறு தோற்றங்களையும் கோணங்களையும் உண்டாக்குகின்றன. பூஸனின் கோணத்திலிருந்து பார்ப்பது ஒரு வகை. அதற்கு எதிரிலிருந்து பார்ப்பது இன்னொரு வகை. கோயில் மணி என்றவுடனே நம்முள் தாமாக ஓர் ஓசை எழுகிறது. அந்த ஓசை, இரு கை ஓசையல்ல. ஒரு கை ஓசை. ஒரு கையால் ஓசையை உண்டாக்க முடியாதென்று எண்ணுகிறோம். ஜென்னோ திரும்பத் திரும்ப ஒரு கை ஓசையை, உணர்விலிருந்து கிளர்த்த நிர்பந்திக்கிறது.

முக்காரி எனும் பெயருடைய ஜென் குரு புத்த கோயிலில் அமர்ந்திருக்கிறார். அப்போது அவரைச் சந்திக்க தோயோ என்கிற சிறுவன் வருகிறான். சிறுவன் கோயிலுக்கு வந்த சமயத்தில், அவர் தன் சீடர்களுக்கு கோன் பயிற்சியை வழங்கிக் கொண்டிருக்கிறார். வாசலில் நின்றிருந்த சிறுவன், பொறுக்க முடியாமல் ஆலயமணியை அடித்து, தன் வருகையைத் தெரிவிக்கிறான். வெளியே வந்த முக்காரி, `என்ன வேண்டும்?’ என்கிறார்.
அதற்கு அந்தச் சிறுவன் `நானும் பயிற்சி எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்கிறான். ‘எப்போது உன்னால் ஒரு கையால் ஓசையெழுப்ப முடிகிறதோ அப்போது வந்து என்னைப் பார்’ என்று சொல்லிவிட்டுப் போகிறார் குரு. முக்காரி என்ற ஜப்பானிய சொல்லுக்கு ‘நிசப்த இடி’ என்பதே பொருள். தோயோவுக்கு எப்படியாவது ஒரு கை ஓசையைக் கற்றுத் தேர்ந்து பயிற்சியில் சேர வேண்டும் என்பதே குறி. அது ஒரு கட்டத்தில் வெறியாக மாறியது. கேட்கும் எதையும் ஒரு கை ஓசையாகக் கற்பனை செய்கிறான். நடனக்காரிகளின் இசையை, துளிநீர்ச் சொட்டுகளின் ஓசையை, ஆந்தை அலறுவதை, காற்று ஊளையிடுவதை என ஒவ்வொன்றாக ஆராய்ந்து இறுதியில் ஆழ்நிலைக்குப் போய்விடுகிறான்.
தியானத்தின் ஆழ்நிலையில் அவனுக்கு ஓர் ஓசை கேட்கிறது. அதன் பிறகு அவனுக்குக் குருவோ, கோன் பயிற்சியோ அவசியமில்லை எனப் பட்டுவிட்டது. சரியான ஓசையைக் கண்டடைய வேண்டுமானால், ஓசையற்ற பிரதேசத்துக்குள் புகுவது தக்கதல்ல. மாறாக, ஓசைகள் நிறைந்த பகுதியிலிருந்து நம்மை நாமே தனியாக விடுவிக்கப் பயில வேண்டும். விசித்திரமாகவும் விநோதமாகவும் தோன்றலாம். ஆனால், பெரும்பாலும் உண்மையும் கவித்துவமும் அப்படித்தானே... ஒன்றின் மதிப்பை இன்னொன்றின் மதிப்பை வைத்துக் கணக்கிடுவதிலிருந்து எப்போது விடுபடுகிறோமோ, அப்போதுதான் நாம் நம் மதிப்பை உணர முடியும்.
ஓஷோ, ‘புல் தானாகவே வளர்கிறது’ நூலில் ஜென் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். ஜென் மனநிலையைக் கதைகளின் வழியே அவர் கற்பிக்கவில்லை. கற்பித்தலின் மூல வடிவான உணர்தலை மேற்கொண்டிருக்கிறார். அதில் ஒரு கதை, உயிர்களுக்கும் பொருள்களுக்கும் உண்டாகும் மதிப்பைப் பற்றியது. அங்கீகாரமும் புறக்கணிப்பும் எங்கிருந்து தொடங்குகிறது என்பதும்கூட.

ஒரு சீடன் ஜென் குருவைச் சதா தொந்தரவு செய்கிறான். காத்திருந்து ஞானத்தைப் பெறவேண்டிய அவன், அதற்கான பொறுமையில்லாமல் அவசரப்படுவதை அவர் கவனிக்கிறார். அதுமட்டுமல்ல, ஞானத்தைப் பெறுவதைவிட அவனுடைய ஆர்வம் முழுவதும் அதன் ரகசியங்களையும் வழிகளையும் தெரிந்துகொள்வதில் மையமிட்டிருப்பதை ஊகிக்கிறார். எத்தனையோ விதங்களில் அவர் எடுத்துக் கூறியும் அவன் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் குருவுக்குச் சீடனால் ஏற்படும் நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் போகிறது. எப்படியாவது அவனுக்கு ஓர் உண்மையை உணர்த்த விரும்பிய அவர், ஓர் அழகான பெரிய கல்லைக் கொடுத்து அதைச் `சந்தையில் போய் விற்றுவிட்டு வா’ என்கிறார். அவனும் அந்தக் கல்லை வாங்கிக்கொண்டு கிளம்புகிறான்.
அப்போது ‘கல்லை விற்றுவிடாதே. விற்பதுபோல நடி. பல பேரைச் சந்தித்து அவர்களை கவனித்துவிட்டு வா’ என்கிறார். அவனும் கல்லை எடுத்துக்கொண்டு முதலில் காய்கறிச் சந்தைக்குப் போகிறான். அங்கே வெறும் எடைக்கல்லாக நினைத்து, மிக மிகக் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள். சீடன் உடனே குருவிடம் திரும்பி வந்து ‘இந்தக் கல் பத்துப் பைசாவுக்குமேல் போகாதுபோல் தெரிகிறது’ என்கிறான். மெல்லிய சிரிப்புடன் சீடனைப் பார்த்த குரு ‘அப்படியானால் இதைத் தங்கம் விற்கும் இடத்துக்குக் கொண்டு போய் விற்க முயற்சி செய்’ என்கிறார்.
அவனும் போகிறான். அங்கே அதை ராசிக்கல்லாக மதித்து, ஆயிரம் ரூபாய்க்குக் கேட்கிறார்கள். பத்துப் பைசாவிலிருந்த கல்லின் மதிப்பு, ஆயிரம் ரூபாயாக மாறி விடுகிறது. மகிழ்ச்சியுடன் திரும்பி வந்த சீடன் அதை அவரிடம் ஆச்சர்யத்துடன் சொல்கிறான். அவரோ அப்போதும் அதே மாதிரி சிரித்துவிட்டு, ‘இதே கல்லை வைரம் விற்கும் இடத்துக்குக் கொண்டுபோனால் லட்சத்துக்குமேல் விலை வைப்பார்கள். விற்கச் சம்மதமில்லை என்று சொன்னால் கோடி ரூபாய்க்குத் தருகிறாயா என்பார்கள். இதுதான் இயல்பு. இந்த இயல்புடன்தான் நீயுமிருக்கிறாய். ஞானத்தின் ரகசியங்களையும், வழிகளையும்விட அதன் மதிப்பு உயர்ந்தது. உனக்கான காலமும் ஞானமும் வரும்வரை காத்திரு’ என்கிறார். நூலின் பிற்பகுதியில் ஜென் முன்னோடிகளான `இக்குயு’வும் `நினாகாவா’வும் சந்தித்துக்கொண்டதை விவரித்திருக்கிறார். குருவும் சீடனும் உள்ளார்ந்து இணைந்தே உள்ளனர் என்பதை ஓஷோவின் வார்த்தைகளில் வாசிக்க வேண்டும்.
இக்குயுவிடம் சீடனாக விரும்பிய நினாகாவா, தன்னிடமிருந்து வெளிப்பட்ட உண்மைகளை மட்டுமே பேசுகிறார். குருவை ஈர்க்க வேண்டும் என்றெண்ணி கூடுதலாக எதையுமே பேசுவதில்லை. பூஸனும் பாஷோவும் தம் கவிதைகளிலும் அதைத்தான் செய்திருக்கின்றனர். கண்டதை அப்படியே தருகிறார்கள். அது விளைவிக்கப்போகும் அதிர்வுகளை, அசைவுகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. உண்மையில், ஒரு வண்ணத்துப்பூச்சி, ஆழ்ந்து உறங்குகிறதா, அரைகுறையாக உறங்குகிறதா என்பதை பூஸனின் கண்களில் பார்க்காமல் புரியாது. ஒரு காட்சியில் ஒன்றுக்கு மேலான கோணத்தைப் பார்ப்பதில் உண்டாகும் ஆனந்தம் இருக்கிறதே, அதைச் சொற்களால் விவரிக்க முடியாது. இதே கவிதையை ‘கூழாங்கற்கள் பாடுகின்றன’ நூலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் பார்த்திருக்கிறார். ஆனால், அவர் கோணம் முற்றிலும் வேறானது. அவர், உறக்கத்தை உலகியல் பற்றாகவும், மணியோசையை விழிப்பின் அடையாளமாகவும் கண்டிருக்கிறார்.
அவரவரின் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப புரிந்துகொள்ள வழிவகுக்கும் படைப்பே ஆகச் சிறந்தது. எதுவுமே புரியவில்லை என்பதும்கூட ஜென்னுக்குள் வருவதுதான். தத்துவ நூல்களில் தோய்ந்த கி.அ. சச்சிதானந்தம் ஒரு கட்டுரையில் சொல்வதுபோல ‘வாழ்க்கை ஊற்றில் சுரக்கும் நீரை அங்கேயே நாம் குடிக்கும்படி செய்வதுதான் ஜென்’ என்பது. அது, ஒருவன் தன் இயல்பை, தானே பார்க்கும் கலை.
எங்கோ ஜப்பானின் ஓர் உள்ளடங்கிய கிராமத்தில் 1716-ல் பிறந்த பூஸனுக்கு, அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே பிறந்த நம்முடைய குறுங்குடி மருதனாரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கோ தேரின் மணியோசையை நிறுத்திய குறுங்குடியாரும், கோயில் மணிமேல் வண்ணத்துப்பூச்சியைத் தூங்கவைத்த பூஸனும் ஒன்றாகவே தெரிகிறார்கள். அகநானூற்றின் நான்காவது பாடல் குறுங்குடி மருதனாருடையது. ‘முல்லை வைந்நுனை தோன்ற’எனத் தொடங்கும் அப்பாடலில் ‘மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்’ என்னும் வரி முக்கியமானது. பொருள் தேட இல்லம் நீங்கிய தலைவன், கார்காலத்தில் வீடு திரும்ப எண்ணுகிறான். நீரும் நிலமும் கூடி மகிழும் மழைக்காலத்தைக் கண்டதும், அவனுக்குத் தலைவியின் நினைவு வந்துவிடுகிறது. தேர்ப்பாகனை அழைத்து, கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறான்.
தேர் தயாரானதும் ஏற வந்த தலைவன் பாகனைப் பார்த்து ‘வேகமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக குதிரைகளின் கடிவாளக் கயிறுகளை இறுக்காதே. யாழ் நரம்பை மீட்டுவதுபோல மிக மென்மையாகப் பிடித்துவிட்டால் போதும்’ என்கிறான். கயிற்றை நரம்பாக மீட்டுதல் என்கிற பதத்துக்காகவே மருதனார் மீது மதிப்பு கூடுகிறது. கடிவாளக் கயிற்றை இறுக்கும்போது குதிரைகளின் கழுத்து படும்பாட்டை, உயிர்வாதையை அவர் எங்கோ கவனித்திருக்கிறார். தலைவன் அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. `தேரின் அசைவில் ஒலியெழுப்பும் மணியின் நாவையும் கட்டிவிடு’ என்கிறான்.
தலைவியின் அகத்தையும் முகத்தையும் பார்க்க ஆசைப்படும் ஒருவன், குதிரைகளை விரைந்து ஓட்டச் சொல்வான் என்றே பாகன் எதிர்பார்த்தான். ஆனால் தலைவனோ, இழுத்துப்பிடிக்கவேண்டிய கயிற்றை நெகிழவிடவும், நெகிழ்ந்தாடும் மணியின் நாவை இழுத்துக் கட்டவும் சொல்கிறான். பாகனுக்கு விஷயம் புரியவில்லை. காதல் மயக்கத்தில் சொல்லும் செயலும் மாறிவிட்டனவோ என யோசித்தபடி அதைத் தலைவனிடமே கேட்டுவிடுகிறான். அதற்குத் தலைவன் ‘கார்காலத்தை எல்லா உயிரினங்களும் கொண்டாடுகின்றன. வண்டுகள் தம் மலர்ப்படுக்கையில் காதலியைக் கூடிக் களிக்கின்றன. அப்படி அன்பையும் அழகையும் பகிர்ந்து, மகிழ்ச்சியில் தள்ளாடும் வண்டுகள், நம்முடைய தேரின் மணி ஓசையில் துணுக்குற்றுப் பிரிந்துவிடுமே என்பதால்தான் மணியின் நாவைக் கட்டச் சொன்னேன்’ என்கிறான்.
பாகனுக்கு இன்னொரு கேள்வி தொக்கியிருக்கிறது. அது, ‘குதிரைகளின் குளம்படி ஓசைகள், இணைந்திருக்கும் வண்டுகளுக்கு இடையூறு செய்யாதா’ என்பது. பாகனின் கேள்வியை ரசித்த தலைவன் ‘குதிரைகளின் ஓசை காட்டுக்கும் வண்டுகளுக்கும் பழக்கமானது. பழக்கப்பட்ட ஓசை, பயத்தையும் பிரிவையும் தருவதில்லை’ என்கிறான். வண்டுகளின் காதலையும் மதிக்கத் தெரிந்தவனே தலைவன் என்பதும், அப்படியான சமூகமே நம்முடையதென்பதையும் குறுங்குடி மருதனார் சிந்தித்திருக்கிறார். வண்ணத்துப்பூச்சி உறங்கிய கோயில் மணியை பூஸன் காட்டினாரென்றால், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட வண்டுகள் நிமித்தம் மணியின் நாவை நிறுத்திய தலைவனை மருதனார் காட்டியிருக்கிறார். ஒருசிலர் அடிக்கடி உளறுவதைப்போல, தமிழர்கள் தாழ்வுணர்ச்சி கொண்டவர்களல்லர். உயிரிரக்கத்தின் உன்னதம் புரிந்தவர்கள். பண்பாட்டின் வழியே படைப்புகளைச் சமைத்து உயிர்கள் பசியாற ஒப்படைப்பவர்கள்.
தன்முனைப்பை எவன் அறுக்கிறானோ அவனே எழுத்தாளன். உலகப் புகழ்பெற்ற கவிஞர் கோலரிட்ஜ் மரணித்தபோது 40 ஆயிரம் கவிதைகள் முடிக்கப்படாமல் இருந்தனவாம். பாதிப் பாதியாக 40 ஆயிரம் கவிதைகள். எனில், அவர் முடித்த கவிதைகள் எத்தனை ஆயிரத்தைத் தொடும்... கோலரிட்ஜிடம் அவர் மரணத்துக்கு முன்பு அது பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ‘என்னால் எப்படி முடிக்க முடியும்... நான் அவற்றை எழுதவே இல்லை. அவை தாமாக வந்தவை. அவை நின்றால் நின்றுவிடும். வந்தால் வந்துவிடும். ஒன்றுமற்ற நீலவானத்திலிருந்து அவை வந்தன. எனவே, மறுபடியும் அவற்றின் தொடர்ச்சி வந்தால்தான் என்னால் முடிக்க முடியும்’ என்றிருக்கிறார்.

‘சாதாரணத்துக்கு மேலான உணர்ச்சியும், சாதாரணத்துக்கு மேலான ஒழுங்கும் கலந்து வெளிப்படுவதே கவிதை’ என்கிறார் அவர். ஒழுங்கும் உணர்ச்சியும் கலந்த மருதனாரும் பூஸனும்கூட தம் கவிதைகளை எங்கிருந்தோ பெற்றதுபோல்தான் எனக்குத் தோன்றும். ஒரே வேர், இரண்டு மாபெரும் பிரதேசங்களில் காலங்கள் முன்பின்னாக மாறி முளைவிட்டிருக்கிறது. ஒரு கற்பனையைப் பண்பாட்டுடன் எந்த அளவுக்கு இணைத்துச் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு இணைத்து யோசிக்கக் குறுங்குடி மருதனார் முயன்றிருக்கிறார்.
நடிகர் மோகனும் பூர்ணிமாவும் நடித்த `பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம்பெற்ற `மணி ஓசை கேட்டு எழுந்து’ பாடலை, குறுங்குடி மருதனாரின் `மணிநா ஆர்த்த மாண்வினைத் தேர’னுடன் ஒருமுறை பொருத்திப் பார்த்தேன். இரண்டு படிமங்களை இணைத்து ஓர் அற்புதத்தை உணர ஜென் உதவுவதைப் போல, இரண்டு தனித் தனிச் செயல்பாடுகளை ஒன்றாக்கிப் பார்ப்பதில் ஒரு தவறும் இல்லை. காட்சிக்கும் சூழலுக்கும் தக்கபடி அந்தப் பாடலை எழுதியுள்ள முத்துலிங்கம், என் ஆசான்களில் ஒருவர். திரைப்பாடல் சந்தங்களில் சங்கத் தமிழையும் கலந்து தர அவரால் முடியும். `மணி ஓசை கேட்டு எழுந்து...’ பாடலில், அவருக்கே உரியவிதத்தில் `மணிவாசல்’ என்றொரு அழகிய சொல்லை அளித்திருக்கிறார்.
வண்ணத்துப்பூச்சிகளாக காதலில் சுற்றித் திரிந்த இருவர், கால ஓட்டத்தில் பிரிகிறார்கள். உயிரைக் கொல்லும் நோய் தனக்கு வந்துவிட, அதைக் காதலிக்குத் தெரியாமல் மறைக்கும் காதலன், கண்ணீர் மல்கப் பாடுகிறான். ‘மணி ஓசை கேட்டு எழுந்து / நெஞ்சில் ஆசை கோடி சுமந்து / திருத்தேரில் நானும் அமர்ந்து / ஒரு கோயில் சேர்ந்த பொழுது / அந்தக் கோயிலின் மணி வாசலை / இங்கு மூடுதல் முறையோ?’ என்னும் பல்லவி, தமிழிலக்கியம் தொன்று தொட்டுக் கட்டமைத்துள்ள நுண்ணுணர்வுகளின் நீட்சி. எளிய சொற்களை வைத்துக்கொண்டு முந்தைக்கும் முந்தைய ஓர் உணர்வை முத்துலிங்கம் தொடர்ந்திருக்கிறார்.
அதே கோயில் மணியை சிவவாக்கியர் 34-ம் பாடல், ‘மாறுபட்ட மணி துலக்கி / வண்டின் எச்சில் கொண்டுபோய் / ஊறுபட்ட கல்லின்மீதே / ஊற்றுகின்ற மூடரே’ என்கிறார். ‘பல உலோகங்களின் கலப்பில் செய்யப்பட்ட மணியை இசைப்பதாலோ, உளிகளின் உதவியால் செதுக்கப்பட்ட கல்மீது வண்டின் எச்சிலான தேனை ஊற்றுவதாலோ ஒரு பயனும் இல்லை’ என்பதுதான் அதன் உட்பொருள். `பூசைகளிலும் சடங்குகளிலும் கவனத்தைச் செலுத்தாமல் உள்ளே இருக்கும் ஈசனை தியானித்துக் கண்டடையுங்கள்' என்றே அவர் சொல்ல வருகிறார். எனக்கு, சித்தர்களின் சொல்லாட்சிகளை அப்படிப் பிடிக்கும்.
ஓசை ஒழுங்குகள் கெடாமல் அவர்கள் வார்த்துத்தரும் உவமைகள், வழக்கத்துக்கு மாறான வசீகரத் தோற்றமுடையவை. ‘கண்ணம்மா கண்ணம்மா / அழகுப் பூஞ்சிலை’ என்கிற என்னுடைய ‘றெக்க’ திரைப்பாடல், அழுகுணி சித்தரால் அருளப்பட்டதென்று சொன்னால் ஆச்சர்யமளிக்கலாம். ஆச்சர்யங்கள் உண்மையானவை என்பது பெரிதல்ல. உண்மைகள் ஆச்சர்யமளிக்கின்றனவே அதுதான் செய்தி. சிவவாக்கியர், தேனை `வண்டுகளின் எச்சில்’ என்றிருக்கிறார். காதலனோ காதலியோ தம் இணையின் எச்சிலைத் தேனாகக் கருதுவது ஒருபுறமிருக்க, தேனே வண்டுகளின் எச்சிலாக அவருக்குத் தெரிகிறது. `கன்னத்தில் முத்தமிட்டால் கள்வெறி கொள்ளுதடி’ என்பான் பாரதி. கண்ணன் பாட்டில் இன்னும் ஒருபடி மேலே போய் `தின்னப் பழங்கொண்டு தருவான் / பாதித் / தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் / என்னப்பன் என் ஐயன் என்றால் / அதனை / எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான்’ என்று மகிழ்ந்திருப்பார்.
உலோக மணிகளை ஒலிப்பதால் இறைவனின் அருள் கிடைக்குமா, கிடைக்காதா என்கிற ஆராய்ச்சிக்குள் நான் போகவில்லை. பூஸனின் மணியோ, சித்தரின் மணியோ எதுவானாலும் அது, அசைந்தும் அசையாமலும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை. கூர்ந்து கவனித்தால் மணி என்னும் சொல், வெவ்வேறு பொருளில் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியலாம். ‘மணிநீரும் மண்ணும்’ என்று வள்ளுவர் எழுதுவார். அரண் அதிகாரத்தில் வரக்கூடிய அந்த மணி, அகழி என்னும் பொருளைத் தருவது.
ஒரு நாட்டுக்கு அகழி, பரந்த நிலப்பரப்பு, உயர்ந்த மலை, அடர்ந்த காடு ஆகிய நான்குமே அரண் என்கிறார். அதேபோல, `வாடுதனீக்கிய மணி மன்றிடையே’ என வள்ளலார் குறிப்பிடுவார். அருட்பெருஞ்சோதி அகவலில் வரக்கூடிய வரி அது. `வாடுதனீக்கிய மணிமன்றிடையே / ஆடுதல் வல்ல அருட்பெருஞ்சோதி’ என்பதில் இன்னமும் அவர் வாழ்கிறார். பலமுறை வாசித்த பிறகுதான் ‘மணி மன்றிடையே’ என்பது, மனுநீதி சோழனைப் பற்றியது எனத் தெரியவந்தது. கன்றைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றுவிட்ட மகனை, அதே முறையில் பலியிட்டு நீதியை ஓர் அரசன் நிலைநாட்டியது. அப்படி ஒரு சம்பவம் நடந்ததா, இல்லையா எனத் தெரியவில்லை. அறத்தை வலியுறுத்தும் எது ஒன்றுக்கும் கல்வெட்டோ ஆதாரங்களோ தேவையில்லை. சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் வரக்கூடிய இந்தத் தகவல், வாய்மொழி மரபிலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.
எனக்கு ‘மணி மன்றம்’ என்கிற பதமும், ‘ஆடுதல் வல்ல’ என்கிற பிரயோகமும் வள்ளலாரின் உள்ளொளியைக் காட்டியது. ஒளியை வணங்கி, அதன் உட்பொருளைக் காண ஒவ்வொரு நொடியும் ஏங்கிய அவர், மணியின் ஒலியைக் கொண்டுவந்து ஜோதியுடன் இணைத்திருந்தது ஆச்சர்யப்படுத்தியது. ஒரே இரவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அருட்பெருஞ்சோதி அகவல், தமிழிலக்கியத்தின் மிக நீண்ட பாடல் எனும் பெருமையுடையது. குறைந்தது மூன்று வரிகளில் அமையப்பெறும் ஆசிரியப் பாவகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை எழுதியவர் வள்ளலார் மட்டுமே.
வரிகளின் நீளத்தைவிடவும், வள்ளலாரின் ஆற்றலும் ஆன்மிகச் சிந்தனைகளும் அளப்பரியவை. மெல்லத் தலைவருடி, மேலான ஆறுதலை நல்கும் அவ்வரிகள், ஜோதியின் ரூபங்களை உணர்த்துபவை. தாகித்துத் ததும்பும் இதயத்துக்கு தனிப்பெரும் கருணையை வழங்குபவை. 1,596 வரிகளைக்கொண்ட அருட்பெருஞ்சோதி அகவலை, வாயார உச்சரிக்கையில் வசப்படாததெல்லாம் வசப்பட்டன போலிருக்கும். வள்ளலாரின் வாக்கியங்களில் பல காலம் உழன்று என்னையே நான் லகுப்படுத்த முயன்ற சந்தர்ப்பத்தில்தான் `பாலும் பழமும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ பாடலைக் கேட்க நேர்ந்தது. கேட்ட மாத்திரத்தில் பிடித்துவிடக்கூடிய கண்ணதாசனின் அதி அற்புதமான பாடல்களில் அதுவும் ஒன்று. விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து படைத்த இசை நிகழ்வு.
பி.சுசீலாவின் குரலில் தென்படும் குழைவைச் சரோஜாதேவியும் தன்பங்குக்கு இழைத்துக் கொடுத்திருப்பார். ’ஆலயமணியின் ஓசை’ என்று முதல் வரியை எழுதிய கண்ணதாசன், அடுத்த வரியை `அருள்மொழி கூறும் பறவையின் ஒலி கேட்டேன்’ என்றிருக்கிறார். ஆலயமென்றதுமே அருள் என்று அடுத்த வரி அவருக்குத் தோன்றியிருக்கிறது. ஓசையும் ஒலியும் ஒன்றுதான். என்றாலும், இடத்துக்கேற்ப வார்த்தைகளை இட்டு நிரப்பியுள்ள கண்ணதாசனின் தனித்துவம் வேறு எவருக்கும் வாய்க்காதது. ஒரு திரைப்பாடலில் அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டடைந்து, அதைக் கதைக்கும் காதலுக்கும் ஏற்றவாறு அமைத்துவிடும் சூட்சுமம் அவருடையது. ஆலயத்தில் என்னென்ன உண்டோ அனைத்தையும் அந்தப் பாடலில் பட்டியலிட்டிருக்கிறார்.
இறைவன், தலைவன், கருணை, அருள், தேவன், அடைக்கலம் ஆகிய சொற்கள் அப்பாடலுக்கென்றே அமைந்துள்ளன. ஒவ்வொரு திரைப்பாடலிலும் எங்கேனும் ஓர் இடத்தில் அதை எழுதிய பாடலாசிரியன் கொஞ்சமேனும் வெளிப்பட்டிருப்பான். அப்படியான இடமே ‘காதல் கோயில் நடுவினிலே / கருணை தேவன் மடியினிலே / யாரும் அறியா பொழுதினிலே / அடைக்கலம் ஆனேன் முடிவினிலே’ என்பது.
மீண்டும் தொடங்கிய இடத்துக்கே போவதுதான் வாழ்க்கை. எங்கிருந்து துளிர்த்தோமோ அங்கே போய் சரணடைவதே சாமர்த்தியம். மூன்று வரியோ, முப்பது வரியோ ஒரு நல்ல கவிதை எனில், அது வார்த்தைகளின் கணக்கைவைத்து வரையறுக்கப்படுவதில்லை. சொசேகி எனும் இன்னொரு ஜென் கவிஞர் ‘வண்ணத்துப்பூச்சியே / என் தூரிகையின் சொற்கள் மலர்களல்ல / அவற்றின் நிழல்கள்’ என்றிருக்கிறார். சொற்களின் நிழல்களே வண்ணத்துப்பூச்சிகள். என் சொற்கள், அதிவிசேஷ வண்ணத்துப்பூச்சிகளின் நிழலில் இறக்கைகளை விரிப்பவை. ஆலயமணிமேல் ஆழ்ந்துறங்கும் வண்ணத்துப்பூச்சியாக வாழ யாருக்குத்தான் ஆசையில்லை?