
சிறு உயிரின் குரலையும் ஒதுக்காமல் கேட்கும் காதுகள் வேண்டும்.
தீட்சண்யா எட்டு வயதுச் சிறுமி. தலையில் இரண்டு அடுக்கில் சூடியிருந்த பூச்சரத்தை நிமிடத்துக்கொரு முறை தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். சீரான இடைவெளியில், அணைந்து அணைந்து எரியும் விளக்கொளியில், அவளின் முக அசைவுகள் நாட்டியமாடும் பெண்ணைப்போலக் காட்டிக்கொண்டிருந்தன. அவளைப்போலப் பதினைந்து சிறுவர்கள் பலவிதமான மேக்கப்புகளோடு நாடகத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். வேலு சரவணன் கோமாளி ஒப்பனையோடு, கையில் பல வண்ண ரிப்பன் ஒட்டிய கம்போடு நின்றிருந்தார். நாடக அரங்கேற்றத்தை, `இன்னோர் ஒத்திகை’ என்பதாகத்தான் அவர் நினைப்பார். அதனாலேயே குழந்தைகளை அவர்களின் இயல்புகள் கெடாமல் நடிக்கப் பழக்குவார். இந்த நாடகத்தின் ஒத்திகையின்போது அப்படியொரு நிகழ்வு நடந்தது. தலையில் பூக்கூடை சுமந்து செல்லும் தீட்சண்யாவிடம், மீனா, ``ஏம்மா, ஒரு முழம் பூ எவ்வளவு?’’ எனக் கேட்க வேண்டும். வசனத்தை மனப்பாடம் செய்திருந்தபோதும், அந்தக் காட்சி வந்ததும் மிக இயல்பாக, ``ஏம்மா, ஒரு முழம் பூ எம்மா?” என்று கேட்டாள் மீனா. உண்மையில், தஞ்சை வட்டாரப் பகுதிகளில், ‘எவ்வளவு?’ என்பதை ‘எம்மாம்?’ என்றும் கேட்பார்கள். ‘கத்திரிக்கா ஒரு கிலோ எம்மா?’ எனக் கேட்பது இயல்பான ஒன்று. மீனா வசனத்தை மாற்றிச் சொல்லிவிட்டதை நினைத்துத் தயங்கி நிற்க, ‘எம்மா’ என்றே நாடகத்திலும் இருக்கும்படி செய்துவிட்டார் வேலு சரவணன். தனது நாடகப் பயணத்தில் மீனா புதிய சொல்முறையைத் தந்திருக்கிறாள் என்று பெருமையோடு நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டார்.

மிட்டாய் மொழி: சிறு உயிரின் குரலையும் ஒதுக்காமல் கேட்கும் காதுகள் வேண்டும்.