Published:Updated:

அவளுக்கொரு வானம் - 11 - லைவ் தொடர்கதை

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

சிஸ்டர்களுக்கு முழு வெள்ளை நிற கவுன் போன்ற ஆடை. கழுத்திலிருந்து முழங்காலுக்குக் கீழ் வரை இருந்தது. காதுகளில், கைகளில் எந்த அணிகலனும் இல்லை. சிஸ்டர்களின் கண்களில் கருணை சுரந்தன.

பெட்ரோல் வாடை ஜன்னல் வழியே மறுபடி யும் கசிய, செம்புவை காணாமல் திரும்பிப் பார்க்கிறார் துரைமூர்த்தி.

``செம்பு… செம்பு...’’ எனப் பெருங் குரலெடுத்துக் கத்தியபடி ஓடிச்சென்று பார்க் கிறார். அங்கே... கல்யாண ஆல்பத்தை எடுத்து வந்து வாசலில் போட்டு கொளுத்திக் கொண்டிருக்கிறான் சேகர்.

அக்னி சாட்சியாய் நடந்த திருமணத்தின் புகைப்பட சாட்சியாய் இருந்த ஆல்பத்தை தீயின் சுவாலைகள் மெதுமெதுவாக விழுங்கிக் கொண்டிருந்தன.

அந்தக் காட்சியை பார்த்தபடி அப்படியே நின்றிருக்கிறாள் செம்பு. ‘போட்டிருந்த நைட்டியைக் கிழித்து, தலைமுடியைப் பிய்த் திழுத்து, பேயாய் துவம்சம் செய்து, நாய் குதறியெடுத்த கரித்துணியைப் போல் செம்புவை கைக்குழந்தையோடு நடுராத்திரி யில் சேகர் வெளியே தள்ளியதைப் பற்றியெல் லாம் ஒருவர்கூட ஒரு கேள்வியும் கேட்காமல் மரம் போல் தலையாட்டிவிட்டு வந்ததற்குப் பெயர்தான் பஞ்சாயத்தா?’ என அவளுக்குள் கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பதறியபடியே ஓடிவந்த துரை, மகள் நின்றிருந்த கோலத்தையும் சூழலையும் பார்த்து சற்றே அதிர்ந்தார். பிறகு, கண்களைத் துடைத்துக் கொண்டவர், அவளை தோளோடு அணைத்தபடி அழைத்துச் சென்றார்.

`துகிலுரித்த துச்சாதனன், அவனுக்குத் துணை நின்ற துரியோதனன் இருவரின் செங்குருதியையும் கலந்து பூசி குளித்த பின்பே தலைமுடிவேன்’ என்று... அன்று மாபெரும் சபையில் பெருஞ்சபதமிட்ட பாஞ்சாலியின் கதையெல்லாம் செம்புவின் ஞாபகத்துக்கு வந்து போகிறது.

`புருஷனே சந்நிதி… புருஷனே கதி… வாழ்ந்து தொலை…. வாழ்ந்து தொலை… இல்லையேல் செத்துத் தொலை… செத்துத் தொலை...’ என ஊரும் உறவுகளும் அவள் கழுத்தாம்பட்டையில் அடித்துச் சொன்ன வார்த்தைகள் கண்முன் ஆடுகின்றன.

அவளுக்கொரு வானம் - 11 - லைவ் தொடர்கதை

கலைந்த கூந்தலும் வீங்கிய கண்களு மாய் அவள் ஊருக்குள் நுழைந்தபோது, கோழிகள் தங்கள் கூண்டுக்குள் அடைக் கலமாகியிருந்தன. தங்கைகள் மூவரும் பேச்சு ஏதுமில்லாமல் வந்தவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டுக்குள் அமரப் பிடிக்காமல் பேக் கடைப் பக்கமாகப் போய் அங்கிருந்த இரட்டைப் புளியமரங்களுக்குக் கீழ் உட்கார்ந்து கொள்கிறாள் செம்பு. அவள் அங்கு வந்ததும் `வாட்டமாய்ப் போய்விட்டது’ என்று நினைத்த கொசுக்கள் அவள் கைகளையும் பாதங் களையும் தங்கள் கூரிய மூக்குகளால் பதம் பார்த்துக் கொண்டிருந்தன. கொசுக்கடியின் சொரணையே இல் லாமல் அவள் எதையெதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு போன எளச்சியம்மாள் பஞ்சாயத்தில் நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு பதவிசாக உள்ளே வருகிறாள். தோளில் இருந்த குழந்தையை ஒரு துண்டை விரித்து கீழே போட்டுவிட்டு மெது வாகத் தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள். கல்பனா, கோமதி, பவானி மூவரும் ஓர் ஓரமாய் உட்கார்ந்திருக் கிறார்கள். போட்டிருந்த சட்டை, பேன்டை கழட்டிவிட்டு ஒரு லுங்கியை சுத்திக் கொண்டு வெளியே வருகிறார் துரை. தலையை சுவரில் சாய்த்து விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுப்புவின் தோளை எளச்சியம்மாள் ஓர் உலுக்கு உலுக்கவும் அவள் துக்கம் தாளாமல் கதறுகிறாள்.

``யக்கா… எலி மருந்து கிலி மருந்து எதுனா இருந்தா குடுக்கா… குடிச்சிட்டு சாவறோம். உன்னும் இந்த ஜென்மத்த வச்சினு நாங்க இன்னாத்துக்கு வாழ ணும்'’ - வார்த்தைகள் இடறும்படி கதறிக் கதறி அழுகிறாள். வரும் வழியில் இருந்த கெங்கையம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு குங்குமம் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள் சித்தி. அவளைப் பார்த்ததும் எளச்சியம்மாள் அவளிடம், நடந்ததை விலாவாரியாகக் கேட்கிறாள். `தோ… வர்றேன் இரு’ என்று சொல்லிவிட்டு சித்தி செம்புவைத் தேட, அவள் பேக்கடை இருட்டில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறாள். கையில் இருந்த குங்குமத்தை எடுத்து செம்புவின் நெற்றியில் வைத்துவிட்டு, `கொசு புடுங்குது… இங்க இன்னா வேல? உள்ள வா’ என்று சொல்லி விட்டு எளச்சியிடம் வாய் கொடுக்கப் போகிறாள். சுப்பு அழுகிற அழுகையில் குழந்தையும் கால்களை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தது.

``தே… கம்முனு இரு. கொய்ந்த அழ்வுது பாரு’’ - எளச்சி சமாதானம் செய்தும் சுப்புவால் அடக்க முடிய வில்லை.

``தெரு நாய்க்கு கெடைக்கிற மரியாத கூட இல்ல. அவன் கால்ல வுழ்ந்து எழ்ந்து வரோம்… பொண்ணப் பெத்து வளத்து...’’ - சொல்ல வந்ததைக் கூட முழுதாகச் சொல்லாமல் ஒப்பாரியைக் கூட்டினாள்.

`நல்லது கெட்டது நடக்கிற ஊட்ல கை நனைக்குறமோ இல்லையோ... நம்ம கால எட்த்து வெக்கணும்பா. என் னான்னு நாலு வார்த்தை கேட்டுட்டு வருவோம் வா’ என ஒருவர் மாற்றி ஒருவராக செம்புவின் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரிப்பது போல் பஞ்சாயத்தில் நடந்த கதையை விசாரித்துவிட்டுப் போனார்கள்.

முடிவாக செம்புவையும் குழந்தை யையும் மறுநாள் சேகர் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவள் இந்த வீட்டைவிட்டு வெளியே போய் விட்டால் இனி சேகரே மனசு வைத்தால் தான் அவளைப் பார்க்க முடியும். பெற்ற தாய், தகப்பன் கூட தன் மகளை யும், பேத்தியையும் இனி பார்க்க முடியாதபடிக்கு இனி அவளை வாழ் நாள் சிறையில் வைத்து அணுஅணுவாக சித்ரவதை செய்யப் போகும் சேகரை நினைத்து கண்கள் சிவக்கிறார் துரை.

தன் கையாலாகாத தனத்தால் சேகருக்கு தன் மகளை காவு கொடுக்கப்போவதை எண்ணி தெருத் திண்ணையில் உட்கார்ந்து தலைகவிழ்ந்து கிடக்கிறார்.

`பாக்குறவங்க எல்லாம் கடைசியா ஒருமுறை பாத்துக்கோங்க. எர மட்டை வெக்கப் போறேன்’ என்று பிணத்தை எரிக்கும் முன் முகத்தில் எரமட்டை(வறட்டி) வைத்து மூடுவார் மயானத் தொழிலாளி. பிணத்தின் முகத்தைக் கடைசியாய் கண்ணில் தேக்கி வைத்துக் கொள் வதற்காக சுடுகாட்டுக்கு வந்தவர் களெல்லாம் ஓடிப்போய் பார்ப் பார்கள். இப்போது ஊர் சனம் செம்புவைப் பார்த்துவிட்டு போக வரிசைக் கட்டி வருவதைப் பார்த்தால், அப்படித்தான் இருக்கிறது.

அனைவரும் வந்து சென்ற பிறகு, பேரமைதியாய்க் கிடந்தது வீடு. இரவுச் சாப்பாடு குறித்த விசாரிப்புகள் ஏதுமில்லாமல் தங்கைகள் மூவரும் எளச்சியம்மாள் கொடுத்த களி உருண்டைகளை ஆளுக்கு ஒன்றாய்ப் பிரித்துச் சமையல்கட்டில் உட்கார்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். துரையும் சுப்புவும் ஆளுக்கொரு மூலையில் கிடந்தார்கள்.

`செம்பு இப்போது எப்படி இருக்கிறாள், நிலைமை சரியாகிவிட்டதா?’ என அவள் தோழிகள் சுகந்தியும் தாராவும் விசாரித்து எழுதிய கடிதங்கள் இரண்டும் இன்னும் பிரிக்கப்படாமலே கிடக்கின்றன. ஹாலில் இருந்த குழந்தை அழவும் உள்ளே வந்த செம்பு குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று கதவை வேகமாய்ச் சாத்திவிட்டு தாழிடுகிறாள். பதறியடித்த துரை `செம்பு… செம்பு...’ எனக் கத்திக் கொண்டே வேகமாய் கதவைத் தட்டுகிறார். கூடவே ஓடிவருகிறாள் சுப்பு.

குரல் கேட்டுக் கதவைத் திறக்கிறாள் செம்பு. `தாப்பா(ழ்) போடாம சும்மா சாத்தினு படு’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனாள் சுப்பு. `தற்கொலை செய்துகொள்வேன் என பயந்துவிட்டார்கள் போல’ எனப் பெற்றவர்களை நினைத்து வருந்திக்கொண்டாள்.

அறையின் லைட்டை போட்டுவிட்டு குழந்தைக்குப் பாலூட்ட ஆரம்பித்தாள். லைட் வெளிச்சம் பொறுக் காமல் `கெக்க்க்… கெக்க்க்… கெக்க்க்… கெக்கெக்கே… கெக்கெக்கே’ எனக் கத்திக் கூச்சலிட்டது கோழி. அறைக்குள் எப்படி கோழி வந்தது என எட்டிப் பார்த் தால், அது பரண் மேல் சவடாலாக உட்கார்ந்திருக்கிறது. போன வாரம் சந்தையிலிருந்து பிடித்துவந்த புதுக்கோழி என்பதால் அது முட்டையிடுவதற்கு கூண்டைத் தேடாமல் வீட்டின் சந்துபொந்துகளைத் தேடி முட்டை வைத்துவிட்டு அவியம் காக்க ஆரம்பித்திருக்கிறது. அதன் கூச்சல் தாங்காமல் குழந்தை சிணுங்கி அழவும் கதவுக்குப் பின்னாலிருந்த பெரிய கம்பிக் குடையை எடுத்து ‘ச்சூ… ச்சூ’ எனக் கோழியை விரட்டுகிறாள் செம்பு. அது குடைக்குப் பயந்து இங்குமங்குமாகப் பறந்து அலமாரியில் போய் உட்காருகிறது. அவ்வளவு தான்.

`கணீர்…. கணீர்’ என வெண்கலன்கள் உருண்டோடும் சத்தம் அறையெங்கும் பரவுகிறது. கோயில் மணிகள் பலவற்றை பலரும் சேர்த்திழுத்து அடித்த மாதிரி இடைவிடாத ஓசை. சத்தத்துக்கு குழந்தை வீறிட்டு அழவும் அறைக்கதவை வேகமாய் திறந்துவிட, றெக்கைகளை அடித்துக்கொண்டு வேகமாய் வெளியே ஓடுகிறது கோழி. குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு அதன் அழுகையை நிறுத்தப் போராடுகிறாள் செம்பு. கடைசியாக `கிலிங்… கிலிங்’ என ஒலித்து ஓசை அடங்கிய திசையைப் பார்க்கிறாள். அறையெங்கும் அவள் பரிசுப் பொருள்களாய் வாங்கிய வெண் கலக் கோப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. அதன் அடிபாகமும் மூடியும் திசைக் கொன்றாய் உருண்டோடிக் கிடக் கின்றன.

இத்தனை வருடங்களாகப் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல போட்டிகளில் கலந்துகொண்டு வாங்கிய கோப்பைகள் எல்லாம் வெறும் அலமாரியை அலங்கரிக்கும் அலங்காரப் பொருள் களாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. கற்ற கல்வியும் கொண்டிருந்த திறன் களும் இப்போது எதற்கும் பயன்படாமல் சில்லுசில்லாய் நொறுங்கிக் கொண்டிருக் கின்றன என்றெல்லாம் மனத்திரைக்குள் எரிந்து வேகிறாள். கோப்பைகள் உருண்டோடிய சத்தம் இன்னும் அவள் மண்டைக்குள் `வின்…வின்’ என ஒலித்து வலிக்கிறது. அந்த ஓசை அவளை எங்கெங்கோ கூட்டிச் செல்கிறது.

`பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்’ - பாதிரியார் தேவாலயத்தின் முன்பாக மண்டியிட்டு தன் ஒரு கையை நெஞ்சுக்கு நேராக வைத்துக் கொண்டு இன்னொரு கையின் ஆள்காட்டி விரலை மடக்கிப் பிடித்து முதலில் தன் நெற்றியில் அதை தொடுகிறார். பின் நெஞ்சுக்கு நேராக… அதன்பின் இடது தோள் பட்டை, பின்னர் வலது தோள்பட்டை என சிலுவையைப் போல் தொட்டு தன் பிரார்த்தனையை முடித்துவிட்டு எழுந் திருக்கிறார்.

`கர்த்தராகிய யேசு கிருஸ்து உன்னை ரட்சிப்பாராக’ என முகம் மலர்ந்து தனக்கு முன்னால் மண்டியிட்டு இருக் கும் சிறுமியின் நெற்றியில் சிலுவை குறியிட்டு ஜெபித்து அவளை ஆசீர் வாதம் செய்கிறார். கையில் இருக்கும் பெரிய வெண்கலக் கோப்பையுடன் ஓட்டைப் பல் தெரிய சிரிக்கிறாள் சிறுமி. பின்னல் போட்டு ரிப்பன் வைத்துக் கட்டிய ரெட்டை ஜடை. `சிங்கார்’ சாந்தில் வரைந்த சிவப்புப் பொட்டு. கன்னத்தில் மையால் வைத்த ஒரு திருஷ்டி பொட்டு. அடர் நீல நிற முக்கால் பாவாடையும் வெள்ளைநிற மேல் சட்டையும் அணிந்திருக்கிறாள். சிறுமியுடன் உடன் வந்த மதர் கேத் ரினுக்கு பெருமை கொள்ளவில்லை.

``ஃபாதர்… ஜீஸஸோட ப்ளஸிங்ஸ் இந்தப் பொண்ணுக்கு நிறைய இருக்கு. நம்ம ஸ்கூலோட பேரை இந்த முறையும் காப்பாத்திட்டா’’ என்று மதர் சொல்லி முடித்ததும், ``வெரி குட்… வெரி குட்… காட் ப்ளஸ் யூ மை சைல்ட்’’ என சந்தோஷம் தாங்காமல் தன் அங்கியின் ஜோபியில் இருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து சிறுமிக்குக் கொடுக்கிறார். சிறுமியை அழைத்து வந்த மதர் கேத்ரின் அவள் தோளை தட்டிக் கொடுத்தபடி வகுப்பறைக்கு அழைத்துச் செல்கிறாள். பெரிய வெண்கலக் கோப்பையுடன் உள்ளே வரும் அவளைப் பார்த்ததும் ஹெலன் டீச்சர் ஓடிவந்து கட்டிப் பிடித்துக்கொள்கிறாள். அவளுக்கு நெற்றி நிறைய நான்கைந்து முத்தங் களைக் கொடுத்துவிட்டு, `எல்லாரும் செண்பகவள்ளிக்கு கைதட்டுங்க’ என் கிறாள். பிள்ளைகள் கைகளில் சூடு பறக் கும் அளவுக்குக் கைத்தட்டி முடித் தார்கள்.

``டீச்சர்… எத்தன வாட்டி சொல்றது. என்னை செண்பகவள்ளினு சொல்லா தீங்க. செம்புனு சொல்லுங்க. எங்கப்பா என்னை அப்டிதான் செல்லமா கூப்புடு வாரு...’’

அவளுக்கொரு வானம் - 11 - லைவ் தொடர்கதை

``அட… ஆமால்ல… மறந்துட்டேன்டி செம்பு செல்லம். இந்த முறை டிஸ்ட்ரிக்ட் லெவல்ல ஜெயிச்சிருக்கே. அடுத்த முறை ஸ்டேட் லெவல்ல ஜெயிச்சு நம்ம ஸ்கூலுக்குப் பெரும சேக்கணும் சரியா?’’

``செரிங்க டீச்சர். அடுத்தவாட்டி இன்னும் `டான் டான்'னு மைக்ல பேசு வேன்‘’ - தன் பெரிய கண்கள் முழுக்கவும் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு டீச்சருக்கு பதில் சொல்லிவிட்டு தன் நிமிர்ந்த நன்னடையோடு வகுப்பறையின் தரையில் அவளுக்கான இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொள்கிறாள். கோவை இலையை கசக்கிப் பிழிந்து அதன் சாற்றை வைத்து ஸ்லேட்டை `பரக்… பரக்’கென்று தேய்த்து அழிக்கிறாள்.

``ஓரொண் ஒண்ணு… ரெண்டொண் ரெண்டு… மூணொண் மூணு ''' என வாய்ப்பாடு எழுதுகிறாள்.

ஹெலன் டீச்சர் தான் மூன்றாம் வகுப்புக்கு கணக்கு டீச்சர். அவர்தான் வகுப்பு டீச்சரும் கூட. செம்பு மீது கொள்ளைப் பிரியம். `மலர்’ மேல்நிலைப் பள்ளியில் ஹெலன் டீச்சருக்கு மட்டுமல்ல, மதர் சுப்பீரியர் கேத்ரின், ஃபாதர் தாமஸ், தமிழ் ஆசிரியை ஜெயா, தலைமை ஆசிரியை மரியா என எல்லோருக்குமே செம்புவைப் பிடிக்கும்.

சுத்துவட்டாரத்தில் 10, 15 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தெல்லாம் பெண் பிள்ளைகள் விஜயமல்லூரில் இருக்கும் `மலர் ‘ பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும், பேருந்திலும் வந்து படித்தார்கள். உள்ளூர்களில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அரசு பள்ளிகள் போக 12-ம் வகுப்பு வரை பெண் பிள்ளைகளுக்காக மட்டுமே இயங்கும், குறைவான கட்டணம் வாங்குகிற பள்ளியாகவும் ’மலர்’ பள்ளி இருந்தது. கிறிஸ்துவ பள்ளி என்பதால் தினம் தினம் காலை கூட்டத்தில் ஜெபம் சொல்லி விட்டு யேசுவின் பாடல்களையும் மேரி மாதாவுக்கான பாடல்களையும் மாணவிகள் பாடுவார்கள். பள்ளி வளாகத்துக்குள் ஒரு சர்ச் இருந்தது. இன்னொரு கட்டடத்தில் கன்னியாஸ்திரிகளும் இருந்தார்கள். அவர்களில் இளையவர்களை சிஸ்டர் என்றும் பெரியவர்களை மதர் என்றும் அழைக்கும்படி மாணவிகளுக்கு சொல்லிக் கொடுத்திருந் தார்கள். ஃபாதர் என்று சொல்லக் கூடிய அருட்தந்தைகள் தேவாலயத்துக்கு மட்டும் அவ்வப்போது வந்து போவார்கள். `மலர்’ பள்ளிக்கு வெளியில் இருந்து பணிக்கு வரும் ஆசிரியைகள் போக சிஸ்டர்களும் மதர்களும் கூட ஆசிரியர்களாக மாணவிகளுக்குப் பாடம் எடுத்தார்கள்.

சிஸ்டர்களுக்கு முழு வெள்ளை நிற கவுன் போன்ற ஆடை. கழுத்திலிருந்து முழங்காலுக்குக் கீழ் வரை இருந்தது. காதுகளில், கைகளில் எந்த அணிகலனும் இல்லை. சிஸ்டர்களின் கண்களில் கருணை சுரந்தன. ஆனால் அதே நேரத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றில் எல்லாம் மாணவிகளிடம் கண்டிப்போடும் இருந்தார்கள். பெண் பிள்ளைகளைக் கட்டுப்பாடான இடத்தில் படிக்க வைக்கிற பெருமிதத்தில் பெற்றோர்கள் இருந்தார்கள். பள்ளியில் வாரத்துக்கு மூன்று முறையாவது கட்டாயம் நன்னெறி வகுப்பும் பைபிள் வகுப்பும் இருந்தன.

பொன்.விமலா
பொன்.விமலா

`நான் உங்களுக்குச் சொல்கிறேன். தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்.

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரை பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ’ – மத்தேயு 5:39 - 41

என்கிற பைபிள் வசனத்தை மேற் கோள் காட்டி, நம்மை யாராவது ஒரு கன்னத்தில் அடித்தால் திருப்பி அடிக்காமல் இன்னொரு கன்னத்தையும் காட்ட வேண்டும் என நன்னெறி டீச்சர் பாடம் நடத்தியதை பள்ளி விட்டதும், வழியெல்லாம் தன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டே நடந்து போகிறாள் செம்பு.

அவள் முகத்தை விட பெரிய சைஸில் இருந்த வெண்கலக் கோப்பையைப் பார்த்து ரோட்டில் போனவர்கள் எல்லாம் சைக்கிளை நிறுத்துவிட்டு, ``இன்னா பாப்பா… பள்ளிக்கொடத்துல பிரைஸு வாங்குனீயா?’’ என்று கேட்டுக் கொண்டே கடந்து போனார்கள். ``ஆமா… பர்ஸ்ட்டு பிரைஸூ… பேச்சுப் போட்டில’’ - வாயெல்லாம் பல்லாய்த் தெரிய தன் தோள் பையும் தன்னோடு தாளம் போடும்படி கால்களை வளைத்து வளைத்து உற்சாகமாய் ஆடிக்கொண்டே போகிறாள்.

இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போனால் பேருந்து நிறுத்தம் வந்துவிடும். அங்கிருந்து மூன்றாம் நம்பர் பேருந்தில் ஏறிதான் அவள் தன் சொந்த ஊரான பாகல்பூண்டிக்குப் போக வேண்டும். கூட படிக்கிற பிள்ளைகள், டீச்சர்கள், மதர் சுப்பீரியர் என எல்லோரும் இன்று அவளை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய சந்தோஷம் அவளுக்கு. தலைகால் புரியவில்லை. ரோட்டைப் பார்க்கிறாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பேருந்து வரும் அறிகுறியில்லை.

`ஓய் பசங்களா… இன்னிக்கு பஸ்ஸு வராது. எல்லாரும் வூட்டுக்கு நடந்து போங்க’ - டிவிஎஸ் ஃபிப்டியில் வந்தவர் பேருந்து பழுதாகி நிற்கிற கதையைச் சொல்லிவிட்டு `சர்ர்’ என்று கிளம்பி போய்விட்டார். ஒன்றிரண்டு பிள்ளை களாவது அவர் வண்டியில் தொத்திக் கொண்டு போக முடியாதபடிக்கு வண்டியின் முன்னாலும் பின்னாலும் துளி இடமும் இல்லாமல் முள்ளுக் கத்தரிக்காய் மூட்டைகளைக் கட்டி வைத்திருக்கிறார். செம்புவுடன் நின் றிருந்த பிள்ளைகள் சிலர் நடக்க ஆரம் பித்தார்கள். சிறிது தூரம் நடந்தால் அவர்களின் ஊர் வந்துவிடும். ஆனால் எல்லோருக்கும் கடைசி, செம்புவின் ஊர்.

சத்துணவு சாப்பிடும் பிள்ளைகளுக்கு நாளை பள்ளிக்கூடத்தில் இலவசமாக செருப்புகள் தருவதாகச் சொல்லியிருந் தார்கள். இன்னும் பல கிலோமீட்டருக்கு தார் ரோட்டைக் கடந்து, அதன் பின் வருகிற கரடுமுரடான புளியமரக் காட்டைக் கடந்து இருள்வதற்குள் நடந்தே வீடு போய்ச் சேர வேண்டும். செருப்புகள் ஏதும் இல்லாத தன் பாதங்களைப் பார்க்கிறாள் செம்பு. வெடித்த இலவம் பஞ்சுக் காய்களைப் போல் அவை மண்ணில் படர்ந்திருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவள் முன் நீண்ட சாலையொன்று கருத்துக் கிடந்தது. போகும் தூரத்தை எண்ணி புத்தகப் பையோடும் கையிலிருந்த கோப்பையோடும் அவள் அங்கேயே தனியாக நின்றிருக்கிறாள்.

- தொடரும்...