Published:Updated:

அவளுக்கொரு வானம் - 14 - லைவ் தொடர்கதை

அவளுக்கொரு வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கொரு வானம்

இந்த ஒரு வார்த்தையின் மீது கொண்ட பாசத்துக்காகத்தானே அவ்வளவையும் இழந்துவிட்டு இந்த சிறைக்குள் சிக்கியிருக் கிறாள். அங்கேயே அப்படியே உறைந்துபோய் உட்கார்ந்திருக்கிறாள்.

தீப்பெட்டியோடும் மண்ணெண்ணெயில் நனைந்த ஈர பனியன், லுங்கியோடும் அங்கேயே நின்றிருக்கிறார் துரை. பின்னால் இருந்து அவர் காலைக் கட்டிக் கொண்டு அழுதுகொண்டிருந்த அந்தக் குரலை உதா தீனப்படுத்திவிட்டு, தீ வைத்துக்கொள்வாரோ என்று பயத்தில் ஊர்சனம் வாயில் அடித்துக் கதறுகிறது.

பவானிதான் காலைக் கட்டிக்கொண்டிருக்கிறாள். பெற்ற மகளோடு சேர்ந்து சாகிற தைரியம் எந்த அப்பனுக்குத்தான் வரும்? பவானியை அவர் இழுத்துப் பிடிக்கவும் ஊர்சனத்தில் ஒருவர் தண்ணீர் வாளியோடு ஓடிவந்து மொத்தமாய் துரையின் மீது நீரை ஊற்றவும் சரியாக இருந்தது.

பொன்.விமலா
பொன்.விமலா

``ஆயிரஞ் சொல்லு… பெத்த புள்ளைக்குத்தாம்பா ரத்தம் அட்சிக்கிது. அது மட்டும் வர்லனா… கொஞ்ச நேரத்துல கொள்த்தினு செத்திருப்பாப்டி’’ - ஊர்சனம் துரையைக் கொண்டுபோய் வீட்டில் விட்டார்கள். ஊர்த்தலைவர் செல்லமுத்துவிடம், சேகர் மிரட்டி யதைப் பற்றி துரை சொல்லவும் சமாதானம் பேசுவ தாகச் சொல்லிக் கிளம்பிப் போனார் செல்லமுத்து. அவர் சேகரிடம் நடந்ததை போனில் சொல்லி ஐந்து லட்சத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் குறைத்துப்பேசி துரை குடும்பத்தை மன்னிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

``ஜெயிலுக்குப் போயி கம்பி எண்ணினதுக்கு அஞ்சு லட்சமில்ல… அஞ்சு கோடி குட்த்தாகூட ஈடா வாது. ஏதோ பெரிய மனுசன் வாக்கு குடுக்குறீயேனு கம்முனு உட்றேன். நீங்களே பாத்துனு தானே கீறீங்க. வாய்ப்பேச்சு, வாய்ப்பேச்சா இருக்க சொல்லவே அந்தாளு கிருஷ்ணாலு ஊத்திக்கினுகீறான். நாளிக்கி கேஸூ கீஸூன்னு வந்தா யாரு உள்ள போறது?'’ - சேகர் கேட்ட கேள்விக்கு வேறெந்த பதிலும் சொல்ல முடியாமல், ``நான் எட்த்து சொல்றேன்பா’’ என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

``ஏய்… இதப் பார்றீ… உங்கப்பங்காரன்… அஞ்சு லட்சத்துக்கே கொளுத்தினு சாவ போய்க்கீறான். உங்கப்பனைதான் ஊர்சனம் காரி துப்பும். சொல்லி வை அந்தாளு கிட்ட’’ - செம்புவிடம் எகத் தாளமாய்ச் சொல்லிவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தான் சேகர்.

அப்பா கொளுத்திக் கொள்ளப்போனதும் இப்போது அவரை மீட்டுவிட்டார்கள் என்ப தும் செம்புவுக்குப் புரிந்தாலும் செய்தியைக் கேட்டதிலிருந்து அவளுக்கு கைகால்களெல் லாம் நடுங்கிக் கொண்டே இருக்கிறது.

`அப்பா...’

`அப்பா...’

`அப்பா...’

இந்த ஒரு வார்த்தையின் மீது கொண்ட பாசத்துக்காகத்தானே அவ்வளவையும் இழந்துவிட்டு இந்த சிறைக்குள் சிக்கியிருக் கிறாள். அங்கேயே அப்படியே உறைந்துபோய் உட்கார்ந்திருக்கிறாள். அப்பாவுக்கும் அவளுக்குமான பாசபந்தங்களின் நினைவு களெல்லாம் அவள் நெஞ்சுக்குள் நிழலாடிக் கொண்டிருந்தன.

துணியைக் கழட்டிப் போட்டுவிட்டு குளித்து விட்டு தலையைத் துவட்டிக்கொண்டே வெளியே வந்தார் துரை. பத்து வயது பவானி பாத்ரூம் பக்கத்திலேயே நின்றிருக்கிறாள். அவள் தலையை லேசாகத் தடவிவிட்டு உள்ளே போய் துணி மாற்றிக்கொண்டு பேக் கடைக்குப் போகிறார். இரட்டைப் புளிய மரங்களின் கிளையில் சைக்கிள் டயர் வைத்துக் கட்டிய ஊஞ்சல் இருந்தது. கல் யாணத்துக்கு ஒரு வாரம் முன்பு வரைகூட செம்புவை அதில் உட்கார வைத்து ஆட்டிய தெல்லாம் அவர் ஞாபகத்துக்கு வந்து போகிறது.

அவளுக்கொரு வானம் - 14 - லைவ் தொடர்கதை

``ப்ப்பா… ப்பா… ப்ளீஸ்பா. இன்னும் ரெண்டே ரெண்டு வருசம் படிச்சிக்கிறன்பா’’ என்று செம்பு கேட்டதும், ``தொடப்பக்கட்ட பிஞ்சு போவும். இன்னும் உனுக்கடுத்து மூணு பொட்டப் பசங்கள படிக்க வைக்கணும்’’ என்று சுப்புலட்சுமி செம்புவைத் திட்டியதும் அவர் காதில் குத்திக்கொண்டே இருக்கிறது. `இன்னும்கூட சின்னப் பிள்ளை போல ஊஞ்சல் ஆடுற பெண்ணை இவ்வளவு சீக்கிரம் கட்டிக் கொடுக்குறோமே. அதுவும் ஆகாத இடத்துல போய் சம்பந்தம் வைக் கிறோமே’ என்று கண்கலங்கிக்கொண்டே அன்று ஊஞ்சலில் வைத்து மகளை ஆட்டியதையெல்லாம் இப்போது நினைத்து நினைத்துப் பார்த்துக் கண்கலங்குகிறார்.

``எல்லாத்துக்கும் நாந்தான் காரணம். அன்னிக்கி மட்டும் நான் ராவு தூங்காம கண்ணு முழிச்சு இருந்திருந்தா இன்னிக்கி என் பொண்ண அழ வுட்டிருக்க மாட்டேனே… என் கொழந்த அங்க நிம்மதியா தூங்குதோ இல்லியோ தெர்லயே’’ - இரட்டைப் புளிய மரங்களை தலையால் முட்டிக்கொண்டு வெடித்து அழவும் சுப்புலட்சுமி ஓடிவந்து அவரை இழுத்துப் பிடிக்கிறாள். சுப்புவை அனுப்பிவிட்டு அவர் அங்கேயே மரத்தடியில் சாய்ந்தபடி உட்காருகிறார். துரையின் கண்கள் புளிய மரங்களின் அடர்ந்த கிளைகளின் மீது நிலைக்குத்தி நின்றன.

மரங்களின் அடர்ந்த கிளைகளுக்கு நடுவில் புகுந்த வெயில் சல்லடையில் சலித்தாற் போல் கீழே விழுந்ததில் கண்ணாடி விரியன் பாம்பு போல் பளபளவென வளைந்து நெளிந் திருந்தது அந்த நீண்ட சாலை. ஆந்திர மாநிலத்தில் உள்ள `நிர்மல்’ காட்டின் இந்த சர்ப்பச் சாலையைக் கடந்து அதிலாபாத் நோக்கி பயணித்தன சில வாகனங்கள். மொத்தம் ஏழெட்டு கிலோமீட்டர். இடதும் வலதுமாக வளைந்து வளைந்து செல்கிற சாலையில் வேகமாகப் பயணிப்பது சிரமம். லோடுகளை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்கள் சிலர் ஹைவேயிலேயே தங்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு துணைக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றன் பின் ஒன்றாக நான்கைந்து லாரிகள் ஒரே நேரத்தில் ரயில் பெட்டிகளைப் போல் பின் தொடர்ந்து செல்வதுதான் லாரிக்கும் ஓட்டுநருக்கும் பாது காப்பு.

லாரி வரும் சத்தம் தூரத்தில் கேட்டாலே மரக்கிளைகளில் ஒளிந்திருக்கும் ஹைவே திருடர்கள் டமார் என்று ஓடும் லாரியின் மீது குதித்து முன்பக்கக் கேபினைத் தொற்றிக் கொண்டு அதன்பின் சன்னல் வழியாக வந்து ஓட்டுநரின் கழுத்தில் கத்தியை வைப்பார்கள். திருடர்கள் பற்றி முன் கூட்டியே தெரிந்த டிரைவர்கள் எனில் அந்தச் சாலையில் தனி யாகப் போக மாட்டார்கள். பெரிய இரும்பு ராடு எப்போதும் வண்டியில் இருக்கும். `நாங்களும் கூட்டமாய்தான் இருக்கிறோம்’ என்று சமிக்ஞை செய்யும்படி டிரைவர் வண்டியை ஓட்ட கிளீனர்கள் இரும்பு ராடை கையில் வைத்துக்கொண்டு, `ஹோய்… ஹோய்…’ என்று கத்திக்கொண்டே செல்ல... எங்கே மொத்த மாகச் சேர்ந்து மண்டையைப் பிளந்து விடுவார்களோ என்று பயப்படும் திருடர்கள் அவர்களை விட்டுவிட்டு இரவு நேரத்தில் தனியாக லோடு ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளுக்காகவே காத்திருப்பார்கள்.

லோடு ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் மெதுவாகத்தான் போக முடியும். அப்படிச் செல்லும்போது திருடர்களுக்குக் குதிக்க சௌகர்ய மாக இருக்கும். கூரிய கத்தியால் தார்ப்பாயைக் கிழித்தால் போதும்… லோடில் இருக்கும் விலை யுயர்ந்த பல பொருள்களைக் களவாடிக்கொண்டு காட்டின் இருட்டுக்குள் புகுந்து தப்பித்துவிடலாம் என்பது திருடர்களின் கணக்கு. எல்லா திருடர்களும் ஒரே மாதிரி கிடையாது. திருடுவதற்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான யுக்திகளைக் கையாள்வார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து லோடு இறக்கிவிட்டு வாடகை வாங்கி வருவதற்குள் உயிரே போய்விடும்.

லாரி ஓட்டுநர் தொழில் என்பது பெரும்பாடு. ஒரு லாரி சரக்கு ஏற்றிக்கொண்டு இரண்டு மாநில எல்லைகளைக் கடந்து, ஏற்றிய சரக்கை இறக்கி விட்டு மீண்டும் அங்கிருந்து வேறொரு சரக்கை ஏற்றிக்கொண்டு திரும்ப வர வேண்டுமெனில், லோடு கிடைப்பதைப் பொறுத்து கிட்டத்தட்ட நான்கு முதல் பத்து நாள்கள்கூட ஆகலாம். வழியெங்கும் கரடுமுரடான மேடுபள்ளச் சாலைகள். குறுகல் சாலைகள், காட்டுவழிச் சாலைகள், மலைச் சாலைகள், விபத்துகள் உருவாக்கும் நெடுஞ்சாலைகள், நெரிசல் சாலைகள் என சாலைகள் பலவிதம்.

இதில் வழிப்பறி, சாலை விபத்து, லோடு கிடைக் காமல் வண்டி ஆல்ட் ஆவது, வாடகைப் பிரச்னை, உணவுப் பிரச்னை பல ஊர்களில் மாறும் சீதோஷ்ணம், உணவு, பழக்க வழக்கங்கள் என ஓர் ஓட்டுநர் அத்தனையையும் கடக்க வேண்டும்.

இப்படித்தான் ஒருமுறை காவிரி நதிநீர்ப் பிரச்னை நடந்தபோது பெங்களூருவில் லோடு இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார் துரை. வரும் வழியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வண்டி என்பதை நம்பர் பிளேட்டை வைத்துக் கண்டுபிடித்த சிலர் துரையையும் கிளீனரையும் சட்டையைப் பிடித்திழுத்து கீழே தள்ளி, `சாத்து… சாத்து’ என சாத்திவிட்டு துரத்தி அனுப்பியிருந்தார்கள்.

ஆந்திராவின் கர்னூல் பகுதியில் ஒருமுறை ஆட்டுக்குட்டி குறுக்கே வந்து விபத்து நடந்தபோது அதைத் தூரத்தில் கவனித்த ஊர் மக்கள் கூட்டாய்ச் சேர்ந்துகொண்டு துரத்த ஆர்சி புக்கை மட்டும் எடுத்துக்கொண்டு லாரியை அங்கேயே விட்டுவிட்டு ஓடி வந்திருக் கிறார் துரை. இன்னொரு முறை பயணி யாக ஏறிய ஒருவன் போண்டாவில் மயக்க மருந்து கொடுத்து துரையின் ஜட்டியை மட்டும் விட்டு விட்டு வாடகைப் பணத்திலிருந்து வாட்ச் வரை திருடிக்கொண்டு போயிருக்கிறான். இரண்டு முறை லாரி குப்புற கவிழ்ந்ததில் துரைக்கு உடம்பெல்லாம் காயத்தின் தழும்புகள். நடுவழியில் வண்டி பஞ்சரென்று ஸ்டெப்னி மாட்டும் போது ஜாக்கியை வைத்ததில் ஏடாகூடமாய் விரல் சிக்கி இடது கையின் நடுவிரல் ஒன்றையும் இழந்திருக்கிறார். ஒன்றல்ல இரண் டல்ல… லாரி ஓட்டுநராய் துரை பட்ட துயரங்கள் சொல்லி மாளாதெனினும் நிர்மல் காட்டுச் சம்பவம்தான் ஒட்டு மொத்த மாய் செம்புவின் வாழ்க்கையே புரட்டிப் போட்டிருந்தது,

அவளுக்கொரு வானம் - 14 - லைவ் தொடர்கதை

அன்று புதுச்சேரியிலிருந்து உயர்தர அழகு சாதனங்கள் அடங்கிய விலையுயர்ந்த சரக்கை ஏற்றிக்கொண்டு நாக்பூரில் இறக்குவதற்குப் புறப்பட்டது லாரி. ``ண்ணே… மொத்தம் 12 பொட்டிண்ணே. தார்ப்பாயை நல்லா இஸ்த்து கட்டிட்டேன்’’ என்றான் கிளீனர் ராஜா. ராஜா சொன்னாலும் தன் பங்குக்கு ஒருமுறை லாரியின் பக்கவாட்டுக் கொக்கியில் இழுத்துக் கட்டிய தாம்புக்கயிற்றை நெக்கி இழுத்து சரி பார்த்துக்கொண்டு வண்டியை எடுத்தார் துரை. லோடு ஏற்றிக்கொண்டு போன லாரி நிர்மல் காட்டை அடையும்போது மணி இரவு 9 ஆகியிருந்தது. இன்னும் அரை மணி நேரத் துக்குள் காட்டைக் கடந்துவிட்டால் தாபா அருகே வண்டியை நிறுத்திவிட்டு உணவு உண்ணலாம் என்று நினைத்திருந்தார் துரை.

வண்டி மெதுவான வேகத்தில் சென்றது. உயரமான லோடு என்பதால் காட்டின் கிளை களில் பதுங்கியிருந்த திருடர்கள் வண்டி மெதுவாக நின்று செல்லும் இடமாகப் பார்த்து பெரிய சத்தம் ஏற்படாதவாறு லாரி யில் குதித்துவிடுகிறார்கள். தார்ப்பாயைக் கிழித்து உள்ளிருக்கும் சில பெட்டிகளைத் திருடி தயாராக லோடின் மீதே வைத்துக் கொண்டு பதுங்கியபடி படுத்துக்கொண்டே வருகிறார்கள். காட்டைக் கடக்கும் லாரி தாபாவில் வந்து நின்றதும் சாப்பிட்டுவிட்டு வண்டியை ஓரங்கட்டிவிட்டு துரையும் ராஜாவும் தூங்கியும் விடுகிறார்கள். நள்ளிரவு வரை லாரியின் லோடு மீதே கமுக்கமாகப் பதுங்கிப் படுத்திருந்த திருடர்கள் தக்க சமயம் பார்த்து பெட்டிகள் சிலவற்றை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தும் விடுகிறார்கள்.

பொழுது விடியவும் வண்டியை எடுக்கும் முன் தார்ப்பாய் சரியாக இழுத்துக் கட்டப் பட்டிருக்கிறதா என்று சரிபார்க்க மேலே ஏறும்போதுதான் திருடர்கள் பெட்டிகளைத் திருடியிருப்பது துரைக்கும் ராஜாவுக்கும் தெரியவருகிறது. பதறியடித்துக்கொண்டு லாரி புரோக்கர் ஆபீஸுக்கு போன் செய்யவும் அரை மணி நேரத்துக்கெல்லாம் புரோக்கர் ஆபீஸின் ஆள்கள் திபுதிபுவென வந்து நிற் கிறார்கள். வந்தவரில் ஒருவன் லாரியை அவன் கஸ்டடிக்கு எடுத்துப்போகிறான். துரையையும் ராஜாவையும் அழைத்துக் கொண்டு போய், சாலைகள் முடிந்த காட்டு வழிப் பாதையில் இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான பழைய ஆபீஸில் தள்ளுகிறார்கள். தோதாகப் பக்கத்தில் இருந்த சவுக்குக் கட்டை களை எடுத்து இருவரையும் அடித்துத் துவைக்கிறார்கள்.

``பாக்ஸெல்லாம் எடுத்து எங்க வித்தீங்க சொல்லுங்க?’’

``லேது சார்… நாங்க எடுக்கல சார்… திருடங்க ராத்திரி பாயை கிழ்ச்சி திருடினு போய்ட்டாங்க சார்’’ - அடித்தவர்களுக்குப் புரிகிற மாதிரி தெலுங்கிலும் தமிழிலும் மாற்றி மாற்றிச் சொல்லிப் பார்த்தாலும் அவர்கள் நம்புவதாய் இல்லை. நான்கு நாள்களில் ஊர் திரும்ப வேண்டிய லாரி இன்னும் வரவில்லை. முடிந்தவரை அடித்துத் துவைத்துவிட்டு போலீஸில் ஒப்படைக்கும்போது இன்னும் இரண்டு நாள்கள் அதிகமாகியிருந்தன. துரையுடன் வேலைபார்த்த உள்ளூர் டிரைவர் களுக்கு உண்மை தெரியவும் அவர்கள் செம்பு வின் வீட்டுக்கு வந்து விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல், `வண்டி எஞ்சின் ரிப்பேர் ஆகி வழியில நிக்குது, வந்துருவாப்டி’ என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டுப் போகி றார்கள். முருகனுக்கு விஷயம் தெரியவும் பதறியடித்துக் கொண்டு வீட்டில் இருப்பவர் களிடம் அவன் நடந்ததைச் சொல்லும்போது ஏழு நாள்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது.

அவளுக்கொரு வானம் - 14 - லைவ் தொடர்கதை

செம்புவுக்குத் தலையெல்லாம் சுற்றுகிறது. `அப்பா… அப்பா’ எனக் கத்துகிறாள். செல்போன் வைத்திருந்த செல்லமுத்துவும் அப்போது ஊரில் இல்லை. ஊரில் ஒரே ஒருவரிடம் இருந்த லேண்ட் லைன் போனைத் தேடி ஓடுகிறாள். எந்தப் போலீஸ் ஸ்டேஷன் என்று தெரியவில்லை. யாருக்குப் போன் செய்வதென்று தெரியவில்லை. அங்கிருக்கும் புரோக்கர் ஆபீஸ்களிலும் சரியான தகவல் இல்லை. புரோக்கர் ஆபீஸில் அடித்தது போக துரையையும் ராஜாவையும் ஸ்டேஷனிலும் வைத்து கும்மியெடுக்கிறார்கள்.

எடுக்கவில்லை என்பதுதான் துரையின் ஒரே பதில். அப்பாவை மீட்டெடுக்க அங்கு மிங்கும் அலைகிறாள் செம்பு. ஊருக்குள் இருந்து கல்லூரிக்குப் போன முதல் பட்ட தாரிப் பெண் என்பதால் அவளால் அவள் அப்பாவை மீட்க முடியுமென்று அவள் குடும்பம் மட்டுமல்ல… ஊராரும் செம்புவையே நம்பிக் கிடந்தார்கள். ``ம்ம்ம்மா… கலெக்டர், எம்.எல்.ஏ, மினிஸ்டர்னு ஒருத்தர் விடாம எல்லார்கிட்டயும் பிரைஸ் வாங்கியிருக்கல்ல… யார்கிட்டயாச்சும் சொல்லி உதவி கேளும்மா’’ என்கிறார்கள். தன் கல்லூரித் தோழிகள், பேச்சுப் போட்டி, சிற்றிதழ்கள், சமூக சேவை, இளைஞர் மன்றங்கள் வழியே கிடைத்த அத்தனை நண்பர்களிடமும் உதவி கேட்கிறாள் செம்பு. எல்லோருமே அவரவர் அறிந்த வகை யில் உதவ முயன்றாலும் எல்லாமே தாமதநிலை.

``சி.எம் செல் வழியாகூட பேசிப் பார்த்துட் டோம். கொஞ்சம் சிக்கலாதான் இருக்கு. பொருளோட மதிப்பு எட்டு லட்சம் தாண்டு மாம். பணத்தைக் கொடுத்தாதான் மீட்க முடியும்’’ என்கிறார்கள். ``மினிஸ்டர் ரத்தின சிங்கம் நினைச்சா உதவ முடியும். அவருக்கு ஆந்திரால எல்லாமே அத்துப்படி’’ என்று பேசிக்கொள்கிறார்கள் சிலர். ``மினிஸ்டர் பழக்கம்லாம் எதுவும் இல்ல. ஒரேவாட்டி பேச்சுப் போட்டிக்காக பரிசு வாங்குனதோட சரி’’ - தயங்கி நிற்கிறாள் செம்பு. ஒண்ணு பணம். இல்ல அதிகார பலம். இது ரெண்டுல ஒண்ணு இருந்தாதான் உங்க அப்பா பொழைக்க முடியும். இல்லாட்டி அந்த மனுஷன அடிச்சே கொன்னுடுவானுங்க’’ என்று புலம்பிக்கொண்டே போகிறார்கள். கைகால்கள் உதறுகின்றன. நரம்புகளில் நடுக்கம். பெற்ற தகப்பனை மீட்க வேண்டிய போராட்டம் ஒரு மகளுக்கு. பணம் புரட்ட முடியவில்லை. கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துவிட்டால் என்ன செய்வது. முதலில் அவரை ஜாமீனில் எடுக்க வேண்டும். அழுகிறாள். எங்கெங்கோ அலைந் தலைந்து சட்டச் சிக்கல்களைத் தெரிந்து கொள்கிறாள். மினிஸ்டர், அங்குள்ள தெரிந் தவர்களிடம் பேசி கேஸை வாபஸ் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தைக் கொடுத்து வாபஸ் வாங்க வைப்பது. மூன்றாவது, ஜாமீனில் எடுக்க வக்கீல் வைப்பது. எல்லா பாதைகளும் அடைத்துக் கிடக்க, சேகரின் கார் அப்போது செம்புவின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது.

சேகரின் பெற்றோர் உயிரோடு இருந்த காலத்தில் செம்புவை பெண் கேட்க, பெண் கொடுக்க மாட்டேன் என்று விரட்டிவிட்ட குடும்பத்துக்கு, சேகர் உதவ வந்திருப்பதை ஊர்சனம் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். மினிஸ்டர் தனக்கு பழக்கமென்றும் செம்புவை அவரிடம் அழைத்துப் போவதாகவும் சேகர் சொல்கிறான். யாரை நம்புவது, கூடாது என்றெல்லாம் யோசிக்கும் அவகாசம் இப்போது யாருக்கும் இல்லை. சுப்புலட்சுமி ஒருபுறம் அழுதுகொண்டிருக்க சேகருடன் காரில் ஏறிச் செல்கிறாள் செம்பு. மினிஸ்டர் வீட்டுக்கு முன்பு கார் வந்து நிற்கவும் கதவருகே இருந்த காவலாளி சேகரிடம் காரணம் கேட்டுக்கொண்டிருந்தான். பேசி முடித்த வாக்கில் அவன் ஓர் எண்ணைக் கொடுத்து சேகரைப் பேசச் சொல்லவும் மினிஸ்டர் கேட்கும் தொகை கட்டுப்படியாகாமல் போக அங்கிருந்து நைஸாகக் கிளம்பியும் விடுகிறான் சேகர். மினிஸ்டருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதுபோல் ஒரு பாவனையைக் காட்டி விட்டு வக்கீலுக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி இரண்டு பேரை பிடித்து கையில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து ஆந்திரா வுக்கு அனுப்பி வைக்கிறான். ஆந்திரா ஸ்டேஷனிலிருக்கும் துரையிடம் செல்போனை கொடுத்து சேகர் நம்பருக்கு டயல் செய்து செம்புவையும் துரையையும் பேச வைக் கிறார்கள் அவர்கள்.

பத்து நாள்கள் கழித்து அப்பாவின் குரலைக் கேட்கிறாள். தழுதழுத்து அழுதது அக்குரல். `ம்மா… வீட்டுக்குப் போம்மா. நான் வந்துடறேன். அவுங்க வீட்டுக்கெல்லாம் போகாத’ - ரத்தவலியிலும் சேகர் வீட்டுக்குப் போக வேண்டாமென்று எச்சரிக்கிறார் துரை.

வண்டி ஓனர் இஸ்மாயில் ஸ்டேஷனுக்கு வருகிறார். செம்புவின் திருமணத்துக்காக முதலாளியிடம் இத்தனை ஆண்டுகளாய் துரை சேர்த்து வைத்த பணம் மூன்று லட்சம் இருக்கிறது. அதுபோக வண்டி ஓனர் என்கிற வகையில் இன்னொரு மூன்று லட்சத்தை இஸ்மாயில் பங்கெடுத்துக்கொள்கிறார். இன்ஷூரன்ஸ் போடாமல் சரக்கை அனுப்பிய தவற்றுக்காக சரக்கு அனுப்பிய நிறுவனம் இரண்டு லட்சம் என மொத்தமாக காம்ப்ர மைஸ் செய்யப்பட்டு துரையையும் ராஜா வையும் அனுப்பி வைக்கிறார்கள். சவுக்குக் கட்டையால் அடித்ததில் கால்கள் வீங்கியதில் இருவரும் தாங்கித் தாங்கி நடந்து வருகிறார்கள். ஆந்திரா சென்ற வக்கீல்களோ பெரிய வேலையில்லாமல் திரும்பி வந்தார்கள்.

சொந்தபந்தமெல்லாம் களவு வழக்கு என்று பயந்து எட்டிக்கூட பார்க்காமல் ஒதுங்கிக் கொண்ட நேரத்தில் தன் அப்பாவுக்கு சேகர் செய்த உதவி செம்புவுக்குப் பேருதவியாய்ப் பட்டது. சேகரை பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறாள். சேகர் கைகுலுக்கும் பொருட்டு செம்புவின் முன்பு மெதுவாய் கை நீட்டுகிறான். ``இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்’’ என்கிறாள். சேகர் செம்புவின் கையை இறுக்கமாய்ப் பிடித்துக் குலுக்கிவிட்டு விடை பெற்றிருந்தான். கார் புறப்பட்டது. காரில் இருந்த தன் அத்தையிடம் சொல்லிச் சென்றான்... ``அத்தே… இப்ப இன்னொரு முறை அவங்க வீட்டுக்குப் போயி பொண்ணு கேட்டுப் பாரு.’’

- தொடரும்...