
``செம்புவோட வீட்டுக்குப் போயி நாளைக்கு அந்தப் பொண்ண மட்டும் கூட்டிட்டு வர் றேன். உன்ன அந்தப் பொண்ணுக்கு பிடிச் சிருக்கா இல்லையானு தெரிஞ்சிப்போம்'' -
``இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன்’’ என்கிறாள் செம்பு. சேகர், அவள் கையை இறுக்கமாய்ப் பிடித்துக் குலுக்கிவிட்டு விடை பெற்றிருந்தான். கார் புறப்பட்டது. காரில் இருந்த தன் அத்தையிடம் சொல்லிச் சென்றான்... ``அத்தே… இப்ப இன்னொரு முறை அவங்க வீட்டுக்குப் போயி பொண்ணு கேட்டுப் பாரு.’’ சேகர் சொல்வதை ஏற்கவும் நிராகரிக்கவும் முடியவில்லை. சிறிது நேரம் அமைதி. ``சரி.. நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போயி பேசுறேன்.’’

தன் பெற்றோர் உயிரோடு இருந்த காலத்தில் தனக்கு மணம்முடிக்க நினைத்த பெண்ணிடமே விதி மீண்டும் வந்து இணைத்ததாக சேகர் நம்புகிறான். விதியோ, சதியோ துரைக்கு நடந்த சம்பவத்தை விசாரிக்க துரை வீட்டுக்குப் போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று சேகரை அழைத்துப்போனதே அவன் அத்தைதான். போன இடத் தில் மொத்தக் குடும்பமும் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கவும், ஊர்சனமும் ஒன்றுகூடி துரைக்கு உதவ வேண்டுமென்பதுபோல் ஒரு தோற்றத்தை சேகரிடம் உருவாக்கிவிடவும், வேறு வழியில்லாமல் செம்புவை மினிஸ்டர் வீட்டுக்கு அழைத்துப் போகச் சொன்னதும் அத்தைதான்.
பத்து நாள்கள் கழித்து துரை வீட்டுக்கு வந்தார். தாய்ப் பறவையைக் கண்ட குஞ்சுகள் போல் மொத்தக் குடும்பமும் ஓடிப்போய் அவரை கட்டித் தழுவி அழுது தீர்த்தது. அப்பாவை சேர்த்துக் கட்டிக்கொண்டு அழுகிறாள் செம்பு. சவுக்குக் கட்டையால் அடி வாங்கியதால் துரையின் கால் களெல்லாம் வீங்கி ரத்தச் சிவப்பில் இருந்தன. செம்மண்ணும் உப்புக் கல்லும் காய்ச்சி வீக்கத்துக்கு ஒத்தடம் போட்ட படியே அப்பாவின் மடியில் சாய்ந்தாள் செம்பு. மகளின் திருமணத்துக்குச் சேர்த்த பணமெல்லாம் அழகு சாதனப் பெட்டிகளோடு தொலைந்து போயிருந்ததை எண்ணி வருந்திக்கொண்டிருந்தார் துரை.
``இனிமே அவுங்க வீட்டுக்குப் போகாதம்மா.’’
``சரிப்பா.’’
செம்புவோடு பயணித்த அந்த ஒரு நாளை சேகர் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேச அவ்வளவு யோசிக்கிற பெண். குனிந்த தலை நிமிராமலே, கண்களை கண்கள் கொண்டு ஏறிட்டுப் பார்க்காமலே அமைதி யாய்ப் பேசுகிறப் பெண். கைகுலுக்கச் சொல்லி கைநீட்டினால் தயங்கித் தயங்கி நீட்டுகிற பெண். இப்படியான ஒரு பெண்ணைப் பார்ப்பது அவனுக்குப் புதிதாய் இருந்தது. முன்னர் சேகரை ஒரு பெண் காதலித்ததற்குக் கூட அவன் அப்போது பெரும்பணக்காரனாய் இருந்தான் என்கிற காரணம் இருந்தது. அதனால் தன்னால், தன் பணத்தால் ஒரு பெண்ணை எளிதில் தன்னிடம் விழவைக்க முடியுமென்று சேகர் நம்பியிருந்தான். முதன் முறையாகத் தன் அழகை, தன் பணத்தால் கிடைத்த அதிகாரத்தை ஏறிட்டுப் பார்க்காத ஒரு பெண்ணைப் பார்ப்பது அவனுக்குப் புதிதினும் புதிதாகத் தெரிந்தது.
``ஏழ வூட்டுப் பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்கும், தூரத்துச் சொந்தம் வேற, நம்ம சாதியில பொண்ணெடுத்தாதான் கௌரவம்’’ என்று அவன் அப்பாவும் அம்மாவும் செம்பு வீட்டுக்குப் பெண் கேட்டுச் சென்று அவமானப் பட்டதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
``செம்புவோட வீட்டுக்குப் போயி நாளைக்கு அந்தப் பொண்ண மட்டும் கூட்டிட்டு வர் றேன். உன்ன அந்தப் பொண்ணுக்கு பிடிச் சிருக்கா இல்லையானு தெரிஞ்சிப்போம்'' - அத்தை சேகரிடம் சொல்லவும் `சரி’ என்பது போல் சம்மதிக்கிறான். விடிந்ததும் சேகரின் அத்தை செம்பு வீட்டுக்குப் போகிறாள். நடந்த சம்பவத்தைக் கெட்ட கனவாக மறக்கச் சொல்லி துரையிடம் ஆறுதல் பேசுகிறாள். வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்கும் பண்பில் காபி வைத்துக் கொடுக்கிறாள் சுப்பு.

``சரி, விடுடீ... நீ எம்.ஏக்கு அப்ளிக்கேஷன் போட்டியே என்னாச்சு?’’
``வீட்ல படிக்க வைக்க மாட்டேனு சொல் லிட்டாங்க. பிரசிடன்சி காலேஜ்லயும், மெட் ராஸ் யூனிவர்சிட்டியிலயும் சீட் கெடைச்சிருக் குனு போன வாரம் தான் குமரன் லெட்டர் போட்டிருந்தாரு.’’
``ஓ… குமரன் வீட்டு அட்ரஸ்ல அப்ளிக் கேஷன் போட்டிருந்தேல்ல. உன்ன புரிஞ்சிக் கிட்ட நல்ல ஃப்ரெண்டுடி அவரு.’’
``ஆமா… அம்மாவுக்குத் தெரிஞ்சா படிக்க ஒப்புக்க மாட்டாங்க. சீட் கிடைச்சதும் சொல்லிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்டி ஆகிருச்சு.’’
``தமிழ் இலக்கியத்துல உன்ன அடிச்சிக்க ஆளில்ல செம்பு. எப்டியாச்சும் படிச்சு கோல்டு மெடலிஸ்ட் ஆகிரு.’’
``நீ வேற... வாரத்துக்கு ஒருத்தரு பாக்கு வெத்தலையோட பொண்ணு பாக்க வந்து டறாங்க. கவருமென்டு மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக்குடுப்பேன்னு அம்மா ஒத்தக்கால்ல நிக்குறாங்க. இவ்ளோ நாளா படிப்பு படிப்புனு தள்ளிப் போட்டுட்டேன். இனிமே யோசிச்சா தான்...’’
``செம்பு… ''
``என்ன சுகந்தி?’’
``இல்ல ஒண்ணுமில்லடி. காலேஜ் வாழ்க் கையை இப்ப நினைச்சாலும் மறக்க முடியல. உனக்கு அந்த கவருமென்டு பையன் கிடச் சிருந்தா நல்லா இருந்திருக்கும்ல...’’
``விடு சுகந்தி. என்னால அவனை இன்னும் மறக்க முடியல. அவன் எங்காச்சும் உயிரோட இருப்பான்னு மட்டும் நம்புறேன்.’’
``ஏய்… ஸாரி ஸாரிப்பா. அவனை ஞாபகப் படுத்திட்டேன்’’ - போனில் செம்புவும் சுகந்தி யும் பேசிக்கொண்டிருக்கும்போதே செம்பு வெடித்து அழுகிறாள். அவளால் வினோத் கிருஷ்ணாவை இன்னும் மறக்க முடியவில்லை. உயிருக்கு உயிராக நேசித்த காதலனை கடந்த ஆறு மாதங்களாகக் காணாமல் தேடித் தேடி சோர்ந்து கிடக்கிறாள்.
``ஆனது ஆச்சு… போனது போச்சு. காளஸ்த் திரி கோயிலுக்குப் போயி ஒரு பூஜை பண் ணிட்டு வந்தா நல்லது. செம்புவ அனுப்பி வை சுப்பு. கூட்டிட்டுப் போயி கூட்டியாந்துடறேன்.’’
``அய்யோ இல்லக்கா… அவ எங்கியும் வர மாட்டா. அதுவும் இனிமே உங்கூட்டுக்கெல்லாம் வரவே மாட்டா’’ - பதிலுக்கு சுப்பு சொல்லவும் வாரிப் போட்டது சேகரின் அத்தைக்கு. குடித்த காபி டம்ளரை பாதி யிலேயே வைத்துவிட்டு எழுந்து போகிறாள். அவள் போவது பற்றி துரைக்கோ சுப்புவுக்கோ எந்தக் கவலையும் இல்லை. செம்புதான் பதற்றம் கொள்கிறாள். வீடு தேடி வந்து உதவி யவர்களை இப்படி அவமானப்படுத்தி விட்டார்களே என்கிற கவலை அவளுக்கு. ஏதோவொன்று உறுத்தவும் தோழி சுகந்திக்குப் போன் போட்டு நடந்ததைச் சொல்கிறாள்.
``மனசு சரியில்ல சுகந்தி… வீட்ல எதை யாச்சும் சொல்லிட்டு உன்னப் பாக்க வர் றேன்டி’’ என்றதோடு பேசி முடித்துவிட்டு போனை வைத்துவிடுகிறாள். எதிர்வீட்டு அண்ணன் நேற்றுதான் புதிய செல்போன் வாங்கியிருப்பது அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
மறுநாள் விஜயமல்லூரில் இருக்கும் சுகந்தி வீட்டுக்கு மார்க் ஷீட் சம்பந்தமாக விசாரிக்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு சுகந்தி வீட்டுக்குக் கிளம்புகிறாள் செம்பு. தார்ச்சாலை போடு வதற்காக ரோடெல்லாம் தாரை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்கள். ரோடு ரோலர் தாரின் மீது உருண்டுகொண்டு போகவும் சற்று ஒதுங்கிப் போகலாம் என்று சைக்கிளை வளைத்த நேரமாகப் பார்த்து வீசியத் தாரின் சில துளிகள் காற்றில் கலந்து அவள் மஞ்சள் நிற சுடிதாரின் மீது தெளித்திருந்தது. அதை கவனிக்காமல் விஜயமல்லூர் பஜார் வீதி வரை வந்துவிட்டாள். இன்லேண்டு கவர் வாங்கலாம் என்று வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்துப் பார்த்தால் அங்கு சேகரின் அத்தை நின்றிருக்கிறாள். சட்டெனப் பேச முடியாமல் சேகரின் அத்தையையே பார்த்துக் கொண்டி ருக்கிறாள். பதிலுக்கு அவளும் பார்க்க சைக் கிளை ஓரம் கட்டிவிட்டு பக்கத்தில் போய் நிற்கிறாள் செம்பு.
``பெரிம்மா… ஸாரி’’
``என்ன ஸாரி… வூடு தேடி வந்து நல்லது செய்யணும்னு நெனச்சோம் பாரு…''
``இல்ல பெரிம்மா… அவுங்க பயந்துட்டாங்க அதான்...’’
``நாங்க என்ன சிங்கமா புலியா… பய்ந்து போற துக்கு? கொஞ்சம்னா ஒடம்புல நன்றின்னு ஒண்ணு உங்க வீட்ல இருக்காதா?’’ - சேகரின் அத்தை கேட்கும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறாள். கண்களில் கண்ணீர்.
``செரி வுடு. நீ இன்னா பண்ணுவ. வா வீட்டுக்கு வா. காபி குடிச்சிட்டு போவ.’’
``இல்ல பெரிம்மா… இன்னொரு நாள் வர்றேன்’’ - செம்பு சொல்லிவிட்டுத் திரும்பும் போது அவள் ஆடையில் இருந்த தாரை கவனிக்கிறாள் அத்தை.
``இன்னா இது … துணியெல்லாம் கரி கரியா?’’ - தார் அடித்திருப்பது புரியவும் ஒரு குச்சியை எடுத்து துடைக்கப் பார்க்கிறாள் செம்பு. போகவில்லை.
``வீட்டுக்கு வந்து தொடச்சினு போம்மா’’ - திரும்பத் திரும்ப அழைப்பதை அவளால் மறுக்க முடியவில்லை. சரியென்று சொல்லி விட்டுப் போகிறாள். வீட்டில் சேகர் இல்லை. உட்காரச் சொல்லிவிட்டு காபி போட்டுக் கொடுக்கிறாள்.
``சேகருக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வெச்சுட்டா கொச்சின் கிளம்பிடுவேன். எனக் கென்ன புள்ளையா குட்டியா... இவனெதான் புள்ளையா பாத்துட்டுக் கெடக்கேன்’’ - முந்தானை எடுத்துக் கண்கள் துடைக்கிறாள்.
``படிக்கிறீயா இப்ப?’’
``முடிச்சிட்டேன் பெரிம்மா… எம்.ஏ படிக் கணும். வீட்ல ஒத்துக்குவாங்களானு தெரில’’ - காபி டம்ளருடன் யோசித்தபடி சொல்கிறாள் செம்பு. பேசிக் கொண்டிருக்கும் போதே சேகர் வருகிறான்.
``சேகரு, பஜார்ல போயி ஒரு சுடிதாரு எட்த்துனு வர்றீயா?’’
``அய்யோ இல்ல பெரிம்மா… நான் சுகந்தி வீட்டுக்குப் போயி மாத்திக்கிறேன்’’ என்கிறாள் செம்பு.
சேகருக்குப் பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருந் தது. செம்புவுக்கு அவன் அம்மாவைப் போல் நீண்ட கூந்தல். பின்னி முடிந்த அவள் ஜடை இடுப்புக்குக் கீழ் வரை உரசிக்கொண்டே இருப்பதை பார்த்துக் கொண்டே சுடிதார் வாங்க வெளியே போகிறான்.
``ஊர்ல இருக்குறவங்க தான் இவனப் பத்தி தப்பு தப்பா கத கட்டி வுட்டுட்டானுங்க. நெஜத்துல இவன் ரொம்ப நல்லவன். இந்த சின்ன வயசுலயே அப்பன் ஆத்தா இல்லாட்டி தறி கெட்டுதான போவும். எட்த்து சொல்ல யாரு இருக்கா சொல்லு?’’
சேகரை பார்த்தால் ரவுடிக் கான எந்த அறிகுறியுமே தெரிய வில்லை. ஆனாலும் ஏன் அவனைப் பார்த்துப் பயப்படு கிறார்கள் என்று யோசிக்கிறாள் செம்பு.
``உங்க அப்பா தங்கமான மனுசன். பாவம் வாயை கட்டி வயித்தக் கட்டி சேர்த்தப் பணத்தையெல்லாம் இப்டி திருடன் கையில குட்த்துட்டு வந்துகீறாரு. படிக்கிற பொண்ண முன்ன பின்ன தெரியாத ஒருத்தனுக்கு கட்டிக் குடுக்கப் பாக்குறாங்க உங்க அம்மா. நீ மட்டும் சேகரை கட்டிக்கிட்டா பத்து பைசா கல் யாணத்துக்குச் செலவு பண்ண வேணாம், நீ படிக்கிற வரைக்கும் படிக்கலாம்னுதான் பொண்ணு கேட்டு வந்தேன்… அதுக்குள்ள உங்கூட்ல முறுக்குறாங்க’’
வாய் வலிக்காமல் புலம்பிக் கொண்டிருந் தாள் அத்தைக்காரி. சேகர் செய்த உதவிக்கு நன்றி சொல்லலாம். ஆனால், சேகரை ஏற்றுக் கொள்ளவதெல்லாம் செம்புவால் முடியாத ஒன்று. அவள் என்றைக்காவது வினோத் தன்னை தேடி வருவான் என்று நம்பிக் கொண்டிருக்கிறாள்.
ஓர் ஊதா நிற சுடிதாருடன் சேகர் உள்ளே நுழைகிறான். அதை அத்தையிடம் கொடுத்து விட்டு தன் அறைக்குள் போகிறான். வாடகை வீடென்றாலும் நேர்த்தியாக இருந்தது வீடு. ஒரு காலத்தில் ஓஹோவென்று வாழ்ந்த குடும்பம். இப்போது ஒன்றுமில்லாமல் போய் விட்டதென்று எளக்காரமாய்ப் பார்ப்பதாய் சேகரின் அத்தை திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாள். குழாய் நீரால் தேய்த்துக் கசக்கினாலும் தார் கறை போகாமல் ஒட்டிக் கொண்டிருக்கவும் வேறு வழியில்லாமல் சேகர் வாங்கி வந்த சுடிதாரை அணிந்து கொள்கிறாள் செம்பு. கிளம்புவதாகச் சொன்ன வளிடம், `சம்மதமா’ என்பதையே திரும்பத் திரும்ப கேட்கிறாள் அத்தை. ``எங்க வீட்ல என்ன சொல்றாங்களோ அதான் என் முடிவு. அவங்க என்ன சொன்னாலும் கேட்பேன்’’ என்று சொல்லிவிட்டு எழுந் திருக்கிறாள்.
``ம்மா… உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’’ - உள்ளிருந்து வந்தது சேகரின் குரல். அந்த `ம்மா’ என்கிற சொல்லில் அத் தனை அமைதியும் அன்பும் பொருந்தியிருப்பதாய்ப்பட்டது அவளுக்கு. ``எங்க வீட்ல வந்து கேட்டுப் பாருங்க’’ என்று சொல்லிவிட்டு நகர்கிறாள். எப்படியும் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது செம்புவின் கணக்கு.

``நாளைக்கு அஞ்சு பேரோட கார்ல வந்து பொண்ணு கேக்குறோம், ரெடியா இரு’’ என்றபோது, அவள் தலையாட்ட எதுவும் இல்லை. ``அப்பாவுக்கு வீடு தேடி வந்து ஹெல்ப் பண்ணிங்க. ரெண்டு பேருக்குமே தாங்க்ஸ்ங்க’’ - கடைசியாக இவ்வளவு மட்டும் தான் அவளால் சொல்ல முடிந்தது. கிளம்பி னாள். சுகந்தி வீட்டுக்குப் போகாமல் நேராக தன் வீட்டுக்குப் போய்விட்டாள்.
``என்னடி ஏது இந்த புதுத் துணி?’’ என்கிறாள் சுப்பு. ``சுகந்தியோடது’’ என்று பொய் சொல் கிறாள் செம்பு. ``சாமான்லாம் எட்த்து போட்டு தொலக்கு’’ என்று சொல்லிவிட்டு போய் விடுகிறாள் சுப்பு.
சேகர் வீட்டார் நாளைக்கு பெண் கேட்க வந்து அவமானப்படப் போவதையே எண்ணி மறுபடியும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள். `இதுக்குப் பேசாம சேகரை பிடிக்கலைனு சொல்லிட்டு வந்திருக்கலாம்ல. குடிகாரனா இருந்தாலும் அவன் அவ்ளோ கெட்டவனா தெரியலையே...’ - பாத்திரம் தேய்க்கிற நார் போல் செம்புவின் மனமும் நார் நாராய்க் கிழிந்து தேய்ந்து கொண்டிருந்தது.
விடியும்போதே அலறி எழுந்தாள். அவ ளுக்கு சேகரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ஆனால் சேகரை காயப் படுத்தாமல் விலக நினைக்கிறாள். வினோத் எழுதிய கடைசி கடிதப்படி பார்த்தால் அவன் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்று சுகந்தி யும் குமரனும் பேசிக் கொண்டிருந்தது அவளை அடிக்கடி அழ வைத்துக்கொண்டே இருந்தது. ஒருமுறை வினோத்தைத் தேடி சேத்தியாத்தோப்பு போகலாம் என்று குமரன் கூட முடிவெடுத்துவிட்டார். ஆனால், அந்தக் கடைசி கடிதம் தான் செம்புவின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கிறது.
``நமக்குக் கிடைக்காத ஒருத்தருக்காக நம்மை தேடி வர்ற நல்லவங்களை தொலைச் சிடாதீங்க செம்பு. வினோத்தை மறந்துட்டு நீங்க புது வாழ்க்கையை ஆரம்பிக்கணும்’’ என்று தன் நண்பன் குமரன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாமல், பாஸ் செய்த டேப் ரெக்கார்டர் போல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள் செம்பு.
குளித்து விட்டு தலை வாரிக் கொண்டிருக்கும் போதே மதமதவென்று காரில் ஏழு பேர் வந்து பாக்கு வெத்தலை பழத்தட்டோடு இறங்கு கிறார்கள். சுப்புவுக்கு ஒன்றும் புரியவில்லை. தலை மேல் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் துரை. வாவென்று அழைக்க இருவருக்குமே வாயில்லை. ஏனோ தெரிய வில்லை சேகருக்கு செம்புவைப் பிடித்துவிட்ட தால் கோபமே வராமல் சமர்த்தாகக் கிடக் கிறான். வந்தவர்கள் அவர்களாகவே சேர்களை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொள் கிறார்கள். கையில் கொண்டு வந்த மல்லிகை சரத்தை செம்புவுக்கு வைக்கிற சாக்கில் அறைக்குள் போகிறாள் அத்தை.
``உங்க அப்பா, அம்மாவ எப்டியும் ஒத்துக்க வச்சிருவோம். இனி என்ன நடந்தாலும் வாயே தொறக்காத’’ என்று சொல்லிவிட்டு வாரிய தலையில் பூவைச் சூட்டுகிறாள். வந்தவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ஒரே கதையை திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தார்கள். ஒரே பேச்சு தான், பெண் கொடுக்க விரும்பமில்லை என்றார்கள் சுப்புவும் துரையும்.
``நேத்து செம்பு வீட்டுக்கு வந்திருந்துச்சு. அதுக்கு புடிச்சிக்கீது. நீங்க எதுக்கு வளவளன்னு இழுத்துனு கீரய்ங்க?’’ என்றாள் அத்தை. தங்கள் இருவருக்கும் தெரியாமல் செம்பு, சேகர் வீட்டுக்குப் போன அதிர்ச்சி தாங்காமல் சுப்புவும் துரையும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
``சொல்ல வேணாம்னுதான் பாத்தோம். செம்புவுக்கு புடிச்சதாலதான் சேகர் நேத்து புது சுடிதாரு வாங்கிக் குடுத்தாப்டி’’ - தூக்கி வாரிப் போடுகிறது சுப்புவுக்கு. உள்ளுக்குள் குமுறுகிறாள். வெளியில் நடப்பதெல்லாம் செம்புவுக்கு லேசாகக் கேட்கிறது. வயிற்றுக்குள் புளியைக் கரைத்துக்கொண்டு கிடக்கிறாள் செம்பு.
``செரி… செம்பு வந்துச்சு… துணி எட்த்து குட்த்தீங்க. இதோட நிறுத்திக்கலாம். நீங்க உதவி செஞ்சீங்க. இல்லனு சொல்லல. பொண்ணு படிக்கணும்னு சொல்லுது. அப்பால பாக்கலாம்’’ என்று துரை கையெடுத் துக் கும்பிடுகிறார். இப்படியே தெரு வாசலைப் பார்த்து வந்தவர்கள் திரும்பிப் போய் விடு வார்கள் என்று செம்புவும் துரையும் நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் கருணா வாயைத் திறந்தான்.
``அண்ணனும் அண்ணியும் நேத்திக்கி பைக்ல எங்க ரவுண்ட் அட்சாங்கனு தெரியுமா.. சும்மா பேசினுகீறீங்க. சபைல எதுவும் சொல்ல வாணாம்னு பாத்தா சொல்ல வச்சிருவீங்க போல’’ - பக்கென்று தூக்கிப் போட்டது செம்புவுக்கு.
சைக்கிள் பஞ்சர் ஆனதில் கருணாதான் பஞ்சர் கடை வரை செம்புவின் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்திருந்தான். அதுவரை பேசிவிட்டு காபி குடித்துவிட்டு வெளியே கிளம்பிய செம்புவை சேகர் வண்டியில் உட்காரவைத்து பஞ்சர் கடை வரைக்கும் அனுப்பி வைத்ததே அத்தைதான். தலையே சுற்றுவது போல் இருந்தது செம்புவுக்கு.
உச்சக்கட்டமாய் கருணா சொன்னான்... ``அவங்க ரெண்டு பேரு கட்டிப் புடிச்சினு கிஸ் அடிச்சினு கூட போனாங்க… அதையெல்லா ஆசையா போட்டோ கூட எட்த்து வச்சினு கீறன்’’ - துரையும் சுப்புவும் சிலையாய் நின் றார்கள். சேகரைப் பார்த்து கருணா கண்ண டித்துக்கொண்டிருந்தான். அத்தை முந்தா னையை உதறி இடுப்பில் செருகியிருந்தாள்.
கதவருகே காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த செம்பு வியர்த்து விறுவிறுத்து கதவின் தாழ் திறந்து கூட்டத்துக்கு மத்தியில் ஓடி வந்து நின்றாள். ``இன்னாமா நிஜமாவே உனுக்கு இதுல சம்மதமா?’’ - செம்புவைப் பார்த்து தழுதழுத்தக் குரலில் துரை கேட்கிறார்.
- தொடரும்...