
``உங்க மனசாட்சிப்படி சொல்லுங்க... உங்க ஃப்ரெண்டு சொல்றதெல்லாம் நியா யமா? நான் உங்ககிட்ட அப்டியெல்லாம் நடந்துகிட்டனானு சொல்லுங்க’
``இன்னாமா நிஜமாவே உனுக்கு இதுல சம்மதமா?’’ - செம்புவைப் பார்த்து தழுதழுத்த குரலில் கேட்கிறார் துரை. ``ப்பா’’ - வார்த்தை வராமல் அவள் அதிர்ச்சியில் நிற்கவும் கௌரி வரவும் சரியாக இருந்தது.
துரைக்கு கூடப்பிறந்த தங்கை கௌரி. அண்ணனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தும் ஓர் எட்டு கூட போய் பார்க்க வில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாதென பத்து மணி பேருந்து பிடித்து வந்திருக்கிறாள். வீட்டில் இருக்கும் பாக்கு, வெத்தலைக் கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறாள். ஏற்கெனவே சொந்த அண்ணன் மகள் என்கிற வகையில் உறவு விட்டுப் போகக் கூடாதென செம்புவைப் பெண் கேட்டு வந்திருக்கிறாள் கௌரி. `போயும் போயும் கழனில கெவுரு வெதைக்கறவனுக்குப் போயி பொண்ணக் குடுப்பாங் களா...’ என்று சுப்பு அசிங்கப்படுத்தியதால், `இனி உன் வீட்டு வாசப்படியே மிதிக்க மாட்டேன்’ என முறுக்கிக்கொண்டு போனவள், இப்போது ஒண்ணுவிட்ட உறவுக்காரனான சேகரை பார்த்து அதிர்ந்து நிற்கிறாள்.
‘`வாங்க அத்தே…’’ கௌரியை வரவேற்கிறாள் செம்பு. நடப்பதெல்லாம் கௌரிக்கு ஓரளவுக்குப் புரிந்துவிட்டது. சொந்த தங்கை பையனுக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டு, ஒரு பொறுக்கிக்குப் பெண் கொடுக்க, கூடப்பிறந்த தங்கை யிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாமல் இப்படியொரு வேலை பார்க்கிறார்களே என்கிற கோபம் கௌரிக்கு. தன் அண்ணன் குடும்பம் தன்னை அவமானப்படுத்தியதாக கூனிக் குறுகிறாள்.
``இன்னா அண்ணா… ஒரு வார்த்தை கூட சொல்லல… நாங்க இன்னா இவுங்களவிட தரங்கெட்டுப் போயிட்டமா?’’ - துரையைப் பார்த்து கௌரி கேட்கவும், சுப்புதான் ஆரம்பிக் கிறாள். ``இல்ல தொத்தா… நாங்க ஒன்னியும் இவங்கள கூப்பு டவே இல்ல. இவுங்களே தான் தட்டத் தூக்கினு வன்ட்டாங்க’’ - சுப்புவின் பேச்சில் இருந்த அகங்காரம் சேகரையும் அவன் அத்தையையும் சுர்ரென்று கோபம் கொள்ளச் செய்தது.
``இத பாருடீ… உம் பொண்ணு இன்னாத்துக்கு என் வூட்டுக்கு வந்தா? சேகர்கூட பைக்ல சுத்துனா? நாங்களா வெத்தல பாக்கு வச்சு உன் பொண்ண வூட்டுக்கு அழச்சோம்?’’
``என்கூட சுத்துனத ஊரே பாத்துருச்சு… ஏதோ மரி யாதைக்கு வந்து பொண்ணு கேட்டுனு இருக்கோம்.’’
``ண்ணோவ்… கிஸ் அடிச்சப்போ நல்லா இருஞ்சான்னு கேள்ணா’’ - சேகர், அத்தை, கருணா என மூவரும் வெறி கொண்ட சொற் களால் கண்டபடி கத்தித் தீர்த்தார்கள். அந்தக் கத்தலில் ஊரார் சிலர் கூடினார்கள். சொந்த அண்ணனும் அண்ணியும் தன்னையும் தன் மகனையும் அவமானப்படுத்திவிட்டதாக நினைத்த கௌரி தெருவில் நின்று கத்தினாள்.
``எனுக்கு அப்பவே சந்தேகம்தான்… எம் பொண்ணு அவன்கூட சுத்தினு கீதுனு சொல்றது. எதுக்கு எம் புள்ள வெவசாயம் பாக்குறான், தண்ணி பாச்சுறான்னு சம்சாரிய கேவலமா பேசணும். எஞ்சாபம் சும்மா உடா துல்ல… நல்ல வாட்டமா இருக்கும்... இங்கியே பொண்ண குடு’’ - தெருசனம் பார்க்கக் கத்தி விட்டுக் கிளம்பிப் போனாள். இப்படியே செம்புவைப் பேசவிடாமல் ஆளாளுக்குப் பேசிக் கொண்டே போனார்கள்.
கூட்டத்துக்கு நடுவில் வந்து நின்றாள் செம்பு. ``உங்க மனசாட்சிப்படி சொல்லுங்க... உங்க ஃப்ரெண்டு சொல்றதெல்லாம் நியா யமா? நான் உங்ககிட்ட அப்டியெல்லாம் நடந்துகிட்டனானு சொல்லுங்க’’ - கிஸ் அடித்ததாக கருணா சொல்லும் அபாண்டத் தைத் தாங்க முடியாமல் சேகரின் முகத்தைப் பார்த்து நேருக்கு நேராகக் கேட்கிறாள் செம்பு. சேகரும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான். ஆயிரம்தான் செம்பு தன்னை நிரூபிக்க முயன்றாலும் சபையில் போட்ட சொல்லை வாரி எடுப்பது கடினம் என்பது போல், செம்பு தன் மீது விழுந்த பழியை மறுத்து நின்றாலும் ஊரார் காதுகள் அதை ஏற்பதாய் தெரியவில்லை.
``செரி... ஆனது ஆச்சு போனது போச்சு... ஒரே சாதி... ஒண்ணுவிட்ட சொந்தம் வேற... எதுக்கு நீ தப்பு, நான் தப்புனு பெர்சு பண்ணினு கீறீங்க. இதெல்லாம் அவுங்க வூட்டுக்கு பொண்ண அனுப்புறதுக்கு முன்ன யோசிச்சி இருக்கணும்’’ - ஆளாளுக்கு நாவில் நரம்பில்லா மல் பேச ஆரம்பிக்கிறார்கள். அவமானத்துக்கு மேல் அவமானம். தன் மகள் தரங்கெட்டவள், திருமணத்துக்கு முன்பு ஒருவனோடு ஊர் சுற்றிவிட்டாள் என்று ஊரார் முன்பாக வந்திருக்கும் பழியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துரையும் சுப்புவும் தலைகுனிந்து நிற்கிறார்கள். செம்புவின் தங்கைகள் மூவரும் ஒரு மூலையில் சுருண்டு நிற்கிறார்கள்.
``நான் எந்தத் தப்பும் பண்ணலப்பா… இவங் கள கல்யாணம் பண்ணிக்கணும்னுதான் அப்டியெல்லாம் சொல்றாங்க’’ - அப்பாவின் கையைப் பிடித்து அழுகிறாள்.
``உனுக்கு அடுத்து மூணு பொம்பள புள்ளைங்க இருக்கே... கொஞ்சம்னா யோசிச் சியாடீ நீ’’ - சுப்பு பக்கத்தில் வந்து கத்தவும் செம்புவின் குற்ற உணர்வு கழுத்து வரை அவளை நெரித்தது. ஒரு பெண்ணின் ஒழுக்கத் தைக் கேள்வி கேட்டுவிட்டால் அதற்கு கல்யாணம்தான் தீர்வென்கிற அரதப் பழசான முடிவை எடுத்தால்தான் இந்தக் களங்கம் குறையுமென்றும், தங்கைகள் வாழ்வு தன்னால் நாசமாகாது என்றும் ஆத்திரம் அடங்காமல் கோபத்தில் முடிவெடுத்துச் சொல்கிறாள்...

``அப்பா நான் இவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ - கூட்டத்துக்கு மத்தியில் செம்புவின் குரல் ஆற்றாமையும் அழுகையுமாய் கலந்து நின்றது.
``அப்டி ஒண்ணும் வேண்டா வெறுப்பா ஒத்துக்க வேணாம்’’ - சேகரின் கையைப் பிடித்து வெளியே இழுத்து வருகிறாள் அத்தை. மகள் சொன்ன முடிவை ஏற்க முடி யாமல் செம்புவை தனியாக அழைத்துப் போகிறார் துரை. வேடிக்கைப் பார்த்த ஊர் சனம் சேகரையும் உடன் வந்தவர்களையும் சமாதானம் செய்து உள்ளே அழைத்து வருகிறார்கள்.
``ப்பா… என்ன மன்னிச்சிருப்பா. நான் தாங்க்ஸ் சொல்லலாம்னு தான் அவுங்க வூட்டுக்குப் போனேன். வேற எந்தத் தப்பும் பண்ணலப்பா’’ - அவ்வளவுதான். செம்பு சேகர் வீட்டுக்குப் போனதை உறுதி செய்து கொண்டார் துரை. கண்கலங்கி நிற்கிறார்.
``அவன கல்யாணம் பண்ணி செத்துப் போப்போறீயா?’’
``அவங்க பேசுன பேச்சுல நான் ஏற்கெனவே செத்துட்டேன்பா. எவ்ளோ கெட்டவனா இருந்தாலும் அன்பால மாத்த முடியும். நான் மாத்திக்காட்டுறேன்ப்பா… அசிங்கப்பட்டுனு இந்த வீட்ல கீறதுக்கு அங்கியே போயி வாழ்வா, சாவானு இருந்துக்கிறேன்ப்பா...’’ - விம்மி விம்மி அழுதுகொண்டே செம்பு சொல் வதையெல்லாம் துரையால் ஏற்கவே முடிய வில்லை. அவள் எதிர்காலம் இப்படித்தான் சிக்கிக்கொள்ள வேண்டுமா என்றெல்லாம் துடிதுடித்துப் போகிறார்.
செம்பு அழுது கொண்டிருப்பது சேகர் காதில் கேட்கவும் கிளம்பிப் போக நினைத் தவன் அங்கேயே ஒரு நிமிடம் நின்றிருக்கிறான். வெளியில் வந்த துரையின் இரண்டு கைகளை யும் பிடித்துக் கொண்டு சேகர் சொல்கிறான், ``உங்க பொண்ண நான் நல்லா பாத்துப்பேன்… நம்புங்க.’’
எதை நம்புவதென்று தெரியவில்லை. சேகர் சாதிவிட்டு சாதி ஒரு பெண்ணோடு கூத்தடித் தக் கதையை ஊரே அறியும் என்பதால்தான் அவனுக்கு யாரும் சொந்த சாதியில் பெண் கொடுக்கவில்லை என்பது ஊரில் பேச்சு. எனவே, சேகர் ஒருபடி இறங்கி வந்து நிற் கிறான். அவன் துரையின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்கவும், ஊர்சனத்தில் சிலர், ``எல்லா நேரங்கூடி வந்தா சரியாகிடும்பா… தட்ட மாத்திக்கோ’’ என்று சொல்லவும் தட்டைக் கொடுக்கச் சொல்லி அத்தையிடம் கருணா சொல்லவும், நடக்கிற மாயையைப் புரிந்து கொள்ளும் சிறிய அவகாசமும் இல்லாமல் துரையும் சுப்புவும் பிரமைப் பிடித்தாற் போல் தட்டை வாங்கிக் கொள்கிறார்கள். பதிலுக்குப் பிள்ளையார் மாடத்தில் பூஜை செய்து ஊது பத்தி செருகி வைத்திருந்த வெற்றிலையையும் பழத்தையும் கொடுக்கச் சொல்லி சம்பிரதாய மாக பாக்கு வெத்தலை மாற்றி சேகருக்கு செம்புதான் என ஊரார் முன்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள வைக்கிறார்கள். ``நாளைக்கு மறுநாள் நாள் நல்லா இருக்கு … அன்னிக்கே நிச்சயதார்த்தம் வச்சிப் போம்’’ என்று சொல்லி விட்டுக் கிளம்பி னார்கள்.
செம்புவின் வீட் டில் யாரும் யாரு டனும் பேசாமல் அதிர்ச்சியில் உட் கார்ந்தார்கள். கண்மூடித் திறக்கும் சிறு கணத்தில் எல்லாம் நடந்தேறிவிட்டது. பெண்ணைக் கொடுத் தால் போது மென்று படியேறி வந்தவர்கள் நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து கௌரவம், அந்தஸ்து என விதவிதமாகப் பெயர்கள் வைத்து 21 பவுன் கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு துரை குடும்பத்தைக் கொண்டு வந்தார்கள். நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடையே இருந்த ஐந்து மாத இடைவெளிக்குள் நடந்ததெல்லாம் கொடுமையின் உச்சம்.
அடிக்கடி குடித்துவிட்டு செம்புவின் வீட்டுக்கு வந்தான் சேகர். ``நிச்சயம் தானே ஆயிருக்கு. கல்யாணத்த நிறுத்திடலாம். இப்டியாப்பட்டவனுக்கு பொண்ண குடுத்து அது சீரழிஞ்சி வர்றதுக்கு இப்பவே நிறுத் திட்டா கூட மேலு தான்’’ - முந்தானையைக் கசக்கிக் கொண்டு அழுகிறாள் சுப்பு. துரைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
``ஒரு நாள் அவன்கூட சுத்துனதுக்கே… போட்டோ கீது… அது கீது… இது கீதுனு காப்ரா ஏத்திவுட்டு தான பொண்ணு குடுக் கவே ஒத்துக்க வச்சாங்க. இப்ப அஞ்சி மாசமா வூட்டுக்கு வரப் போவனு கீறான். இப்ப கல்யாணம் வாணாம்னு சொன்னா இது வாழ்க்க மட்டும் இல்ல… அடுத்தட்த்து மூணு பொண்ணுங்க கீது … அதுங்க வாழ்க்கைய நெனச்சிப் பாத்தியா?’’ - துரை சொன் னதைக்கேட்டு சுப்பு அழவும், ஊரில் இருந்து வந்த அவளின் தங்கை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
`அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டோமோ’ என்பதை செம்புவுக்கு ஐந்தே மாதத்தில் புரிய வைத்து விட்டிருந்தான் சேகர். கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் திருமணத்துக்கு முன்பாகவே செம்பு வீட்டுக்கு வந்து அவளை தனியறைக்கு அழைத்துப் பேசுவதும், அவளை வீட்டை விட்டு எங்கேயும் போகக் கூடாது என கண்காணிப் பதும், பணம் பணம் என்று நச்சரிப்பதும், திருமணத்தை கோலாகலமாக நடத்த வேண்டுமென டார்ச்சர் செய் வதும், குடித்துவிட்டு வருவதும் போவதுமாக சேகர் செய்த அட்டூழியங்களில் செம்புவே வீட்டைவிட்டு ஓடிப் போய் விடலாம் என்கிற முடிவுக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டாள்.
இன்னும் 17 நாள்களில் திருமணம். எப்படியாவது நிறுத்த வேண்டும். வீட்டிலும் யாருக்கும் இதில் விருப்பமில்லை. ஆனால், சேகருக்குப் பயப் படுகிறார்கள். குழப்பத்தின் உச்சத்தில் நிற்கிறாள் செம்பு. குமரனுக்கு போன் செய்கிறாள். நிச்சயத்தில் வந்து நின்ற கதை முதல் இப்போது திருமணத்தை நிறுத்த உறுதியாய் நிற்கும் கதை வரை ஒன்று விடாமல் சொல்லி அழுகிறாள். ஏற்கெனவே எம்.ஏ படிக்க மெட்ராஸில் இரண்டு கல்லூரிகளில் சீட் கிடைத்தும் அதை இன்னும் பயன்படுத்தாமல் இருக்கும் கதை குமரனுக்குப் பழையது. இப்படி ஒரு சிக்கலில் தோழி மாட்டிக் கொண்டிருக்கும் கதை அவனுக்குப் புதியது. வினோத்தை தேடி அவன் கிடைக்காமல் போக இப்போதுதான் செம்பு இன்னொரு வாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள் என மனம் நிறைந்து தூரத்தில் நின்றவாறு வாழ்த்திக் கொண்டிருந்த நண்பனுக்கு, செம்பு வின் கண்ணீர் வேதனையைக் கொடுத்தது.
``எந்த முடிவெடுத்தாலும் ஒண்ணுக்கு நாலு முறை யோசிச்சுப் பண்ணுங்க செம்பு. நாங்க உங்க கூட இருக்கோம்’’ - குமரனின் வார்த்தை மட்டுமே செம்புவின் பெரிய பலம் இப்போது. இன்னும் நான்கு நாள்களில் பள்ளித் தோழி அனுவுக்கு அரக்கோணத்தில் கல்யாணம். அவள் கல்யாணத்துக்குப் போகிற சாக்கில் அங்கிருந்து மெட்ராஸுக்கு தப்பித்துப் போய் கல்லூரியில் சேர்ந்து விடலாம். பிறகு வந்து கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு படிக்க ஆரம்பித்துவிடலாம் என ஏதேதோ நினைக்கிறாள் செம்பு. அனு, சுகந்தி, சீனு, கணபதி என செம்பு தன் நண்பர்கள் சிலருக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியேறி படிக்கப் போகும் தன் திட்டத்தைக் கூறுகிறாள்.
`காலேஜ் ஸ்ட்ரைக்னா கேம் பஸையே அலற வைப்பா செம்பு. அவளுக்குப் போயி இப்டி ஒரு பொறுக்கி மாப் பிள்ளையா?’, `வேணாம்டி. நல்லதோ கெட்டதோ இப்பவே தப்பிச்சிரு’, `பேரன்ட்ஸுக்கு மொதல்ல கஷ்டமாதான் இருக் கும். அவுங்களுக்கே இந்த கல்யாணத்துல விருப்பம் இல் லாதப்ப நீ எடுக்கற முடிவு தப்பே இல்ல’, `நீயெல்லாம் யூனிவெர்சிட்டி ரேங்கர்டி. ப்ளீஸ் படிச்சிரு. பிரச்னைலாம் வந்த வேகத்துல காணாம போயி ரும்’, `இப்போதைக்கு உங்க வீட்ல தெரிய வேணாம். அவங்க பயந்துடுவாங்க. நாங்க அம்மா, அப்பாகிட்ட பேசிக்கிறோம். நிஜமாவே தப்பிச்சி ஓடிரு ப்ளீஸ்’ - நண்பர்கள் ஆளாளுக்கு அறிவுரை சொன்னார்கள். நடந்ததை கேள்விப்பட்ட யாருக்குமே இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. அனுவின் திருமணத்துக்கு வரும் செம்புவை அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து மெட்ராஸுக்கு அழைத்துப் போக தங்களுக் குள் பேசிக் கொண்டார்கள். கணபதி மட்டும் உச்சகட்டமாய் சீனுவிடம் ஒன்று சொன்னான். அதைக் கேட்டுவிட்டு சீனு கணபதியை திட்டி னாலும் அனுவின் திருமணத்தன்று அதை செம்புவிடமும் சொல்லும்படி சொல்லிச் சென்றான் சீனு.
அனுவின் திருமண ரிசப்ஷனுக்கு மாம்பழ கலர் புடவையைக் கட்டிக் கொண்டு தயாரா னாள் செம்பு. ஒரு பையில் கல்லூரிச் சான் றிதழ்கள், இரண்டு மூன்று ஆடைகள் என சிலவற்றை எடுத்துக் கொண்டு சுகந்தியோடு கிளம்பினாள். அனு, சுகந்தியை போல் செம்பு வுக்கு உயிர்த்தோழி என்பதால் சுப்புவும் துரை யும் செம்பு கிளம்பிச் செல்வதைப் பற்றி பெரிதாக ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. இனி திரும்ப எப்போது வீட்டுக்கு வரப் போகி றோம் என்று தெரியாமல் அப்பாவிடமும் அம்மாவிடமும் ஒருவித குற்ற உணர்ச்சியோடு சொல்லிவிட்டு கிளம்பி வந்தததை சுகந்தியிடம் வழியெல்லாம் சொல்லிச் சொல்லி அழுது கொண்டே வருகிறாள் செம்பு. மண்டபத்தில் காத்திருந்த நண்பர்களைப் பார்த்ததும் ஓவென்று அழத் தொடங்கினாள் செம்பு.
சரியாக இரவு 9.10க்கு வரும் ரயிலில் மெட் ராஸுக்கு அழைத்துப் போகும் பொறுப்பு கணபதியுடையது. நாளை செம்புவின் வீட்டுக்குப் போய் அவள் பெற்றோரை சமா தானம் செய்யும் பொறுப்பு சீனுவுக்கும் சுகந்திக்கும் உரியது. சேகரால் எதுவும் பிரச்னை ஏற்பட்டால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ளும் பொறுப்பு குமரனுடையது எனப் பொறுப்புகளைப் பிரித்துக் கொண் டார்கள். திருப்பூர் நண்பன் கணபதிக்கும் மெட்ராஸ் கல்லூரியில் சீட் கிடைத்ததால் அவன்தான் செம்புவை அழைத்துச் செல்ல சரியான ஆள் என நண்பர்கள் தீர்மானித் திருந்தார்கள். ஆனால், சீனுவிடம் கணபதி சொன்ன அந்த இன்னொரு விஷயம் மற்ற நண்பர்களுக்கு இதுவரை தெரியாது.

கல்யாணப் பந்தி களைகட்டி இருந்தது. மாப்பிள்ளையோடு ரிசப்ஷன் மேடையில் நின்றிருந்தாள் அனு. ``நான் தான் பிடிக்காத மாப்பிள்ளைய கட்டிக்கப் போறேன். நீயாச்சும் நல்லா இருடி’’ - சில அடி தூரம் வரை தனியாக வந்து செம்புவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கலங்கிவிட்டுப் போனாள் அனு. அவளைப் பார்க்கவே செம்புவுக்கு அழுகை அழுகையாக வந்தது. தனக்காவது கடைசி நிமிஷத்தில் வீட்டைவிட்டு ஓடிப் போகிற தைரியம் வந்தது. ஆனால், காதலித்த பையனை பக்கத்து ஊரில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு பயந்து வேறொரு பையனை திரு மணம் செய்துகொள்ளப் போகும் அனுவை நினைத்து அவளுக்குப் பாவமாக இருந்தது. அனுவுக்கும் செம்புவுக்கும் நூலளவு வித்தி யாசம். அனு வாயில்லாப் பூச்சி. தியாகம் தான் தன்னை வாழ வைக்கும் என நம்பி வாய் திறந்து பேசாமலே எல்லாவற்றுக்கும் பணிந்து போகிறவள். செம்பு வாய் இருக்கிற பூச்சி. தியாகம் தன்னை உயர்த்தும் என்று மேடைகளில், பொது இடங்களில் வாய் பேசிப் பேசியே குட்டை எது குழி எது என்று தெரியாமல் விழுந்துவிட்டுப் பின் சுதாரித்து எழுந்து ஓட நினைப்பவள். அனுவை சமா தானம் செய்துவிட்டு பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள் செம்பு. நண்பர்கள் எல்லோரும் மண்டப வாசலில் ஒன்று கூடினார்கள்.
ஏழு மணிவாக்கில் செம்பு வீட்டுக்குப் போன சேகர், அவள் அனுவின் திருமண வரவேற்புக்குப் போயிருக்கும் தகவலை தெரிந்துகொண்டு, அரக்கோணத்துக்கு காரைத் தெறிக்கவிட்டான்.
‘`முண்ட... யார கேட்டு இவ இஸ்ட்டத்துக்கு கல்யாணத்துக்குப் போனா? இப்பயே எங் கிட்ட சொல்லாம கொள்ளாம போறானா... நாளிக்கி நடுராத்திரில எவென் கூடயாச்சும் ஓட மாட்டான்னு இன்னா கேரன்டி?’’ - பக்கத்தில் அமர்ந்திருக்கும் கருணாவிடம் செம்புவை திட்டிக்கொண்டே ஆக்சி லேட்டரை மேலும் அழுத்தினான்.
வாசலுக்கு வந்த செம்புவிடம் தனியாகப் பேச வேண்டுமென கணபதி அழைக்கிறான். வாழை மரங்கள் கட்டியிருந்த பச்சைப் பந்தலுக்குப் பக்கத்தில் ஓர் ஓரமாகப் போய் இருவரும் நின்றார்கள். சீரியல் லைட் வெளிச் சத்தில் செம்பு அணிந்திருந்த மாம்பழ நிறப் புடவையும் அவள் மூக்குத்தியும் மின்னிக் கொண்டிருந்தன. கணபதி செம்புவை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் பின்னால் இருந்த மணமக்களின் பேனரையே உற்று உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு மேல் மௌனம் காத்துக் கொண்டிருக்கும் அவகாசம் இல்லை என்பது அவனுக்கே தெரிந்துவிட்டதால் தன் தைரியத்தை மொத்த மாக உருட்டிச் சேர்த்துப் பேச ஆரம்பித்தான்.
``நான்…’’
``செம்பு நான்…’’
``என் கூட.’’
``என் கூட வர்றேன்னு சொன்னதுக்கு… என் கூட வர்றேன்னு சொன்னதுக்கு தாங்க்ஸ் செம்பு’’ - வார்த்தைகளைக் கோத்துக் கோத்துச் சொல்லிக் கொண்டிருந்தான் கணபதி. சாலை யில் போவோர் வருவோர் யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்பதிலேயே தான் செம்புவின் கவனம் இருந்தது.
``நான் உன்ன லவ் பண்றேன் செம்பு. என் கூட வந்துரு, உன்ன ஒரு பொக்கிஷமா பாத்துப்பேன்…. ஐ லவ் யூ’’ -
கணபதி சொல்லி முடிக்கவும், கணபதிக்கு பின்னால் சேகர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
- தொடரும்...