லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

என்... ஜன்னலில்! - சிறுகதை

என்... ஜன்னலில்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
என்... ஜன்னலில்! - சிறுகதை

ஆர்.மணிமாலா

இரவெல்லாம் ஆக்ரோஷமாய் அடிதடியுடன் வெளுத்து வாங்கிய மழையின் சுவடு சுத்தமாய் இல்லை. இடியும் மின்னலும் ரணகளம் ஆக்கிய வானம் மௌனச்சாமியாராய் இருந்தது.

இடை வரை தொட்டுக்கொண்டிருந்த அடர்ந்த கூந்தலை ஒரு கிளிப்பால் அடக்கினாள் கீர்த்தனா.

தன் அப்பாவின் வயிற்றை இறுகக் கட்டி அணைத்தபடி உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது விகேஷை தட்டி எழுப்பினாள்.

“விக்கி... விக்கி செல்லம்... எந்திரி டைமாச்சு.”

அவள் குரலுக்கு அவினாஷ் கண் விழித்தான். உறக்கம் கலையாத கண்களில் வியப்பு எட்டிப் பார்த்தது.

ஆர்.மணிமாலா
ஆர்.மணிமாலா

“என்ன கீர்த்தி... காலையிலேயே ரெடி ஆயிட்டிருக்கே. கோயிலுக்குப் போறியா? இன்னிக்கு மன்டே தானே? என்ன விசேஷம்? நம்ம யாருக்குமே இன்னிக்கு பர்த்டேகூட கிடையாதே. வெட்டிங் டே போன மாசம் தான் போச்சு.”

“இன்னிக்கு அம்மா வர்றாங்க... நேத்தே சொன்னேனே!”

“என்கிட்ட சொல்லலையே... குடும்பத்தோட திருப்பதியில்ல போயிருக்காங்க?!” - உறக்கம் முழுக்க கலைந்து எழுந்தமர்ந்தான்.

“அதுக்குள்ள மறந்தாச்சா? நான் சொன்னது எங்கம்மாவை!”

திராட்சையை ஒளித்து வைத்த அவன் கரு விழிகள் மனைவியை ஆழத் துளைத்தன.

“அப்ப... நான் சொன்னது எதுவும் உன் மண்டைக்குள் ஏறவில்லை அப்படிதானே?”

“நீங்க சொல்லி எதையாவது நான் மறுத்து பேசி இருப்பேனா? இந்த விஷயத்தில் மட்டும் ஏன் நியாயமாய் பேச மாட்டேங்கிறீங்க!”

“ப்ளீஸ்... மத்தவங்கள மாதிரி என்னையும் பேச வச்சிடாதே. உன் அண்ணனே வேணாம்னு ஒதுக்கி வச்ச மனுஷி அவங்க.!”

“அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு ஆடுறான்.”

``அப்படினா… நீ என் பேச்சைக் கேட்க வேண்டியதுதானே!”

“அவங்க என் அம்மா. அவங்கள பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவங்களுக்கு இருப்பது நான் மட்டும்தானே. என்னையும் அவங்களை ஒதுக்கி வைக்கச் சொல்றீங்களா?”

``அவங்க விஷயத்தில் வேற ஆப்ஷனே கிடையாது.”

“இதுவே உங்க அம்மாவா இருந்திருந்தா இப்படித்தான் நடந்துக்குவீங்களா?” வார்த்தை யில் கோபமும் வலியும் மிகுந்திருந்தது.

“ஷிட்... அவங்கள போய் எங்க அம்மாவோட ஒப்பிட்டு பேசுவியா?”

“இந்த வார்த்தை ரொம்ப ரொம்ப தப்பு அவினாஷ். ஒருத்தியைப் பிடிக்காம இருக்க... அவ கெட்டவளாதான் இருக்கணும்கறது இல்லை. நேர்மையானவளாகூட இருக்கலாம் இல்லையா? வார்த்தைகளால் என் அம்மாவை அசிங்கப்படுத்தாதீங்க!”

“ஏய்... நான் அசிங்கப்படுத்துவதை விடு. உன் அண்ணன் அவங்களுக்குக் கோயில் கட்டி கும்பிட போறானா?”

“நமக்குள் தேவையில்லாத வாக்குவாதம் வேண்டாம் அவினாஷ். என் அம்மா ரொம்ப பாவம். இனியாவது அவங்க நிம்மதியா என் கூட இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்!”

“அதுக்கு?”

“அம்மா என்கூட தான் இனி இருப்பாங்க!”

“அப்ப நான் எங்கே இருக்கட்டும்?”

“என்வரையில் வேற முடிவு இல்லை அவினாஷ். எனக்காக கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க.”

“உனக்கு கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையா கீர்த்தி? அவங்கள நம்மளோட வைச்சுக்கறது அபத்தமா தெரியல? எல்லோரும் என்ன பேசுவாங்க?”

“மத்தவங்கள பத்தி நமக்கு என்னங்க? என் அம்மா ஒரு உயிர். ஏற்கெனவே நொந்து போயிருக்காங்க. என்னைப் பெத்தவங்க... அவங்கள சந்தோஷமா வச்சுக்கணும்னு ஒரு மகளாய் நான் நினைப்பது தப்பா?”

“உன் அம்மா ஒரு கிருமி. வர்றதுக்கு முன்னாடியே நமக்குள் எவ்வளவு பொல் யூஷன்? இதோ பார் கீர்த்தி... அவங்க இங்கே வந்தால் நான் வெளியே போயிடுவேன்...” - அழுத்தமாய் சொன்னான்.

சிறைச்சாலையின் சிறிய கேட் திறந்தது. அதிலிருந்து வெளியே வந்த வடிவு... வடிவம் இழந்து, மெலிந்து, தலை நரைத்து... பல வருடங்கள் கழித்து வெளி உலகத்தை... வியப்பை மீறிய மிரட்சியுடன் பார்த்தாள்.

அதுவரை கம்பிகளுக்கு பின்னால் அம்மா வின் அரைகுறை உருவத்தை மட்டுமே பார்த்திருந்த கீர்த்தனா... அம்மாவின் பாதி தேகத்தைப் பார்த்து நெஞ்சடைத்தாள்.

ஆயுள் தண்டனை கைதியான வடிவு நன்னடத்தை காரணமாகப் பதினான்கு வருடம் கழித்து புது உலகத்தைப் பார்த்தாள்.

வேகமாய் அருகில் சென்று அம்மாவை அணைத்துக்கொண்டாள். விகேஷ், அவளைப் பார்த்து பயந்து அம்மாவின் பின்னே ஒளிந்து கொண்டான்.

“உன் பையனா?” பரவசத்துடன் கேட்டாள் வடிவு.

“ம்...”

“வாடா கண்ணா!” இரு கைகளை விரித்து பாசத்துடன் அழைத்தாள்.

“ம்ஹூம்... மாட்டேன்!”

“உன் பாட்டி டா!” மகனை முன்னே இழுத்தாள்.

“நான் வரலை..!”

“விடும்மா... இப்பதானே பார்க்கிறான்... பழக பழக சரியாகிடும்”

கண்களை சுழல விட்டாள் வடிவு.

“வேற யாரும் வரலையா?”

“..........!”

மகளின் மௌனம் பதிலை உணர்த்த... ``உன் வீட்டுக்காரர் எங்கேம்மா?”

“அ... அவர் ஆபீஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார். வர்றதுக்கு ஒரு வாரம் பத்து நாள் ஆகலாம். வாம்மா கிளம்பலாம்...” அம்மாவின் கைப்பற்றி நடந்தாள்.

என்... ஜன்னலில்! - சிறுகதை
என்... ஜன்னலில்! - சிறுகதை

ஏற்கெனவே பளிச்சென்று இருந்தது வீடு. அதை மேலும் ஜொலிக்க வைத்தாள் வடிவு.

“ரெஸ்ட் எடும்மா... உன்னை யாரு இதை யெல்லாம் செய்யச் சொல்றது? இனியாவது நிம்மதியா இரு!”

“வேலை செய்யாம என்னால இருக்கவே முடியாது கீர்த்தி. ஜெயில்லேயும் ஒரு நிமிஷம் உட்கார விட்டதில்லை. வேலை செஞ்சு பழகின உடம்பு இது.”

“இதுவரைக்கும் கிடைக்காத சந்தோஷத்தை, நிம்மதியை... உனக்கு தரணும்னு நினைக்கிறேன். நான் உன்னை பார்த்துக்கிறேன்ம்மா”

“அது எப்படிம்மா சரியா வரும்? மாப்பிள்ளை என்ன நினைச்சுக்குவார்?”

“அவர் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டார்...” சொல்லும்போதே குரல் அமுங்கிப் போனது.

“கார்த்திக் வீடு எங்கே இருக்கு?”

எப்படியும் இந்தக் கேள்வி கேட்பாள் என்று எதிர்பார்த்து இருந்த கீர்த்தனா, “எதுக்கு அங்கே போகறதுக்கா?”

“......!?”

“அம்மா... தண்டனை முடிஞ்சு இப்ப நீ வெளியே வந்திருக்க. ஆனா, உள்ளே இருந்தப்ப இதுவரைக்கும் உன்னை அண்ணா ஒருமுறையாவது வந்து பார்த்தானா? அவன் ரொம்ப கோபமாக இருக்கிறான். உனக்கு ஒரு மகள் மட்டும்தான்னு நினைச்சுக்க. அவ்வளவுதான் சொல்லுவேன்... புரிஞ்சுக்க!”

வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளா மல்... விகேஷை நோக்கிச் சென்றாள். அவனோ அவளைப் பார்த்ததும் ஓடிச் சென்று அம்மா வின் பின்னே மறைந்துகொண்டான்.

“வந்து ஒரு வாரமாகியும் என்கிட்ட ஒட்டவே மாட்டேங்கிறான்!”

“ஒரு வாரம்தானே ஆகியிருக்கு?”

“உன் வீட்டுக்காரர் எப்ப வருவார்?”

“அ... அவருக்கு இன்னும் வேலை முடியலை யாம்!”

ஆனால், அவன் கோபத்தின் உச்சத்தில் இருப்பதும்... மாமியார் விஷயம் கேள்விப்பட்டு போனில் இவளுக்கு மண்டகப்படி தந்ததும் அம்மாவிடம் சொல்ல முடியுமா? ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன் அம்மாவை அந்த வீட்டைவிட்டு அனுப்பி யாகணும். இல்லேன்னா என் பையன்கிட் டேருந்து உனக்கு டைவர்ஸ் நோட்டீஸ்தான் வரும். இதை மிரட்டுவதற்காக சொல்லலே. அவனோட சொந்த வீட்டுல அவன் இருக்க முடியாம ஒரு கொலைகாரி இருக்கணுமா?’ என்றதெல்லாம் சாதாரண மிரட்டலாகத் தெரியவில்லை. ஆனால், அம்மாவைப் பார்க்கும்போது எந்த பிரச்னை வந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றியது.

“ஏய் அறிவில்லை உனக்கு?” - போனில் எடுத்ததுமே பாய்ந்தான் கார்த்திக்.

“நல்லா படிச்சு கை நிறைய சம்பாதிக்கிறேன்... அறிவு இல்லாமலா?” - கேஷுவலாய் சிரித்தபடி சொன்னாள் கீர்த்தனா.

“அந்தப் படிப்பையும் நான்தான் தந்தேன் ஞாபகம் இருக்கா? உன் வீட்ல வந்து உக்காந் துட்டு இருக்காளே அந்த கேடு கெட்டவ இல்லை.”

“அண்ணா... அவங்க நம்ம அம்மா. சொல்லப்போனா நீ செய்ய வேண்டியதை நான் செய்துகொண்டிருக்கிறேன்.”

“அம்மாவா? எவனோ ஒருத்தனுக்காக... என் அப்பாவை விஷம் வைச்சு கொன்னவ! நாட்டுக்காக பாடுபட்டு ஜெயிலுக்கு போயிட்டு வந்தாளா?”

“அம்மா காரணம் இல்லாமல் அந்தக் காரியத்தை செய்வாங்களா... அப்பா பக்கம் ஏதோ தப்பு இருக்கு. அதை அம்மா வெளியில் சொல்லாமல் மறைக்கிறாங்க.”

“என்ன மறைக்கிறாங்க? அதான் அப்பாவை கொன்னுட்டாளே!”

“...........?”

“இதோ பார்.... அந்த சனியனை முதலில் வெளியே அனுப்பு. அவினாஷ் ரொம்ப கோபத்தில் இருக்கிறார். இந்தப் பொம்பளைக் காக உன் வாழ்க்கையை இழந்துவிடாதே!”

“அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்கு தெரியும்”

“உன் மேல் உள்ள அக்கறையில் சொல்லி யாச்சு. பிறகு உன் சாமர்த்தியம். இன் னொன்னையும் சொல்லிக்கிறேன். அந்தப் பொம்பள என் வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது. தப்பி தவறி இங்கே வந்தாள்னா... நான் கொலைகாரனாகி விடுவேன்... சொல்லி வை!”

“வ... டி...வு....!” வியப்பு மேலிட ஒரு குரல் அவளைப் பின்தொடர... திடுக்கிட்டு திரும்பினாள் வடிவு.

கணபதி... அகன்ற விழிகளால் அவளை நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் பார்த்தபடி... அவர்.

“அண்ணா...” அவளுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. காய்கள் அடங்கிய கூடையை கீழே வைத்தாள்.

“எப்பம்மா வந்த?”

“பத்து நாள்கள் ஆச்சுண்ணா... நீங்க எங்கே இந்த ஏரியா பக்கம்?”

“ஒரு வேலையா வந்தேன்மா. நீ... இங்கே?”

“கீர்த்தனா வீடு இங்கேதாண்ணா... மார்க் கெட் வந்தேன். இப்ப அவகூடதான்!”

“கார்த்திக்கை பார்த்தியா?”

“இ... இல்லை!” என்றாள் கண்கள் தாழ...

“அதான் கேட்டேன்... அவன் ரொம்ப கோபமாக இருந்தான். ஆனா, ஒரு தகப்பன் போல கீர்த்தனாவை படிக்க வைத்து... கல்யாணமும் செய்து வைத்தான். அவன் பொண்டாட்டியும் நல்லவதான். உண்மை தெரிந்தால் கார்த்திக் உன்னை ஏற்றுக் கொள்வான்.”

“வேணாம்ணா... அந்த அசிங்கம் என் பிள்ளைகளுக்கு தெரியவே வேண்டாம்.”

“ஆனா, உன்னை இல்ல தப்பா நினைச்சுட்டு இருக்காங்க!”

“தகப்பன் இல்லாதவனின் வலியைவிட தகப்பன் சரியில்லாதவனின் வலி ரொம்ப அதிகம். விடுங்கண்ணா” என்றாள்.

“இந்தப் பதினான்கு வருஷத்துல ரொம்பவே உருக்குலைஞ்சு போயிட்டேம்மா!”

“தொழிலெல்லாம் நல்லா போயிட்டு இருக் காண்ணா?”

“அதை எல்லாம் அப்பவே இழுத்து மூடி யாச்சு. வீட்டையும் வித்துட்டேன். இப்ப நான் ரெட்ஹில்ஸ் பக்கம் போயிட்டேன்.”

“அடடா... ஏண்ணா?”

“ப்ச்... விடும்மா!” அந்த வார்த்தையில் வேதனையும் ஆயாசமும்... வடிவுக்கு புரிந்தது. உடம்பு கூசிப்போனது.

கணவர் சந்தானத்துக்கு நெருங்கிய நண்பர் தான் கணபதி. இவளோடு சம்பந்தப்படுத்தி... சேற்றை பூசிக்கொண்டிருக்கும் அதே கணபதி.

அவர்களைக் கடந்து டூவீலரில் சென்று கொண்டிருந்த கீர்த்தனா... அம்மாவுடன் நின்றிருந்த கணபதியைப் பார்த்ததும் உடல் முழுக்க பற்றி எரிந்தது.

“ஊரே உன்னை பத்தி தப்பா சொன் னாலும் நான் உன்னை நம்பினேம்மா... ஆனா... ஆனா... இப்ப கண் எதிரிலேயே பார்த்துட்டேன். ச்சே... கூசுதும்மா!”

நெஞ்சில் எட்டி உதைத்தது போல் துடித்துப் போனாள் வடிவு.

“ஐயோ கீர்த்தனா... நீயா இப்படி பேசறே?” நடுக்கத்துடன் கேட்டாள்.

“அதான் பார்த்தேனேம்மா. யாருக்காக நீ அப்பாவை கொன்னேன்னு ஊரெல்லாம் சொல்லுதோ... அந்த ஆளோட சிரிச்சு பேசிக் கிட்டு இருந்ததை என் கண்ணால பார்த் தேனே... நீ கூப்பிடாம அந்தாள் வந்தானா? அதுவும் இந்த ஏரியாவுக்கு?”

“அம்மாடி நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கே. உன் வாயால அப்படி சொல்லாதே. தாங்க முடியலடி.”

“எனக்கும்தான் தாங்க முடியல. உனக்காக என் புருஷன் கிட்ட கூட சண்டை போட்டேன். ஆனா... நீ என் மூஞ்சில கரியைப் பூசிட்டே... உன்னை பார்க்கவே பிடிக்கலம்மா. அம்மான்னு கூப்பிடக்கூட பிடிக்கலே. ச்சை...” முகத்தில் வெறுப்பை பூசி சட்டென அந்த இடத்தை விட்டுப் போனாள்.

வடிவு வெலவெலத்துப் போயிருந்தாள்.

இன்று இருக்கும் நிலைதான் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? இதோ மாறிவிட்டதே!

வடிவின் இதயம் கனத்துக் கிடந்தது. யாரா வது தலைகோதி... முகம் வருடி... மடியில் படுக்க வைத்துக்கொள்ள மாட்டார்களா என்று மனம் ஏங்கியது. ஆனால், அந்த மடி அவளுக்கு சாத்தியமில்லை. தன் கையை தலைக்கு வைத்து தரையில் சாய்ந்து கொண்டாள். காதோரம் குளம் கட்டின கண்ணீர்த் துளிகள். உள்ளமெங்கும் ரணம்... வலி. வலியைத் தீர்மானிப்பதுகூட அடி அல்ல... அடித்தது யார் என்பதுதான்...

எவ்வளவு எளிதாய் என்மீது குப்பையைக் கொட்டிவிட்டாய் கீர்த்தனா! உண்மையை உடைத்துச் சொல்ல அசிங்கப்பட்டுத்தான் இத்தனை வருஷம் தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறேன். ஆனால்... கேவல மான காரியங்கள் செய்துவிட்டு செத்தாலும்... உன் வீட்டு போட்டோவில் அவன் சாமி!

பதினான்கு வருடங்களுக்கு முன்பு... நடந்ததை இப்போது நினைத்தாலும் உடம்பு கூசியது.

வடிவின் கணவர் சந்தானம் எலெக்ட்ரீ ஷியன். அவன் சம்பாதிப்பதில் கொடுப்பதை வைத்து நன்றாகவே குடும்பம் நடத்தி வந்தாள். சந்தானம் கொஞ்சம் ஜாலி டைப். வயது வித்தியாசம் பார்க்காமல் பெண்களை கண்களால் அளப்பான். கண்களால் மட்டும் அல்ல. வடிவு சொல்லிப் பார்த்தாள். சண்டை யும் போட்டுப் பார்த்தாள். புத்தி மாறவில்லை. எதையும் பிள்ளைகளுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டாள்.

சந்தானத்தின் நெருங்கிய நண்பர் கணபதி. அந்த வீட்டில் அடிக்கடி வந்து செல்பவர். மனைவியை இழந்தவர். ஒரு மகன் மட்டுமே. நல்ல உணவுக்கு வாய் ஏங்கும் போதெல்லாம் நண்பனின் வீட்டுக்கு வந்துவிடுவார். அதை சிலர் கிண்டல் செய்வதும் உண்டு... `உன் வயசுக்கேத்த மாதிரி இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா வாய்க்கு ருசியா சாப்பிடலாமே!’ என்று.

அவரும் சந்தானத்திடம் அவனின் பெண் சகவாசம் பற்றி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று... ம்ஹூம்.

ஒரு நாள்... சமையலறையை ஒட்டிய ஜன்னலின் வெளியே... ஹஸ்கி வாய்ஸில் பேச்சு சத்தம் கேட்டது.

என்... ஜன்னலில்! - சிறுகதை
என்... ஜன்னலில்! - சிறுகதை

சந்தானமும் கணபதியும்தான்.

“டேய்... என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே? அந்த வாட்ச்மேன் பொண்ண... அதுவும் எட்டு வயசு குழந்தைய... நாசம் பண்ணிட்டு வந்திருக்கே. என் கண்ணால அதைப் பார்த்ததும்... துடிச்சுப் போய்ட்டேன் டா... உனக்கு அசிங்கமாயில்லை? எப்படி மனசு வருது? ஒரு குழந்தையிடம் போய்...ச்சே... அதுவும் அந்தக் குழந்தை மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை. யாரைப் பார்த்தாலும் கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும் தெய்வக் குழந்தை. அதைப் போய் எப்படிடா..?” தலையில் அடித்துக்கொண்டார் கணபதி.

“கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன் போல... விட்றா.”

“எவ்வளவு சாதாரணமா சொல்றே? தப்பு செஞ்சுட்டோமேங்கற குற்ற உணர்ச்சிகூட உன்கிட்ட இல்லையே. யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சு பாரு!” என்றார் கோபமாய்.

“அந்தக் குழந்தைதான் ஒரு மாதிரியாச்சே... பேசவே வராது. நீ கண்டிப்பா என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டே... சரி விடு அதையே பேசிட்டு இருக்காதே..!”

அதற்கு மேல் அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண் டிருக்க வடிவுக்கு தைரியம் இல்லை. அமைதியாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும்... வடிவு தவித்துக்கொண்டிருந் தாள்.

இருபது வயதான கார்த்திக், அப்பாவின் மீது உயிரையே வைத்திருப்பவன். பதிமூன்று வயதான கீர்த்தனாவும் அப்பாவை நேசிப்பவள்தான். ஆனால், அவரைவிட அம்மா மீது பாசம் அதிகம். அப்பாவைப் பற்றி இவர்கள் அறிந்தால் தாங்குவார்களா? மனதளவில் வேறு மாதிரி பாதிப்பை அல்லவா அடைவார்கள்? கணவரிடம், அவரின் அசிங்கமான நடவடிக்கை அறிந்த பிறகு, பேசக்கூட பிடிக்கவில்லை. அதே சமயம் அவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினாள். கீர்த்தனாவை தேடி வீட்டுக்கு வரும் அவளின் பள்ளித் தோழிகளை இயல்பாய் தொடுவது போல் கணவரின் கைகள் தேவையின்றி அங்கிங்கே தொட்டன. வெகுண்டுபோனாள் வடிவு.

மகளைப் போன்ற குழந்தைகளையே...நாளை வித்தியாசம் பார்க்காமல் மகளையே கூட... இதற்கு மேல் வடிவுக்கு பொறுமை கைவிட்டுப் போனது. சந்தானம் இறந்து போனார் மறுநாளே. தான்தான் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்ததாக வலிய சரணடைந்தாள். காரணம், தங்களுக்குள் தகராறு என்றாள். ஆனால், அக்கம்பக்கத்தினர்... அந்தக் காரணத்தை நம்பவில்லை. அவர்கள் மனதில் இருந்த சந்தேகத்தை அதற்குக் காரண மாகப் பரப்பிவிட்டனர். கணபதியுடனான கள்ளத் தொடர்பு. அதைத்தான் கார்த்திக்கும் நம்பினான்.

மறுநாளே... வடிவு காணவில்லை. கீர்த் தனாவும் அதற்காக கவலைப்படவும் இல்லை.

அவினாஷிடம் மன்னிப்பு கேட்க மொபைலை கையில் எடுத்தாள் கீர்த்தனா.

வாசலில் உண்டான சத்தம் கேட்டுத் திரும்பினாள் கீர்த்தனா. அவினாஷ் வந்து கொண்டிருந்தான்.

ஓடிச்சென்று அவனிடம் சொன்னாள். “என்னை மன்னிச்சிடுங்க.. என் அம்மா விஷயத்தில் உங்கள் பேச்சைக் கேட்காதது பெரிய தப்புங்க!” என்றவளை, கண்கள் சுருக்கிப் பார்த்தான்.

“என்ன அப்படி பாக்கறீங்க? நேத்து எனக் கும் அவங்களுக்கும் சண்டை. எங்கேயோ போயிட்டாங்க. அப்படியே போகட்டும்.”

“ஆமாம் இனி அவங்க வர மாட்டாங்க”

புரியாமல் அவினாஷைப் பார்த்தாள்.

“என் கூட கொஞ்சம் மார்ச்சுவரி வரைக்கும் வா..!”

“எ... எதுக்கு?” என்று கேட்டவளுக்கு பயம் வயிறு வரைக்கும் சுருக்கிட்டு இழுத்தது.

“உன்னோட அம்மா... இன்னிக்கு காலையில் ரயிலில் அடிபட்டு...”

“ஐய்யோ... இல்லே... அது என் அம்மாவாக இருக்க முடியாது” - துடிதுடித்துப் போனாள்.

“இல்லை கீர்த்தனா. அங்கு கிடைத்த ஆதாரங்கள் அது உன் அம்மாதான்னு...உறுதி யாயிடுச்சு. என்ன அப்படி பார்க்கிறே? அவங்க தப்பானவங்க இல்லைன்னு நினைக் கிறேன். அவங்க இங்க இருந்து போகுறப்ப நம்ம ஃபேமிலி போட்டோவையும் எடுத்துக் கிட்டு தான் போயிருக்காங்க. கூடவே ஒரு சின்ன கடிதம். `நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பானவள் இல்லை. இதை நான் இப்படித் தான் நிரூபிக்க முடியும். ஏன்னா... சில உண்மைகள் உறங்கிதான் ஆகணும்'ன்னு எழுதியிருக்காங்க.”

“அ... ம்... மா...” பெரும் குரலெடுத்து கதறினாள் கீர்த்தனா.