
- எம்.ஜி.கன்னியப்பன்
``மே ஐ கம் இன் சார்..?”
‘‘வாங்க...”
கதவு திறந்தவன் நாற்பதுக்குள் இருந்தான். கண், காது, மூக்கு வர்ணித்தல் நேரம், எழுத்துகள் விரயம். ‘காதல் கொண்டேன்’ தனுஷ் என்றால் புரியும்தானே..!
“குட்மார்னிங்.”
‘‘குட் ஆஃப்டர்நூன். மணி டுவெல் ஒன்.” இருக்கையில் அமர்ந்தான்.
கையில் மணி பார்த்தேன். கரெக்ட். டுவெல் ஒன்.
‘‘வைத்தியலிங்கம் மனநல ஆலோசனை மையம்தானே சரியா இருக்கும். மருத்துவமனை ஒட்டலை. வைத்தியலிங்கம் அப்பாவா?”
‘‘இல்லை.”
‘‘அண்ணன்..?”
‘‘இல்லை, மாமனார். சரி, சொல்லுங்க. என்ன ஆலோசனை வேணும்..?”
‘‘சின்ன விஷயத்துக்கும் சட்டுனு கோபம் வருது. அதீத கற்பனை சுரக்குது.”
‘‘பிடிச்ச நடிகையோடு குடும்பம் நடத்துற மாதிரியா..?”
‘‘ம்ஹும்.”
‘‘திடீர்னு தங்கப் புதையல்.”
‘‘முந்தாதீங்க, நானே சொல்றேன்.”
‘‘அதுக்கு முன்னாடி உங்க நேம்..?
‘‘அரவிந்தன். அம்மாவுக்கு அருவி, பிரெண்ட்ஸுக்கு அரவிந்து.”
‘‘ஓகே அரவிந்த். சின்ன விஷயம்னா எந்த மாதிரி..?”
‘‘ ‘இங்கு புகைபிடிக்கக் கூடாது’ன்னு எழுதிவெச்சிட்டு கடையில சிகரெட் விக்கிறான். கேட்கிறேன். வார்த்தை முடிவுல கைகலப்பு.”
‘‘உங்க கோபத்துல தப்பில்லை. அவன் எழுதினதை அழிக்கணும், இல்ல சிகரெட் விக்கிறதை நிறுத்தணும்.”
“அதோட பிரச்சினை முடியமாட்டேங்குது. அவன் கடைக்கு எதிரே உடனே இன்னொரு பெட்டிக்கடை ஆரம்பிச்சு அவன் வியாபாரத்தை முடக்கி, ‘என்னை பகைச்சுகிட்டா உன் நிலைமை இதான்’னு காலரைத் தூக்கிவிட்டுக்கணும்னு தோணுது.”
நிமிர்ந்து உட்கார்ந்தேன். அரவிந்த் கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மாட்டிக்கொண்டான். அந்த இடைவெளியில் டிராயரில் ஹால்ஸ் தேடினேன், இல்லை. மூடினேன். தொடர்ந்தான்.
‘‘ஒரு நாள் பெரிய ஜுவல்லரிக்கு சிஸ்டரோடு போனேன். அறுபதாயிரம் பர்ச்சேஸுக்கு கிஃப்டா ஏப்ரல் மாசம் நியூ இயர் காலண்டர் கொடுத்தான். நாலு மாசம் வரை வீட்டுல காலண்டர் மாட்டாம இருப்பமா சார்? முட்டாள். வேற கிஃப்ட் கேட்டேன். வாக்குவாதம். செக்யூரிட்டி வெளிய தள்ளிட்டான். பெட்டிக்கடை ஓகே, முடிகிற விஷயம். ஆனா, அங்கயும் எதிர்ல ஒரு ஜுவல்லரி ஆரம்பிச்சு அவன் வியாபாரத்தை காலி பண்ணணும்னு தோணுது. அதே மாதிரி ஜுவல்லரி இன்னைக்கு மதிப்புல இருநூறு கோடி இருக்கும்.”
தாவங்கட்டையைக் கையில் தாங்கிக்கொண்டு அவனையே பார்த்தேன். அவனும் கவனித்தபடி என் பதிலுக்குக் காத்திருந்தான்.
‘‘நினைக்கிறதோட சரியா? இல்லை, அதுக்கான ஸ்டெப் எடுக்கறீங்களா..?”
‘‘புரியலை.”
‘‘டீக்கடைக்கு இடம் தேடுறது, ஜுவல்லரி கட்ட கட்டுமான நிறுவனத்தை அணுகறது இந்த மாதிரி அடுத்த கட்ட நடவடிக்கைல ஈடுபடுறீங்களா?”
“என்ன சார் நீங்களும் புரியாமக் கேட்குறிங்க, மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம் வாங்ககுறவனுக்கு ரெண்டு லட்சமே சிரமம், இருநூறு கோடி முடியுமா? அந்த வேலையும் இப்போ ஒன் இயரா இல்லை.”
‘‘ஏன்?”
‘‘மேனேஜர் சம்பளக் கவர் கொடுத்தான். பிரிச்சு எண்ணிப் பார்த்தேன். முப்பது நோட்டுகள்ல இருபத்தொன்பது சலவைத் தாள்கள். ஒண்ணு மட்டும் கசங்கி இருந்துச்சு. அதையும் புதுசா கேட்டேன். ‘செலவு பண்ணப் போறியா, வீட்டுல பிரேம் பண்ணி மாட்டப்போறியா..?’ன்னு கேட்டான். சட்டையைப் பிடிச்சுட்டேன்.”
“செல்லுபடி ஆகாத அளவுக்கு மோசமான தாளா அது?”
‘‘அவ்ளோ மோசம் இல்லை. ஆனா, வேற கொடுத்திருக்கலாம். இல்லன்னா, முடியாதுன்னு சொல்லியிருக்கலாம். பிரேம் பண்ணி மாட்டுறதும், மடிச்சுக் கப்பல் செஞ்சு விடறதும் என் இஷ்டம். அதைத் தீர்மானிக்க அவன் யாரு?”
ஸ்ட்ராங்காக டீ சாப்பிடத் தோன்றியது. பணிப்பெண்ணை அழைத்தால் வாங்கித் தருவாள். இரண்டு சொல்லலாமா, வேண்டாமா? இவனுக்கு காபியா, டீயா? கேட்கலாமா, வேண்டாமா..? குழப்பம்.
‘‘என்ன புரோ யோசிக்கிறீங்க..?”
‘‘ஸாரி. லாஸ்ட்டா என்ன சொன்னீங்க..?”
‘‘தீர்மானிக்க அவன் யாரு?”
‘‘அதானே, தீர்மானிக்க அவன் யாரு? மேல சொல்லுங்க...”
‘‘இன்னொரு நாள் மட்டன் ஸ்டாலுக்கு...”
‘‘மன்னிக்கணும். எதிர்ல கடை ஆரம்பிக்கிற டாப்பிக்னா வேணாம். இப்போ சொன்னதை வெச்சிப் புரிஞ்சுக்க முடியுது. வேற மாதிரியான அனுபவங்கள்..?”
“ம்... இருக்கு. நாலாவது தெருலேர்ந்து ஒருத்தன் தினம் நாயைக் கூட்டிட்டு என் தெருவுக்கு வர்றான். அது வேண்டுதல் மாதிரி என் வீட்டு வாசல்லேயே கால்களை அகட்டிக்கொண்டு அசிங்கம் பண்ணுது. ஒரு நாள் பட்டாசைக் கொளுத்தி நாய் பக்கத்துல போட்டேன். பயந்து பாதியில ஸ்டாப் பண்ணிருச்சு. அவன் கராத்தேல நாலஞ்சு ஸ்டெப் போட்டுக்காட்டி ‘ஒத்தைக்கு ஒத்தை வர்றியா’ன்னு கேட்டு மூக்குல குத்திட்டான்.”

மூக்கில் தடயங்கள் தேடினேன், இல்லை. சம்பவம் காலம் கடந்ததாக இருக்கலாம்.
‘‘அன்னைக்கே கராத்தே கிளாஸ்ல சேர்ந்தேன். ரெண்டு நாள்கூட நீடிக்க முடியலை. இருபது நபருக்கும் மேல ஒரே நேரத்துல `ஆ… ஊ...’ன்னு கத்துற சத்தம் பெரிய டிஸ்டர்ப். வந்துட்டேன். பணம் வேஸ்ட்.”
`எவ்வளவு பீஸ்..?’ கேட்க ஆர்வம். என் வைத்தியத்தில் அந்தக் கேள்வி அந்தியம்.
‘‘நீங்க சந்திக்கிற எல்லாரும் உங்களுக்கு எதிரா இருக்கிற மாதிரி எண்ணம் வருதா அரவிந்த்..?”
‘‘எனக்கு சரியா சொல்லத் தெரியலை.”
“எப்போவாச்சும் தற்கொலை பண்ணிக்கணும்னு தோணியிருக்கா..?”
‘‘சூசைட். பெரிய கோழைத்தனம். எதையும் சந்திக்க முடியாதவன் தேர்ந்தெடுக்கிற பிற்போக்கான வழி.”
இதில் மிகத் தெளிவு. இன்னும் பேசவிட்டு அறிகுறியைக் கணிக்க வேண்டும்...
‘‘தொட்டதுக்கு எல்லாம் கோபம் வருமா..?”
‘‘எங்காச்சும் அவமானப்படுறப்போ...அடிபடுறப்போ... ஏமாந்து போறப்போ... அதை ஜெயிக்கிற, இல்ல ஆணையிடுற அதிகாரத்துல நான் இல்லாமப் போயிட்டேன்கிற கோபம் வரும்.”
‘‘உதாரணத்துக்கு..?”
‘‘ரேஷன்ல பருப்பு எடை குறைவா அளக்கிறான். உஷ்ணம் தலைக்கேறுது. உடனே சம்பந்தப்பட மினிஸ்டர்ட்ட பேசி, அந்த நிமிஷமே அவனை வேலையவிட்டுத் தூக்கிடுற முக்கிய அரசியல் புள்ளியா நான் இல்லையேங்கிற ஆதங்கம்.”
பிளாஸ்க்கிலிருந்து வெதுவெதுப்பான தண்ணீரைத் தொண்டைக்குள் சரித்துக்கொண்டேன்.
‘‘டிராபிக் சிக்னல் மீறிப் போறப்போ... ஃபைன் கேட்கிற போலீஸ்கிட்ட அப்பா பெயர் சொன்னதும் மரியாதையோடு அனுப்பிவைக்கிற ஒரு போலீஸ் உயரதிகாரிக்கு மகனா பொறக்கலையேங்கிற வருத்தம்.”
‘‘ஓஹோ...”
‘‘யாராச்சும் ரவுடி வம்புக்கிழுக்கிறப்போ அவனே நடுங்குற பெரிய ரவுடி என் அண்ணனாக இருந்தால் எப்படி இருந்திருக்கும்னு தோணும். வாசல்ல சாக்கடை தோண்டிப்போட்டு அஞ்சு மாசம் மூடலை.”
‘‘காண்ட்ராக்ட் எடுத்த ஆளைத் தேடிப்போயி ராவோடு ராவா அவன் வீட்டு வாசல்ல அதே நீள அகலத்துக்குப் பள்ளம் தோண்டணும்னு வெறி வருது..?”
‘‘அவ்ளோ பலசாலி இல்லை. அவன் காண்ட்ராக்டை கேன்சல் பண்ணுற ஒரு பவர்ஃபுல் ஆபீஸருக்கு என் சிஸ்டரை மேரேஜ் பண்ணிக்கொடுக்காம விட்டுட்ட வருத்தம் குடையும்” என்றவன், சில விநாடிகள் அமைதிக்கு எடுத்துக்கொண்டான்.
“அவ்வளவு ஏன் நண்பா... சமீபத்துல குற்றாலம் அருவில ஒரு சிறுமி அடிச்சிட்டுப் போறா. ஒரு இளைஞன் குதிச்சுக் காப்பாத்துறான். அவனுக்கு அரசு வீரதீரச் செயல் விருது அறிவிக்குது. அந்த இளைஞன் நானா இருக்கக்கூடாதான்னு யோசிக்கிறேன். அந்தச் சம்பவம் நடக்கிறப்போ ஏன் நாம குற்றாலத்துல இல்லாமப் போனோம்னு என் மேல எனக்கே ஆத்திரம் வருது.”
இரண்டு ஆட்காட்டி விரல்களையும் இரண்டு நெற்றிப்பொட்டில் வைத்து யோசித்தேன். நியூராசிஸ், சைக்கோசிஸ், பெர்வேஷன் இதில் இவன் என்ன ரகம்..? எனது மருத்துவப் புத்தி சுழல ஆரம்பித்தது. இயல்புக்கு மீறிய கற்பனைகள் தவிர, உயிர் சிதைக்கும் வக்கிரம் இல்லை. பெண்கள் பற்றி மூச்சுக் காட்டவில்லை. ஆக, சிகப்பு ரோஜாக்கள் கமலாகச் சித்திரிக்க முடியாது.’
‘‘உங்ககூட யாராச்சும் வந்திருக்காங்களா?”
‘‘ஏன், வந்தவங்ககிட்ட திரும்பி நின்னு ‘அரவிந்துக்கு வந்திருக்கிற வியாதிக்கு. இன்னும் ஆறுமாசம்தான் உயிரோட’ன்னு ஷெனாய் இசைக்கு நடுவுல சோகமா சினிமா டயலாக் சொல்லப்போறீங்களா..?”
“இல்ல அரவிந்த். நூத்துக்கு எழுபது சதவிகிதம் பேருக்கு இயல்பாவே இந்த எண்ணங்கள் தோணும். இது பெரிய பாதிப்புன்னு சொல்லமுடியாது. எல்லாத்துலயும் நிபுணத்துவம் பெற்றிருக்கணும்னு நினைக்கிறது... கம்ப்யூட்டர் ரிப்பேர்னா சாப்ட்வேர் இன்ஜினியராகிடணும்... வீட்டு சாவி தொலையறப்போ பூட்டு சரிபண்ணத் தெரிஞ்சிருக்கணும்... நல்ல பாட்டு கேட்கிறப்போ அதை தான் பாடியிருக்கக் கூடாதாங்கிற கோபம். ஆனா, பாத்ரூம்லகூட பாடின அனுபவம் இருந்திருக்காது.”
‘‘எந்தப் பிரச்சினையும் இல்லன்னு எனக்கே தெரியும் பிரதர்... ஆனா, இதுவரை எனக்கு நடந்த அவமானத்துக்கு சவாலா எடுத்துக்கிட்ட ஒண்ணையும் நடத்திக் காட்டலையேங்கிற ஆதங்கம் இருக்கு... ஓரளவுக்கு தன் சக்திக்குத் தகுந்த மாதிரியாச்சும் நிறைவேத்திக்கணுமா இல்லையா..? இத்தனை பேர்ல ஒருத்தனையாவது பழி வாங்கிட்டோம்கிற நிம்மதி கிடைக்க முயற்சி செய்யறது தப்பில்லைதானே..!”
‘‘ கண்டிப்பா... அழுகை, கோபம், சிரிப்பு எதையும் அடக்கி வைக்கக்கூடாது. வெளிப்படுத்திடணும். நீங்க சொன்ன மொத்த இன்ஸிடென்ஸையும் வெச்சுப் பார்க்கிறப்போ `சோஷியோபாத்’தோட சிம்டம்ஸ் இருக்கிறதா மருத்துவம் சொல்லுது. அதாவது ஆளுமைக் குறைபாட்டுக்கான குறியீடு.”
‘‘என்ன குறியீடாவோ இருந்துட்டுப் போகட்டும். உங்களைத் தேடிவந்தது வேற ஒரு காரணம், அது உங்களாலதான் முடியும்.”
‘‘வேற காரணம்னா அதை வந்ததுமே சொல்லிருக்கலாமே… இவ்ளோ பேசவேண்டியிருக்காது.”
‘‘கடன் கேட்க வந்தவன் கஷ்டத்தையும் சொல்லணுமா இல்லையா?!”
‘‘சரி... என்ன, சொல்லுங்க...”
“செய்வீங்கதானே..? சத்தியம் பண்ணுங்க தோழர்...” வலது கையை நீட்டினான்.
‘‘காரணத்தை இன்னும் சொல்லல...”
‘‘சொல்றேன், முதலில் சத்தியம்.”
கையைத் தொட்டு ‘‘சத்தியம்” என்றேன்.
‘‘சத்தியத்தை மீறினா உன்னை என்ன பண்ணட்டும்..?”
சட்டென ஒருமைக்குத் தாவினான். சுள்ளென்றது... மனநல மருத்துவத்தில் கோபம் உதவாது. வருவோர் கண்ணாடிப் பாத்திரம் - ஹேண்டில் வித் கேர்.
‘‘மீற வாய்ப்பில்லை. முடிவதைச் செய்வேன். தாராளமா சொல்லுங்க அரவிந்த்...”
பின்னால் திரும்பி ஒரு பக்கக் கதவை இழுத்துத் திறந்தான்.
‘‘பூமாலைக் கடை தெரியுதா..?”
சாலையின் எதிரில் இருந்த பூமாலைக் கடை பாதி தெரிந்தது. பாட்டி நடத்தி வந்த கடை, பாட்டிக்குப் பின் பேரன் நடத்துகிறான். பல வண்ணங்களில் குவிக்கப்பட்டிருந்த பூக்குவியலில் ஒவ்வொரு பூவாய் எடுத்து சீராக வைத்து நாரில் இறுக்கிக்கொண்டிருந்தான். வேகம் இன்னும் பழகவில்லை.

‘‘ம்... தெரியுது.”
‘‘நேத்து அந்தக் கடையிலதான் அம்மா படத்துக்கு மாலை வாங்கினேன். நூறு ரூபா கொடுத்து வாங்கின மாலை. வெறுமனே கழட்டிக் கையில் கொடுத்தான். கவர்ல போட்டுக்கொடுக்கச் சொன்னேன். ‘நூறு ரூபா மாலைக்கு கவர் கொடுத்துட்டு ஐயாயிரம் ஃபைன் கட்டச் சொல்றியா..? கட்டைப் பை கொண்டுவா போ’ன்னு விரட்டினான். மாலை கட்டைப் பையில கொண்டுபோற பொருளா புரோ..?”
‘‘அப்புறம்..?”
‘‘வாக்குவாதம், ரெண்டு பேரும் மண்ணுல உருளவேண்டியதாய்டுச்சு... சிலர் ஓடிவந்து பிரிச்சுவிட்டாங்க. அப்பதான் முடிவெடுத்தேன். அதே மாதிரி ஒரு மாலைக் கடை ஆரம்பிச்சு அவன் தொழிலை முடக்கணும்.”
‘‘அதுக்கு..?”
‘‘எதிர்ல உங்க கிளினிக்தான் இருக்கு. நீங்க இதை காலி பண்ணிக்கொடுத்தா மாலைக் கடை ஆரம்பிச்சு அவனை உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்.”
“ஹா... ஹா...” சீரியஸ் புரியாமல் சிரித்திருக்கக் கூடாது என்றாலும், முடியவில்லை. புரியவைக்க வேண்டும். எங்கெங்கோ சுற்றி தற்போது தன்னிடம் வந்து நிற்கிறான்.
‘‘அப்படில்லாம் காலி பண்ண முடியாது அரவிந்த், இது என்னோட சொந்த பில்டிங். பேஷன்ட்டாய் வந்துட்டு கிளினிக்கை காலி பண்ணித்தரச் சொல்றிங்க..?”
“பண்ணித்தான் ஆகணும், சத்தியம் செஞ்சிருக்க..?”
‘‘கையைக் கொண்டா...” நீட்டினான்.
அவன் உள்ளங்கையில் என் கை வைத்துத் தேய்த்தேன்.
‘‘சத்தியத்தை அழிச்சிட்டேன், கிளம்பு.”
‘‘இப்டி அழிச்சிட்டா அழிஞ்சிருமா..? எதையும் பொறுத்துக்குவேன், சத்தியத்தை மீறினா தாங்கமாட்டேன். ரெண்டு நாள் எடுத்துக்கோ... மூணாவது நாள் இந்த இடத்தை என் வசம் ஒப்படைக்கணும்.”
உத்தரவுபோல் என் முன் விரல் நீட்டிப் பேசியதில் பொறுமைப் பாத்திரம் கொள்ளளவு மீறி, கோபம் வழிந்தது. தொழில் நீதி மறந்து, சராசரி மனிதனாக இருக்கை விட்டு எழுந்தேன். அவன் தோள் பட்டையில் கை வைத்து இழுத்து வெளியே தள்ள முயன்றேன். கதவை இறுகப் பற்றிக்கொண்டான்.
‘‘பண்ணிக்கொடுத்த சத்தியம் பொய்யா..?”
‘‘சத்தியமாவது சாம்பிராணியாவது, போடா...”
ஆவேசமாக பிடியிலிருந்து நழுவி என்னைத் தள்ளிவிட்டு, ஜன்னல் திரைச்சீலையை உருவி வந்து என் கழுத்தில் சுற்றி இறுக்குகிறான். குரல்வளை நெறிபடுகிறது. மூச்சுக்காற்றுக்கு அல்லாடுகிறேன். கண்கள், இமை தாண்டிப் பிதுங்குகின்றன. சொர்க்கமோ, நரகமோ ஏதோவொன்று மிகக் கிட்டத்தில் தெரிகிறது. இறந்துபோன என் முன்னோர்கள் இரண்டு கைகளையும் நீட்டிக் கூப்பிடுகிறார்கள். திரைச்சீலைப் பிடி இன்னும் இறுகுகிறது. ‘‘ஆ...ஆ...” பெரிய அலறலுக்குப் பின் என் முன்னாடி தண்ணீர் பாட்டில் நீட்டப்படுகிறது. வாங்கிக் குடிக்கிறேன். என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
‘‘படிச்சவர், அதுவும் மனநல மருத்துவர், இப்படிப் பொறுப்பில்லாம நடந்துக்கலாமா..?” என்ற காவல்துறை அதிகாரியை என் மருத்துவமனை இருக்கையில் அமர்ந்தபடி வைத்தி என்கிற வைத்தியநாதனாகிய நான் நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு காவலர் கையடக்க வீடியோ கேமராவில் என்னை மொத்தமும் பதிவு செய்துகொண்டிருந்தார். இன்னொருத்தர் பென்சில் வைத்து கவனமாகக் குறிப்பெடுத்தார்.
‘‘அப்புறம் என்ன நடந்துச்சு..?” இன்ஸ்பெக்டர்.
‘‘கொல்ல முயலுறவனவிட சாகப்போறவனோட பலம் கூடுதலாகும்ங்கிற மாதிரி மொத்த பலத்தையும் கூட்டி எட்டி வயித்துல உதைச்சித் தள்ளுறேன். திரைச்சீலையோட பிடி தளர, அரவிந்த் சுவத்துல பலமாய் மோதிச் சரியறான். திரும்ப எழுந்து தாக்க வருவான்னு நெனைச்சேன்...” விசும்ப ஆரம்பித்தேன்.
அனைவரிடத்திலும் அமைதி. சுற்றி நின்று என்னையே பார்க்கிறார்கள்
“ `மே ஐ கம் இன்’னு அரவிந்த் உள்ள வந்ததிலிருந்து நான் மனசுல நினைச்சது வரைக்கும் நடந்த மொத்தமும் ஒண்ணுவிடாம வாக்குமூலமா கொடுத்துட்டேன். இதுல எங்காச்சும் திட்டமிடல் இருக்கா இன்ஸ்பெக்டர்..? அரவிந்தோட மரணம் எதிர்பாராம நடந்த விபத்துதான். சத்தியம், நம்புங்க.”
‘‘என்கொயரிக்கு ஒத்துழைச்சதுக்கு தேங்க்ஸ்.”
‘‘ஆனா, ஒரு பெரிய வருத்தம் இன்ஸ்பெக்டர். திரும்ப வேணாலும் வீடியோவை ஒருதரம் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க, அந்த அரவிந்த் ஒரு தடவைகூட எங்கையும் என்னை டாக்டர்னு கூப்புடவே இல்லை...”
‘‘போலாம் வைத்தி...”
கிளினிக் விட்டு வெளியே வந்தோம். இத்தனை களேபரம் நடந்தும் எதிரே இருந்த மாலைக் கடைக்காரன் வேடிக்கை பார்ப்பது மாதிரிகூட நிமிர்ந்து என்னைப் பார்க்கவில்லை... அதே சீரான வேகத்தில் மாலை கட்டிக் கொண்டிருக்கிறான். எனக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
`தண்டனை முடிஞ்சி வெளியே வந்ததும் என் கிளினிக்லயே ஒரு மாலைக் கடை ஆரம்பிச்சு அவனை நடுத்தெருவுக்குக் கொண்டு வர... ச்சீ… என்ன நினைப்பு இது..!’
போலீஸ் வாகனம் ஏறிப் புறப்பட்டேன்.