லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

களவு - சிறுகதை

களவு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
களவு - சிறுகதை

வித்யா சுப்ரமணியம் ஓவியங்கள்: அரஸ்

குலதெய்வக் கோயில் வாசலை அடைந்ததும், அம்மனை நினைத்து கன்னத்தில் போட்டுக் கொண்டபடி உள்ளே போனார்கள் பத்மாவும் மகாதேவனும். இருவரும் கோயிலிலேயே குளித்து, ஈர உடையுடன் மடியாக வந்தார்கள். பத்மா மாவிளக்கு போடுவதற்கும் அர்ச்சனைக் கும் வேண்டிய எல்லா பொருள்களையும் கூடையிலிருந்து எடுத்து வெளியில் வைத்தாள். அர்ச்சனைக்கு வேண் டிய பொருள்களை ஒரு தட்டில் தனியே எடுத்து வைத்துவிட்டு, பேப்பர் கவரில் கட்டியிருந்த ஆழாக்கு அரிசியை பாத்திரத்தில் போட்டு நன்கு களைந்து வடிகட்ட, மகாதேவன் ஒரு சுத்த மான துண்டை விரித்து கழுவிய அரிசியைக் காயவைத்தார். அதற்குள் மற்றொரு பாத்திரத் தில் வெல்லத்தை நுணுக்கிவிட்டு, ஏற் கெனவே பொடி செய்துகொண்டு வந்திருந்த ஏலத்தூளையும் அதனோடு கலந்து மூடி வைத்தாள். அரிசி கொஞ்சம் காயும்வரை லலிதா ஸஹஸ்ரநாமத்தை மெலிதான குரலில் சொல்லியபடி கண்மூடி அமர்ந்தாள்.

குலதெய்வக் கோயிலுக்கு வந்து நான்கு வருடமாகிறது. வர முடியாமல் போனதற்கு ஏதேதோ காரணங்கள். கடந்த இரண்டு வருடமாக நிறைய கஷ்டங்கள். முக்கியமாக பருவ மழையின்றி நிறைய கஷ்டங்கள்... அதனால் ஏற்பட்ட சரீர அவதிகள்.

அரிசியை மாவாக்கி வெல்லம் கலந்து மாவிளக்கு மாவை உருட்டி குழித்து நெய் தீபமேற்றி அர்ச்சனைக்குப் பிறகு நிவே தனம் செய்யும்போது, தாயே இம்முறையேனும் நல்ல மழை யைக் கொடு, நிலத்தடி நீர் ஏறட்டும் என்றுதான் வேண்டிக் கொண்டனர் இருவரும். பிரார்த்தனையை முடித்ததும் இனி அம்மன் பார்த்துக் கொள் வாள் என்ற நம்பிக்கை ஏற் பட்டது. அன்றிரவே அருகில் உள்ள ரயிலடியில் இருவரும் ரயிலேறினார்கள்.

ஊர் சேர்ந்ததும், ஆட்டோ பிடித்து வீட்டின் முன்பு இறங்கி, பணம் கொடுத்துவிட்டு கேட் டைத் திறக்க வந்த மகாதேவன் முகத்தில் அதிர்ச்சி.

வாசல் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக் கதவும் உடைத்து திறக்கப்பட்டிருந்தது. `அய்யோ...' என்று அலறினாள் பத்மா. மகாதேவனின் முகம் வெளிறியது. நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. வீடு கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. இதுநாள்வரை நடக்காத சம்பவம் இது. குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்ற இரண்டுநாள் சென்று வருவதற்குள் வீடு உடைக்கப்பட்டிருக்கிறது.

“கடவுளே... கடவுளே..! இப்டியாய்டுச்சே இப்போ என்ன செய்யப்போறோம்? என் னெல்லாம் போச்சுன்னு தெரியலையே” - பத்மாவின் புலம்பல் கேட்டு அக்கம்பக்கம் மெள்ள எட்டிப் பார்த்து அருகில் வந்தார்கள்.

“என்னாச்சு?”

“யாரோ வீட்டை உடைச்சிருக்காங்க.”

“அடடா... சத்தம்கூடக் கேட்கலையே... போங்க... உள்ளாரப் போய்ப் பாருங்க. கையோட போலீஸுக்கு சொல்லிடுங்க.”

களவு - சிறுகதை
களவு - சிறுகதை

எல்லோருமே பதறினார்கள். பரிதாபப் பட்டார்கள். தங்கள் வீட்டிலும் இதுபோல் நடக்கக்கூடுமென்று பயந்தார்கள்.

புறநகர்ப் பகுதியில் எப்போதோ கட்டிய தனி வீடு. அக்கம்பக்கம் எல்லாமே சற்று தள்ளித் தள்ளி கட்டப்பட்ட தனி வீடுகள்தான். இருவரும் பயந்துகொண்டே வீட்டுக்குள் சென்றார்கள். ஹாலில் எல்லாமே வைத்தது வைத்தபடி இருந்தது. படுக்கையறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற மகாதேவன். பீரோவைப் பார்த்தார். பீரோ உடைக்கப் பட்டாற்போல் தெரியவில்லை. ஒருவேளை சாமர்த்தியமாகத் திறந்திருந்தால்? அருகில் சென்று திறந்து பார்க்கவும் தயக்கமாக இருந்தது. ஒருவேளை போலீஸில் புகார் கொடுக்க வேண்டியிருந்தால்... அவர்கள் வந்து `நீங்க ஏன் சார் பீரோவைத் தொட்டீர்கள்' என்று கேட்டால்? அப்படித் தொட்டுவிட்டு, ஒருவேளை திருடனைக் கண்டுபிடிக்க முடி யாமல் கைரேகைகள் அழிந்துவிட்டால்? அவர் ஒருமுடிவுக்கு வந்தார். இப்போதைக்கு எதையும் தொடாமலிருப்பதே நல்லது. அவர் பத்மாவை அழைத்து, “நான் போலீஸ் ஸ்டேஷன் வரை போயிட்டு வரேன். அதுவரை நீ எதையும் தொட்டுக்கிட்டு பண்ணிடாதே சரியா?” என்றபடி கிளம்பினார்.

“தலைவலிக்குதுங்க. ஒரு காபிகூட குடிக்க முடியாம என்ன கஷ்டம் இது?”

“கொஞ்சம் பொறுத்துக்க. பூட்டை உடைச் சிருக்காங்க. வீட்டுல என்ன போச்சு என்ன இருக்குன்னு தெரியாம நாம உள்ளாரப்போயி எதையும் தொட வேணாம். நான் வரும்போது உனக்கு ஹோட்டல்ல இருந்து காபி வாங்கிட்டு வரேன். நம்ம பையில ஃப்ளாஸ்க் வெச் சிருந்தயே அதைக் கொடு” என்றவர், அவள் எடுத்துக்கொடுத்ததும் கிளம்பினார்.

40 நிமிடமாயிற்று அவர் திரும்பி வர. அதற்குள் சற்றுத் தள்ளியிருந்த அடுத்த வீட்டுக் குச் சென்று பாத்ரூம் உப யோகப்படுத்தி, பல் தேய்த்து விட்டு வந்தாள் பத்மா. கையோடு வாங்கி வந்த பேப்பர் கப்பில் காபியை ஊற்றி இருவரும் குடித்தனர்.

“விளக்கெண்ணெய் மாதிரியிருக்கு. கிச் சன்ல கை வெச்சா என்னாயிரப் போவுது? நானே பாலைக் காய்ச்சி காபி போட்டிருப் பேன்.”

“கொஞ்சம் பொறு. இப்போ வந்துடுவாங்க போலீஸ்” என்றார்.

காபி குடித்தாற்போலவே இல்லை. போலீஸ் வர மேலும் அரை மணியாயிற்று. இன்ஸ் பெக்டரும் கான்ஸ்டபிளும் வந்திருந்தனர்.

அவர்கள் இருவரும் வீட்டை ஏற இறங்க அளப்பது போலப் பார்த்தார்கள். வாசல் கேட்டின் பூட்டும், வீட்டுக் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருப்பதைக் குறித்துக் கொண்டார்கள்.

“நாங்க இன்னும் உள்ளே போகல சார். நீங்க வந்த பிறகு போகலாம்னு காத்திருந்தோம்.”

``சரி வாங்க'' என்றபடி இன்ஸ்பெக்டர் முன்னால் செல்ல, இருவரும் அவர் பின்னால் சென்றார்கள்.

பீரோவின் பிடியை கைக்குட்டை வைத்து திறக்கப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். பூட்டி தான் இருந்தது.

“இதோட சாவி இருக்குதா?”

இதோ என்று தன் இடுப்பு பெல்ட்டுடன் இணைந்த ஒரு பர்ஸின் ஜிப்பைத் திறந்து பீரோ சாவியை எடுத்து நீட்டினார்.

“நீங்களே திறங்க” இன்ஸ்பெக்டர் உத்தர விட, அவர் முன்பு தானே பீரோவையும் லாக்கரையும் திறந்தார்.

லாக்கரில் வைத்திருந்த நகை, பணம் எல்லாமே வைத்தது வைத்தபடி இருந்தன.

மகாதேவன் வியந்தார்.

“எதுவும் திருட்டுப் போயிருக்கா? நீங்க வைத்ததெல்லாம் சரியா இருக்கா?” இன்ஸ் பெக்டர் கேட்க, “வெச்சது வெச்சபடியே இருக்கு சார்” என்றார்.

“வேற ஏதேனும் முக்கியமான விஷயங்கள் வீட்டில் வெச்சிருந்தீங்கன்னா அவையும் பத்திரமா இருக்கான்னு செக் பண்ணிடுங்க.”

மகாதேவன் மற்றொரு அறையிலிருந்த இரண்டு பீரோக்களையும் திறந்து பார்த் தார். வீட்டு டாக்குமென்ட் உட்பட, வெள்ளிச் சாமான்கள், பட்டுப்புடவைகள் என எல்லாமே பத்திரமாக இருந்தன.

``என்னமோ மர்மமா இருக்கே சார். வீட்டை உடைச்சிருக்காங்க, ஆனா எதை யும் எடுக்கலைன்னா நம்ப முடியலையே. நிச்சயம் காரணமில்லாம பூட்டை உடைச் சிருக்க மாட்டாங்க. எனக்கு பயமா இருக்கு இன்ஸ்பெக்டர்.”

“அப்டி ஏதாவது சந்தேகப்படும்படியா நடந்தால் உடனே எனக்கு போன் பண் ணுங்க” என்ற இன்ஸ்பெக்டர், தன் மொபைல் நம்பரைக் கொடுத்தார்.

வாசலில் அக்கம்பக்கத்து தலைகள் எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள்.

களவு - சிறுகதை
களவு - சிறுகதை

“ஒருவேளை பூட்டை உடைச்சவங்க, ஏதோ கார ணத்தால பயந்துகிட்டு திரும்பிப் போயிருப்பாங்க. மறுபடியும் வர மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? ரெண்டு பேருக்கும் சின்ன வயசா? பசங்க வெளி நாட்டுல. நீங்க இங்க தனியா வேற இருக்கீங்க. ரிஸ்க் எடுக்காதீங்க சார். உறவுக்காரங்க நாலு பேரைக் கூப்பிட்டு துணைக்கு வெச்சுக்குங்க. உங்க நல்லதுக்குதான் சொல்றோம்” - அக்கம் பக்கத்தினர் ஆலோசனை கூறினார்கள்.

ஒன்றும் திருட்டுப்போகவில்லையென்று தெரிந்ததும் பத்மா நிம்மதியாக கிச்சனில் நுழைந்து பாலைக் காய்ச்சி டிக்காக்‌ஷன் போட அதன் வாசம் வீடு முழுக்கப் பரவியது.

10 நிமிடத்தில் நுரை பொங்கும் காபியோடு வந்த பத்மா. இன்ஸ்பெக்டருக்கும் கான்ஸ் டபிளுக்கும் காபியை நீட்டினாள். “நீங்க உடனடியா வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க. நல்ல காலம் குலதெய்வம் எங்களைக் கை விடல. கஷ்டப்பட்டு சம்பாரிச்ச எதுவும் களவு போயிடலை” என்றாள்.

வீட்டுக் காபி இறங்கியதும் ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. காபி குடித்துவிட்டு இன்ஸ் பெக்டரும் உடன் வந்தவரும் கிளம்ப,

“அப்டின்னா எதுக்கு கேட் பூட்டையும், கதவு பூட்டையும் உடைச்சிருக்காங்க?’’ என்று கேட்டாள் பத்மா.

“ஒண்ணும் புரியலையே” அவர் வியந்தார். வீட்டு டாக்குமென்ட்டிலிருந்து பணம், நகை, வெள்ளிச்சாமான்கள் எல்லாம் அப்டியே இருக்கு. பீரோவை யாரும் தொடவேயில்லை என்பது தெரிகிறது. அப்படியானால் யார் இரண்டு பூட்டுகளையும் உடைத்தார்கள்? எதற்கு உடைத்தார்கள்? ஒன்றும் புரியவில்லை. என்ன காரணத்தால் வந்தார்கள்? என்ன காரணத்தால் எதையுமே எடுக்காமல் சென்றார்கள். ஒருவேளை நோட்டம் பார்க்க வந்தார்களா? மீண்டும் வருவார்களா? இனி வரும் நாள்களில் ஏதேனும் ஆபத்து காத்திருக்கிறதா? இப்போதைக்கு எதுவும் களவு போகவில்லை என்றாலும் இனி நிம்மதியாகத் தூங்க முடியுமா?

“சார் எதுக்கும் பத்திரமா இருங்க. அவசரம்னா எந்த நேராமானாலும் தயங்காம கூப்பிடுங்க. நாங்க உதவிக்கு வர்றோம். உங்க வீட்டில் நடந்தது நாளை எங்க வீட்டிலும் நடக்கலாம். எங்களுக்கும் பயமாதான் இருக்கு. ஒரு வாரம் வீட்டுக்கு ஒருத்தர்னு ராத்திரி நேரம் இரண்டு பேர் இந்த ஏரியாவில் காவலுக்கு சுற்றி வருவோமா?”

“அதுவும் நல்லதுதான். இங்க இருப்பவங்க எல்லாருமே கவனமாதான் இருக்கணும்” அவர்கள் தங்களுக்குள் பேசியபடி வெளி யேறினார்கள்.

மகாதேவன், “காய்கறி வாங்கி வர்றேன். சமையல் பண்ணு பசிக்குது” என்றபடி பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

`என்னங்க மகாதேவன், உங்க வீட்டு பூட்டை உடைச்சுட்டாங்களாமே', `வயசான காலத்துல தனியா இருக்கீங்க. ஜாக்கிரதை' - அதற்குள் ஊருக்கே விஷயம் தெரிந்து விசா ரிக்க ஆரம்பித்தனர். ஒவ்வொருவரிடமும் எதுவும் களவு போகவில்லையென்று சொல்லி, காய்கறி வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதற்கு ஒரு மணி நேரமாகிவிட்டது.

“வந்துட்டீங்களா? நீங்க காயெல்லாம் நறுக்கி வைங்க. நான் அதுக்குள்ள குளிச்சுட்டு வந்துடறேன்.”

“என்ன சமைக்கப்போற?”

என்ன காய்கறிகள் வாங்கி வந்திருக்கிறார் என்று பார்த்தாள் பத்மா.

“கீரைத்தண்டு குழம்பும், கேரட் - கோஸ் பொரியலும் செய்து, கீரையைக் கடைஞ்சு டறேன்.”

“என்னமோ செய். பசிக்குது” அவர் தண்டுக் கீரையை எடுத்து நார் நீக்கி நறுக்க ஆரம்பித்தார். பத்மா குளிக்கப் போனாள். சற்றுநேரத்தில் பாத்ரூமி லிருந்து அவரை சத்தமாக அழைத்தாள்.

“என்னங்க...”

“என்ன வேணும், டவலை மறந்துட்டயா...” என்றபடி எழுந்து போனார்.

“என்னங்க குழாய்ல தண்ணி வரல. வால்வ் எதுனா குளோஸ் பண்ணியிருந்தா திறந்து விடுங்க.”

`இரு பாக்கறேன்' என்றபடி கீழேயிருந்த வால்வுகளை செக் பண்ணினார். எல்லாமே திறந்துதான் இருந்தது. எதற்கும் ஒருமுறை மூடித் திறந்துவிட்டு உள்ளே வந்தார்.

“இப்போ வருதா பாரு.”

“இல்லையே.”

“என்ன சொல்ற வால்வ் எல்லாம் சரியாத் தான் இருக்கு. நீ குழாயை சரியா திறந்து பாரு.”

“வரலைன்றேனே.”

அவர் ஒருநிமிடம் `ஜெர்க்' ஆனார். என்ன பிரச்னை? நிலத்தடி நீர் முற்றிலும் குறைந் திருந்ததால் மாதத்துக்கொரு முறை லாரி தண்ணீர்தான் வாங்கி நிரப்பிக்கொள்வது வழக்கம். குடிக்கும் நீர் மட்டும் பத்மா அடுத்த தெருவுக்கு வரும், மெட்ரோ வாட்டர் லாரிக்கு பின்னால் வரிசையில் நின்று நான்கு குடம் பிடித்து வருவாள். ஊருக்குக் கிளம்புவதற்கு முதல் நாள்தான் ஒரு லாரி தண்ணீர் வாங்கி சம்ப்பிலும், மாடி டேங்க்கிலும் நிரப்பியது போக கொஞ்சம் உபரி நீர் தோட்டத்திலும் கொட்டி செடிகளுக்குப் போனது. நினைவுக்கு வந்தது.

களவு - சிறுகதை
களவு - சிறுகதை

இரண்டு நாள் ஊரிலேயே இல்லை. இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள டேங்க்கும் சம்ப்பும் எப்படி காலியாகும்? ஒருவேளை குழாய் ஏதேனும் சரியாக மூட வில்லையா? கழிவறை ஃபிளஷ் லீக் ஆகிறதா? அவர் வீட்டிலிருந்த அத்தனை குழாய்களையும் செக் பண்ணினார். எல்லாம் இறுக்கமாகவே மூடியிருந்தன. கழிவறை ஃபிளஷ்ஷில் பிரச்னை இருப்பதுபோல தெரியவில்லை. ஃபிளஷ் டேங்க்கை திறந்து பார்த்தார். அதில் நிறைய நீர் இருந்தது. அப்படியென்றால் எப்படி அவ்வளவு தண்ணீரும்? ஒருவேளை ஊருக்குக் கிளம்பும்முன் எந்தக் குழாயிலும் தண்ணீர் ஒழுகாமல் இருக்க மாடியிலிருக்கும் மெயின் வால்வை மூடிவிட்டோமா? அவர் முதல் மாடியில் டேங்க்கிலிருந்து தண்ணீர் வெளிவரும் பைப் லைனில் பொருத்தப் பட்ட வால்வை செக் செய்து பார்த்து விடலாம் என்று மாடிக்குச் சென்றார்.

வால்வ் திறந்துதான் இருந்தது. அப்படியே மொட்டைமாடிக்கு சென்று, அங்கிருந்து டேங்க்குக்கு, பத்திரமாக ஏணியில் ஏறிச்சென்று டேங்க்கைத் திறந்து எட்டிப் பார்த்தவர் திகைத்துப் போனார். உள்ளே சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. டேங்க் இருந்த பகுதியிலிருந்து எட்டி கீழே பார்த்தார். கீழே தோட் டத்தின் பகுதியில் நிறைய தண்ணீர் குளம் கட்டியிருந்தது.

அவர் யோசனையோடு கீழே வந்து சம்ப் மூடியைத் தூக்கி உள்ளே பார்த்தார். சம்ப்பும் காலியாக இருந்த தைத் கண்டு அதிர்ந்து போனார். அவசரத்துக்கு மோட்டார் போட் டாலும் அரை பக்கெட் நிறைவதற் குள் காற்று இறங்குமளவுக்கு நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந் திருந்தது. விட்டுவிட்டு மோட் டார் போட்டால் இரண்டு பேர் குளிக்கலாம். அதற்கே ஒரு மணி நேரமாகும். லாரி தண்ணீர் வாங்கி சம்ப்பிலும் மாடி டேங்க்கிலும் ஏற்றிதான் தண்ணீர் கஷ்டத்தை சமாளிக்கிறார்கள். தண்ணீரை வீணடிக்காமல் பார்த்துப் பார்த்துதான் செலவழிக்கிறார்கள். அப்படியிருக்க... அவ்வளவு தண்ணீரும் எங்கேதான் போயிற்று?

வித்யா சுப்ரமணியம்
வித்யா சுப்ரமணியம்

அவர் வீட்டைச் சுற்றி வந்தார். தோட்டத் தில் குளம் கட்டியிருந்த தண்ணீரைப் பார்த் தார். வீட்டைச் சுற்றியிருந்த நடைமேடை களில் சேறும் சகதியுமாக வாசல்வரை நிறைய பாதச்சுவடுகள். அவர் அவற்றையே வெறித்துப் பார்த்தார். வீட்டுக்குள் வைத்து பூட்டியிருந்த தோட்டத்துக்கு நீர் பாய்ச்சும் மிக நீண்ட தண்ணீர் பைப் மோட்டார் அறைக்கருகில் சேறும் சகதியுமாக சுருண்டு கிடந்தது.

வீட்டில் களவு போனது என்னவென்பது அவருக்குப் புரிந்துவிட்டது. சிறிய மோட் டாரில் ஹோஸ்பைப்பை இணைத்து அவ்வளவு தண்ணீரையும் களவாடத்தான் வீட்டுக்கதவையும் உடைத்திருக்கிறார்கள். ஊருக்குக் கிளம்புவதற்கு முதல் நாள் லாரி தண்ணீர் நிரப்பியது தெரிந்த யாரோ சிலரின் வேலைதான் இது.

அநேகமாக எல்லோர் வீட்டுக்குமே தண்ணீர் லாரிகள் வருவது சகஜமென்பதால் அக்கம்பக்கம் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் கச்சிதமாக, திறமையாகக் காரியம் முடித் திருக்கிறார்கள்.

யார் அவர்கள்? எதற்கு? ஒருவேளை இங்கு திருடி வேறு எங்கேனும் விற்றிருப் பார்களா? எதற்கு பற்றாக் குறை அதிகரிக்கிறதோ, அதைக், குறி வைத்து களவாடிச் செல்வதற்கென்று சிலர் அலைவார்களோ? இதை போலீஸில் சொல்வதா, வேண்டாமா என்று யோசித்த படியே பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்தார்.

“ஏங்க என்னதான் பண்றீங்க அங்கே?” பத்மா உள்ளிருந்து கத்தினாள்.

மகாதேவன் லாரி தண்ணீர் வாங்குவதற்கான நம்பரைத் தேடி அழுத்தி `ஹலோ' என்றார்.