சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

குறி - சிறுகதை

குறி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறி - சிறுகதை

இமையாள்

அது தொண்ணூறுகளின் தொடக்கக் காலம். அப்போது நான் வேலையில்லாமல் இருந்தேன். அரசு உத்யோகத்திற்கான தேர்வுகளுக்குத் தயார் செய்துகொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் சுப்பராயன் என்ற டிரைவரின் குடும்பம் குடியிருந்தது. சுப்பராயன் மெலிந்த தேகம். கன்னங்கள் ஒட்டி, கரடுதட்டிய ஒடுங்கிய முகமும் எப்போதும் சோகத்தை உமிழும் கண்களுமாய் இருப்பார். அவரது குரல் ஒரு விசேஷ அலைவரிசையில் கிறீச்சிடுவதுபோல் ஒலிக்கும். அவர் மனைவி அவருக்கு நேர்மறை. பருத்த சரீரம் , காண்டா மணி அதிர்வது போன்ற குரல். தெருவில் ஒரு வீடு விடாமல் எல்லோர் வீட்டு விஷயங்களிலும் தலையை நுழைக்கும் சுபாவம். சதா பேசிக் கொண்டேயிருப்பாள். ஒரு பெண்ணும் இரண்டு பையன்களும்

என ஐந்து நபர்கள். இரண்டு பையன்களுக்கும் படிப்பு அவ்வளவாக ஏறவில்லை. மூத்தவன் பாலு ஊருக்குள்ளேயே மில்லில் வேலைக்குச் சென்று சொற்பமாக சம்பாதித்துவந்தான். அந்தப் பெண் சங்கரி என் தங்கையின் ஈடு. அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து சின்னச்சின்ன வேலைகளில் என் தாயாருக்கு உதவியாக இருப்பாள். பார்க்கப் பரிதாபமாக இருப்பாள். அவள் அப்பாவை ஒத்தவள். சம்பளத்துக்கு என்றில்லை, விசுவாசத்திற்காகச் செய்தாள் “அண்ணா’’ என்று என்னை அழைப்பாள். என் அப்பா, சுப்பராயனுக்குக் கடனாகக் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தார். அதை நீண்ட நாள்களாகத் திருப்ப முடியவில்லை. அதற்கு இப்படி வேலை செய்து நன்றிக்கடன் செலுத்திக்கொண்டிருந்தாள்.

ஒரு நாள் முன்னிரவு. எட்டு எட்டரை மணியிருக்கலாம். சுப்பராயன் வீட்டில் ஒரே பரபரப்பாக இருந்தனர். என் அம்மா வராந்தாவிலிருந்தபடி, “என்னடி சங்கரி, என்ன சத்தம்?’’ என்றாள். அவள் தயங்கியபடி நடைவாசலுக்கு வந்து “ரங்கா அண்ணன் இன்னும் வூட்டுக்கு வர்லக்கா’’ என்றாள் தேம்பலின் ஊடாக. அவள் என்னை அண்ணா என்று சொல்வாள்; என் அம்மாவை அக்கா என்பாள், என்ன உறவுமுறையோ?

இந்த ரங்கா என்பவன் சுப்பராயனின் இரண்டாவது புத்திரன். மூத்தவனைப்போல் இவன் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவ்வப்போது என் அப்பாவுக்கு உதவியாக எங்கள் வியாபார அலுவல்களைச் செய்வான். மற்றபடி நண்பர்களுடன் திரிந்து கொண்டிருப்பான். பத்தாவது பரீட்சையில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருந்தான். அதை என்னிடம் டியூஷன் சொல்லிக்கொள்ள ஓரிரு சமயம் வந்திருக்கிறான். ரொம்ப மந்தமானவன். அவனிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தொலைந்தோம்! ஒருமுறை அப்பா அவனிடம் பஜாரில் சென்றுகொண்டிருந்த தன் நண்பரைக் காட்டி “செட்டியார் போறார் பாரு, அவரைக் கூட்டிக் கொண்டு வா!’’ என்று ஏவினார். ரங்கன் எந்த அங்க அடையாளங்களையும் கேட்டுக்கொள்வதற்கு முன்பே தெருவில் பாய்ந்தான். அப்பா காத்திருந்தார். சுமார் பத்து நிமிடங்கள் சென்றன. ‘என்னடா இந்த சனியன் பிடித்தவனைக் காணோமே’ என்று பார்த்தால், முகமெல்லாம் பல்லாக கடையை நோக்கி வந்தான். பின்னால் அறிமுகமற்ற ஒரு நபர் அவன் கூடவே கடைக்குள் நுழைந்தார். அப்பா குழப்பத்துடன் ரங்கனைப் பார்த்து, ``டேய், நான் சொன்ன ஆள் இவர் இல்லைடா’’ என்றார். அதற்கு அவன் சொன்ன பதில், “இவர்கூட செட்டியார்தானாம்பா!’’ அப்பாவிற்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

குறி - சிறுகதை
குறி - சிறுகதை

இன்னொரு சமயம் பாங்க் வேலையாக அவனை அனுப்ப நேர்ந்தது. குறிப்பிட்ட அந்த பாங்க் ஊழியரிடம் போய் விசாரிக்க வேண்டும். அந்த ஆளின் பெயரையும் சொல்லி, கூடுதலாக, ‘முகத்தைக் கடுகடுவென்று வச்சிட்டிருப்பார், நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் கவுன்ட்டரில் இருப்பார்’ என்று அப்பா சொல்லி அனுப்பினார். அவன் நேராக பாங்க்கில் நுழைந்து, குறிப்பிட்ட அந்த ஊழியரிடம் சென்று ‘சார், மூஞ்சிய கடுகடுன்னு வச்சிட்டிருக்கிற ஆள் நீங்கதான, முதலியார் சொல்லி அனுப்பினார்’ என்று கூற, அந்த ஆள் காச்மூச்சென்று கத்த, ஒரே ரகளையாகிவிட்டது. இப்படிப்பட்ட அசடு.

பாவம், இப்போது அவனைத்தான் காணவில்லை என்றாள் சங்கரி. நான் வெளி வராந்தாவிற்கு வந்ததும் அம்மா என்னிடம் சொன்னாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “அவன் நண்பர்கள் வீடுகளில் விசாரிக்கச் சொல்லுங்க’’ என்றேன். “அல்லாம் கேட்டாச்சுப்பா. காலீல போனவன் மதியம் சோத்துக்குக்கூட வர்ல. ஒரே பேஜாரா பூடுச்சுப்பா இவனுகளோட. பரீட்சை வருதே. படிடா, ஊர சுத்தாதன்னா இன்னா கோவம் வேண்டிக்கெடக்கு. பெரியவன்தான் படிக்கல, இவனாச்சும் படிக்கணுமேன்னுதான சொல்றது.’’ இது சுப்பராயனின் மனைவி. அவள் தனக்குத்தானே புலம்பியபடி அழுது கொண்டிருந்தாள். ரங்கன் தனியாக ஓடிப் போயிருப்பதே ஆச்சரியம்தான்! அந்த அளவிற்குகூட அவனுக்குச் சாமர்த்தியம் இருக்கிறதே என்று அபத்தமாகத் தோன்றியது. அதற்குள்ளாக நானும் மூத்த மகன் பாலுவுமாகத் தெருத்தெருவாக அலைந்துவிட்டுத் திரும்பியிருந்தோம். ஒன்றும் பயனில்லை. ரங்கனுக்கு இருந்த சொற்ப நண்பர்கள் எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

பத்து மணிக்கு மேல் சுப்பராயன் வந்தார். விஷயம் கேள்விப் பட்டதும் பதறினார். அவரிடம் எல்லாவற்றையும் சொன்னோம். “அவனோட ப்ரெண்டுங்க வீட்டுலல்லாம் கேட்டுப் பாத்துட்டோம். வந்தா கூட்டிட்டு வரேன்னிருக்காங்க. நீங்க பக்கத்துல உங்க சொந்தக்காரங்க வீட்ல, ஊர்லயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறமா என்ன செய்யறதுன்னு பாக்கலாம்’’ என்றேன். இதற்குள் அப்பா பஜாரிலிருந்து வந்துவிட்டிருந்தார். அவர் சுப்பராயனுக்கு ஆறுதல் சொன்னார். நாளைக்குள்ள எதுவும் தெரியவில்லை என்றால் போலீஸில் புகார் அளிக்கலாம் என்றார். எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. சுப்பராயனின் மனைவிதான் கேவியபடியே இருந்தாள். அன்றிரவு பதற்றத்துடன் கடந்தது.

அடுத்த நாள் விடியற்காலையிலேயே பாலுவும், சுப்பராயனும் அருகே கிராமங்களில் இருந்த அவர்களது சொந்தபந்தங்கள் சிலரின் வீடுகளுக்குத் தகவல் தேடிக் கிளம்பினர். தெரு ஜனம் மொத்தப் பேருக்கும் அதற்குள் விஷயம் பரவி ஒவ்வொருவராக விசாரித்துக் கொண்டிருந்தனர். சங்கரி எங்கள் வீட்டிலேயே அடைந்துகிடந்தாள். என் தங்கைதான் அவளோடு ஆறுதலாகப் பேசியபடி இருந்தாள். சுப்பராயன் மாலையில் சோர்வுடன் திரும்பினார். இரண்டாவது நாள் என் அப்பா சகிதம் உள்ளூர் காவல்நிலையத்தில் ஒரு புகாரும் கொடுத்தாயிற்று. ஒன்றும் தகவலில்லை. இன்னும் சில கிராமங்களில் இருக்கும் சொந்தக்காரர்களிடம் அடுத்தடுத்த நாள்கள் விசாரிப்பதும், வருவதுமாக நான்கு நாள்கள் ஓடிவிட்டன. ரங்கன் எங்கும் இல்லை. சுப்பராயன் மிகவும் தளர்ந்துபோயிருந்தார்.

குறி - சிறுகதை
குறி - சிறுகதை

ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது. சுப்பராயனின் மனைவி ஓயாமல் புலம்பிக்கொண்டிருந்தாள். குறி கேட்டாவது பார்க்கலாம் என்று கூறியதாக அறிந்ததும் எனக்கு வேடிக்கையாக இருந்தது. “குறி கேட்டு காணாமல் போனவனைக் கண்டுபிடிக்க முடியுமா?’’ என்றேன் கிண்டலாக. “ஆமாண்ணா, மூர்த்தின்னு ஒருத்தரு மை போட்டு மந்திரிச்சு சொல்லுவாரு. காணாமப்போன எதுவா இருந்தாலும் கண்டுபிடிச்சுச் சொல்லிடுவாரு’’ என்றாள் சங்கரி. என் அம்மாவும் அந்த நபரைப் பற்றிய கதைகளைச் சொன்னாள். “நான்சென்ஸ், இதையெல்லாம் நம்பறீங்களா’’ என்றேன் எரிச்சலுடன். “அவருகிட்ட கேட்டுத்தான் பாக்கலாமே. சங்கரி அம்மாகூட சொல்லிட்டே இருக்காளே’’ என்று சுப்பராயனிடம் யோசனை சொன்னாள்.

நானும் சுப்பராயனும்தான் மூர்த்தியைப் பார்க்கச் சென்றிருந்தோம். வீடு சற்று தொலைவில் இருந்ததால் என் பைக்கில் சென்றோம். அந்தப் பகுதியில் அவர் எல்லோருக்கும் குறி சொல்ற மூர்த்தி என்றே பரிச்சயமாகியிருந்தார். சிறிய வீடு, பூசப்படாத சுவர்கள், அழுக்குத் திரைச்சீலை. நாங்கள் சென்றபோது வாசலில் சிலர் காத்திருந்தனர். பொதுவாக இறந்துபோனவர்களிடம் பேசுவது, திருமணத்தடை, குழந்தை பாக்கியத்திற்குப் பரிகாரம் இப்படிக் குறி கேட்டு வருவார்களாம். அவர்களுக்குத் தன் வீட்டிலேயே வைத்து குறி சொல்லுவாராம். எங்களைப் போல் ஆளே காணாமல் போன பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட வீடுகளுக்கே வந்து பூஜை போட்டுக் கண்டுபிடித்துக் கொடுப்பார் என்றார் வெளியே காத்திருந்த ஒருவர்.

மூர்த்திக்கு முப்பது சொச்சம் வயதிருக்கலாம் என்று தோன்றியது. அமைதியான முகம். குள்ளமாக, கறுப்பாக இருந்தார். குறி சொல்பவர் என்று எந்த விசேஷ அடையாளமும் அவர் தோற்றத்தில் இல்லை. அந்த அறையின் சுவரில் பெரிய அளவில் ஒரு பெண் தெய்வத்தின் படம் மஞ்சள் குங்குமத் தீற்றலுடன் மாட்டப்பட்டிருந்தது. இரண்டு குத்துவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. மூர்த்தி ஒரு திண்டில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சில பழைய புத்தகங்கள் செல்லரித்துப்போன பக்கங்களுடன் இருந்தன. அறை புழுக்கமாக இருந்தது. விஷயத்தைச் சொன்னோம். நாங்கள் சொன்னதை கவனமாகக் கேட்டுக்கொண்டார். சற்று யோசித்துவிட்டு, நாளை காலை வருவதாகவும், பூஜைக்காகப் பழம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், சாமந்திப்பூ போன்ற சில பொருள்கள் வாங்கி வைத்திருக்கும்படியும் சொன்னார்.

“பூஜையில என்கூட உட்கார்றதுக்குப் பன்னெண்டு வயசுக்குள்ள இருக்கிற பொண்ணு அல்லது பையன் யாரையாவது சொல்லி வைங்க. அது காணாமப் போன உங்க பையனைத் தெரிஞ்சவங்களா இருக்கணும். ரத்த உறவா இல்லாதவங்களா இருக்கணும்’’ என்றார். சுப்பராயன் தலையாட்டினார். மூர்த்திக்கு எட்டு வயதாக இருக்கும்போதுதான் அம்மன் அருள் அவர்மீது வந்ததாகச் சொன்னார். அதன் பிறகு அவர் சொன்ன அருள் வாக்கு எல்லாமே பலித்துவிட, அக்கம்பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி ஜனங்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஜோசியம் மட்டுமல்ல, காணாமல் போனவற்றைக் கண்டுபிடிக்கும் அபூர்வ சக்தியையும் அம்மன் தனக்கு அருளியதாகச் சொன்னார். “இதையெல்லாம் நான் பணத்துக்காகப் பண்ணுறதில்லை. மத்தவங்களுக்கு நல்லது பண்ணுறதுல இருக்குற ஆத்மதிருப்திதான் தவிர தட்சிணை அவங்களா பாத்துக் கொடுக்கறதுதான். என்கிட்ட இருக்கிற சக்தி அவ கொடுத்ததுதானே“ என்று முடித்தார். நான் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

புறப்படும்போது “கவலைப்படாதீங்க சார், பையனைக் கண்டுபிடிச்சிடலாம்’’ என்றார். சுப்பராயன் குழப்பமாகத் தலையாட்டினார்.

அடுத்த நாள் காலை பக்கத்து வீட்டில் தெருஜனங்கள் கூடிவிட்டனர். என் அம்மாவும் தங்கையும்கூட சுப்பராயன் மனைவியுடன் பூஜைப் பொருள்களை எடுத்து வைத்து உதவினர். போய்த்தான் பார்க்கலாமே என்று ஆவலால் நானும் சென்றேன். சொன்னபடி மூர்த்தி எட்டு மணிக்கு சைக்கிளில் வந்திறங்கினார். பூஜைக்கான பொருள்களை எடுத்து வைத்து, கவுச்சி இல்லாத ஒரு எவர்சில்வர் தட்டு கேட்டார். ஊதுபத்தி ஏற்றி, தரையில் நீரைத் தெளித்து மலர்களைப் பரப்பி அதன்மேல் தட்டை வைத்தார். தட்டில் மஞ்சள் குங்குமப் பொட்டுகள் இட்டார்.

“யார உட்கார வெக்கச் சொல்லியிருக்கீங்க’’ என்று கேட்டார். எதிர் வீட்டு சிறுமி ஒருத்தி உட்கார வைக்கப்பட்டாள். வெற்றிலை பாக்கு பழங்களை அந்தச் சிறுமியின் எதிரில் வைத்து கற்பூரத்தை ஏற்றினார். அறையில் நிசப்தம். மூர்த்தி உரத்த குரலில் ஏதோ மந்திர உச்சாடனம் செய்தார். நடுநடுவே ஆங்காரம் வந்தவர் போல் உடலை விறைத்து உச்சஸ்தாயியில் “வந்துட்டியா, வந்துட்டியா’’ என்று உறுமினார். அவர் கண்களை மூடி நிதானித்துக்கொண்டு, தட்டை சிறுமியின் முகத்தை ஒட்டினாற்போல் பிடித்துக்கொள்ளச் சொன்னார். மூர்த்தி தனது இரு கரங்களையும் சிறுமியின் கண்களுக்கருகில் வைத்து மறைத்துக் கொண்டார். இதனால் அவளது இரண்டு பக்கமும் வெளிச்சம் முற்றிலும் மறைக்கப்பட்டது. அவளைத் தட்டை மட்டும் உற்றுப் பார்க்கச் சொன்னார். இப்போது சில மந்திரங்களைச் சொல்லி “வா தாயி.. வா’’ என்றார்.

இப்போது மூர்த்தி அந்தச் சிறுமியிடம் “தட்டுல எதுனா தெரியுதா’’ என்றார். சிறுமி “இல்ல, இருட்டா இருக்கு’’ என்றாள். கூட்டத்தினர் மூர்த்தியையும் சிறுமியையும் உன்னிப்பாகப் பார்த்தபடி மௌனமாக இருந்தனர்.

மூர்த்தி மந்திரங்களை ஜெபித்தபடி மீண்டும் கேட்டார், “இப்ப எதுனா தெரியுதா?’’ சிறுமி மீண்டும் “ஒண்ணும் தெரியல. இருட்டா இருக்கு’’ என்றாள்.

மூர்த்தி மேல் நோக்கிப் பார்த்தபடி “வந்துட்டியா... வந்துட்டியா... வந்துட்டன்னா தென்ன மரத்தக் காட்டு’’ என்றார்.

சிறிது நேரம் எதுவும் தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த சிறுமி திடீரென “தெரியுது’’ என்றாள்.

“என்ன தெரியுது?’’

“தென்ன மரம்’’

மூர்த்தி அரூப சக்தியிடம் “ரங்கன் இப்ப எங்க இருக்கான்னு காட்டு’’ என்றார்.

சிறுமி இப்போது “தென்ன மரம் மறஞ்சிடுச்சி. அண்ணன் தெரியுது. ரங்கண்ணன்’’ என்று கத்தினாள்.

சுப்பராயனின் மனைவி ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். ரங்கன் உயிரோடுதான் இருக்கிறான். “ஐயோ கண்ணு ரங்கா’’ என்று அவள் கதற, அருகிலிருந்தவர்கள் அவளை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர். எனக்கே கொஞ்சம் சிலிர்த்துவிட்டது.

“என்ன செய்யறான் ரங்கண்ணன்?’’ என்று கேட்டார் மூர்த்தி

“ஏதோ கடைக்குள்ள நிக்கிது.’’

“என்ன பண்ணுறான்?’’

“ஏதோ பொட்டலம் கட்டுது.’’

“உம்...’’

“தராசுல வைக்கிது.’’

“உம்...’’

“எடை போடுது...’’

சிறுமி ஏதோ கிரிக்கெட் ரன்னிங் கமென்டரி போல் சொல்லிக்கொண்டிருந்தாள்.

இப்போது மூர்த்தி மேலே விட்டத்தைப் பார்த்து, கண்ணுக்குத் தெரியாத அந்தச் சக்திக்கு நன்றி கூறினார்.

மூர்த்தி மேலும் தொடர்ந்து அரூபமான அந்தச் சக்தியிடம் பேசத் தொடங்கினார். “சரி, இப்ப ரங்கன் இருக்கிறது எந்த இடம் ? மெட்ராஸா, இல்லையா. மெட்ராஸுன்னா தென்ன மரத்தக் காட்டு, இல்லன்னா வாழை மரத்தக் காட்டு’’ என்றார். எல்லோரும் பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தினர்.

“இப்ப என்ன தெரியுது?’’ சிறுமியிடம் கேட்டார்.

அவள் “வாழை மரம்’’ என்றாள்.

அப்படின்னா மெட்ராஸ் இல்லை என்று பொதுவாகக் கூட்டத்தை நோக்கிச் சொல்லிவிட்டு, “வேலூருன்னா தென்ன மரத்தக் காட்டு, இல்லன்னா வாழை மரத்தக் காட்டு’’ என்றார்.

சிறுமி “வாழை மரம்.’’

இப்படியே சில ஊர்களை இல்லை இல்லை என்று சொல்ல, இறுதியில் ‘ஆற்காடு’ என்று சொன்னபோது சிறுமி “தென்ன மரம் தெரியுது’’ என்றாள்.

ஆக, ஊர் தெரிந்துவிட்டது.

“ஆற்காடு டவுனுக்குள்ளவா, வெளியவா? உள்ளன்னா தென்ன மரத்தக் காட்டு. இல்லன்னா வாழை மரத்தக் காட்டு.’’

குறி - சிறுகதை
குறி - சிறுகதை

“தென்னை மரம்.’’

“பஸ் ஸ்டாண்டு பக்கத்துலன்னா தென்ன மரத்தக் காட்டு, இல்லன்னா வாழை மரத்தக் காட்டு.’’

“தென்னை மரம்.’’

இப்படியே கேள்வியும் பதிலுமாக இறுதியில் ரங்கன், ஆற்காடு பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் தோப்புக்கானா பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் இருக்கிறான் என்று மூர்த்தி ஊகித்துச் சொன்னார்.

சுப்பராயன் தட்சிணையாகக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்த கையோடு தன் நண்பர் ஒருவருடன் அப்போதே கிளம்பிச் சென்றார். மாலையில் ரங்கனை அழைத்துக்கொண்டு வந்தனர்.

மூர்த்தி சொன்னதுபோல அவன் ஒரு மளிகைக் கடையில்தான் இருந்திருக்கிறான்...என்னால் நம்பவே முடியவில்லை.

ரங்கனைக் கூட்டிக்கொண்டு மூர்த்திக்கு நன்றி சொல்லக் கிளம்பினார் சுப்பராயன். ரங்கன் அவரைக் கும்பிட்டு பழம், வெற்றிலை பாக்கு கொடுத்து ஆசி வாங்கிக்கொண்டான். ரங்கனின் கண்களைத் தீவிரமாக உற்றுப் பார்த்தார் மூர்த்தி. அவன் தலையில் கைவைத்துச் சில மந்திரங்களை ஜெபித்தார். ரங்கன் உடலெங்கும் வெடவெடத்து தடாலென அவர் கால்களில் விழுந்தான். அதன் பின் ரங்கனின் முகத்தில் ஒரு அசாத்திய அமைதி நிலைகொண்டது. அவனது அசட்டுத்தனங்கள் எல்லாம் மாறி நிதானமானவனாக மாறினான். கேட்டதற்கு மட்டும் பதில். பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றியும் பெற்றான். சுப்பராயனும் அவன் மனைவியும் ‘எல்லாம் மூர்த்தியின் அருள்வாக்குதான்’ என்று புல்லரித்துப்போயினர்.

ஒருவருடம் கழித்து சுப்பராயன் குடும்பம் வேறு பகுதிக்கு வீடு மாற்றிப் போய்விட்டனர். நான் அந்தச் சம்பவத்தை அப்புறம் மறந்தே போய்விட்டேன்.

சில வருடங்கள் கழித்து என் மனைவியின் நகை ஒன்று காணாமல்போனபோது அவளுடைய நச்சரிப்பால் மூர்த்தியைத் தேடி அவரது விலாசத்துக்குச் சென்றேன். முன்பைவிட ஏகப்பட்ட கூட்டம். என் முறை வந்து நான் உள்ளே சென்றபோது கூடத்தில் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனம் போன்ற இருக்கையில் குங்குமம் தீற்றப்பட்ட நெற்றியுடன் நடுநாயகமாக வீற்றிருந்தவரைப் பார்த்து திடுக்கிட்டுப்போனேன்.

ரங்கன்!

பி.கு: மூர்த்தி இறந்துபோய்விட்டார் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.