வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அந்த எழுபது வயது மூதாட்டி உள்ளே நுழைந்ததும்,பேரமைதி அந்தப் பெரிய ஹாலை நிறைக்க, அங்கிருந்த அனைவரும் பணிவாக எழும்பி நின்று இருகரம் கூப்பி வணங்க,ஓடிக் கொண்டிருந்த ஏ.சி., மட்டுமே சிறிதான ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. நடுநாயகமாக எழும்பி நின்ற அவர், எதிரே உள்ள சீட்டை அந்தப் பெண்ணுக்குக் காட்டி அமரச் சொன்னார். அந்த மூத்த பெண் அமர்ந்த பிறகே அனைவரும் அமர்ந்தனர்.
அது மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நேர்காணல். நீட் தேர்வு எழுதி, உரிய மதிப்பெண் பெற்று, முதலாண்டு மெடிகல் படிப்பதற்கான கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி அது. அந்த ஹாலைச் சுற்றிய வராண்டாவிலும், எதிரே உள்ள தோட்டத்திலும் இளைஞர்களும்,இளம் பெண்களும், தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கூட்டங் கூட்டமாக நின்றபடியும், பெஞ்சுகளில் அமர்ந்தபடியும் பேசிக் கொண்டிருந்தனர். உள்ளே செல்ல இருந்தவர்கள், இண்டர்வியூவை முடித்து விட்டு வெளியே வந்தவர்களிடம், அவர்கள் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி, அவர்களைச் சுற்றி மொய்த்தனர்.
உள்ளே…

“உங்கள் பெயர் பார்வதியா?”
“ஆமாம் ஐயா!”
“ஐயாவெல்லாம் வேண்டாம். நீங்கள் என்னைத் தம்பி என்றே அழைக்கலாம்”. இண்டர்வியூ போர்டின் தலைவர் மிகுந்த மரியாதையுடன் பேசியபடியே, தனது டையை சற்றுத் தளர்த்திக் கொண்டார்.
அவர் சொல்வதை ஆமோதிப்பது போலவே இரு பக்கமும் இருந்த இரண்டு பெண்களும், ஆண்களும் தங்கள் தலையை மெல்ல அசைத்தபடி பார்வதியைப் பார்த்தார்கள். அவர்கள், போர்டின் மற்ற உறுப்பினர்கள்.
பார்வதிக்கு அந்த வயதிலும் கொஞ்சம் நாணமாகத்தான் இருந்தது. அனைவரையும் நன்றியுடன் பார்த்தார்.
தலைவரே மீண்டும் பேசினார். ”மேடம்! நீங்கள் உள்ளே நுழைந்ததும் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியதற்குக் காரணங்கள் உண்டு. ’கல்வி கரையில!’ என்பார்கள். உங்கள் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாமல், இந்த வயதிலும் முயன்று படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று, இக்கால இளைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறீர்கள். மருத்துவராக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்கு வழி செய்து விட்டீர்கள். எந்தக் கல்லூரி வேண்டுமென்று சொல்லுங்கள். அதே கல்லூரிக்கான உத்தரவை வழங்குகிறோம்.”
அவரை நேருக்கு நேராகப் பார்த்தபடி பார்வதி பேச ஆரம்பித்தார். ”ஐயா!.. சாரி!… தம்பி… நான் உங்கள் அனுமதியுடன் கொஞ்சம் பேசலாமா?

போர்டின் மொத்த உறுப்பினர்களும் “ஓ! நன்றாகப் பேசலாமே!நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்… உங்கள் கருத்துக்களைக் கேட்க…” என்று கோரஸாகக் கூற, பார்வதி பேச ஆரம்பித்தார்.
“நான் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள். ஆஹா..ஓஹோ..என்ற வாழ்க்கை இல்லா விட்டாலும் உடைக்கும், உணவுக்கும் குறைவு வராத குடும்பம். மூன்று பெண் குழந்தைகளில் நடுப்பெண் நான். அப்பா, அம்மாவுக்கு எங்களை நன்கு படிக்க வைத்துவிட வேண்டுமென்ற ஆர்வம் அதிகம். அதிலும் யாராவது ஒருவரையாவது மருத்துவராக்கி விட வேண்டுமென்பது அப்பாவின் கனவு.
அக்காவுக்கு மெடிக்கலில் விருப்பம் இல்லாததால், அவரின் ஆசை என் மீது படிந்தது. எனக்கும் எப்படியாவது மருத்துவராகி விட வேண்டுமென்ற ஆசைதான். ஆசை மட்டும் இருந்தால் போதாதே..‘ஆசையிருக்கு…தாசில் பண்ண… அதிர்ஷ்டமிருக்கு மாடு மேய்க்க’என்ற பழமொழி எங்கள் பகுதியில் பிரசித்தம். ஆசைப் பட்டதெல்லாம் நடந்து விட்டால் வாழ்வின் சுவாரசியம் குறைந்து போய்விடும் என்று நானும் எங்கோ படித்தேன். ஓரளவுக்கு மார்க்குகள் வாங்கியும், அப்பொழுதிருந்த சூழ் நிலையில் எனக்கு சீட் கிடைக்கவில்லை. சரி போகட்டுமென்று எனக்குப் பிடித்த மாத்ஸ் படித்து டிகிரி வாங்கினேன். ஆசிரியை ஆனேன்.”
“60 ஸ் கிட்ஸ், நாங்கள் அப்படி இருந்தோம். இப்படித் திரிந்தோம். எங்கள் காலம் போல் இப்பொழுது இல்லை என்று பீற்றிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.இவ்வளவு விஞ்ஞான முன்னேற்றங்களோ, தேர்வு முறை மாற்றங்களோ எங்கள் காலத்தில் இல்லை. தாய்மொழியில் எல்லாப் பதவிகளுக்கான தேர்வுகளையும் எழுதலாம் என்பது எவ்வளவு சிறந்த முன்னேற்றம்.இது எங்கள் காலத்தில் வழக்கத்திற்கு வந்திருந்தால் எங்களில் சிறந்த பலர், பல பெரிய பதவிகளை அலங்கரித்திருக்கக் கூடும். சின்ன மொபைல் போனுக்குள்ளேயே உலக விஷயங்களை ஒன்று விடாமல் அறிந்து கொள்ளும் நுணுக்கத்தை அனுபவிக்க நாங்கள் கொடுத்து வைக்கவில்லையே! இந்த முன்னேற்றங்கள் அந்தக் காலத்தில் இருந்திருந்தால் நானும் மருத்துவராகி, அன்னை தெரசாவின் வழியில் சென்றிருப்பேன்.
ஆனாலும், அந்த மருத்துவ ஆசை, நீறு பூத்த நெருப்பாக என்னுள்ளே கழன்று கொண்டேயிருக்க,நீட் அதற்கு சாமரசம் வீச, மீண்டும் பற்றிக் கொண்டது தீ! என்னுடைய முயற்சிகளுக்கு மீண்டும் உத்வேகம் அளித்தேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கை…
எனக்குள்ளே ஒரு பிரளயத்தை உண்டு பண்ணிற்று!என்னாலும் முடியும் என்று நிரூபித்து விட்டேன். என் தந்தையின் ஆத்மா இதிலேயே நிம்மதி அடைந்திருக்கும்!”

“சாரி! உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ பேசி உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து விட்டேன். இந்த சீட்டை நான் விட்டுக் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?”
“வேறொரு தகுதியுள்ள இளைஞருக்கோ, இளம்பெண்ணுக்கோ இந்த சான்ஸ் போகும்.அவர்கள் மருத்துவர்கள் ஆவார்கள்.”
“அப்படியா?பாருங்கள்… ஒரு காலத்தில் எனக்கே சீட் வாங்க முடியாதிருந்த என்னால், இன்று ஒரு இளம்பெண்ணுக்கோ, இளைஞருக்கோ சீட் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விட்டேன். ’இளமையிற் கல்’ என்பார்கள். இளமையில் வித்தைகளைக் கற்றுக் கொண்டால் அது ஆயுளுக்கும் கூட வந்து காப்பாற்றும். எனக்குப் பதிலாக 20 வயது இளைஞரோ,
இளம்பெண்ணோ இந்த சீட்டைப் பெற்றால் அவர்கள் ஆயுளுக்கும் மக்களுக்கு மருத்துவத் தொண்டு ஆற்றிட இயலும். எனவே,பொறுப்பில் இருக்கும் நீங்கள் இந்த என் சீட்டைத் தகுதியுள்ள ஒருவருக்கு அளித்து உதவுங்கள்! நீங்கள் என்னிடம் காட்டிய அன்புக்கு என்றும் நன்றியுடையவளாக இருப்பேன்.” கூறி விட்டு பார்வதி எழும்ப,போர்டு மெம்பர்கள் அனைவரும்,தலைவர் உட்பட எழுந்து நின்று கைதட்டி, அவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
அவர் உள்ளே வந்தபோது காட்டிய மரியாதையைக் காட்டிலும் பன்மடங்கு மரியாதை அவரின் இந்த முடிவுக்கு அவர்கள் அளித்ததை,அந்தக் கை தட்டல்கள் வெளிப்படுத்தின.
அவர் வெளியே வந்த போது இளைஞர் பட்டாளம் அவரைச் சூழ்ந்து கொள்ள, அவர்களோடு சேர்ந்து அவரும் இளைஞராகிப் போனார்!
-என்றும் மாறா அன்புடன்,
-ரெ.ஆத்மநாதன்,
காட்டிகன்,சுவிட்சர்லாந்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.