வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
பாம்பு.. பாம்பு.. என்று அறைக்குள்ளே இருந்து அப்பாவின் அலறல் சத்தம் கேட்டு, சலனமில்லாமல் ஹாலில் உட்கார்ந்து இருந்தனர் அருணும் அவனது மனைவி செல்வியும். சிறிது நேரத்திற்கு பிறகு அப்பாவின் அலறல் சத்தம் நின்றது. செல்வி கேட்டாள்: இப்படியே இருந்தா என்னங்க பண்றது? அதான் எனக்கும் புரியல என்றான் அருண். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க... ஒரு நல்ல மனநல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனா அப்பா குணமடைந்து விடுவார் என்றாள் தயக்கத்தோடு...
சரி செல்வி.. அதுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றான் அருண். அருணின் அம்மா இறந்த பிறகு... அப்பாவின் மனநிலை சரியில்லாமல் போக ஆரம்பித்துவிட்டது. அதற்கும் காரணம் உண்டு..
அப்பாவுடன் 35 வருடங்கள் கூடவே வாழ்ந்தவள் அம்மா கமலா. அப்பாவை காதல் திருமணம் செய்து கொண்டு வந்தவள், அவருடனே வாழ்ந்து தன் இறுதி மூச்சு வரை கூடவே இருந்து மறைந்தவள்.

அப்பாவின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டவள். அதிகமாக எதிர்த்தும் பேசமாட்டாள். அப்பாவிற்கு என்ன பிடிக்கும்... எந்த நேரத்தில் சாப்பிடுவார்.. என்பதையெல்லாம் புரிந்து கொண்டு அந்தந்த நேரத்தில் தயார் செய்து கொடுத்து விடுவாள். அப்பாவும், தன்னை நம்பி வந்தவளுக்காக, வாழ்ந்தவர் தானே. ஏதும் பெரியதாக தன் மனைவியை அவர் குறை சொல்லியதில்லை. இருவரும் மகிழ்ச்சியாக 35 வருடங்கள் இணைந்து வாழ்ந்தார்கள். அதற்கு சாட்சிதான் மகன் அருண். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது அவர்களின் வாழ்க்கை. முதல்முறையாக ஒரு நாள் திடீரென்று அம்மாவிற்கு நெஞ்சுவலி வந்துவிட மருத்துவரிடம் அழைத்துப்போய் காண்பித்தார்கள்.
பயப்பட ஏதுமில்லை என்று கூறி மருந்துகளை கொடுத்தார் மருத்துவர். சில நாட்களுக்குப் பிறகு இரவு படுக்கையில் படுத்தவள், காலையில் எழுந்திருக்கவே இல்லை. பதறிப்போய் மருத்துவரை அழைத்தார்கள். மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு அதிகாலையில் ஹார்ட் அட்டாக் வந்து, தூக்கத்திலேயே உயிர் பிரிந்து இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை கூறினார். தன் வாழ்நாள் முழுவதும், தன் தேவைகளை தானே செய்து கொண்டு விடைபெற்றாள் அம்மா கமலா. அன்று அம்மாவின் உடலைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்த அப்பா, அன்று முழுவதும் அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை.

அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார் என நினைத்து, அன்று அதை யாரும் பெரியதாக நினைக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல விபரீதம் புரிந்தது. யாரிடமும் பேசுவதில்லை. சரியாக சாப்பிடுவதும் இல்லை. வீட்டின் பின்புறம் உட்கார்ந்து கொண்டு அம்மா துணி துவைத்துக் கொண்டிருந்த இடத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பார். அங்கு அம்மாவின் உருவம் அவருக்கு தென்படுகிறதோ? என்னமோ?... அருணின் மனைவி செல்வியும் எவ்வளவோ அனுசரித்துப் போய்க் கொண்டிருக்கிறாள். அவளும் என்ன செய்வாள் பாவம்... கைக்குழந்தையை வைத்துக்கொண்டு... தன்னால் முடிந்தவரை மாமனாரை பார்த்துக் கொள்கிறாள்.
நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமாக போகிறதே.. அப்பா திடீர் திடீர் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். இனியும் தாமதிப்பது சரியில்லை என்று நினைத்து மறுநாளே பிரபல மனநல மருத்துவரிடம் சென்று தன் அப்பாவின் நிலைமையைப் பற்றி கூறினான் அருண். அனைத்தையும் கேட்டுக்கொண்ட மருத்துவர், மனைவியின் பிரிவை அறிவு ஏற்றுக் கொண்டாலும், மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அதனாலதான் அவருக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. பயப்பட வேண்டாம். அவரை இங்கு அழைத்து கொண்டு வாருங்கள்.

ட்ரீட்மெண்ட் கொடுத்தால் குணமாக்கி விடலாம் என்றார் மருத்துவர். சரி என்று கூறி விட்டு வீட்டுக்கு வந்தான் அருண். மனைவி செல்வியிடம், மனநல மருத்துவமனைக்கு, அப்பாவை கூட்டிட்டு போனால், என்ன நினைப்பார்? தன்னை மகன் பைத்தியம் என நினைக்கிறானோ? என்று வருத்தப்படுவாரே... அதுமட்டுமில்லாமல், ட்ரீட்மென்ட் தாங்கும் நிலையில் அவரின் உடல்நிலை இல்லையே... என்று வருத்தப்பட்டான் அருண்.
தன் கணவனின் நிலையை உணர்ந்து, சரி விடுங்க... கொஞ்ச நாள் போகட்டும் என்று ஆறுதல் சொன்னாள் செல்வி. சில நாட்களுக்குப் பிறகு... நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் அப்பா. மெதுவாக தவழ்ந்து,தவழ்ந்து அவரின் பாதத்தை தொட்டது அருணின் குழந்தை. குனிந்து பார்த்தார். அவரைப்பார்த்து சிரித்தது குழந்தை. அதைப்பார்த்து இவரும் புன்னகைத்தார். பேத்தியை எடுத்து கொஞ்சினார்.
இருவருக்குள்ளும் ஏதோ புரிதல் நடந்தது. நடப்பவற்றை தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி. பின்பு, தினமும் தாத்தா,பேத்தி கொஞ்சல்களை அருணிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்தாள் செல்வி. இப்படியே சில நாட்கள் செல்ல... ஒருநாள் இரவு... என்னங்க... மணி பத்து ஆகுது..

அப்பா தூங்கும் நேரம். போய் குழந்தையை தூக்கிட்டு வாங்க என்று அருணிடம் சொன்னாள் செல்வி. சரி என்று அப்பாவின் அறைக்கு அருகில் சென்று மெதுவாக கதவை திறந்து பார்த்தான் அருண். அங்கே... பேத்தியை தன் முதுகில் உட்கார வைத்து, கைகளை தரையில் வைத்து தலையை ஆட்டிக்கொண்டே யானையைப் போல் ஊர்ந்து சென்று விளையாடிக் கொண்டிருந்தார் அப்பா. உடனே மெதுவாக கதவை மூடிவிட்டு... அப்பாவைத் தேடி, அம்மா வந்து விட்டாள் பேத்தி வடிவில்... என்று மகிழ்ச்சியுடன் நினைத்து பெருமூச்சு விட்டான் அருண். இனி ட்ரீட்மெண்ட் தேவைப்படாது அப்பாவிற்கு. மனிதன் முதுமையில் தவறவிடக் கூடாத செல்வம் மனைவி அல்லவா!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.