வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
வழக்கம் போலவே அன்று அவன் வீட்டுக்குள் நுழையும் போது வீடு ஒரே களேபரமாயிருந்தது. தினமும் நடக்கும் சண்டைதான் இது. அம்மாவுக்கும் கீதாவுக்கும் ஏனோ ஒத்தே போவதில்லை. அலுவலகத்திலிருந்து வரும்போதே இன்று என்ன பிரச்சினையோ! என்று நினைத்துக் கொண்டேதான் வருவான்.
"என்ன ஆச்சு?"
அழுது சிவந்த முகத்துடன் வெளிப்பட்டாள் கீதா.
"நீங்களே சொல்லுங்கள்! கல்யாணத்துக்கு போகணும் . உங்களுடைய இரட்டை வேடம் சங்கிலியை கொடுங்கள். போட்டுக் கொண்டு போய்விட்டு வந்து தந்து விடுகிறேன் என்றேன். தரமுடியாதாம். எவ்வளவு செய்கிறேன் ஒரு நாளைக்கு இவர்களுக்கு. எனக்கு இரவலாக கொடுக்க கூட மனசு வரமாட்டேன் என்கிறதே!"
கடுகாய் பொரியும் அவளையே பார்த்தான் தியாகு.

மாமியாரைப் பிடிக்காது . ஆனால் அவள் நகைக்கு மட்டும் சொந்தம் கொண்டாடும் இவளைப் போல் எத்தனை பெண்கள்.
இவர்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் அப்பாவிக் கணவன்கள்.
ரொம்ப நியாயவாதிகள் மாதிரி பேசிக்கொண்டே முதுகில் குத்தும் வஞ்சகம். கேட்கவே முடியாது.
அம்மா ஏன் தர மறுக்கிறாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அப்பா முதன்முதலில் வாங்கிக் கொடுத்தது என்று அருமையாக வைத்துக் கொண்டிருக்கிறாள். அதைப் போய்க் கேட்டால்!
"இதோ பாருங்கள்! இன்றைக்கு ஏதாவது ஒன்று முடிவாகணும். எனக்கு நகை தரமுடியாது என்றால் இனி நான் இவர்களுடன் இருக்கமாட்டேன். நான் வேண்டுமா , அம்மா வேண்டுமா, என்று நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்'
தீர்மானமாக சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள் அவள்.
"பாட்டி ஏன் பேசமாட்டேங்கிறாங்க! "ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட பாபுவை பார்த்தான் அவன். அப்படியே அப்பா ஜாடை என்று அம்மா அவனைக் கொஞ்சிக்கொண்டே இருப்பாள்.
அதுவும் கீதாவுக்கு பிடிக்காது. தான் ,தன் புருஷன், தன் மகன் மூவர்தான் அவள் குடும்பம் . மாமியார் மூன்றாம் மனுஷி.. சொன்னதை செய்யவேண்டும் .அதற்கு மேல் எந்த உரிமையும் எடுத்துக்கொள்ள கூடாது.

Representational Imageஆனால் பாபு பாட்டியிடம்தான் அதிகம் ஒட்டுவான். தினமும் கதை கேட்காமல் தூங்கமாட்டான். ராஜாராணிகதை சிங்கம் புலி கதை என்று சொல்லி தூங்க வைப்பாள் அவள்.
மூன்றாவதுதான் படிக்கிறான் என்றாலும் அசாத்திய புத்திசாலித்தனம்.
சிறுவனின் கண்களில் தெரிந்த ஏக்கம் அவனை வருத்தவே அம்மாவைத் தேடிச் சென்றான் அவன்.
உள்ளறையில் படுத்திருந்தாள் அவள்.
"உடம்பு சரியில்லையாம்மா?"
அவள் எழுந்து உட்கார்ந்தாள்.
"தியாகு , நீ என்ன நினைத்தாலும் சரி , நான் நகையைக் கொடுக்க மாட்டேன்".
"அம்மா , எனக்கு உன் மனசு புரியுது. ஆனால் அவளை எப்படி சமாதானப்படுத்துவது சொல்லு. ஒரு இரண்டு நாளைக்கு இரவலாகத்தானே தரப் போகிறாய்?"
அவனையே தீர்க்கமாக பார்த்தாள் அவள்.
"போன வருடம் போனஸ் வந்ததென்று கொடுத்தாயே! அதை அவள் என்ன செய்தாள்!
நகை வாங்கிக் கொள்ள சொல்லித்தான் கொடுத்தேன். ஆனால் அவள் புடவை எடுத்துக் கொண்டாள். அதற்கென்னம்மா இப்போது!"
மொத்தமாக பணம் வரும் போது நகை வாங்கிக்கொள்ள தெரியவில்லை. பத்து பட்டுப் புடவையோடு மேலே மேலே புடவை வாங்கி அடுக்குவானேன் என்று!"
அவள் மௌனமாகி விடவே திரும்பிப் பார்த்தான் அவன்.
வாசலில் நிழலாடியது. கீதாதான்.
"ஆமாம்,புடவை எடுத்துக் கொண்டேன்தான்.
அதைப்பற்றி உங்களுக்கு என்ன? உங்க நகையை கொடுக்க முடியுமா முடியாதா?"

இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தான் தியாகு. அம்மா விட்டுக் கொடுக்க கூடாதா என்றிருந்தது அவனுக்கு. அதே சமயம் இவள் கைக்கு போய்விட்டால் திருப்பி வாங்குவதும் கஷ்டம். அதுவும் அவனுக்கு புரிந்தது.
இது எதையும் சட்டை பண்ணாமல் பாட்டியின் மடியில் போய் படுத்துக் கொண்டான் பாபு. வாஞ்சையுடன் அவனைத் தடவிக் கொடுத்தாள் அவள் .
"போதும் உங்கள் கரிசனம்! பெத்த பெண்ணுக்கு மேல பார்த்துக்கறேன் . என்கிட்டே அன்பு இல்லை . என் பிள்ளைகிட்ட மட்டும் என்ன வேண்டியிருக்கு!"
வெடுக்கென்று பிடுங்கியவள் பாபுவை வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து பிரித்து உள்ளே அழைத்துப் போனாள்.
தியாகு எதுவுமே செய்ய முடியாமல் திண்டாடினான். எப்படியாவது நகையை வாங்கிவிட அவள் போடும் நாடகம் அவனுக்கும் புரிந்தது.
அம்மா நிச்சலனமாக அமர்ந்திருந்தாள்.
"டேய் தியாகு ! என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு!"
'அம்மா' என்று அதிர்ந்தான் அவன்.
"நிஜமாகத்தான் சொல்றேன் ! எவ்வளவு நாளைக்கு நீயும் கஷ்டப்பட்டு நானும் மனசு வேதனைப்பட முடியும்! "
"இன்னிக்கு சங்கிலி ! நாளைக்கு வேற ஏதாவது பிரச்சினை வரும் .தேவையே இல்லை".
அழுத்தமாக சொன்ன அம்மாவை வேதனையுடன் பார்த்தான் மகன்.
இன்றைக்கும் எத்தனையோ வீடுகளில் நடக்கும் போராட்டம்தான்.
பலரது கண்ணீர்க்கதைகள் வெளியே வருவதில்லை. எந்த கோர்ட்டும் இதில் நியாயம் சொல்லமுடியாது. முதலையின் பிடியில் சிக்கித் தரையா தண்ணீரா என்று தவிக்கும் எத்தனையோ ஆண்மகன்களில் ஒருவனாக அவனும் நின்றான்.

"உன் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை தியாகு . வருத்தப்படாதே. சில முடிவுகள் கண்டிப்பாக எடுத்துத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. உனக்கும் நிம்மதி இல்லை. எனக்கென்ன வயசாச்சு! எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து விட்டுப் போகிறேன்'.
அவன் மனம் சமாதானம் அடையவில்லை.
ஆனால் அம்மா பிடிவாதமாக கிளம்பிப் போனாள் . மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ பாபுவுடன் போய் பார்த்து வருவான்.
கீதா அதற்காக எந்த விதத்திலும் வருத்தப்படவில்லை. சங்கிலியை கொடுத்துவிட்டு இங்கேயே இருந்திருக்கலாம் நகைதான் பெரிசாப் போச்சு என்று ஒருதரம் சொன்னாள். தியாகு வாயே திறக்கவில்லை.
மௌனமாக ஒதுங்கிக் கொண்டான்.
அவன் அலுவலகத்திலிருக்கும்போது ஃபோன் வந்தது அம்மா அழைப்பதாக.
பதறிப்போய் ஓடினான் அவன் .
போனதரம் பார்த்ததற்கு அம்மா மிகவும் தளர்ந்திருந்தாள்.
"உடம்பு சரியில்லை. உன்னை பார்க்க வேண்டும் போலிருந்தது".. நலிந்த குரலில் சொன்ன அவளை கவலையுடன் பார்த்தான் அவன்.
"உன்னிடம் சில விஷயங்களை பேச வேண்டும்.அதற்குத்தான் கூப்பிட்டேன் "
"என்னம்மா!" என்றபடி அருகில் அமர்ந்தான் அவன்.
"இந்த பையில் நான் சிறுக சிறுக சேர்த்த பணம் இருக்கிறது. குறைந்தது ஒரு லட்சம் ஆவது இருக்கும். அவள் கேட்ட சங்கிலியும் இதில் இருக்கிறது"
"என்னம்மா இதெல்லாம்?"
அதிர்ச்சியுடன் கேட்டான் அவன்.
"கண்ணா , செலவு செய்யத்தான் பணம். ஆனால் ஆடம்பரத்துக்கும் அவசியத்துக்கும் வித்தியாசம் தெரியணும். மழை வரபோது வர வானவில் அழகா இருக்கும் . ஆனால் உடனே கலைந்து போய்விடும்.மற்றவர்கள் பாராட்டுக்காக செய்யும் செயல்களும் அப்படித்தான். நமக்கென்று ஒரு குறிக்கோள் வேண்டாமா?

அப்போதே நகையை கொடுத்திருக்கலாம். மறுபடி வேறு டிஸைன் பண்ணுகிறேன் என்று மாற்றுவாள். தேவையே இல்லாத செலவுகளை தவிர்க்கலாம். சொல்லிப் பிரயோசனமில்லை.
எனக்கு நீ நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். பாபுவின் படிப்புச் செலவுக்கு மட்டும் தான் இந்த தொகை பயன்பட வேண்டும்.
மூச்சு விடாமல் அவள் பேசியதை கேட்டு திகைத்துப்போய் நின்றான் அவன்.
எத்தனை தீர்க்கமாக யோசித்திருக்கிறாள்!
'அம்மா !'என்று அழுதபடியே தன் தோளில் சாய்ந்த மகனை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தாள் அந்த தாய்.
இப்படி ஒரு தாயுடன் சேர்ந்து இருக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டான் அந்த ஆண்மகன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.