Published:Updated:

இசக்கியின் ஆசை - சிறுகதை | My Vikatan

Representational Image

“இப்பம் எதுக்கு இம்புட்டு கோவப்படுதீய? இசக்கி என்ன தப்பா கேட்டுட்டான்? அவன் வயசுப் பயலுக எல்லாம் என்ன செய்தாகன்னு பார்த்துட்டு தானே இருக்கான். அவனுக்கும் ஆசை வரது தப்பில்லையே?”

Published:Updated:

இசக்கியின் ஆசை - சிறுகதை | My Vikatan

“இப்பம் எதுக்கு இம்புட்டு கோவப்படுதீய? இசக்கி என்ன தப்பா கேட்டுட்டான்? அவன் வயசுப் பயலுக எல்லாம் என்ன செய்தாகன்னு பார்த்துட்டு தானே இருக்கான். அவனுக்கும் ஆசை வரது தப்பில்லையே?”

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“யம்மா... நாம ஊருக்குப் போயிட்டு வந்ததை என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு வாரேன் மா.”

“அண்ணே, நானும் வாரேன் இரியேன். ஓடாதே...”

துள்ளிக் குதித்து சந்தோஷமாக ஓடும் தன் குழந்தைகளை மன நிறைவுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பொன்னி.

மூவரையும் மகிழ்ச்சியாகப் பார்த்த செந்தில், பின்னாலிருந்து வந்து தன் மனைவியை அணைத்துக் கொண்டான்.

“ஏ புள்ள பொன்னி, என்ன... புள்ளைங்களை இம்புட்டு ரசிச்சு பார்த்துட்டிருக்கே. ஊருக்குப் போயிட்டு வந்த சந்தோஷம் மனசுல நிறைஞ்சிருக்கா?”

“ஏன் மாமா, உங்களுக்கு சந்தோஷமா இல்லையா?”

“ஏட்டி, ஐயாவப் பார்த்தா தெரியலையா? நெசமாலுமே ரொம்ப திருப்தியா இருந்துச்சு புள்ள. செலவை யோசிச்சிருந்தா இந்த சந்தோஷம் கிடைச்சிருக்காதுல்லா... என்ன...”

தன் அணைப்பை இறுக்க முயன்ற கணவனைத் தள்ளி, அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்தாள் பொன்னி.

Representational Image
Representational Image

“மாமோய்... அப்டியே நாற்காலில உக்காந்து மோட்டு வளையப் பாத்துட்டே ஊருக்குப் போறதுக்கு நீங்க எம்புட்டு யோசிச்சீக, நான் எவ்வளவு பேசினேன், ஊருக்குப் போய் எம்புட்டு சந்தோஷமா இருந்தோம்னு எல்லாத்தையும் ஒரு தரம் நினைச்சுப் பாருங்க. நான் அதுக்குள்ளே சோலிய முடிச்சுட்டு வாரேன்.”

பொன்னி உள்ளே போக, சென்ற வாரம் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தான் செந்தில்.

சென்ற வாரத்தில் ஒரு நாள்...

“யப்பா... பொறவு முடிவு சொல்தேன்னு சொன்னீயளே... எப்பப்பா ஊருக்குக் கிளம்பணும்?”

“எலேய், ஒரு வாட்டி சொன்னா புரியாதா? நானும் அம்புட்டு நேரமா பொறுமையா சொல்தம்லா. மறுபடி மறுபடி வந்து அதே கேள்வியக் கேட்டுகிட்டே இருக்கே. வளர்ந்த பய தானேல நீ? உன் தங்கச்சி தான் வெவரம் இல்லாத புள்ள. அது தான் கேக்குதுன்னா உனக்கு அறிவில்லையா? ச்சும்மா.... நொய்நொய்னு நச்சிட்டு. போலே அங்கிட்டு, இன்னொரு முற இப்படிக் கேட்டுட்டு வந்தேன்னு வை, கொன்டே போட்ருவேம்ல.”

Representational Image
Representational Image

அப்பாவின் திடீர் கோபத்திற்கான காரணம் தெரியாமல், மிரண்டு ஓடினான் ஏழாம் வகுப்பு படிக்கும் இசக்கி.

விஷயம் இதுதான். இசக்கிக்கும், மூன்றாம் வகுப்பு படிக்கும் அவன் தங்கை செல்விக்கும் இப்போது பள்ளி விடுமுறை. இந்த விடுமுறைக்காவது எங்காவது சுற்றுலா போக வேண்டும் என்று இசக்கி தன் அப்பாவிடம் இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

ஆட்டோ ட்ரைவரான செந்தில், தன் மகனிடம் ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தான். இன்று மறுபடியும் மகன் கேட்டதும் கோபத்தில் கத்திவிட்டான்.

கணவன் கத்தியதையும், மகன் பயந்துபோய் பின்வாங்கியதையும் கவனித்துக் கொண்டிருந்த பொன்னி, மெதுவாக கணவனிடம் வந்து ஆரம்பித்தாள்.

“மாமா, ஏன் இப்புடிக் கோவப்படுதீய? பொறுமையா சொல்லலாம்லா?”

“என்னத்தடி பொறுமையா சொல்லச் சொல்தே? ஏழாப்பு படிக்கற பயலுக்கு வீட்டு நெலம தெரிய வேண்டாமா? நாம ஏற்கனவே கேட்டதுக்கு அப்பா சரியா பதில் சொல்லலையே, மறுபடி கேக்கக் கூடாதுன்னு உம்மவனுக்கு சொல்லிக் கொடுக்க மாட்டியா?”

“இப்பம் எதுக்கு இம்புட்டு கோவப்படுதீய? இசக்கி என்ன தப்பா கேட்டுட்டான்? அவன் வயசுப் பயலுக எல்லாம் என்ன செய்தாகன்னு பார்த்துட்டு தானே இருக்கான். அவனுக்கும் ஆசை வரது தப்பில்லையே?”

“என்ன, மவனுக்கு சப்போர்ட் பண்ணி பேச வந்துட்டியோ?”

Representational Image
Representational Image

“இதுல சப்போர்ட் பண்ண என்ன இருக்கு? இசக்கிக்கு வெவரம் தெரிஞ்சதுல இருந்து அவன எங்கனயும் கூட்டிப் போவல. வருசா வருசம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி சமாளிக்கறீக. அந்தப் பயலுக்கும் மனசுல ஆசை இருக்காதா? ஏதோ நாலு எடம் சுத்திப் பாக்கணும்னு ஆசைப்படுது நம்ம புள்ள. நம்மால முடிஞ்ச எடத்துக்குக் கூட்டிட்டுப் போகலாம்லா?”

“ஏட்டி பொன்னி, இது தேவையில்லாத செலவுன்னு உனக்குக் கூடவா தெரியல. அவன் தான் கேக்காம்னா நீயும் வந்து பேசுதே...”

“மொதல்ல கோவத்த விட்டுட்டு நா சொல்றதக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க மாமா.”

“என்ன பெருசா சொல்லப் போறே?”

“மாமா, வருசம் முச்சூடும் எங்கனயாவது போய்ட்டிருக்கமா? வருசத்துல ஒரு முறை வெளியூரு போய் சுத்திப் பாத்துட்டு வந்தா, புள்ளைங்க அதை நெனச்சுட்டே வருசம் முச்சூடும் ஓட்டிரும். அவனும் மூணு நாலு வருசமா கேட்டுட்டு இருக்கான். நீங்க கூட்டிப் போகாம ஏமாத்தறீக. சும்மா பக்கத்துல போடற பொருட்காட்சிக்குக் கூட்டிப் போறது, பூங்காவுக்குப் போறதுன்னு ஏமாத்திட்டு இருக்கீக. எங்கனயாவது போய்ட்டு வாரதால என்ன கொறஞ்சுடும்?”

“ஏ புள்ள பொன்னி, வெவரம் தெரியாமத் தான் பேசுவியா நீ? ஊருக்குப் போய் சுத்திப் பாக்க துட்டு வேணும்லா? இங்கன இருந்து போக்குவரத்துச் செலவு, அங்கன தங்கற செலவு, சாப்பாட்டுச் செலவு, பொறவு போற எடத்துல அம்மையும் புள்ளைங்களும் சும்மா வருவீகளா? அங்கன அதைக் கண்டா வாங்கணும், இதைக் கண்டா வாங்கணும்னு நச்சரிப்பீக. அந்தச் செலவு வேற. எல்லாத்தையும் முடிச்சு ஊரு வந்து சேரும்போல கைல ஒண்ணும் மிஞ்சாது. அம்புட்டு துட்டுக்கு எங்க போறதுட்டி?”

“மாமா, என்னிக்குத் தான் நமக்கு செலவு இல்லாம இருந்திருக்கு. அதுக்காக சாப்பிடாம இருக்கமா? துணிமணி வாங்காம இருக்கமா? எல்லாம் செய்தோம்லா. அதென்ன வருசத்துக்கு ஒருவாட்டி ஊருக்குப் போய்ட்டு வாரதுக்கு மட்டும் இம்புட்டு சலிச்சுகிடுதீக. இசக்கிக்கு ஆசையா இருக்கும்லா. செல்வியும் இப்பதான் வளர்ந்து வரா. ஏதோ நாலு எடத்துக்குக் கூட்டிட்டுப் போனா தானே சந்தோசம் இருக்கும்.

Representational Image
Representational Image

எல்லாத்தையும் வெறும் செலவுக் கணக்கா மட்டும் பாக்காதீக. பொறவு வாழ்க்கைல எதுவுமே மிஞ்சாது. எந்த எடத்துக்குப் போய்ட்டு வந்தா நம்ம வசதிக்கு ஒத்து வரும்னு நாம ரெண்டு பேரும் தான் பேசி முடிவு செய்யணும். சும்மா ஒரே பிடியா போகவே கூடாதுன்னு அடம் பிடிக்காதீக. ஏன்.... உங்ககூட ஆட்டோ ஓட்டற பிரபு அண்ண வருசத்துக்கு ரெண்டு வாட்டி போய்ட்டு வருது. கந்தசாமி அண்ணன்கூட போன வாரம் குடும்பத்தோட போச்சு. அவங்களுக்கெல்லாம் செலவில்லையா?

செலவையும் மீறி எல்லாரும் சேர்ந்து ஒரு எடத்துக்குப் போய்ட்டு வந்த சந்தோசம் இருக்கில்ல மாமா, அது சொன்னாப் புரியாது மாமா.”

“நீ என்ன வேணா சொல்லு பொன்னி, எனக்கு அம்புட்டு செலவு செய்ய விருப்பமில்ல. இங்கன பக்கத்துல இருக்கற கோவிலுக்குப் போய்ட்டு வரலாம். நம்ம ஆட்டோலயே கூட்டிட்டுப் போறேன்.”

“மாமா, வாழ்க்கைல எல்லாத்துக்கும் வரவு செலவு கணக்கு பார்த்துட்டிருந்தா நிம்மதியா வாழ முடியாது. இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோசத்தக் கூட தொலச்சுட்டு வாழறதுல அர்த்தமே இல்ல மாமா.

அதிக செலவில்லாம போய்ட்டு வர நான் ஒரு யோசனை சொல்லட்டுமா மாமா? எங்க வீட்டுல்ல என் ரெண்டு அண்ணன்களும் குடும்பத்தோட வேன் வச்சுட்டு அக்கம்பக்கம் ஊருக்கு சுத்திப்பாக்கப் போறாக. அவுகளோட சேர்ந்து போனா செலவைப் பங்கு போட்டுக்கலாம். நம்ம புள்ளைங்களுக்கும் கூட விளையாட, பொழுதுபோக்க அண்ணன் புள்ளைங்க இருக்கு. ஒரு வாட்டி இப்படித்தான் போய்ப் பார்ப்பமே மாமா. கொஞ்சம் கோவப்படாம யோசிச்சுப் பாருங்க.”

ஒரு நாள் யோசனைக்குப் பிறகு செந்திலுக்கும் ஆசை தொற்றிக் கொண்டது.

Representational Image
Representational Image

“ஏ புள்ள, நீ சொன்னதுல இருந்து எனக்கும் ஆசையா இருக்கு. உங்க அண்ணன்கிட்ட பேசிப்பாரு. நாமளும் அவங்ககூட போய்ட்டு வருவோம். எலேய் இசக்கி... இங்கிட்டு வா...”

பயத்துடன் அப்பாவிடம் வந்த இசக்கியை இழுத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான் செந்தில்.

“எலேய்... பயந்துட்டியா... அடுத்த வாரம் ஊருக்குப் போலாமா? உங்க மாமா, ஆச்சி, தாத்தா எல்லாம் சேர்ந்து போலாமா?”

கண்களில் சந்தோஷம் மின்ன தலையாட்டினான் இசக்கி. செல்வியும் ஓடி வந்து அப்பாவின் மடியில் உட்கார்ந்து கொண்டாள்.

அன்று வீட்டில் தொற்றிக் கொண்ட சந்தோஷம் ஊருக்குப் போன போதும், ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகும் அனைவரிடமும் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஸ்ரீவித்யா பசுபதி

சென்னை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.