Published:Updated:

அக்கா என்னும் தேவதை! - பிரிவின் வலி | My Vikatan

Representational Image

அத்தைக்கு எங்களை வச்சுக்கறதில துளிக்கூட இஷ்டமில்லையாம். மாமாவே ஊர் வாய்க்கு பயந்துதான் வச்சுக்கிட்டாராம். எல்லாம் இரண்டாவது பெரிய பிரிவை சந்திச்சு நான் துடிச்சுப்போய் அன்ன ஆகாரமில்லாம துவண்டு கிடந்தபோது அக்கா சொல்லித் தெரிஞ்சுகிட்டேன்.

Published:Updated:

அக்கா என்னும் தேவதை! - பிரிவின் வலி | My Vikatan

அத்தைக்கு எங்களை வச்சுக்கறதில துளிக்கூட இஷ்டமில்லையாம். மாமாவே ஊர் வாய்க்கு பயந்துதான் வச்சுக்கிட்டாராம். எல்லாம் இரண்டாவது பெரிய பிரிவை சந்திச்சு நான் துடிச்சுப்போய் அன்ன ஆகாரமில்லாம துவண்டு கிடந்தபோது அக்கா சொல்லித் தெரிஞ்சுகிட்டேன்.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எத்தனையோ பிரிவுகளை சந்தித்து இதயம் நொறுங்கிப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் அணைத்து ஆறுதல் படுத்தவும், அழுத விழி துடைக்கவும் அக்கா அருந்ததி இருந்தாள்.

இப்போ அக்காவைப் பிரிந்து ஐம்புலன்களுமே அடங்கிப் போய்க்கிடக்கிறேன். ஆற்றுவார் தேற்றுவார் இன்றி.

என் குழந்தைப் பருவத் தோழிகள் நந்தனா, ரக்ஷிதா, இவர்களோடு ஊரில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தபோதுதான், திடீரென்று அப்பா காலில் ஏதோ குத்தியது கவனிக்காமல் அலட்சியமாக விட்டிருந்ததில், டெட்டனஸ் வந்து, எவ்வளவோ செலவு செய்தும் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டார்.

இதெல்லாம் பின்னர் நான் வளர்ந்தபின் தெரிந்து கொண்ட விஷயங்கள். அப்போது அந்த பருவத்தில், அப்பா சாமிகிட்ட போயிட்டாருன்னுதான் சொன்னாங்க.

Representational Image
Representational Image

ஏன் போனாரு நிறையப் பணம் வாங்கிட்டு வரப் போயிருக்காரா என்னையும் கூட்டிகிட்டு போயிருக்கலாம்ல என்று நான் சொல்ல அம்மா என் வாயைப் பொத்தி தலையில் அடித்துக் கொண்டு அழுதார். எதுவும் புரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டுதான் நின்றேன்.

நாட்கள் செல்லச்செல்லத்தான் அப்பா வரவே மாட்டார் என்பதும் நாங்க அந்த ஊரை விட்டு என் நந்தனா, ரக்ஷனாவை விட்டு பிரிஞ்சு மாமா வீட்டுக்கே வந்திடப் போறோம்னும் தெரிஞ்சுது.

ரொம்ப அழுதேன் மாமா வீட்டுக்கு வந்தபிறகு கூட வெகு நாள் வரை அந்தப் பிரிவின் வலி இருந்துகொண்டேதான் இருந்தது. யாரோட விளையாடறது, என்ன விளையாடறது எல்லாமே பிரமிப்பா இருந்தது. எனக்கு அப்ப அஞ்சு வயசுதான். அக்காவுக்கு பதினோறு வயசு. அவதான் என்னை அரவணைச்சு தைரியம் கொடுத்து ஒருவழியா அந்த இழப்பிலேருந்து மீட்டுட்டு வந்தா.

Representational Image
Representational Image

அத்தைக்கு எங்களை வச்சுக்கறதில துளிக்கூட இஷ்டமில்லையாம். மாமாவே ஊர் வாய்க்கு பயந்துதான் வச்சுக்கிட்டாராம். எல்லாம் இரண்டாவது பெரிய பிரிவை சந்திச்சு நான் துடிச்சுப்போய் அன்ன ஆகாரமில்லாம துவண்டு கிடந்தபோது அக்கா சொல்லித் தெரிஞ்சுகிட்டேன்.

விபரம் தெரிஞ்ச வயசில திடீர்னு அம்மாவை இழந்து அந்த அதிர்ச்சியில எனக்கு ஃபிட்ஸ் வந்து, பாவம் அக்கா சுமைதாங்கியாவே மாறிட்டான்னுதான் சொல்லனும்.

அப்பதான் அவ எங்கிட்ட சில விஷயங்களைச் சொன்னா. நாங்க வந்தது மாமா அத்தைக்கு பிடிக்கலைன்னும், சரியானபடி சாப்பாடுகூட தரது இல்லேன்னும் அம்மா தன்னை ஒடுக்கிக்கிட்டு எங்க வயிறு காயாம பார்த்துக்கிட்டாங்ககிறதும்.

ஏற்கெனவே அம்மாவுக்கு உடம்பில ஏதோ தொந்தரவு இருந்ததாம். மாமா வீட்டுக்கு வந்தபிறகு பிளட் பிரஷரும் கூடவே அல்சரும் வந்திடுச்சாம்.

அக்கா என்னும் தேவதை! - பிரிவின் வலி  | My Vikatan

நேரம் தவறின சாப்பாடு, வயித்துக்கு காணாத சாப்பாடு, மனசு நிறைய பயமும் பதட்டமும். இதில எக்கச்சக்கமான வேலை. எல்லாமா சேர்ந்து அம்மாவைக் கொண்டு போயிடுச்சு. இனி எப்படி வாழப்போறோம், யாருக்காக வாழப்போறோம்னெல்லாம் தோணுச்சு.

என்ன நம்பிக்கை பிடிமானம் இருக்கு. அஸ்திவாரம் இல்லாத கட்டிடத்தில இருக்கிற மாதிரி ஒரே பரிதவிப்பா இருந்தது.

அக்கா எப்போதுமே அவ மனசில என்ன நினைக்கிறா, எவ்வளவு தவிக்கிறாங்கிறதெல்லாம் எங்கிட்ட காட்டிக்கிட்டதே இல்லை.

அதுக்கு நான் வாய்ப்பே தராம அவளுக்கும் வலி இருக்கும்னு யோசிக்காம நானே அழுது புலம்பிட்டு இருந்ததால, ஷேர் பண்ணிக்கக்கூட வழியில்லாம எல்லா சுமையையும் தானே சுமந்துகிட்டு வந்தவ, அம்மாவின் பிரிவின் போதுதான் பாரம் தாங்காம மனம் பொங்கி வழிந்ததால் கொஞ்சமே கொஞ்சம் எங்கிட்ட கசியவிட்டாள்.

அம்மா எங்களுக்காக கொஞ்சம் நகை சேத்து வச்சிருந்தாங்களாம். அதையெல்லாம் மாமாகிட்ட கொடுத்து எம்பொண்ணுங்களை எப்படியாவது அதுக கால்ல அதுக நிக்கற அளவுக்குப் படிக்க வச்சுடுடா தம்பின்னு சொல்லிக் கொடுத்தாங்களாம்.

அதை ஓரளவுக்கு மாமா கடைப் பிடிச்சாருன்னுதான் சொல்லனும்.

அக்கா என்னும் தேவதை! - பிரிவின் வலி  | My Vikatan

அந்த சொற்ப படிப்புதான் இப்போ இந்த ஹாஸ்பிட்டலில என்னை ரிசப்ஷன்ல உக்கார வச்சிருக்கு.

அம்மாவைப் பிரிந்தபிறகுதான் இந்த வேலைக்கு வந்திருக்கேன். அக்கா இதே ஹாஸ்பிட்டலில லிஃப்ட் ஆபரேட்டரா இருந்தா.

அம்மா இருந்த வரைக்கும் அத்தை, அம்மாவுக்கு வேலை கொடுத்திட்டே இருப்பாங்களாம். அக்காவும் சேர்ந்து செஞ்சு முடிச்சிடுவோம்னு நினைச்சு மளமளன்னு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டு செஞ்சு முடிப்பாளாம். உடனே அத்தைக்கு ஏனோ கோபம் வந்திடுமாம். உடனே மேலே பரண்ல கவிழ்த்து வச்சிருக்கிற பெரிய பெரிய பாத்திரத்தை எல்லாம் அக்காவை மேலே ஏறி இறக்கச் சொல்லி அம்மாவை தேய்ச்சு வைக்கச் சொல்வாங்களாம்.

வீட்டுக்கு முன்னாடி பின்னாடி உள்ள இடங்களையெல்லாம் தினம் ரெண்டு முறை கூட்டனும்பாங்களாம். ஒரு இலை கிடந்தாலும் ஜாடை ஜாடையா பேசுவாங்களாம்.

அம்மா எந்தக் கஷ்டத்தையும் காட்டிக்காம முகஞ்சுளிக்காம செஞ்சு கொடுத்திருக்காங்க. உழைப்புக்கு ஏத்த ஓய்வோ, வயித்துக்கு நிறைவா சோறோ இல்லாமத்தான் அம்மா உடம்பு ரொம்ப கெட்டுப் போயி ஒரேயடியா போயே சேர்ந்திடுச்சுன்னு அக்கா சொல்லி ஒரே ஒரு தடவை அழுதா.

என்னைக்காவது ஒரு நாள் கடவுள் கண்ணைத் திறப்பாரு. அம்மாவை உட்கார வச்சு கவனிச்சுக்கனும்னு நினைச்சேன் எதுவுமே நிறைவேறாம எல்லாமே முடிஞ்சு போச்சேன்னு ரொம்பப் புலம்பினா.

அக்கா என்னும் தேவதை! - பிரிவின் வலி  | My Vikatan

நான் எதுவும் பேசத் தோணாம அழுதுகிட்டே இருந்தேன். அவ தோள்ல சாஞ்சே வளந்திட்டேன். அவளுக்கும் சாஞ்சுக்க ஒரு தோள் வேணும்னு தோணவேயில்லை எனக்கு.

அக்காவோட வேலையையும், பொறுமையையும் பார்த்திட்டு எங்க அப்பா வழி தூரத்து உறவில ஒரு அத்தை வந்து வலிய பொண்ணு கேட்டு எதுவும் எதிர்பார்க்காம, அக்காவை அவங்க பையனுக்கு கட்டிக்கிட்டாங்க.

அத்தையும் செலவில்லாம முடியுதேன்னு சம்மதிக்கவே, கல்யாணம் நல்லபடியா நடந்திடுச்சு.

அக்காகிட்டயோ எங்கிட்டயோ எந்த அபிப்ராயமும் கேக்கலை. கேட்டிருந்தால் மறுத்திருக்கப் போறதில்லை. அக்கா என்னை நினைச்சுதான் ரொம்பவும் கலங்கினா.

என் நிலைமை சொல்லவே வேண்டாம். அக்கா இல்லாம என்னால எப்படி இயங்க முடியும். ஆனாலும் முதல் முறையா என் தோளில் அவளைத் தாங்க முடிவு செய்தேன்.

எதுக்கு இப்ப கலங்குற. அடுத்து எனக்கும் கல்யாணம் நடக்கும் நானும் இங்கிருந்து கிளம்பிடுவேன். தைரியமாப் போயிட்டுவா என்றேன். வேறு பேசத் தெரியலை எனக்கு. முன்னே பின்னே யாருக்காவது ஆறுதலா நாலு வார்த்தை பேசி பழக்கம் இருந்தாத்தானே.

எப்படியோ அக்கா புகுந்தவீடு போய்விட்டாள். நான் நித்தமும் நெருப்பின் மேல்தான் நிற்கிறேன். ஆனால் சுடுதுன்னு சொல்றதுக்குக்கூட ஆளில்லாம. தூக்கம் வர வரைக்கும் நல்லா அழுது குமிக்கிறேன்.

ஆனா ஹாஸ்பிட்டல் போனதும் அக்காகிட்ட ஃபோன் பேசுவேன். அத்தை முன்ன மாதிரி இல்லக்கா என்னன்னு தெரியலை. எண்ணி எண்ணி இட்லி, தோசையெல்லாம் கொடுக்குமில்லை நீ கூட உன்னுடையதுல எங்கிட்ட கொடுத்திட்டு அரையும் குறையுமா தின்னுட்டு படுப்பியே. இப்ப அப்படி இல்லக்கா.

ஃபுல்லா சாப்பாடு போடுது. சாம்பார்ல போடற காயெல்லாம் கண்ணிலேயே காட்டாதில்ல. இப்ப எனக்கு எடுத்து வச்சிருந்து போடுதுக்கா. நான் தனியா இருக்கேன்னு பாவம் பாத்து செய்யுதுன்னு நினைக்கிறேன்.

காரணம் எதுவா இருந்தா என்ன என்னை நல்லாப் பாத்துக்குது. நீ இனிமே என்னைப்பத்தியே கவலைப்பட்டுக்கிட்டு இருக்காம நிம்மதியா இருக்கா என்று சொல்லிவிடுகிறேன்.

பிரிவின் வலி ஆழமாகத் தைத்தாலும், வலிக்குதுன்னு சொல்லிக்கக்கூட முடியாம இருந்தாலும், அக்கா தோளில் கிடந்து அவளை அழுத்தாமல், ஓரளவிற்கேனும் ஆறுதலாக பேசக் கற்றுக் கொண்டு பேசுகிறேனே என்று என்னையே நான் பாராட்டிக் கொள்கிறேன்.

மற்றபடி நிலைமை அப்படியேதான் இருக்கிறது. சீக்கிரம் மாறும்.நிறைய நம்பிக்கையும் இருக்கிறது.

-மைதிலி ராமையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.