Published:Updated:

அருந்ததி! - சிறுகதை | My Vikatan

Representational Image

நாங்கள் பேசிக்கொள்ளாமலே இதயத்தில் காதல் அடிக்கல் நட்டியது எது? பூர்வ ஜென்மம் தொடர்போ? ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ எத்தனை எத்தனை உண்மை . கண் தான் இதயத்தின் சுவரோ? கல் வைத்து சுவர் எழுப்பி கோட்டை கட்டியது காதல்.

Published:Updated:

அருந்ததி! - சிறுகதை | My Vikatan

நாங்கள் பேசிக்கொள்ளாமலே இதயத்தில் காதல் அடிக்கல் நட்டியது எது? பூர்வ ஜென்மம் தொடர்போ? ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ எத்தனை எத்தனை உண்மை . கண் தான் இதயத்தின் சுவரோ? கல் வைத்து சுவர் எழுப்பி கோட்டை கட்டியது காதல்.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்னைக்கு நட்ட நடுவீதியில் விட்டுப் போனவள் கல்யாணத்துக்கு வரமாட்டாள் என நினைத்தேன்.

இன்னைக்கு மண்டபத்தில் முதல் வரிசையில் அழகாக ‘இல்லை இல்லை' கல்யாணப் பொண்ணை விட அழகாக வந்து இருக்கிறாள்.

முதல் வரிசையில் இருப்பது யாரும் இன்னும் இவளை கவனிக்கலையோ? அப்படியே கவனித்தாலும் கல்யாணப் பொண்ணு இவள் என்று நினைத்துக்கொண்டு ‘கலிகாலம் கல்யாணப் பொண்ணுக்கு ஒரு அடக்கம் வேண்டாமா! என்று கரித்துக் கொட்டுவார்களே?

அவள் அடக்கமாக குழந்தை போல கவலையைக் காட்டிக் கொள்ளாமலும் , அலட்டிக் கொள்ளாமலும் உட்கார்ந்திருந்தாள்.

என் மனம் அவளையும் இழுத்துக் கொண்டு இறந்த கால நிகழ்ச்சியை நோக்கி நெடுந்தொலைவு நடந்தது.

இவள் செளமியா. என் நண்பனின் தங்கை.

அவனுடைய அண்ணன் பாலா என்னோடு வேலை செய்கிறான்.

நான் மெக்கானிக்கல் டெக்னீசியன் ; பாலா எலக்ட்ரிக் டெக்னீசியன்.

வேலை தெரியாதவர்களுக்கு இந்த இரு டிபார்ட்மெண்டுகளும் எலியும் பூனையுமாக மோதிக் கொள்ளும் . இங்கு ஒன்று இன்னொன்றை சார்ந்திருக்கிறது என்பது பலப்பேருக்கு தெரிவதுமில்லை புரிவதுமில்லை. அதற்கு நாங்கள் விதிவிலக்கல்ல. ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் பின்னால் விஷயம் தெரிந்த பிறகு நன்கு பரிச்சமாகிவிட்டோம்.

Representational Image
Representational Image

என் வீட்டில் அவனும் ; அவன் வீட்டில் நானும் பரிச்சயமானோம்.

“என்னப்பா நல்லா இருக்கியா? பாலா உன்ன பத்தி அடிக்கடி பேசிக்கிட்டே இருப்பான்” என்று அவனுடைய அம்மா கேள்வியில் தொடங்கி குலம் கோத்திரத்தில் நின்றப் போது ஒரே மரத்தில் முளைத்த வேறு வேறு கிளைகள் என்று தெரியவந்தது. செளமி சிவில் இன்ஜினியரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். எங்களின் புது உறவு அடித்தளம் நன்றாக அமைந்துவிட்டது.

அன்று தான் இருவரும் ஒருவகொருவர் பார்த்துக் கொண்டோம். அந்த கணத்தில் எங்களுக்குள் மின்னல் வெட்டியது. அடிக்கடி கண்களால் மட்டும் பேசிக்கொண்டோம்.

நாங்கள் பேசிக்கொள்ளாமலே இதயத்தில் காதல் அடிக்கல் நட்டியது எது? பூர்வ ஜென்மம் தொடர்போ? ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ எத்தனை எத்தனை உண்மை . கண் தான் இதயத்தின் சுவரோ? கல் வைத்து சுவர் எழுப்பி கோட்டை கட்டியது காதல்.

ஆனால் இருவரில் யார் முதலில் கோட்டை கதவை திறப்பது என்ற போட்டியில் இருவரும் தோற்றுப் போய்

“பாலாக்கும் செளமிக்கும் வரன் பாத்துட்டு இருக்கோம். வரன் அமைந்தால் ஒரே மேடையில கல்யாணம் பண்ற மாதிரி ஒரே யோசனை. உங்க வீட்லயும் உனக்கு கல்யாணம் பேச்சு ஆரம்பிச்சிட்டாங்களாப்பா?” என்று அவளுடைய அம்மா தலையை சுற்றி மூக்கை தொட்டாள்.

“அதெல்லாம் பெரியவங்க பாத்துக்குவாங்கம்மா” சாஷ்டாங்கமாய் சொன்ன பதிலை வைத்து மறுநாளே திமு..திமுனு.. படையெடுத்து வந்தார்கள்.

“வேலைக்கு சேர்ந்து முழுசா ரெண்டு வருஷம் முடியலை அதுக்குள்ள காதல் கேக்குது” என்பதுப் போல அப்பா அம்மாவைப் பார்த்து முறைத்தார்.

Representational Image
Representational Image

அப்பா அவர்களோடு எலியும் பூனையும் போல முறைத்துக் கொண்டதில் மனக்கசப்பு ஏற்பட்டு ஜாதகத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வழியனுப்பினார்.

அவர்கள் அம்மாவின் தூரத்து உறவு என தெரிந்த பிறகு அப்பாவிற்கு மேலும் எரிச்சலூட்டியது. முதல் கோணல் முற்றும் கோணலாய் மாறிப்போனது.

எங்களுடைய நட்பும் திசைமாறி கோணலாய் போனது. அப்பாவின் முரட்டு குணத்தால் பாலாவின் நடவடிக்கை மாறியது. அவனுடைய வீட்டுக்கு போறது நின்று போனாலும் அவளுடைய தரிசனம் நின்று போகவில்லை.

இருபக்கமும் புயலே நின்று தாக்கினாலும் அசைக்க முடியாத கோட்டை எழுந்துகொண்டே இருந்தது.

இவளோட இந்த கோட்டைக்குள்ளேயே குடியிருக்கலாமுனு தோணுது. “லவ் பண்றதுக்கு முடிவில்லை. சாகுற வரைக்கும் இந்த லவ் ஆரவாரம் இல்லாமல் பரபரப்போடு ஒரே டென்ஷனோடு இருக்கணும்.”

“இருக்கலாமென்று” அவள் சொல்லுவாள் ஆனால் சொல்லவில்லை.

எங்கள் இருவருக்கும் டென்த் ரிசல்ட் மாதிரி ஒரே டென்ஷன் அப்பாவின் பதிலுக்காக.

கலாச்சாரம்,பண்பாடு எங்கே தலை தூக்கி இருக்குதோ! அங்கே ஆணாதிக்கம் இருக்கும். என் வீட்டில் அப்பாவின் அதிகார ஆதிக்கம். தலைமுறை தலைமுறையா சுமந்து வந்த கர்வம்,ஆணவம் புள்ளத்தாச்சி மாதிரி சட்டென்று அப்பாவினால் இறக்கி வைக்க முடியாமல் தலைக்கணம் பிடித்து ஆடினார்.

Representational Image
Representational Image

அந்த குடும்பம் அம்மாவிற்கு பிடித்துப் போனதால் “பையனுக்கு ஏத்த குடும்பம்” என அம்மாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல் வேண்டா வெறுப்பாக ஜாதகம் பார்த்தார் அப்பா.

“பெண்ணோட ஜாதகம் திசை கண்ணா பின்னானு இருக்கு. உங்க பையன் ஜாதகத்துக்கு இந்த பொண்ணு ஜாதகம் பொருந்தாது” என்று ஜோசியர் சொன்ன பதிலைக் கேட்டு அம்மா அதிர்ந்து போனாள். கூடவே அடுத்த குண்டையும் எடுத்து அப்பா வீசினார். அதே ஜோசியரிடம் அப்பாவின் அக்கா மகளுடன் முகூர்த்தம் குறிக்கப்பட்ட போது அம்மாவின் இதயத்தில் இறங்கிய குண்டு வெடித்து சிதறியது.

அம்மாவை தாக்கிய குண்டு எங்களையும் தாக்கி கோட்டையில் விரிசல் விழ தொடங்கியது.

முதல் கல்யாணப் பத்திரிக்கை குலதெய்வத்திற்கு.

எனக்கு இப்போ இவள் தான் குலதெய்வம் .

“வணக்கம் அண்ணே! என்னக்கா உடம்புக்கு முடியலையா!” கடையில் வேலை செய்யும் பையன் அக்கறையுடன் கேட்டதனால் அவள் வறட்டு புன்னகை மட்டும் வெளிப்படுத்தினாள்.

“வழக்கம் போல மாதுளை ஜூஸ்,வெஜ் கட்லட் ண்ணே?”

அவனை அங்கிருந்து போக செய்ய சட்டென்று ‘ஆமென்று’ தலையாட்டினேன்.

‘ரெண்டு பேருக்குள்ள ஏதோ சண்டை’ என நினைத்துக் கொண்டு அவன் மௌனமாக நழுவினான்.

மேஜை மேலிருந்த அவள் கையை நழுவாமல் பிடித்துக் கொண்டு “புரிஞ்சுக்கோ செளமி” அவளுக்கு விஷயம் தெரிந்து விட்டது. அவளுடைய முகமே காட்டிக்கொடுக்குது. அவள் தலையில் இருக்கும் மல்லிகை பூ போல முகம் வாடி - இடிந்துப் போய் இருந்தாள். மனதின் பிம்பம் தானே முகம்!

Representational Image
Representational Image

அப்பா போட்ட குண்டால் நாங்கள் பார்த்துப்பார்த்து கட்டிய மனக்கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக இடிந்துக் கொண்டே வந்தது.

இடிந்துப்போன சௌமியா தனக்குள் ‘அழுதுறாத செளமி அழுதுறாத செளமி’ என்று அவள் மனதில் கூவுவது அவளுடைய கை இறுக்கிப் பிடிக்கையில் புரிந்தது.

இவளுக்கு எப்படி புரிய வைப்பது? அப்பா ஆதி மனித பூர்வ வாசம் கொண்டவர் என்று. நான் இருதலைக்கொள்ளி எறும்பாக மாறுவதுப்போல உணர்ந்துக் கொண்டிருந்தேன்.

கடை பையன் வருவதை உணர்ந்து கையை விடுவித்துக் கொண்டு அவன் நகர்ந்ததும் கல்யாணப் பத்திரிக்கையை அவளிடம் நகர்த்தினேன்.

செளமி பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு ‘உனக்கும் எனக்கும் இனி ஒரு சம்மதமும் இல்லை’ என்பதுப் போல கடையை விட்டு வெளியேறி ரோட்டைக் கடந்து திரும்பி கூட பார்க்காமல் ஆட்டோவில் ஏறி சென்றாள். உணர்வோடு கட்டிய காதல் கோட்டை உணர்வற்று சுக்குநூறாக உடைந்தது.

எங்களுடைய நெடுந்தூர பயணத்தை உடைத்துக்கொண்டு நிகழ்காலத்துக்கு வெளியே வந்து விழுந்தது மனம்.

காற்றில் எங்கும் நுண்ணிய பன்னிரும் , சந்தன வாசனையும் மிதந்துக்கொண்டிருந்தது. ஆனால் சாமந்தி பூ வாசனை என் மூக்கை துளைத்துக்கொண்டிருந்தது.

அவளைப் பார்த்த கணத்திலிருந்து மண்டப இரைச்சலும், வாத்தியம் முழுக்கமும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ பாட்டு சத்தமும் எதுவுமே காதுக்கு எட்டாமல் இரத்தம் சுண்டிப் போய் அலங்காரம் செய்யப்பட்ட பிணம் போல் அமர்ந்திருந்தேன்.

‘எழுந்திரு ! எதிர்த்து நிற்போம்.உங்க அப்பாவை எதிர்த்து நிற்கலாம். எதிர்த்து நின்னு போராடலாம். என் வீடு உனக்கு ஆதரவு கொடுக்கும். கை கொடுத்து தூக்கிவிடும்.’ இப்படி தான் சொல்லுவாள் என்று எதிர்ப்பார்த்தேன் அன்று. ஆனால் ஒன்று சொல்லாமல் இன்று மௌனமாக இருக்கிறாள். இதுவே என்னை சுடுகிறது. மௌனம் சுடும்.

அத்திக்குச்சி , எருக்கம் குச்சி , கருங்காலிக் கட்டை , ஆலங்குச்சி , வில்வ குச்சி ,அரசங்குச்சி இடுகாட்டில் தகன மேடை போன்று ஐயர் ஓம குண்டம் ரெடி பண்ணிக்கொண்டே “நான் சொல்ல சொல்ல இந்த அறுக்கரிசியை வாயில் போட்டுண்டு தலையில் தூவிண்டு ஓம குண்டத்தில் போடுங்கோ”

“எத்தனை நாளைக்கு கூட வரும் உன் சொந்தம்? உன் அண்ணன் கல்யாணம் ஆகிற வரைக்கும் ? அதுக்கப்புறம்?”

Representational Image
Representational Image

‘சுக்லாம் பரதம் , விஷ்ணும், சசிவர்ணம்’ அறுக்கரிசியா ? வாக்கரிசியா ? சூடத்தை கொளுத்திய போட்ட போது அக்னித்தாய் ஒவ்வொரு குச்சியாக தின்ன ஆரம்பித்தாள்.

செளமி அக்கினியை ஊடுருவி கண்சிமட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் அவளை.

“ரெண்டு பேர் சந்தோஷத்துக்காக சுத்தி இருக்கிற எல்லாரையும் கஷ்டப்படுத்தனுமா? சொல்லு செளமி” இவள் இப்படி மௌனமாக இருப்பது எனக்குள் கேள்வி மரத்தின் கிளைகளாக முளைத்துக் கொண்டே இருந்தது.

“எல்லாரும் ஏன் கஷ்டப்பட போறாங்க ஒருத்தர் தான். ஒரே ஒருத்தர் தான் உங்க அப்பா. ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாயிரும்.” புருவம் உயர்த்தினாள்.

ஓம குண்டம் வெப்ப தணல் என்னை தாக்கியது.

இவளை ஏறி மிதித்துத் தாக்கினாலும் மனசு கோணாத சுபாவம். “குழந்தை பிறந்து ரெண்டு வருஷம் இடைவெளியில் எல்லா வேதனையும் மனக்கசப்பும் அப்பாவிடம் நீங்கும் என எதிர்பார்க்கிறியா? ஒரு காலமும் நடக்காது. நாய் வாலை நிமிர்த்த முடியுமா? என்ன பண்ணாலும் அவர் அப்பா. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் உனக்காக அவரையும் - அவருக்காக உன்னையும் விட முடியுமா சொல்லு செளமி?”.

“பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ”

மெளனம் காத்தாள்.

“அப்பா கூட சேர்ந்து உறவுகளும் உன்னை அலட்சியப்படுத்தும், அவமானப்படுத்தும் ஒதுக்கி வைக்கும். அது என்னால் தாங்க முடியுமா? ‘இல்லை’ உன்னால் தான் சகித்துக் கொண்டு வாழ முடியுமா? முடியாது சண்ட வரும். சந்தோஷங்கள் குறையும்.”

“வாக்கரிசி போட அழைப்பதுப் போன்று கன்னிதானம் பண்ணா பொண்ணோட அப்பா அம்மாவும் , பையனோட அப்பா அம்மாவும் கிட்ட வாங்கோ ”

“ஒரே வீட்டுக்குள் ரெண்டு செம்பறி ஆடுக்கு நடுவுல சிக்கிக் கொண்டது போல நான் தான் சிக்கிக் கொண்டு மாட்டிக் கொள்வேன். அடிபடும் காயம் எல்லாமே எனக்குத்தான். உனக்கென்ன? ஆணில் ஒளிந்து இருக்கும் பெண்மை பீறிட்டு வெளியே வந்தது.

பாடையில் பிணத்தை ஏற்றும் போது கதறி அழுவது போல “ஐயோ என் வீட்டு அழுக்கை இவள் முகத்தில் தேய்த்துக் கோரமாக்கிறானோ? இது என்னவென்று சொல்வது? என் மனம் பொங்கியது. கடலே பொங்கினாலும் இவள் காட்டும் பொறுமையும் எதற்குமே கலங்காதவளும் என் காதலை கிளறி கிளறி விடுகிறது.

Representational Image
Representational Image

கிளறி கிளறி ரெடி பண்ணுன்னா அட்சதை தட்டை எடுத்து “இதை ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோ”

நீர் மாலை எடுக்கச் சென்றது. ‘ச்சா ச்சா இது என்ன நினைப்பு! நான் என்னை ஏமாற்றுகிறானோ? என்னை நானே ஏமாற்றிக்கிட்டு இருக்கிறனோ? என்னை ஏமாற்றுகிறேன் பெயரில் இவளை ஏமாற்றுகிறானோ? யாருக்காக இந்த வேஷம்? பெரியவர்களுக்கான மரியாதையா இது? ‘இல்லை' சுத்திருக்கிற சமூகத்துக்கான மரியாதையா?’ இதெல்லாம் முதலில் தூக்கிப்போட்டு அவளைப்போய் ‘கட்டிக்கோ கட்டிக்கோ’ மனசு கூவி மாலையை தூக்கிப்போட கை வைக்கும் போது பின்னால் இருந்த அக்கா என் மாலையை சரி பண்ணுவது போல தோளை அழுத்தி அமர்த்தினாள்.

அட்சதை தட்டு அவளிடம் போனப்போது தாலியை தொட்டு கண்களில் ஒற்றினாள்.

என் தோளில் ஏற்பட்ட ஸ்பரிசம் அந்த ஸ்பரிசத்தால் சுயநினைவு வந்த போது “ஐயோ என்ன காரியம் செய்யப் போனேன். இன்னொரு பெண் வாழ்க்கை! உன்னை போல அவளும் ஒரு பெண். அவள் மேல் உனக்கு கரிசனம் இல்லையா?”

எல்லா வீட்டிலும் ராவணன் போல சில அப்பாக்கள் இருப்பதினாலே இங்கே பல காதல்கள் கைகூடுவதில்லை.

செளமியா மெல்லிய சிரிப்போடு அட்சதை எடுத்துக் கொண்டாள்.

ஓம குண்டத்தில் நெய் வார்த்தபோது என்னை நெருப்பு சுட்டது. கூடவே அவளுடைய சிரிப்பும் சேர்த்துக்கொண்டது.

“கரிசனமா! கரிசனம் அதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? லவ்னு பேர்ல உன்னை நீயே ஏமாத்திக்கிட்டு இருக்கா” என்றாள்.

“நானா? நானா?” என் மனம் பதறியது.

“பின்னா லவ் வேற,கல்யாண வேற பிரிச்சு யோசிச்சனாலாதானே உன்னால இந்த முடிவு எடுக்க முடிந்தது” அவளிடமிருந்து உக்கிரமான பதில் வந்தது.

வாத்தியங்கள் உக்கிரமாக வாசித்தபோது நீர்மாலை பானை உடைக்கப்பட்டது போன்று அட்சதை தட்டு முன்னால் வைக்கப்பட்டது.

‘கெட்டுமேளம் கெட்டு மேளம் !

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா’

அவளைப் பார்த்துக் கொண்டே நடுங்கிய கையோடு தாலியை மட்டும் எடுத்தேன்.

‘கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்’

அக்கா எல்லாம் முடிச்சுகளையும் போட்டாள்.

“பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கி இந்த அக்கினியை சுத்தி வாங்கோ”

“இதுக்கு பேர்தான் கரிசனம்” எழுந்து நின்றாள்.

சீதா கல்யாண வாத்தியம் வாசிக்கப்பட்டது.

“இப்போ இப்படி இவளை கைகோர்த்து இருக்கிற மாதிரி கடைசி வரை இருக்கணும்! இருப்பேன் என்று நம்புறேன்”. சிரித்த முகத்துடனும் கண்ணீர் தேங்கிய கன்னதோடனும் அட்சதை தூவினாள்.

Representational Image
Representational Image

நாலாவது சுற்றில் அம்மி மிதித்து மெட்டியை மாட்டிய போது அதை பார்க்க சகிக்காமல் செளமி அன்ன நடையில் வெளியேறியபோது ஏத்தி வச்ச குத்துவிளக்கு மாதிரி அந்த இடமே பிரகாசமாயிருந்தது.

யார் செய்த பாவமோ ? முன் செய்த வினையோ ? இந்த சமூகத்தை எதிர்த்து நிற்க முடியாமல் என்னை நானே கட்டிப்போட்டு - என் தலையில் நெருப்பை வைத்துக்கொண்டேன்.

குச்சிகளை தின்றுமுடிந்த நெருப்பு ஏப்பம் விட்டதில் புகையெழும்பி ஆடியது.

ஆட்டம் அடங்கி ஒடுங்கிய ஓம குண்டத்திலிருந்த சாம்பலை விபூதியாக பூசினார்கள்.

நாங்களும் வெளியே போனப்போது எதிர்பக்க சுவர் போஸ்டரில் சிறுப்புள்ளியாக செளமியா சிரித்துக்கொண்டிருந்தாள்.

கீழே நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்பது போல வெள்ளை வெள்ளையாய் மேகங்கள் மிதந்து போனது.

“அருந்ததி நட்சத்திரம் தெரியுதா பாருங்கோ”

“சிறுப்புள்ளியா அருந்ததி தெரியுது ஐயரே”.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.