Published:Updated:

காக்கா! - சிறுகதை | My Vikatan

Representational Image

படிப்பில் இருவருமே ஆவரேஜ் என்பதால் அதே மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஒரே பிரிவில் சேர்ந்து படிக்க தொடங்கினார்கள். அப்போதும் மணிகண்டன் மீதான ஈர்ப்பு அகிலாவுக்கு குறையவில்லை.

Published:Updated:

காக்கா! - சிறுகதை | My Vikatan

படிப்பில் இருவருமே ஆவரேஜ் என்பதால் அதே மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஒரே பிரிவில் சேர்ந்து படிக்க தொடங்கினார்கள். அப்போதும் மணிகண்டன் மீதான ஈர்ப்பு அகிலாவுக்கு குறையவில்லை.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மணிகண்டன் என்றாலே அகிலாவுக்கு அவ்வளவு பிடிக்கும். மணியும் அகிலாவும் அரசுப்பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த சமயம். விடுமுறை நாளில் வாய்க்காலில் மணி தனது அம்மாவின் துணிகளை துவைத்துக் கொண்டிருக்க அவ்வழியாக சென்ற கனகா அதை பார்த்துவிட்டு தன் மகள் அகிலாவிடம்,

"அந்தப் பையன் பாரு... அவங்கம்மாளுக்கு ஒடம்பு சரியில்லன்னு அம்மா துணிய துவைச்சு போடுது... நீயும் தான் இருக்கியே... உன் துணியவே துவைச்சுக்க மாட்டிங்குற..." என்று சொல்லும்போது தான் மணிகண்டன் மீது அகிலாவுக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. அப்போது முதலே பள்ளிக்கூடத்திலும் வெளியே அவனை பார்க்க நேரிடும் இடங்களிலும் அவனுக்கு தெரியாமல் அவனை ரசிப்பாள்.

படிப்பில் இருவருமே ஆவரேஜ் என்பதால் அதே மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஒரே பிரிவில் சேர்ந்து படிக்க தொடங்கினார்கள். அப்போதும் மணிகண்டன் மீதான ஈர்ப்பு அகிலாவுக்கு குறையவில்லை.

Representational Image
Representational Image

ஒருநாள் கல்லூரி நண்பர்களோட 3D-யில் வெளியான பேய் படத்திற்கு அகிலாவும் மணிகண்டனும் சென்றிருந்தார்கள். மணி முதல்முறையாக 3D கண்ணாடி அணிந்து திரையை ஆவென்று பார்க்க, எதிர்பாராத தருணத்தில் அவன் முகம் அருகே பேய் ஒன்று வந்து பக்கென்று பயமுறுத்த "அய்யோ... பேய்... பேய்..." என்று கத்திக்கொண்டு கண்ணாடியை கழட்டி எறிந்துவிட்டு அதே வரிசையில் அமர்ந்திருந்த அகிலாவின் காலை மிதித்துவிட்டு தியேட்டர்க்குள்ளிருந்து வெளியே ஓடி வந்தான். எல்லோரும் அவனை நினைத்து சிரிக்க, கால் வலியோடு அகிலா வெளியே வந்தாள்.

மணிகண்டன் அதே பதற்றத்துடன் ஒரு மரத்தருகே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருக்க,

"எரும மாடு... இப்படியா கால மிதிச்சிட்டு ஓடியாருவ... இப்படி பயந்தாங் கொள்ளியா இருந்தா நான் எப்படி உன்ன வச்சு குடும்பம் நடத்துவேன்..." என்று சொன்னாள் அகிலா.

"ஐயோ அகிலா... சாரி... இனிமே பயப்பட மாட்டேன்... உன்ன கண்ணும் கருத்துமா பாத்துப்பேன்..." என்றான் மணி.

இருவரும் மாறி மாறி பார்த்துக்கொண்டார்கள். இதுநாள் வரை யதார்த்தமாக பேசியிருக்கறார்களே தவிர இப்படி பேசியதில்லை. ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் மறைந்திருந்து ரசித்து பார்த்திருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு தெரியாமலே அவர்களின் காதல் வெளிப்பட்டுவிட்டது.

Representational Image
Representational Image

"அச்சோ... லவ் பண்றது வெளிய தெரிஞ்சிடுச்சே... அவனும் என்ன லவ் பண்ணிட்டு தான் இருக்கான் போல..." என்று அகிலா நாக்கை கடித்துக்கொண்டு வெக்கத்தில் மரத்தின் பின் ஓடி மறைந்துகொள்ள, "ஸ்ஸ்... பட்டுனு லவ்வ உடச்சிட்டமே... அவளும் நம்மள லவ் பண்ணிட்டு தான் இருக்கா போல..." என்று மணியும் வெக்கப்பட்டு வேறொரு மரத்தின் பின் ஓடி ஒளிந்துகொண்டான்.

சில நிமிடங்கள் இருவரும் மரத்தில் சாய்ந்துகொண்டு தங்களுக்கு தாங்களே சிரித்துக்கொள்ள, சிரிப்பை அடக்கிக்கொண்டு மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி வந்தார்கள்.

"நம்ம காதல வெளிய கொண்டு வந்த அந்தப் பேய்க்குத் தான் நன்றி சொல்லனும்...!" என்று அகிலா சொல்ல, மணிகண்டன் முகத்தில் வெக்கம் பிடுங்கித் தள்ளியது. "அய்யோடா... வெக்கத்த பாரேன்..." என்று அகிலா அவனது கையை பிடித்து கிள்ளினாள். மணிகண்டன் அன்று அவ்வளவு சந்தோசமாய் இருந்தான்.

அது கல்லூரியின் இறுதி வருடம் என்பதால் அன்றிரவே தன் காதலை வீட்டில் சொல்லி அனுமதி வாங்கிவிட்டால் வேலை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என யோசித்தாள் அகிலா.

அகிலா அப்பாவின் செல்லம். ஆதலால் முதலில் இதை அப்பாவிடம் சொல்வோம் என்று அன்றிரவு அப்பாவின் வருகைக்காக அவள் காத்திருக்க, இரவு ஒன்பது மணிக்கு வந்த அப்பாவின் வெள்ளை சட்டையில் ரத்தம் தெறித்திருந்தது.

அகிலா அதிர்ச்சியுடன் "என்னப்பா சட்டைல ரத்தம்..." என்றாள்.

Representational Image
Representational Image

"ஒன்னுமில்ல... பக்கத்தூர்ல நம்ம சாதிக்கார பொண்ண ஒரு பையன் இழுத்துட்டு ஓடிட்டான்... பிள்ளையோட அப்பங்காரன் என்ன பண்றதுனு தெரியாம தவிச்சாப்டி... நான் தான் அவர கூட்டிட்டு போயி நம்ம சாதி குலதெய்வ கோயில்ல அந்தப் பிள்ளையோட கைகாலும் அந்தப் பையனோட கைகாலும் வெளங்காம போயிடனும்னு சேவல் அறுத்துப் போட்டு வந்தேன்..." என்றார் அப்பா.

காதலை அப்பாவிடம் சொல்ல நினைத்த நாளில் தான் இது நடக்க வேண்டுமா, அதுவும் அப்பா இப்படிபட்டவரா என்று தெரிந்ததும் கலங்கிவிட்டாள் அகிலா. மணிகண்டன் மீதான காதலை அப்பாவிடம் சொல்லி இருந்தால் என்ன ஆயிருக்கும்... நிச்சயம் மணியை எதாவது செய்துவிடுவார்கள்.

மணிகண்டனுக்கு அம்மா மட்டும் தான். அவனது அம்மா ஏற்கனவே கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தான் இருப்பார். மணிகண்டன் பள்ளி கல்லூரி காலத்தில் பார்ட் டைம் வேலை பார்த்து சுயமாக படித்தவன். அப்படிபட்ட மணிக்கு எதாவது ஆகிவிட்டால் அவனுடைய அம்மா முழுவதுமாக மனநலம் பாதிக்கப்படுவார். இது நமக்கு வேண்டாமென்று முடிவெடுத்து அடுத்தநாளே மணிகண்டனிடம் தெளிவாக சொல்லிவிட்டு உடைந்துபோனாள்.

மணியும் அதை புரிந்துகொண்டு விலகினான். கல்லூரி முடிந்த ஆறு மாதங்களில் அகிலாவுக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். மணிகண்டன் பக்கத்து மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தான். 

சில மாதங்கள் இருவருடைய வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் பயணித்தது. அகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மாதங்கள் குழந்தைக்கு தொடந்து உடல்நலம் சரியில்லாமல் போக "நேரம் சரியில்ல... பெத்தவங்கள விட்டு தூரமா போங்க..." என்று ஜோதிடர் அறிவுறுத்த அகிலாவும் அவரது கணவரும் வாடகைக்கு வீடு தேட ஆரம்பித்தனர். எங்கும் வீடு கிடைக்காமல் கடைசியாக மணிகண்டனின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வாடகைக்கு தனிக்குடி வந்தார்கள் அகிலாவும் அவரது கணவரும். 

Representational Image
Representational Image

இருவரது வீடும் இப்போது அருகருகே இருந்தாலும் பழைய நினைவுகள் எதுவும் அவர்களை கிளறவில்லை. அகிலாவின் குழந்தை கொஞ்சம் வளர்ந்திருந்தான். மாலை ஆனதும் ஜட்டியை கழட்டி போட்டுவிட்டு வீட்டு வெளிக்கூடாரத்திற்குள் ஓடிஆடி திரிவது அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது. முதலில் "குழந்த தான... அதுவும் நைட் நேரம்..." என்று அதை அகிலா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஒருநாள் அவளது வீட்டிற்கு உறவினர் ஒருவர் விசேஷ அழைப்புக்கு வந்தபோது ஜட்டி இல்லாமல் இருக்கும் குழந்தையை பார்த்து "அய்யய்ய..." என்று விளையாட்டாய் சொல்ல, அகிலா அப்போது முதலே ஜட்டி இல்லாமல் சுற்றும் குழந்தையின் பழக்கத்தை மாற்ற நினைத்தாள். 

ஒருநாள் இரவு ஏழு மணி இருக்கும். குழந்தை வழக்கம்போல ஜட்டியை கழட்டி எறிந்துவிட்டு வீட்டிற்கு வெளியே கூடாரத்தில் ஓடிஆடி விளையாட... 

"ஒழுங்கா ஜட்டி போட்டு விளையாடு... ஜட்டி போடலனா காக்கா வந்து உன் குஞ்சு மணிய கொத்திட்டு போயிடும்..." என்று பயமுறுத்தினாள் அகிலா. 

குழந்தை அவளை கொஞ்சம் பயத்துடன் பார்த்தது. 

"இந்தா நான் காக்காவ கூப்டுறேன்... காக்கா வந்து உன் குஞ்சு மணிய கொத்திட்டு போகட்டும்..." என்று சொல்லி "காக்கா... காக்கா..." என்று அவள் அழைக்க, பதிலுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை.

மீண்டுமொரு முறை அவள் "காக்கா" என்று குரல் கொடுக்க...

"கா... கா... கா..." என காக்கா கத்தும் சத்தம் கேட்டது. அகிலாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சுற்றிமுற்றிப் பார்த்தாள். மீண்டுமொரு முறை அவள் "காக்கா" என்று அழைக்க இம்முறையும் "கா... கா... கா..." என சத்தம் கேட்டது.

பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவரை தாண்டி தான் அந்தச் சத்தம் வருகிறது என்பதை உணர்ந்த அகிலா, சுவரருகே வந்து எட்டிப் பார்க்க மணிகண்டன் சுவரருகே கட்டிலில் படுத்துக்கொண்டு போனை நோண்டிக் கொண்டிருந்தான். அகிலா அவனுக்குத் தெரியாமல் அவனை பார்த்து சிரித்துவிட்டு "பாத்தியா காக்கா கத்துது... ஜட்டி போடலனா அவ்வளவு தான்... ஒழுங்கா ஜட்டி போடு..." என்று சொல்ல குழந்தை பயந்து போய் ஜட்டி போட்டான்.

அடுத்த நாளும் இரவு அதே நேரத்தில் குழந்தை ஜட்டி கழட்டிப் போட்டு அடம்பிடிக்க அகிலா "காக்கா" என்று கூப்பிட மணிகண்டன் சுவருக்குப் பின்னிருந்து "கா... கா... கா..." என கத்தினான். குழந்தை தடபுடவென ஜட்டி அணிந்துகொண்டது.

அகிலா மனதிற்குள் மகிழ்ந்துகொண்டாள்.

அடுத்தடுத்து பல மாதங்களாக இந்த விளையாட்டு தொடர்ந்தது. அகிலாவின் கணவர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மணிகண்டனுக்கும் அகிலாவுக்கும் இடையே "காக்கா" என்ற வார்த்தை மட்டுமே பாலமாக இருந்தது. மற்றபடி அவர்கள் வேறெதுவும் பேசிக்கொள்ளவில்லை.

சில சமயம் எப்போது குழந்தை ஜட்டியை கழட்டி போடுவான் "காக்கா"வை அழைக்கலாம் என்று காத்திருப்பாள் அகிலா. குழந்தை ஜட்டி அவிழ்க்க அகிலா "காக்கா" என்று கத்த மணிகண்டன் "கா... கா... கா..." என கத்தும் அந்த தருணம் ரொம்ப அழகானதாக இருந்தது.

திடீரென ஒருநாள் மாலை மணிகண்டனின் அம்மா "அய்யோ... என் சாமி போச்சே..." என்று போனை கீழே போட்டுவிட்டு கத்தி அழ, பக்கத்து வீட்டில் இருந்த அகிலா அந்த அலறல் சத்தம் கேட்டு பதறி மணி வீட்டிற்குள் ஓடினாள்.

"என்னாச்சும்மா..." என்று அகிலா கேட்க, "மணி ரயில்ல விழுந்து தற்கொல பண்ணிட்டானாம்... ஒன்னே ஒன்னுனு இருந்தேன்... போயிட்டானே... அடேய் அறிவுகெட்ட கடவுளே உனக்கே இது நியாயமா..." என்று அம்மா கதற, அகிலா சுக்கு நூறாகிப் போனாள்.

மணிகண்டனுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு எல்லோரும் கலைந்து செல்ல, இரவானதும் அகிலா தன் வீட்டிற்கு வந்தாள்.

"பாவம் மணி... நல்ல பையன்... ப்ச்..." என்று அவள் திரும்ப திரும்ப புலம்ப, சரியாக அப்போது கரண்ட் கட் ஆனது.

அகிலாவின் கணவர் மெழுகுவர்த்தி பத்திக்கொண்டு அவளருகே வந்தார்.

"மணி உண்மையிலயே தற்கொல பண்ணிக்கல அகிலா... எதோ ஒரு ஊர்ல காதல் ஜோடிய சேர்த்து வச்சுருக்கான்... 'சொல்லு அந்த நாய்ங்கள எங்க தாட்டிவுட்ட'னு மணிய தூக்கிட்டு போய் துரத்தி துரத்தி அடிச்சு கேட்ருக்காங்க... கடைசி வரைக்கும் மணி வாயவே துறக்கல... கழுத்துல மிதிச்சு கொன்னுட்டு கேஸ மாத்திட்டாங்க..." என்றார் கணவர்.

அகிலா தலைசுற்றி கீழே விழுந்தாள். கணவர் அவளது முகத்தில் தண்ணி தெளித்து எழுப்ப, களைப்புடன் எழுந்த அகிலாவின் கண்முன்னே, மணிகண்டன் மீதான காதலை சொல்ல நினைத்த தினத்தில் சேவலை அறுத்துப் போட்டு வந்த அப்பாவின் முகம் நினைவுக்கு வந்தது. அப்பா மாதிரியான ஆட்கள் தான் மணி மாதிரியான அப்பாவியை நாசமாக்கி இருக்கிறார்கள் என்றதும் உடலெல்லாம் தகதகவென எரிந்தது.

சரியாக அப்போது கரண்ட் வர லைட் வெளிச்சத்தில் கண்ணாடியை திரும்பி பார்த்தாள்.

Representational Image
Representational Image
"அகிலாவுக்கு அப்படியே அவிங்க அப்பன் முகம்... அப்பன உரிச்சு வச்சாப்ல இருக்கா..." என்று பெரியவர்கள் அவ்வப்போது சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது. குணா படத்தில் கமல் தன் முகத்தை பார்த்து "இது என் மூஞ்சி இல்ல... எங்கப்பா மூஞ்சி... அந்தாளு அவன் மூஞ்சிய கொண்டுவந்து என் மூஞ்சில ஒட்ட வச்சிட்டு போயிட்டான்..." என்று கமல் புலம்பி அழும் காட்சி தனக்காகவே எழுதப்பட்டது போல உணர்ந்தாள். மணிகண்டனின் நினைப்பில் சில நாட்கள் உறக்கமின்றி தவித்தாள்.

மணிகண்டனின் அம்மாவின் நிலை ரொம்பவே மோசமாக மாறிவிட அவரது உறவினர் ஒருவர் வந்து அம்மாவை பெட்டி படுக்கையுடன் தனது ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

சில நாட்களில் ஊர் சகஜமானது.

ஒருநாள் இரவு மணி ஏழு இருக்கும். வீட்டின் வெளிக்கூடாரத்தில் அகிலாவின் குழந்தை ஜட்டியை கழட்டி போட்டுவிட்டு விளையாட, அதை பார்த்துவிட்டு சட்டென

"காக்கா" என்று அனிச்சையாக அழைத்தாள் அகிலா. பதில் சத்தம் கேட்கவில்லை. அவளையறியாமல் மீண்டுமொருமுறை "காக்கா" என்று அவள் அழைக்க இம்முறையும் "கா... கா... கா..." என்கிற சத்தம் கேட்காமல் இருந்தது. எந்த சத்தமும் இல்லாத அந்த நிமிடங்கள் ரொம்ப அமைதியாக இருந்தது. சில நிமிடங்களுக்குப் பின் சுயநினைவுக்கு வந்தவள் மணியின் குரல் ஒலிக்காத அந்த அமைதியை வெறுத்தாள்.

"நம்ம காதல் தான் நிறைவேறல... மத்தவங்க காதலாச்சும் நிறைவேறனும்னு நினைச்சு உசுர விட்ட மணி... நீ கடவுளுக்குச் சமம்டா..." என்று நினைத்தாள் அகிலா. தன் குழந்தையை பார்த்தாள். "இது பெருசா வளந்து சாதிப் பெரும பேசிட்டு திரியுற நிலைமைக்கு வந்துடக்கூடாது கடவுளே..." என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.

ஏனோ மணியின் வீட்டிற்குப் போக வேண்டும்போல் இருந்தது.

மணியின் அம்மா உறவினருடன் செல்லும் முன் வீட்டுச் சாவியை அகிலாவிடம் தான் கொடுத்துச் சென்றார்.

Representational Image
Representational Image

ஜட்டி போடாமல் விளையாடும் குழந்தையை அப்படியே விளையாட விட்டுவிட்டு, சாவியும் செல்போனையும் எடுத்துக்கொண்டு மணி வீட்டிற்கு வந்தாள் அகிலா.

சாவி போட்டு கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்ததும் சுவிட்ச் பாக்சை தேடி லைட்டை போட, லைட் எதுவும் எரியவில்லை. இருளான அந்த வீட்டிற்குள் தன்னந்தனியாக செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டு வீட்டிற்குள் இருப்பதை சுற்றி முற்றிப் பார்த்தாள். எதர்ச்சையாக கல்லூரி காலத்தில் மணி பயன்படுத்திய நோட் ஒன்று அவள் கண்ணில் பட, அந்த நோட்டை எடுத்து விரித்துப் பார்த்தாள்.

நோட்டின் முதல் பக்கத்தில் 3D-யில் தியேட்டரில் பார்த்த பேய் படத்தின் நியூஸ்பேப்பர் போஸ்டரை ஒட்டி வைத்திருந்தான் மணி. 3D-யில் எந்த பேயின் உருவத்தை பார்த்து மணி பயந்து அலறினானோ அதே உருவம். அகிலா செல்போன் வெளிச்சத்தில் அந்தப் பேயின் உருவத்தையே பார்க்க...

மனிதர்களை விட மிக அழகானதாக தெரிந்தது அந்தப் பேய்...!

முற்றும்,

இச்சிறுகதை எழுத தூண்டுதலாக அமைந்த படைப்புகள்:

1. ராஜா ராணி (ஜெய்)

2. எங்கேயும் எப்போதும் (ஜெய்&அஞ்சலி)

3. "பூ" - மாரியம்மா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.