வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
கோடைக்கால இரவுகளில் மாடியில் படுத்து உறங்குவது செழியன் குடும்பத்தினருக்கு பிடித்தமான ஒன்று. செழியன், அம்மா, அப்பா மூவரும் தனித்தனி பாயில் சற்று இடைவெளியுடன் காற்றோட்டத்தை ரசித்தபடி படுத்து உறங்குவார்கள்.
அன்றும் அப்படித்தான் மூவரும் மாடியில் படுத்திருக்க செழியனுக்கு இரவு இரண்டு மணி அளவில் உறக்கம் கலைந்தது. அது அவனுக்கு வழக்கமான ஒன்று தான். இரண்டு மணி முதல் நான்கு மணி வரை அவனுக்கு உறக்கம் வராது. அதற்கான காரணம் என்னவென்றும் அவனுக்குத் தெரியவில்லை. அந்த இரண்டு மணிநேரம் எதையாவது நினைத்துக்கொண்டு படுத்திருப்பான். அப்படி கண்களை மூடியபடியே ஆழமாக சிந்தித்துக் கொண்டிருக்க,
"ப்ச்... கொன்னுபுட்டனே... கொன்னுபுட்டனே... அநியாயமா கொன்னுட்டனே..." என்று தூக்கத்தில் புலம்பினார் செழியனின் அப்பா முருகேசன். அப்பாவின் புலம்பல் சத்தம் கேட்டு கண்விழித்த செழியன் எழுந்து அமர்ந்து அப்பாவை பார்த்தான். "கொன்னுபுட்டனே" என்று அப்பாவின் வாயிலிருந்து வந்த வார்த்தை அவனை பதட்டமடைய செய்ய... நிலவொளி வெளிச்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த அப்பாவை உற்றுப் பார்த்தான். சில நொடிகள் மௌனம் நிலவியது. ராத்திரி பூச்சிகள் க்ரிக் க்ரிக் என்று கத்திக் கொண்டிருந்த சத்தம் மட்டுமே கேட்டது.

"அப்பா எதாவது கெட்ட கனவு கண்ட்ருப்பாரு..." என்று செழியன் ஆசுவாசமாகி படுக்க போக,
"கொலகாரன் ஆயிட்டனே... கொலகாரன் ஆயிட்டனே... கொலகாரன்... நான் கொலகாரன்..." என்று மீண்டும் அப்பா தூக்கத்தில் புலம்ப செழியனுக்கு இப்போது இதயம் படபடவென அடித்தது. மெதுவாக எழுந்து அம்மா அருகே சென்று, அம்மாவின் கையில் சுரண்டி அவரை எழுப்பினான்.
"என்... ன...டா..." என்ற வார்த்தையை இழுவையாக உச்சரித்து தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தார் அம்மா.
"அம்மா எதுவும் பேசாம கொஞ்ச நேரம் அப்பாவ மட்டும் பாரு..." என்று செழியன் சொன்னதும் அம்மாவிற்கு அதுவரை இருந்த தூக்கம் சட்டென பறந்து போனது. "ஐயோ என்னாச்சு..." என்று பதறிய அம்மாவுக்கும் இதயம் படபடவென அடிக்க ஆரம்பித்தது. சில நொடிகள் மௌனம் நிலவ, அம்மாவும் செழியனும் அப்பாவையே பார்த்தனர்.
"என்னைய கொலகாரன் ஆக்கிட்டியே கடவுளே..." என்று அப்பா மீண்டும் தூக்கத்தில் புலம்பினார். அந்த வார்த்தையை கேட்டதும் செழியனுக்கும் அம்மாவுக்கும் கண்கள் கலங்கியது.

"டேய்... நீ கீழ போயி சொம்புல தண்ணியும், நம்ம குலதெய்வ கோவில் திருநீறு பொட்டலமும் எடுத்துட்டு வா..." என்று செழியனை கீழே அனுப்பினார் அம்மா.
செழியன் குழப்பத்துடனே வீட்டிற்குள் வந்து தண்ணீரும் திருநீறும் எடுத்துக்கொண்டு மாடிக்குத் திரும்பினான்.
அப்பா தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்திருக்க, அப்பாவின் தலைமுடியை கோதிவிட்டுக் கொண்டிருந்தார் அம்மா.
"தண்ணி குடிங்க..." என்று அம்மா சொம்பை நீட்ட, அப்பா வாங்கி குடிக்க ஆரம்பித்தார். ஒரு சொம்பு தண்ணீரையும் ஒரே மொடக்கில் குடித்துவிட்டு சொம்பை கீழே வைத்த அப்பாவின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டார் அம்மா.
"ஒன்னுமில்ல படுத்து தூங்குங்க..." என்று மீண்டும் அப்பாவின் தலைமுடியை கோதிவிட்டு அவரை படுக்க வைத்தார் அம்மா.
அப்பா படுத்து உறங்கத் தொடங்க அம்மாவும் செழியனும் அரை மணிநேரத்திற்கும் மேலாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது அப்பா புலம்பவில்லை. அப்பா நன்கு உறங்கிவிட்டார் என்று தெரிந்ததும்,
"அம்மா உண்மைய சொல்லு... அப்பா டிரைவரா இருக்குற பஸ்சுல எதாச்சும் ஆக்சிடன்ட் ஆச்சா... எதாவது பிரச்சினைல சிக்கிட்டாரா... கொலகாரன் கொலகாரன் தன்ன தானே சொல்லிக்கிறாரு... என்ன தான் நடக்குது..." என்று செழியன் பதற்றம் குறையாமல் கேட்க, செழியன் அப்பாவை நினைத்து பயந்துவிட்டான் என்பது அம்மாவுக்குப் புரிந்தது. இனி அவனிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்று முடிவெடுத்தார் அம்மா.

"உங்கட்ட உண்மைய சொல்றேன்... ஆனா உனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத... அப்பாவுக்குத் தெரிஞ்சா எதுக்கு அவங்கிட்டலாம் சொல்லி அவன பதட்டமடைய வைக்கறனு திட்டுவாரு..." என்று அவனிடம் உண்மையை சொல்ல தயாரானார் அம்மா. செழியனின் முகத்தில் ஆர்வம் மிகுதியாய் படர்ந்திருந்தது.
"உங்கப்பா சின்ன வயசா இருக்கும்போது அவருக்கு ஒரு அக்கா இருந்தாங்க... அவங்களுக்கு உங்கப்பா மேல ரொம்ப பாசம்... தம்பி தம்பினு உசுருக்கு உசிரா இருப்பாங்களாம்...
அப்படிபட்ட அக்கா வயசுக்கு வந்ததும் வீட்டுல ஏகப்பட்ட கட்டுப்பாடு போட்ருக்காங்க பெருசுங்க... உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கப்பாட்ட வந்து "டேய் உங்க அக்கா வயசுக்கு வந்துட்டா... இனி அவ எதாவது பசங்ககிட்ட பேசுறத பாத்தினா அப்பவே அத நீ எங்ககிட்ட சொல்லிறனும்"னு... சொந்த தம்பியவே அக்காவ வேவு பார்க்க வச்சிருக்காங்க... சரிப்பான்னு தலைய ஆட்டுருக்காரு உங்கப்பா...
இவரும் இவங்க அக்காவும் ஒருநாளு கோவிலுக்கு போயிட்டு வர்றப்ப கூட படிக்கற பையன் கூட அரமணிநேரமா இவங்க அக்கா சிரிச்சு பேசிருக்காங்க... இத போயி உங்கப்பா அப்படியே உங்க தாத்தா பாட்டிக்கிட்ட "அக்கா இன்னிக்கு ஒரு பையன்கிட்ட அரமணி நேரமா சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருந்துச்சு"னு சொல்ல... அவ்வளவுதான் பெருசு ரெண்டுக்கும் பேய் புடிச்சிடுச்சி...
வயசுக்கு வந்த பிள்ளைக்கு ஆம்பள பையன் கூட என்ன அரமணி நேரம் பேச்சு... அதுவும் "அந்த" தெரு பையன் கூடனு உங்க தாத்தா இவரு அக்கா பொடனிலயே ஓங்கி அடிக்க...
"அப்பா நீங்க நினைக்குற அளவுக்கு எதுவும் பேசலப்பா... அவன் கிளி பிடிக்க போன கதைய தான் பா... சிரிச்சு பேசிட்டு இருந்தான்னு" அக்கா சொல்லிருக்காங்க...

எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்... கடைசில அது வயத்துல சுமந்துட்டு வந்து நிக்குறதுல முடியும்னு மறுபடியும் பொடனில அடிச்சி கீழ தள்ளி, இந்த வவுறு நான் சொல்றவன் பிள்ளைய தான் சுமக்கனும்... இல்ல நடக்கறதே வேறன்னு சொல்லி வயித்துலயே மிதிச்சிருக்காரு... உங்க தாத்தா...
அதோட விடாம ஒருவாரமா நேரடியாவும் சாடை மாடையாவும் அக்காவ பெருசுங்க ரெண்டும் குத்தி குத்தி பேச... அக்கா எதுவும் பேசாம அமைதியாவே இருந்துருக்காங்க...
ஒருநாள் மதியம் உங்கப்பாவும் அக்காவும் மட்டும் வீட்ல தனியா இருந்துருக்காங்க... அப்பா மதிய தூக்கம் போட்டு எழுந்திருச்சு பாத்துருக்காரு... வீட்டுக்குள்ள அக்காவ காணோம்...
வீட்டுக்கு வெளிய வந்தா கருகருன்னு எதோ ஒன்னு வித்தியாசமா கெடந்துருக்கு... அத சுத்தி ஏகப்பட்ட ஈ மொச்சிட்டு இருந்திருக்கு... உங்கப்பா என்னதுனு புரியாம கிட்ட போயி பார்த்தப்பறம் தான் தெரிஞ்சுது அது அவரோட அக்கான்னு... கரிக்கட்டையா இருந்த அக்காவ பாத்து,
"ஐயோ அக்கா..." னு இவரு கத்துன கத்துல ஊரு ஒன்னு கூடிருச்சு...
பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனா "இன்னும் மூனு மணி நேரத்துல முடிஞ்சிரும்னு சொல்லிட்டாங்க... ஆனா அக்கா மூனு நாளா உசுர கைல புடிச்சிட்டு இருந்தாங்களாம்... அந்த மூனு நாளும் உங்கப்பாவுக்கு ஒரு சொட்டு தண்ணி கூட தொண்டைல இறங்கல... எதுக்கு இப்படி இழுத்து பிடிச்சிருக்கான்னு தெரியாம எல்லாரும் தவிக்க, மூனாவது நாளு " அக்கா என்னைய மன்னிச்சிருக்கா" ன்னு உங்கப்பா போயி அக்கா பக்கத்துல நின்னு அழுவ இவர பாத்தபடியே இறந்தாங்களாம் அக்கா...

அதுக்கப்புறம் அக்காவோட சாவுக்கு நான் தான் காரணம்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாரு... அக்காவ வயித்துலயே மிதிச்ச சொந்த அப்பா அம்மாவ மூனாவது மனுசங்கள நடத்துற மாதிரி நடத்துனாரு உங்கப்பா...
கல்யாணத்துக்கு முன்னாடி நான் செஞ்ச தப்ப இதுல எழுதிருக்கேன்னு ஒரு நோட்ட எங்கட்ட வந்து கொடுத்தாரு... இந்த சம்பவமெல்லாம் அத படிச்சு பார்த்தப்பறம் தான் எனக்குத் தெரிஞ்சுது... அவரு கண்ணு முன்னாடியே அத கிழிச்சு போட்டுட்டு வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவர கட்டிக்கிட்டேன்... அதுக்கப்புறம் ஒருதடவ கூட அவரு இத பத்தி பேசுனது இல்ல...
ஆனா இப்ப மறுபடியும் அப்பாவுக்கு இது நெனப்பு வந்துருச்சுடா..." என்று அம்மா கலக்கமான குரலுடன் சொல்ல,
அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்த செழியன், "எப்டிம்மா..." என்றான்.
"நாலு நாளைக்கு முன்னாடி மதியான நேரம்... உங்கப்பா பஸ் ஓட்டிட்டு போறப்ப ஒரு பொண்ணு பஸ்ச நிப்பாட்டி ஏறி டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்ல வந்து உக்காந்துருக்கு...
அந்தப் பொண்ணுக்கு அப்படியே இவருடைய அக்கா முகமாம்... அந்தப் பொண்ணு அப்பாவையே கண்ணு சிமிட்டாம சிரிச்ச முகத்தோட பாத்துட்டே இருந்துருக்கு... உங்கப்பாவுக்கு அப்பவே கைகால்லாம் உதறல் எடுத்துருச்சாம்... கொஞ்ச நேரம் ரோட்ட பாத்துட்டு மறுபடியும் சீட்ட பாத்துருக்காரு... அந்தப் பொண்ணு சீட்ல இல்லியாம்... அந்தப் பொண்ணு எந்த ஸ்டாப்ல இறங்குச்சுனு கண்டக்டருக்கும் நியாபகம் இல்ல... அப்பாவுக்கும் நியாபகம் இல்ல... அன்னிக்கு நைட்டு வந்து இத சொல்லிட்டு என்கூட படுத்தாரு... அவரு உடம்பு கொதியா கொதிச்சுது... பாவம்டா மனுசன்..." என்று அம்மா அழத்தொடங்க,
அம்மாவை சமாதானப்படுத்தி "சரி படும்மா காலைல பாத்துக்கலாம்... எல்லாம் சரி ஆகிடும்..." என்று சொன்ன செழியன், அம்மாவை படுக்க வைத்துவிட்டு அவனது பாயில் போய் படுத்தான். அம்மாவும் அப்பாவும் அசந்து தூங்க, எவ்வளவு முயன்றும் செழியனுக்குத் தூக்கம் வரவில்லை.

அப்பாவை நினைத்தான். "உங்கப்பாவ பாக்குறப்பலாம் "நிமிர்" பட மகேந்திரன் தான்டா நியாபகத்துக்கு வராரு..." என்று அவனது நெருங்கிய தோழன் ஆதவன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவன் சொன்னது நூறு சதவீதம் உண்மை தான். உருவத்திலும் செயலிலும் அப்படியே நிமிர் மகேந்திரனின் ஜெராக்ஸ் தான் அப்பா. அவரிடம் எப்போதும் ஒருவித அமைதி குடியிருக்கும். "உங்களுக்கு பிடிச்ச இசை எது"ன்னு டிவி நிகழ்ச்சில ஒரு பொண்ணு ஏ.ஆர்.ரகுமான்ட்ட கேள்வி கேட்க "silence தான் சிறந்த இசை...!" என்று ரகுமான் பதிலளித்தை பார்த்து அப்பா லேசாக புன்னகைத்ததை செழியன் நினைத்துப் பார்த்தான்.
மெல்ல மெல்ல விடிய, அப்பா அம்மா இருவரும் எழுந்து தங்களது பாயை சுருட்டிக்கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கினார்கள். உறக்கமில்லாத செழியனும் எழுந்து பாயை சுருட்டிக்கொண்டு கீழே போனான்.
அப்பாவை மறைமுகமாக கவனிக்க ஆரம்பித்தான். வழக்கமாக என்ன செய்வாரோ அதையே தான் அப்பா செய்தார். அப்பாவின் பேச்சிலும் செயலிலும் எப்போதும் இருக்கும் நிதானம் அப்படியே இருந்தது. முந்தைய இரவு என்ன நடந்தது என்பது அப்பாவுக்கு சுத்தமாக தெரியவில்லை. சாப்பிட்டுவிட்டு யூனிஃபார்ம் அணிந்துகொண்டு "செழியா வர்றேன்டா..." என்று சொல்லிவிட்டு டியூட்டிக்கு கிளம்பினார் அப்பா.
செழியன் வீட்டிற்கு வெளியே வந்து அப்பா தெருவில் நடந்து செல்வதையே பார்த்தான்.
சரியாக தெருமுக்கு சென்றதும்...
அப்பா சில நொடிகள் நின்றுவிட்டு...
வீட்டை திரும்பி பார்க்க...
செழியனும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்...
செழியனை பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு அந்த தெருமுக்கை கடந்து சென்றார் அப்பா.
அந்த சிரிப்பு ஏனோ செழியனின் மனதுக்குள் ஆழமாக பதிந்தது.

வீட்டிற்குள் திரும்பி வந்தவன், அம்மா சமைத்ததை சாப்பிட்டுவிட்டு முந்தைய இரவு எதுவும் நடக்காதது போல் மிக சகஜமாக ஆபிஸ் கிளம்பி போனான்.
ஆபிஸ் உணவு இடைவேளை வந்தது. செழியனும் அவனது நண்பன் ஆதவனும் கேண்டீனில் அமர்ந்து உணவருந்த தொடங்கினார்கள்.
"மச்சான்... என்னானு தெரில... அப்பா கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும் போல தோனுதுடா... ஒரு பத்து நாளு லீவு போட்டுட்டு பேமிலியோட தூரமா எங்கயாவது போயிட்டு வரனும் போல தோனுது..." என்று சாப்பிட்டுக்கொண்டே செழியன் சொல்ல,
"போயிட்டு வாடா... வேணும்னா என் கார எடுத்துட்டு போ..." என்றான் ஆதவன்.
"எங்க போறதுனு தான் தெரில..." என்று செழியன் மீண்டும் தொடங்க,
சரியாக அப்போது செழியனின் போனில் "இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும் கடிகாரம் பார்ப்பது இல்லையே!" என்று யுவனின் பாடல் ரிங்டோனாக ஒலித்தது. கணபதி மாமா தான் அழைக்கிறார். அப்பாவும் கணபதி மாமாவும் ஒன்றாக அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியில் சேர்ந்தவர்கள்.
கால் அட்டன் செய்து "சொல்லுங் மாமா..." என்றான் செழியன். மறுமுனையில் கணபதி மாமா பேச பேச மௌனமாக இருந்த செழியன், "சரிங் மாமா" என்று கடைசி வார்த்தை கூறி போனை வைத்தான். ஆதவன் செழியனையே ஆர்வமாக பார்க்க,
"ஆதவா ஒரு வாரம் லீவு போட்டுட்டு என் கூட வந்து இருக்கியா..." என்றான் செழியன்.
"பேமிலி டூர்க்கு நானும் வரனும்ங்கறயா..." என்று ஆதவன் கேட்க,
"அப்பா இறந்துட்டாருடா... நீ என் கூட ஒருவாரம் இருந்தா நல்லா இருக்கும்..." என்றான் செழியன். ஆதவனுக்கு ஒருகணம் இதயம் நின்று துடித்தது. ஆனால் செழியனின் முகத்தில் துயரத்தின் சாயல் துளிகூட இல்லை.

செழியனும் ஆதவனும் மீதி சாப்பாட்டை சாப்பிட முடியாமல் கீழே கொட்டிவிட்டு ஆபிஸ்ஸில் தகவல் தெரிவித்துவிட்டு காரை நோக்கி வந்தனர். செழியனை தனது காரில் அமர வைத்து அவனது வீட்டிற்கு காரை எடுத்தான் ஆதவன்.
கார் மெதுவாக பயணித்தது.
ஆதவன் அருகே அமர்ந்திருந்த செழியன்,
"ரொம்ப நல்ல மனுசன்...
சின்ன வயசுல இருந்து அவர கவனிச்சிருக்கேன்... ஒருதடவ கூட யார பத்தியும் புறணி பேசுனது இல்ல...
ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் வீட்டுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ்ங்க வருவாங்க... யார்கிட்டயும் சாதி வேறுபாடு பாக்காம பொருளாதார வேறுபாடு பாக்காம எல்லார்ட்டயும் சமமா பழகுவாரு...
எந்த கல்யாணத்துக்கு போனாலும் சரி, எதாவது ஒரு புத்தகத்த மாப்பிள்ள பொண்ணுக்கு கிஃப்ட்டா கொடுத்துட்டு வருவாரு... "
என்று அடுக்கடுக்காய் அப்பாவின் பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்க, ஆதவன் எல்லாவற்றிற்கும் "ம்" கொட்டினான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு,
வீட்டிற்குத் திரும்பும் தெருமுக்கை கார் வந்தடைந்ததும் "ஆதவா... கார இங்க நிப்பாட்டேன்..." என்று செழியன் சொல்ல, ஆதவன் காரை நிறுத்தினான்.
காரிலிருந்து செழியன் வெளியே இறங்க, ஆதவனும் ஒன்றும்புரியாமல் கீழே இறங்கினான்.
"இந்தா இந்த முக்குல... இந்த இடத்துல தான்டா அப்பாவ நான் கடைசியா பாத்தேன்... இந்த இடத்துல நின்னு சில நொடி யோசிச்சிட்டு இப்படி திரும்பி என்னய பார்த்து சிரிச்சாருடா..." என்று செழியன் ஆதவனை பார்த்து சொல்ல, ஆதவனின் கண்களில் அவனையறியாமல் கண்ணீர் கடகடவென வடிந்தது.
செழியனை பார்க்க பார்க்க ஆதவனுக்கு நம்மவர் நாகேஷ் தான் நினைவுக்கு வந்தார். செழியனும் ஆதவனும் கல்லூரி படிக்கும்போது, கல்லூரி தமிழ் மன்றம் நடத்திய நாடக போட்டியில் நம்மவர் படத்தில் நாகேஷின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள, அப்போது வரும் கமல்-நாகேஷ் நட்புக்காட்சிகளை செழியனும் ஆதவனும் அப்படியே மேடையில் நடித்துக்காட்ட, கீழே அமர்ந்திருந்த கல்லூரி முதல்வர் கண்கலங்கி, அதே மேடையில் நாகேஷாக நடித்த செழியனையும் கமலாக நடித்த ஆதவனையும் கட்டியணைத்து பாராட்டி ஆளுக்கு இரண்டாயிரம் கொடுத்து கௌரவித்தார்.
இப்போது அதே காட்சிகள் நிஜத்தில் நடப்பதை, குறிப்பாக செழியன் கொஞ்சம் கொஞ்சமாக நம்மவர் நாகேஷாக மாறுவதை ஆதவனால் நம்ப முடியவில்லை. அவனது உடல் சிலிர்த்து உடம்பிற்குள் எதோ ஒன்று வேகமாய் பாய்ந்துகொண்டிருந்தது.

"மச்சான்... வாடா..." என்று செழியனை பொறுமையாய் அழைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான் ஆதவன். சரியாக செழியன் வீட்டிற்குள் நுழைந்த பத்தாவது நிமிஷம் ஆம்புலன்சில் அப்பாவின் உடல் வந்திறங்க,
"என்னங்க..." என்று மாரில் அடித்துக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கி ஓடினார் அம்மா. ஆனால் செழியனின் முகத்தில் இப்போதும் துயரத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லை. எப்போதும் போல ரொம்ப இயல்பாகவே இருந்தான்.
"மச்சான்... அழுதுருடா..." என்று ஆதவன் அழுதுகொண்டே அவனை பிடித்து உலுக்க, "ஆக வேண்டியத பார்க்கலாம்டா" என்று சொன்னான் செழியன்.
இறுதி சடங்கு காரியங்கள் எல்லாம் அன்றே சட்சட்டென முடிய, அடுத்தநாள் காலையில் அப்பா போட்டோவில் சிரித்துக்கொண்டிருக்க அவரது போட்டோவுக்கு முன்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
முந்தைய நாள் காலை எந்த நேரத்தில் "செழியா வர்றேன்டா" என்று சொல்லிவிட்டு அப்பா வீட்டிலிருந்து வெளியே கிளம்பினாரோ அதே நேரம் வந்ததும் மெதுவாக எழுந்து சென்று வாசலில் நின்று அப்பாவை கடைசியாக பார்த்த தெருமுக்கை பார்த்தான் செழியன். அந்த இடம் வெறிச்சோடி கிடந்தது.
அமைதியாய் வீட்டிற்குள் திரும்பி வந்து அப்பா போட்டோவை பார்க்க,
"அப்பா தன்னை தானே "கொலைகாரன்... கொலைகாரன்"- என்று தூக்கத்தில் சொல்லிக்கொண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
"நம்ம அப்பா கொலைகாரனா..." என்று மனதிற்குள் அவன் யோசிக்க தொடங்கிய அடுத்த நொடி,
"மச்சான்... அப்பாவ பத்தி பேப்பர்ல நியூஸ் வந்துருக்குடா..." என்று ஆதவன் பேப்பரை விரித்துக் காட்டினான்.
அப்பாவின் புகைப்படம் போட்டு அதற்குமேலே,
"55 உயிர்களை காப்பாற்றிவிட்டு உயிர் துறந்த அரசுப்பேருந்து ஓட்டுநர்" என்று கொட்டை எழுத்தில் எழுதி,
அதற்கு கீழே "பேருந்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட, சாதுர்யமாக பேருந்தை ஓரமாக நிறுத்துவிட்டு ஸ்டியரிங் மீது சாய்ந்துள்ளார் ஓட்டுநர் முருகேசன். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நடத்துனரும் பயணிகளும் அவரை உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள். சாகும் தருவாயிலும் 55 உயிர்களை காப்பாற்றிய ஓட்டுனர் முருகேசன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எழுதியிருந்த செய்தியை வாசித்த செழியன்,
"அப்ப்ப்பா..." என்று பேப்பரை முகத்தில் பொதித்துக்கொண்டு வெடித்து அழ, அப்பாவின் செய்தித் துணுக்கு இடம்பெற்றிருந்த இடத்தில் அவனுடைய கண்ணீரின் ஈரம் படிந்தது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.