மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 84 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

பேரணையில் மெக்கன்சிக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. பிரச்சினை தீராமல் உடனே திரும்பி என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்து, மதுரைக்கு வந்தார்.

மூச்சை நெரிப்பதுபோல் சுற்றிலும் இறுக்கமாக இருந்தது மேல்மலைத்தொடர். குமுளியில் சுரங்கம் வெட்டுமிடத்தின் கங்காணிகளும் வேலையாள்களும் பாறைப் புழுதியில் திணறினார்கள். மலைத்தொடரின் முகப்பை வெட்டியெடுக்கும் வேலை. உள்நுழையும் அளவுக்கு வெட்டியெடுத்திருந்தாலும் சுற்றிலும் நடமாடுவதற்குக் கடினமாக இருந்தது. வெடித்துத் தகர்த்திருந்த பாறைத்துகள்கள் கால்களைக் கீறி ரணமாக்கின. கீழே ஊன்ற முடியாமல், கற்களின் கூர்மை பாதங்களைக் கிழித்தெடுத்தது. பாறைகளுக்கு அஞ்சி, ஓரமாகச் சென்றால் அடர்ந்த புதர்களின் முட்கள் கிழித்தெடுத்தன. கதம்ப வண்டுகள் கொட்டி, கொட்டிய இடம் வீங்கியது. முகம் தடித்தது. பலருக்கு மயக்கம் வந்தது. பெயர் தெரியாத பூச்சிகள் உடல் முழுக்க ஊர்ந்தன. பாம்புகளுக்குக் கணக்கே இல்லை. பாறை நிறத்தில் விழுதுகளைப்போலவே தரையில் கிடந்தன. மரவிழுதென்று கையில் எடுத்தால், நெளிந்து தலையை உயர்த்தும் பாம்பினை வீசியெறிந்து ஓடினர். விஷப்பூச்சிகளும் விலங்குகளும் அச்சுறுத்தின. அரிப்புச் செடிகளால் பலருக்குக் கைகால்கள் தடித்து, கறுத்திருந்தன.

பகல் முழுக்கப் பாறைகளில் துளையிட்டு, இரவு நேரத்தில் வெடிவைத்துப் பாறைகளை வெடிக்கச் செய்தார்கள். மலையைக் குடைந்துகொண்டு இன்னும் உள்ளே செல்லவில்லையென்பதால், வெடி வெடித்தவுடன் பாறைகளின் சிதறல்கள் வெளியில் வந்து விழுந்தன. பொழுது விடிவதற்கும் தூசியும் புகையும் அடங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

பென்னி குக்
பென்னி குக்

சுரங்கப் பாதைக்கு இரண்டு கங்காணிகளை நியமித்திருந்தார் பென்னி. லோகன், அணை வேலையுடன் சுரங்க வேலையையும் பார்ப்பதால், முழுநேரமும் அங்கிருக்க முடியவில்லை. ஒரு ஓவர்சீயருடன் இரண்டு கங்காணிகள் போதுமென்பது பென்னியின் கணக்கு. பாறைகளில் துளையிட்டு வெடிவைத்துத் தகர்த்தவுடன், இடிபாடுகளை இரும்பு வாளிகளில் அள்ளிக்கொண்டு வந்து, டிராமில் நிற்கும் பார வண்டியில் கொட்ட வேண்டும். பார வண்டி நிறைந்தவுடன், வண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும் மட்டக்குதிரைகள் இழுக்கும். விரிசல் விழாத கற்களைத் தனியாகச் சேர்த்து வைக்கச் சொல்லியிருந்தார் பென்னி. சுரங்கம் தோண்டும்போது உடைத்தெடுக்கும் கல்லையே அணை கட்டுமிடத்திற்குக் கொண்டு செல்லலாம், மேல்மலையில் தனியாக மலையை வெடிவைத்துத் தகர்க்க வேண்டியதில்லை என்பது பென்னியின் திட்டம். ஆனால், குமுளியிலிருந்து அணை கட்டுமிடத்திற்குச் செல்லும் எட்டு மைல் தூரத்துக்குப் போக்குவரத்தை ஏற்படுத்துவது பெரும் சவாலான காரியமாக இருந்தது.

கூடலூர் கணவாய்ப் பாதையமைக்கும் வேலையை பி.டபுள்யூ எத்தனை வருடமாகச் செய்கிறது என்பது பென்னிக்கு நன்கு தெரியும். வழக்கமாகக் கருங்கல் ஜல்லிகளைக் கொட்டிப் பாதையமைக்க ஓரடிக்கு ஐந்து ரூபாய்தான் பி.டபுள்யூ ஒதுக்கீடு. கூடலூர் கணவாய்ப் பாதைக்கு மட்டும் ஓரடிக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறது. சர்க்காரிடம் பணம் வாங்கிக்கொண்டு, பாதையமைக்க முடியாமல் வருஷக்கணக்காக காண்ட்ராக்டர்கள் இழுத்துக்கொண்டிருப்பதற்குக் காரணம், அதன் அமைவிடம்தான். எளிதில் உள்ளே நுழைய முடியாது. உள்ளே நுழைய வழியுண்டாக்கினாலும் கூலிகள் அங்கு தங்கி வேலை செய்ய மாட்டார்கள். கூடலூர் கணவாய்ப் பாதையை அமைக்க மெட்ராஸ் பி.டபுள்யூ முயன்று அதிகம் செலவு செய்து, பெரும்பாலும் பாதியில்தான் நின்றிருக்கிறது. பெரியாறு புராஜெக்ட் ஆரம்பித்தவுடன்தான் பெரியகுளத்திலிருந்து கம்பத்திற்கும், கம்பத்திலிருந்து குமுளிக்கும், குமுளியிலிருந்து அணை கட்டுமிடத்திற்குமான பாதை முழுமையாகப் போடப்பட்டது. அதிக கூலி, அதிக சலுகை, குறைவான கட்டுப்பாடுகள், இலவச சாராயம் போன்ற அளவற்ற சமரசங்களால்தான் கூலிகள் சுரங்க வேலையில் தக்கவைக்கப்பட்டார்கள்.

வேலை நடக்குமிடத்தில் சர்க்கார் அதிகாரிகள் அதிகம் இல்லாததால், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆள்களும் வேலையாள்கள் தங்குமிடத்திற்கு வந்தார்கள். சாராயம், கஞ்சா சிலும்பிகள் கொண்டு வந்து தருவதற்காக ஆரம்பித்த நட்பு, சமஸ்தானத்தின் சட்டங்களுக்குப் புறம்பான காரியங்கள் நடக்கும் இடமாக மாறியது. மேல்மலையில் இருக்கும் ஏலக்காய் எஸ்டேட்டுகளில் களவுபோகும் ஏலக்காய் மூட்டைகள் குமுளியின் கிடங்குகளில் பதுக்கப்பட்டன. மிளகு, வெற்றிலை எனச் சமஸ்தானத்தின் ஏகபோக உரிமையில் இருந்த பொருள்கள் கம்பம் பகுதியில் விற்பதற்காக, குமுளியின் கிடங்குகளில் அடைக்கலம் புகுந்தன. மெட்ராஸ் பிரசிடென்சியின் போலீசுக் கச்சேரி குமுளியில் இல்லை. போலீசுக் கண்காணிப்போ அச்சுறுத்தலோ இல்லையென்பதால் அப்காரி போதை வஸ்துகளும் சகஜமாகப் புழங்கின.

கள்ளத்தனமாகக் கையில் பணம் புழங்கியவுடன் கூலிகளுக்கும் ஆசை வளர்ந்தது. விவரமான கூலியொருவன் சமஸ்தானத்தின் கச்சேரி போலீசு ஒருவனுடன் பழகி, போலீசு நெருக்கடி இல்லாமல் பார்த்துக்கொண்டான். நடுக்காட்டுக்குள் இருக்கிற தங்களுக்குக் கிடைக்கும் சில்லறைச் சலுகைகளால் சமஸ்தானத்தின் போலீசும் வேலைக்குச் செல்லும் கூலிகளை மிரட்டினார்களே தவிர, கடத்தல் செய்பவர்களுக்கு உதவினார்கள்.

குமுளி முகாமில் மூன்று கிடங்குகள் இருந்தன. முதல் கிடங்கில், கூலிகளுக்குச் சமைக்கத் தேவைப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இருந்தன. இரண்டாம் கிடங்கில் சுண்ணாம்பு மூட்டைகளுடன் இரும்புச் சாமான்களும் இயந்திரங்களும் இருந்தன. மூன்றாவது கிடங்கில்தான் வெடிமருந்துப் பொருள்கள். மூன்றாவது கிடங்கின் அருகில் எப்போதும் காவலுக்கு ஓராளை நியமிக்க வேண்டும், தன்னுடைய அனுமதியோ, பணியில் இருக்கும் ஓவர்சீயரின் அனுமதியோ இல்லாமல் யாருமே கிடங்குக்குள் செல்லக் கூடாது என்பது லோகனின் கடுமையான உத்தரவு.

நீரதிகாரம் - 84 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

உணவுப்பொருள்களின் கிடங்குக்குள் ஏலமூட்டைகளைப் போட்டால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். பெரும்பாலும் அந்தக் கிடங்குக்குள் நாள் முழுக்க சமையல் செய்பவர்களும் கூலிகளும் சென்று வருவார்கள். சுண்ணாம்பு மூட்டைகளும் இயந்திரங்களும் இருக்கும் கிடங்கில் காலையில் ஒருமுறை செல்வதுடன் சரி, மாலையோ இரவோதான் திரும்பச் செல்வார்கள். அரிதாக உள்ளே யாராவது ஒருமுறை வரலாம். வெடிமருந்துக் கிடங்கின் காவலுக்கு தனக்குத் தோதான ஒருவனையே கங்காணிகள் நியமிக்கும்படி, கஞ்சா சிலும்பிக்கும் சாராயத்துக்கும் ஆசைப்பட்ட கூலி பார்த்துக்கொண்டான். வெடிமருந்துக் கிடங்கில் கடைசியாகச் சுவரையொட்டி ஏலமூட்டைகளைப் பத்திரப்படுத்துவது வழக்கம். தோதான நேரத்தில் வெளியில் எடுத்து, கூடலூருக்கு அனுப்பிவிடுவார்கள். குமுளியிலிருந்து தனியாக மாட்டு வண்டிகளையும் அமர்த்தி அனுப்பும் சாமர்த்தியமும் வந்துவிட்டது அவனுக்கு. மாடுகளுக்குப் புல், பூண்டு எனச்சொல்லி, பச்சை இலை தழைகளை மூட்டைகளின்மேலே வைத்துத் தைத்து அனுப்பிவிடுவான். கூடலூர்க் கணவாய்க்குக் கீழே வந்தவுடன் அதற்காகக் காத்திருக்கும் வியாபாரியிடம் மூட்டைகள் சென்று சேர்ந்துவிடும்.

விபத்து நடந்த மாலையில், மேல்மலையின் எஸ்டேட் ஒன்றிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டு வந்திருந்த மூட்டைகளைக் கிடங்கில் மறைத்து வைத்திருக்கிறார்கள். அன்று பொழுது சாயும் நேரத்தில்தான் துளையிடும் வேலை முடிந்திருக்கிறது. வெடிமருந்துகளைத் துளைகளில் நிரப்பி, வெடிக்கச் செய்ய இரவாகிவிட்டது. வெடி வைத்தவுடனே வேலையாள்கள் அவரவர் குடிசைகளுக்குத் திரும்பினார்கள். பாறைகள் வெடித்தால் எழும் புகையும் தூசியும் அடர்ந்து சுவாசிக்க முடியாது. புகை அடங்கும்வரை எதிரில் இருப்பவரின் பிம்பமும் கலங்கலாகத்தான் தெரியும். கடத்தல்காரர்களோ வெடி வெடித்தவுடன் புகையைப் பொருட்படுத்தாமல் கள்ளத்தனமாகக் கிடங்கில் பதுக்கியிருந்த ஏலமூட்டைகளை டிராமில் ஏற்றுவார்கள். டிராமில் ஏற்றிப் பாதுகாப்பாக மெட்ராஸ் பிரசிடென்சியின் எல்லைக்குக் கொண்டு வந்துவிட்டால் போதும், அணை கட்டுமிடத்தில் அரிசி மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டுத் திரும்பிவரும் மாட்டுவண்டிகளில் ஏற்றி அனுப்பிவிடுவார்கள்.

அன்றும் அப்படியான திட்டத்தில் பாறைகள் வெடிக்கக் காத்திருந்தார்கள். பாறைகள் வெடித்துச் சிதறிய புகை சூழ்ந்திருக்கும்போது, அவசரமாக ஏலமூட்டைகளை ஏற்றுவதற்குப் பதிலாக, வெடிமருந்து மூட்டைகளை ஏற்றிவிட்டார்கள். ஏற்றியதுகூட தப்பில்லை. பாரவண்டிக்குமேலே ஏறி உட்கார்ந்தவன், புகையினால் மூச்சுத் திணறியுள்ளான். மூச்சுத் திணறியதில் தொண்டைக் கமறலும் இருமலும் சேர்ந்தது. அவசரத்திற்காகப் பாதுகாத்து வைத்திருந்த கஞ்சா இலை சிலும்பியை எடுத்தான். இரும்புக் கருவிகளைக் கூர்மைப்படுத்த கொல்லன் பட்டறையொன்று அங்கிருந்தது. அதில் கனன்றுகொண்டிருந்த விறகொன்றை எடுத்துக்கொண்டு டிராமில் ஓடிப்போய் ஏறிக்கொண்டான். வண்டி இழுபட்டவுடன் ஆசுவாசமாகச் சிலும்பியைப் பற்ற வைத்து இழுத்தவன் மெய்மறந்து, விறகுக் கட்டையை அருகில் இருந்த மூட்டையின்மேல் வைத்தான். விறகின் நெருப்பு வெடிமருந்தில் பற்றி, கனன்று வெடித்துச் சிதறியது. டிராம் ரயிலும் பார வண்டியும் மட்டக் குதிரைகளும் கஞ்சா புகைத்த கூலியும் சேர்ந்து வெடித்துச் சிதறினார்கள். எல்லாமே நொடிகளில் நடந்து முடிந்தன.

மதுரா டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் அலுவலகம் பதற்றமாய் இருந்தது.

கலெக்டர் டர்னர் இன்று என்ன மனநிலையில் இருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியாமல் உதவியாளர்கள் குழம்பினார்கள். அகன்று இறுகிய முகத்தில் ஆங்காங்கே இருக்கும் சுருக்கங்கள், அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வழிவிடாததோடு முரட்டுத்தன்மையையும் கூட்டியது.

பேரணைக்குச் சென்ற மெக்கன்சி, பெரியாறு கால்வாய் வேலைகள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தார். ரயத்துகளின் பெட்டிஷன்களுக்குத் திடீரென்று முக்கியத்துவம் கொடுப்பதும், திடீரென்று புறக்கணிப்பதுமாக கலெக்டர் ஆபீசு இருமுனைகளில் நின்றது. ராமநாதபுரத்து ரயத்துகளின் பெட்டிஷன்கள் வந்தபோது அதற்குப் பின்னால் ராமநாதபுரத்துச் சமஸ்தானமும் இருக்கிறது என்பது கலெக்டர் கவனத்திற்கு வந்தது. அதற்குள் மூல வைகையின் ஆயக்கட்டுக்காரர்களான கண்டமநாயக்கனூர் ஜமீனில் இருந்தும் பெட்டிஷன் வந்தவுடன் டர்னர் உடனடியாகக் கால்வாய் வெட்டும் பணியை நிறுத்தச் சொன்னார். பெரியாறு புராஜெக்டின் சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர் பென்னி குக், தன் உத்தரவை மீறித்தான் நடப்பார் என்பது டர்னருக்குத் தெரியும். சீப் இன்ஜினீயருக்கும் சீப் செக்ரட்டரிக்கும் ‘விசாரணைக்குப் பிறகு கால்வாய் வெட்டும் வேலை தொடங்கும்’ என்று டெலகிராம் அனுப்பினார். ஆனால் இன்ஜினீயர்களோ, சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயரோ வந்து கண்டமநாயக்கனூர் பெட்டிஷன்மீது விசாரித்து முடித்த பிறகுதான் வேலை தொடங்க வேண்டும் என்று டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயருக்கு வாய்வழி உத்தரவு கொடுத்திருந்தார். கால்வாய் வெட்டும் பணிக்கும், கால்வாய்க்கான நில ஆர்ஜிதங்கள் பணிக்கும் கலெக்டர் அலுவலகமே பொறுப்பெடுத்திருந்ததில் டர்னருக்கு முழு அதிகாரம் இருந்தது.

பேரணையில் மெக்கன்சிக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. பிரச்சினை தீராமல் உடனே திரும்பி என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்து, மதுரைக்கு வந்தார். மதுரை பி.டபுள்யூ அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தபோதும் அங்குள்ள டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயர் விளக்கம் அளிக்கவில்லை.

மெக்கன்சி உடனே கலெக்டர் டர்னரைப் பார்க்க வந்தார். டர்னர் கலெக்டர் ஆபீசின் குதிரை லாயத்தில் இருந்தார். தனக்காக இறக்குமதியாகியிருந்த அரேபியக் குதிரையை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். வெள்ளுடையில் பித்தளை வில்லை அணிந்திருந்த கலெக்டரின் உதவியாளன் குதிரையின் பின்பக்கத்தைத் தடவிவிட்டான். ஹெட் அசிஸ்டென்ட் குதிரையின் தாடையை அச்சத்துடன் தடவினார். வீட்டில் மாடுபிடித்துக் கட்டச் சொன்னாலே அருகில் செல்லாதவர். சிறுவயதில் பசுவிடம் பால்குடித்துக் கொண்டிருந்த கன்றின் வாலைப் பிடித்திழுத்திருக்கிறார். கன்று கத்தியபடி மீண்டும் பசுவின் பால்மடிக்குத் தாவ, மீண்டும் வாலைப் பிடித்திழுத்திருக்கிறார். பொறுக்காத பசு பின்னங்காலைத் தூக்கி உதைக்க, இரண்டு தொடையின் மையத்தில் குறிதவறாமல் உதை விழுந்தது. அவரின் அப்பத்தா அடிக்கடி, ‘இடுப்புக்குக் கீழே நம்ம வீட்டு ஆளுக மாதிரியே இல்லையே’ என்று யோசனையாய்ச் சொல்லுமாம். பசுவிடம் உதை வாங்கிய பிறகு, ‘இனி சிறுநீர் கழிப்பதற்கு மட்டும்தான் உபயோகப்படும்’ என்று அப்பத்தா எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்ததாம். அன்றிலிருந்து மாடு, குதிரை, கழுதை ஆகிய கால்நடைகளின் அருகில் செல்வதென்றாலே ஹெட் அசிஸ்டென்டுக்கு அஷ்டமத்தில் சனி வந்த பயம்தான்.

டர்னர் அங்கு வந்த மெக்கன்சியை கவனித்தாலும், அவரைப் பொருட்படுத்தாததுடன் புறக்கணிக்கவும் நினைத்தார். மெக்கன்சியும் பொருட்படுத்தவில்லை. டர்னர் தன்னை அவமானப்படுத்த முடியாது. பெரியாறு புராஜெக்டின் எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர் என்ற பதவியின் காரணமாகத்தான் அவர் முன்னால் நிற்கிறோம், அந்தப் பணியினை யார் முன் வேண்டுமானாலும் நின்று நிறைவேற்றலாம். அதன்பொருட்டு வரும் அவமானங்கள், நன்மைகள், புகழ், பெருமிதம் எல்லாமே அந்தப் பணிக்குத்தானே தவிர, மெக்கன்சி என்ற தன்னுடைய சுயத்துக்கு இல்லை என்று உணர்ந்தார்.

நீரதிகாரம் - 84 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

“மிஸ்டர் டர்னர், அவசரமாக உங்ககிட்ட ஒரு ஆலோசனை நடத்தணும்.”

“யாரு, ஓ... மிஸ்டர் மெக்கன்சி. என்னோட புதுக் குதிரையைப் பாருங்க… அவரோட முதல் பார்வையாளர் நீங்கதான். வழக்கமா என்னோட குதிரையைப் பார்க்க, மதுராவின் பிரபலங்கள் வருவாங்க. பரவாயில்லை, இந்த முறை நீங்க முதலில் பாக்குறீங்க” என்ற டர்னர் குதிரையின் உடலைத் தடவினார்.

புதிதாகத் தன் உடலின்மேல் படுகிற தொடுகையைப் பிரித்தறிய முடியாமல் குதிரையின் உடல் அச்சத்தை வெளிப்படுத்தியது.

“நான் அவசர வேலையாக வந்திருக்கிறேன். உங்களைப்போல் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவழிக்குமளவிற்கு வாய்ப்பில்லாதவன். குதிரை லாயத்தில்தான் அவசர ஆலோசனை நடக்க வேண்டுமென்றாலும் பரவாயில்லை. நான் தயார்” என்றார் மெக்கன்சி.

“கலெக்டர் ஆபீசு, கலெக்டரின் பங்களா இரண்டு இடங்களிலும் எனக்கு முக்கியமான இடம் குதிரை லாயம்தான், இங்கேயே சொல்லுங்க” என்றார் டர்னர்.

‘கலெக்டர்களின் அதிகாரம் கூடக்கூட பைத்தியக்காரத்தனமும் கூடுது’ என்று முணுமுணுத்த மெக்கன்சி, “நல்லது மிஸ்டர் டர்னர், பெரியாறு கால்வாய் தோண்டும் பணியை ஏன் நிறுத்தினீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றார்.

“ஏன்னு உங்களுக்குத் தெரியாதா மிஸ்டர் மெக்கன்சி?”

“நேரடியாப் பேசுறதுதான் எனக்கு எளிது.”

“சரி, சொல்லுங்க.”

“மூல வைகையில இருக்க ஒரு ஜமீன்…”

“நேரடியாப் பேசுறதுதான் எளிதுன்னு சொன்னீங்க, இப்போ எதுக்கு ஒரு ஜமீன்னு சொல்றீங்க?”

“சரி, கண்டமநாயக்கனூர் ஜமீன் பெட்டிஷன் கொடுத்திருக் காங்களாம். அந்தப் பெட்டிஷன் பத்தி விசாரிக் காமலேயே கால்வாய் வேலையை நிறுத்தச் சொல்லியிருக்கீங்க.”

“நான் விசாரிக்கலைன்னு யார் சொன்னது?”

“விசாரிச்சிருந்தா உங்களுக்கே உண்மை தெரிஞ்சிருக்கும். மூல வைகை எங்க இருக்கு? கண்டமநாயக்கனூர்ல இருந்து பத்து மைல் தூரம் ஓடிவந்த பிறகுதான், வைகை சுருளியோடு சேருது. கண்டமநாயக்கனூருக்கும் பெரியாற்றுத் தண்ணியக் கொண்டு வரப்போற சுருளியாற்றுக்கும் சம்பந்தமே இல்லை. அவங்க பயன்படுத்தினது போகதான் வைகையே சுருளிக்கு வருது. ஆனா, பெரியாறு புராஜெக்ட்டால வைகைப் பாசனக்காரங்களுக்கு பாதிப்புன்னு பெட்டிஷன் கொடுத்திருக்கார். ஊருக்குத் தெரிஞ்ச உண்மை உங்களுக்குத் தெரியாதா என்ன? மதுரா டிஸ்ட்ரிக்ட்ல ஆறு வருஷமா கலெக்டரா இருக்கீங்க, எந்த ஊர் எங்க இருக்குன்னு இன்னுமா புரியலை?”

“மிஸ்டர் மெக்கன்சி, எனக்குச் சொல்லித் தராதீங்க. போர்டு ஆப் டைரக்டர்ஸ் நியமிச்சிருக்கிற மேனேஜர்கிட்ட கேளுங்க. அவர்தான் பெட்டிஷன் கொடுத்திருக்கார், ஜமீன் பேர்ல. ஜமீனுடைய கார்டியன்னு பதவி வாங்கிக்கிட்டு, ஜமீனுடைய பேரைக் கெடுக்கிறதே மேனேஜருங்கதானே? மைனர் பாண்டியன் திண்டுக்கல்லுல படிச்சிக்கிட்டு இருக்கார். அவருக்கு வைகையாத்துப் பாசனம் பத்தித் தெரியவே தெரியாது. அவரோட கார்டியன்னு சொல்லிக்கிட்டிருக்கிற கோர்ட் ஆப் வார்டு செய்கிற அட்டூழியம்தான் இதெல்லாம்.”

“இவ்வளவு விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கிற நீங்க அப்புறம் எதுக்கு அந்தப் பெட்டிஷனுக்காக வேலையை நிறுத்தியிருக்கீங்க?”

“கோர்ட் ஆப் வார்டை நியமிச்சிருக்கிற போர்டு ஆப் டைரக்டர்ஸுக்குத் தெரியணுமே? இங்கிலாந்து ராணியோட ஆட்சி அதிகாரம் நடக்குது, இந்தியாவே நமக்குத்தான்னு நினைச்சிக்கிட்டு, அங்க உருப்படாம இருக்கிறவனுங்க அங்க உள்ள பிரபுக்களையும் பார்லிமென்ட் மெம்பர்ஸையும் காக்கா பிடிச்சி இந்தியா வந்து சேர்ந்து வருமானம் வர்ற பதவிய வாங்கிக்கிறாங்க. வருமானம் வர்றதுக்காகவே பதவியை உருவாக்குறாங்க. ஒவ்வொரு ஜமீனுக்கும் அவங்கவங்க ஜமீனைக் காப்பாத்திக்கத் தெரியாதா? ஒரு ஜமீன் செத்துப்போகக் கூடாது, ஜமீன்ல வாரிசு இல்லாமப் போகக்கூடாது, வாரிசு இருந்தாலும் மைனரா இருக்கக் கூடாது, ஜமீனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கக் கூடாது, உடனே ஜமீனைக் கையில் எடுத்துக்க வேண்டியது. ஜமீன் காசையெடுத்து ஜமீனுக்குச் செலவு செய்ய ஒரு இங்கிலீசு மேனேஜரா? அவனுக்குச் சம்பளம், ஜமீன் மாதிரி வாழுறதுக்கு அவனுக்குச் சகல ஏற்பாடு… இதெல்லாம் எதுக்கு? ஜமீன் நெலத்துல விவசாயம் செய்யுற ரயத்துககிட்ட இருந்து பணம் வசூலிக்கிற உரிமையும் கொடுக்கிறாங்க. கலெக்டரும் தாசில்தாரும் செய்ய வேண்டிய வேலையை ஒரு மேனேஜர் செய்வாரா? மைனர் வாரிசைப் படிக்க வைக்கிறேன்னு சொல்லி, ஜமீனை விட்டு தூரத்தில் ஒரு வீடு எடுத்து, அந்த வீட்டில் பேருக்கு ஒரு ஆசிரியரை நியமிச்சு, அவருக்கும் சம்பளம் குடுத்து, ஜமீன் பக்கமே வராம பாத்துக்குவார். மைனர் ஜமீன்கள் மேஜரான பிறகும் ஜமீனைத் திருப்பிக்கொடுக்காம இன்னும் எத்தனை ஜமீன்களைக் கோர்ட் ஆப் வார்டுங்க வச்சிருக்காங்க தெரியுமா மிஸ்டர் மெக்கன்சி..?”

மெக்கன்சிக்குத் தலைசுற்றியது.

“மிஸ்டர் டர்னர், இந்திய தேசிய காங்கிரஸ்னு ஒரு அமைப்பு ஆரம்பிச்சிருக்காங்க. அவங்ககிட்ட இதெல்லாம் சொன்னால், அவங்க ரொம்ப நல்லாப் பயன்படுத்திக்குவாங்க. நான் சாதாரண இன்ஜினியர். என்னுடைய வேலைக்கு இடைஞ்சலா இருக்கிறதைச் சரிசெய்வது மட்டும்தான் என் வேலை. மெட்ராஸ் கவர்னரை ஒரே ஒரு பார்ட்டியில் பார்த்திருக்கேன். கல்காத்தாவில் இருக்கும் வைஸ்ராயைப் பார்த்ததுகூடக் கிடையாது. பார்க்கவும் வாய்ப்பில்லை. நீங்க பேசுற விஷயமெல்லாம் அவங்ககிட்ட பேச வேண்டியது.”

“அதான் சொல்லுறேன். அவங்கதானே பெரியாறு புராஜெக்ட்டை ரொம்பப் பெருசா பேசிக்கிட்டிருக்காங்க? இந்தப் புராஜெக்ட் வந்தா மதுரா டிஸ்ட்ரிக்ட்டே ரெண்டு போகத்துக்குத் திரும்பிடும்னு சொல்றாங்க. மதுரா டிஸ்ட்ரிக்ட்ல மட்டும் இப்போதைக்கு ஏழு ஜமீனைக் கோர்ட் ஆப் வார்டு கிட்ட ஒப்படைச்சிருக்காங்க. ஜமீன் இருந்தா என்னென்ன வேலை செய்வாரோ அது அத்தனையும் இந்த மேனேஜருங்க செய்யணும். ஆனா ஒன்னும் செய்யறதில்லை. ரயத்துங்ககிட்ட வரி மட்டும் வாங்குறாங்க. குளங்கள தூர் வாருறது கிடையாது. கொரம்புங்க எல்லாம் பராமரிப்பில்லாம இருக்கு. மராமத்து வேலையே நடக்கலை. ஜமீனோட ஜனங்க எல்லாம் கஞ்சிக்கு வழியில்லாம அல்லாடுறாங்க. நான் பெரியாறு கால்வாய் வேலையை நிறுத்தியிருக்கேன்னு நீங்க உங்க சீப் இன்ஜினீயருக்கு எழுதுங்க. அவர் செக்ரட்டரிக்கு எழுதுவார். செக்ரட்டரி, போர்டு ஆப் டைரக்டர்ஸுக்கு எழுதுவார். போர்டு ஆப் டைரக்டர்ஸ் கண்டமநாயக்கனூர் மேனேஜரைக் கேட்கட்டும், எப்படி இந்த லெட்டரை எழுதினேன்னு? கொஞ்சம் கொஞ்சமா ஜமீன்தாருக தங்களோட சொத்துகளை வித்துச் சாப்பிட்டு, காலாவதியாகிற வரைக்கும் பாம்பு மாதிரிச் சுத்திக்கிட்டு இருக்காங்களே?”

“கலெக்டரோட சிபாரிசுலதான் ஜமீனையே கோர்ட் ஆப் வார்டு எடுக்கும் மிஸ்டர் டர்னர். மேனேஜர் முதல்ல உங்களுக்கு அனுசரணையா இருந்திருப்பாங்க. இப்போ சரியில்லைன்னு சொன்னவுடனே அவருக்கு எதிரா பேசுறீங்களா?”

பேச்சு அனல் பறப்பதைப் பார்த்துக் குதிரை மிரண்டு கால்களை மாற்றி வைத்தது.

கலெக்டரின் குதிரை மிரட்சி காண்பிப்பதைப் பார்த்த ஹெட் அசிஸ்டென்டும் உடன் இருந்த குமாஸ்தாக்களும் குதிரைக்கு அருகில் வந்தனர். ஹெட் அசிஸ்டென்டுக்கு உயிர் பயம் இருந்தது. இத்தனை பேரின் முன்னால் குதிரை தன்னை ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கையையும் வேலை பயமும் அவருக்குள் சமாதானக் கொடி உயர்த்தின. ஒரு குமாஸ்தா குதிரையின் முன்னால் புல்லை நீட்டினார். ஒரு குமாஸ்தா குதிரையின் மேலிருந்த ஈயை விரட்டிவிட்டு, அந்த இடத்தில் தேய்த்துவிட்டார். குதிரையைப் பராமரிப்பவனோ தனக்கு இடம் விடாமல் இத்தனை குமாஸ்தாக்களும் ஒன்றுசேர்ந்து குவிந்து கிடக்கிறார்களே என்று நடுங்கினான். தன் வேலைக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்று குதிரையின் புட்டத்தருகே நின்றான்.

மெக்கன்சிக்கோ குதிரை லாயத்தில் மதுரா கலெக்டர் டர்னர் பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிராகக் கலகம் செய்கிறாரோ என்று தோன்றியது. உலகம் முழுக்க அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் நடந்த இடங்கள் என்னென்ன என்று யோசிக்க முயன்றார். குதிரை லாயத்தில் உதித்த கலகம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஒருவேளை முதன்முதலில் என்று மதுரா கலெக்ட்ரேட்டின் குதிரை லாயம் பெயர் வாங்குமோ என்று நினைத்தவுடன் சிரிப்பு வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டு, “மிஸ்டர் டர்னர், வைஸ்ராயும் கவர்னரும் கோர்ட் ஆப் வார்டு நடைமுறையைச் சட்டபூர்வமாக நீக்கிய பிறகுதான் பெரியாறு கால்வாய் வெட்டுவதற்கு அனுமதி கொடுப்பீர்களா?”

“சட்டபூர்வமாய் நீக்க முடியாதே? பிரிட்டிஷ் சர்க்கார் தெளிவாக இந்து சட்டப்படி, பதினெட்டு வயது ஆகாத குழந்தைக்குக் கட்டாயம் ஒரு பாதுகாவலர் வேணும்னு சொல்லுதே? சொத்துகளைப் பராமரிக்கும் உரிமையை 21 வயசுக்கு முன்னாடி கொடுக்க முடியாதுன்னும் இந்து லா சொல்லுது. அதைத்தான் பிரிட்டிஷ் சர்க்கார் செய்யுதுன்னு சொல்லுவாங்களே? எல்லா ஜமீனும் இந்துக்கள்தான். அதனால் இந்தச் சட்டத்தை நீக்குறதுக்கு வாய்ப்பே இல்லை.”

“சரி, நான் என்ன செய்யட்டும்னு சொல்லுங்க.”

“நான் ஒரு கடிதம் கொடுத்துட்டு வேலையை நிறுத்தின மாதிரி, நீங்க ஒரு கடிதம் அனுப்பிட்டு வேலையை ஆரம்பிங்க. அவ்ளோதானே?”

மெக்கன்சி திடுக்கிட்டார்.

‘நல்ல மனநிலையில்தான் இருக்கிறாரா டர்னர்?’ என்று அவரை உற்றுப் பார்த்தார்.

“வழக்கமா அந்தந்த டிபார்ட்மென்ட் முடிவுகளை அடுத்த டிபார்ட்மென்ட் கட்டுப்படுத்த முடியாதில்லையா? அப்படித்தான் இதுவும்” என்று சொல்லிவிட்டு, குதிரையின்மீது பாய்ந்து ஏறினார் டர்னர். தன்மேல் திடீரென்று கூடிய சுமைக்குக் கனைத்த குதிரை, டர்னரின் சவுக்குக்குக் கட்டுப்பட்டு, தூசி எழ ஓடத் தொடங்கியது.

மெக்கன்சி திகைத்து நின்றார்.

கையில் மீதமிருந்த புற்களை, லாயத்தின் நடுவில் கட்டப்பட்டிருந்த, கலெக்டர் மனைவியுடைய குதிரையின் முன்னால் நீட்டினர் குமாஸ்தாக்கள்.

- பாயும்